search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பங்குனி திருவிழா"

    • நம்பி சுவாமிகள் சித்தர்களுக்கு காட்சி அளிக்கும் நிகழ்ச்சி 12-ந்தேதி நடக்கிறது.
    • தேரோட்டம் 17-ந்தேதி நடக்கிறது.

    திருக்குறுங்குடி அழகியநம்பிராயர் கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் பிரம்மோற்சவ திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு, அழகியநம்பிராயர் மற்றும் தேவியர்களுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டது. ராமானுஜ ஜீயர் முன்னிலையில் கோவில் கொடி மரத்தில் திருக்கொடி ஏற்றப்பட்டது. முன்னதாக கொடி பட்டம் பல்லக்கில் வைக்கப்பட்டு ரதவீதிகளில் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவை முன்னிட்டு தினமும் யாகசாலை பூஜைகள், சிறப்பு திருமஞ்சனம், காலை மற்றும் இரவில் அழகியநம்பிராயர் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வருதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான நம்பி சுவாமிகள் சித்தர்களுக்கு காட்சி அளிக்கும் நிகழ்ச்சி 5-ம் நாளான வருகிற 12-ந் தேதி நடக்கிறது. அன்று இரவில் 5 நம்பி சுவாமிகளும் கருட வாகனத்தில் எழுந்தருளுகின்றனர். மறுநாள் அதிகாலையில் நம்பி சுவாமிகள் சித்தர்களுக்கு திருக்காட்சி கொடுக்கின்றனர். சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 10-ம் திருநாளான வருகிற 17-ந் தேதி நடக்கிறது.

    திருவிழா ஏற்பாடுகளை ஜீயர் மடத்தின் பவர் ஏஜெண்டு பரமசிவன் தலைமையில் கோவில் ஊழியர்கள், மண்டகப்படிதாரர்கள் செய்து வருகின்றனர்.

    • தேரோட்டம் வருகிற 23-ந் தேதி நடைபெறுகிறது.
    • 27-ந்தேதி நடராஜர் புறப்பாடு, தீர்த்தவாரி நடைபெறுகிறது.

    பஞ்சபூதங்களில் நீர்தலமாக விளங்குவது திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்- அகிலாண்டேஸ்வரி அம்மன் கோவில். இங்கு ஆண்டுதோறும் பங்குனி மண்டல பிரம்மோற்சவம் 48 நாட்கள் வெகுவிமர்சையாக கொண்டாடப்படும். அதன்படி இந்தாண்டுக்கான விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    முன்னதாக காலை 7 மணி அளவில் சுவாமி, அம்மன், விநாயகர், சோமஸ்கந்தர், பிரியாவிடை ஆகிய பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் கோவில் வளாகத்தில் உள்ள கொடிமரம் அருகே வந்தனர். கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டது. அதன் பின் காலை 7.25 மணி அளவில் கும்ப லக்னத்தில் பெரிய கொடி ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    வருகிற 18-ந் தேதி எட்டுத்திக்கு கொடியேற்றத்துடன் பங்குனி தேர் திருவிழா தொடங்குகிறது. அன்று காலை தேருக்கு முகூர்த்தக்கால் நடப்படுகிறது. அன்றிரவு சோமாஸ்கந்தர் புறப்பாடும், 19-ந்தேதி சூரியபிரபை, சந்திரபிரபை வாகனத்திலும், 20-ந்தேதி பூத வாகனத்திலும், காமதேனு வாகனத்திலும், 21-ந்தேதி கைலாச வாகனத்திலும், கிளி வாகனத்திலும், 22-ந்தேதி வெள்ளி ரிஷபவாகனத்திலும் சுவாமி, அம்மன் எழுந்தருளி வீதி உலா வருகின்றனர்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டம் வருகிற 23-ந் தேதி நடைபெறுகிறது. அதற்கு முந்தைய நாள் தெருவடைச்சான் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    24-ந்தேதி வெள்ளிமஞ்சத்திலும், 25-ந்தேதி வெள்ளிகுதிரை வாகனத்திலும், பல்லக்கிலும், 26-ந்தேதி அதிகார நந்தி வாகனத்திலும், சேஷவாகனத்திலும் சுவாமி, அம்மன் எழுந்தருளி வீதி உலா வருகின்றனர்.

    27-ந்தேதி காலை நடராஜர் புறப்பாடு, நண்பகல் தீர்த்தவாரி நடைபெறுகிறது. மாலை வெண்பட்டு, வெண்மலர்கள் சாற்றி கொண்டு ஏகசிம்மாசனத்தில் சுவாமி, அம்மன் எழுந்தருளி வீதி உலா வருகின்றனர்.

    ஏப்ரல் 6-ந் தேதி பஞ்சப்பிரகார விழா நடைபெறுகிறது. அதையொட்டி சுவாமி அம்மன் வேடத்திலும், அம்மன் சுவாமி வேடத்திலும் வெள்ளி மஞ்சத்தில் எழுந்தருளி 5-ம் பிரகாரத்தில் வீதி உலா வருகின்றனர். 7-ந்தேதி சாயாஅபிஷேகம், 8-ந் தேதி மண்டலாபிஷேகத்துடன் பங்குனி மண்டல பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் ரவிச்சந்திரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • கமுதி முத்துமாரியம்மன் கோவிலில் பங்குனி திருவிழா தொடங்கியது.
    • முகூர்த்தகால் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி சத்திரிய நாடார் உறவின் முறைக்கு பாத்தி யப்பட்ட முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இது இந்த பகுதியில் பிரசித்திபெற்ற கோவில் ஆகும். இங்கு பங்குனி மாதம் பொங்கல் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டுக்கான பங்குனி திருவிழாவை முன்னிட்டு கோவிலின் வடக்கு வாசல் முன்பு முகூர்த்தகால் நடும் நிகழ்ச்சி நடந்தது. மேளதாளம், வான வேடிக்கையுடன் இந்த நிகழ்ச்சி நடந்தது. இதில் அம்பலகாரர் சக்திவேல், மாத முறைகாரர் சின்னமணி மற்றும் உறவின் முறை டிரஸ்டிகள், நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    அக்னிச்சட்டி, பூக்குழி இறங்குதல், உடல் முழுவதும் சேறு பூசும் நேர்த்திகடன் உட்பட பல்வேறு நேர்த்தி கடன் செலுத்தும் பக்தர்கள் நேற்று முதல் அசைவம் சாப்பிடுவதை விட்டுவிட்டு, விரதம் கடைபிடித்தனர்.அடுத்த மாதம் 26-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. பின்னர் தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்று, ரிஷபம், பூதம், காமதேனு, யானை, வெள்ளிக்குதிரை உள்பட பல்வேறு வாகனங்களில் அம்மன் நகர்வலம் வரும். ஏப்ரல் 4-ந்தேதி கோவில் முன்பு பொங்கல் வைத்து வழிபடும் நிகழ்ச்சி நடைபெறும். 5-ந் தேதி அக்னிச்சட்டி திருவிழா நடைபெறும்.

    இதில் தமிழகத்தில் எங்குமில்லாத விநோத வழிபாடான பக்தர்கள் 1000-க்கும் மேற்பட்டோர் உடல் முழுவதும் களிமண் சேறுபூசி, கோவிலை வலம் வருவார்கள். 7-ந்தேதி 2007 திருவிளக்கு பூஜை, 8-ந் தேதி முளைப்பாரி ஊர்வலத்துடன் திருவிழா நிறைவுபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை சத்திரிய நாடார் உறவின் முறையினர் செய்து வருகின்றனர்.

    • திருக்கல்யாணம் ஏப்ரல் 3-ந் தேதி நடக்கிறது.
    • ஏப்ரல் 4-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.

    அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் பங்குனி உத்திர திருவிழாவும் ஒன்றாகும். இத்திருவிழாவின் போது திண்டுக்கல், ஈரோடு, கரூர், கோவை, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கொடுமுடி காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து காவடியாக கொண்டு வந்துமுருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்வது வழக்கம்.

    இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற மார்ச் 29-ந்தேதி பழனி திருஆவினன்குடி கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான திருக்கல்யாணம் ஏப்ரல் 3-ந் தேதி மாலை 5 45 மணிக்கு மேல் 6.45 மணிக்குள் கன்னியா லக்னத்தில் நடக்கிறது. ஏப்ரல் 4-ந் தேதி பங்குனி உத்திர தேரோட்டம் நடைபெறுகிறது. விழா நடைபெறும் 10 நாட்களும் சுவாமி தந்தப்பல்லக்கு, தங்ககுதிரை, வெள்ளி காமதேனு, தங்கமயில், வெள்ளி ஆட்டுக்கிடா உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும்.

    விழாவை முன்னிட்டு குடமுழுக்கு நினைவரங்கில் தினந்தோறும் பக்தி சொற்பொழிவு, இன்னிசை கச்சேரி, பரதநாட்டியம், நாட்டுப்புறப்பாடல்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். பங்குனி உத்திர திருவிழாவையொட்டி ஏப்ரல் 2-ந் தேதி முதல் 6-ந் தேதி வரை மலைக்கோவிலில் தங்க ரதத்தில் சுவாமி புறப்பாடு இருக்காது என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×