search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகளிர் உரிமைத் தொகை"

    • தமிழ்நாட்டின் முதலமைச்சராக மட்டுமல்ல உங்களது தந்தையின் இடத்தில் இருந்து நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
    • எப்போதுமே உயர்ந்த பதவி என்பது அதைவிட பன்மடங்கு கடமையும் பொறுப்பும் உள்ளடக்கியது என்பதுதான் உண்மை.

    சென்னை:

    இந்திய குடிமைப்பணி தேர்வில் (ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்.) வெற்றி பெற்ற தமிழ்நாட்டை சேர்ந்த 33 பேர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை தலைமைச் செயலகத்திற்கு அழைத்து பாராட்டினார்.

    ஒவ்வொருவர் பெயரையும் அறிமுகப்படுத்த சொல்லி அவர்களது பெயர், ஊர் விவரங்களை கேட்டு தெரிந்து கொண்டார்.

    அவர்கள் மத்தியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசும்போது கூறியதாவது:-

    இந்தியாவின் மிகுந்த பெருமைக்குரிய குடிமைப் பணி தேர்வில் வெற்றி பெற்று தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ள உங்கள் அனைவருக்கும் என்னுடைய பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    தமிழ்நாட்டின் முதலமைச்சராக மட்டுமல்ல உங்களது தந்தையின் இடத்தில் இருந்து நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

    அகில இந்திய போட்டித்தேர்வில் நீங்கள் வெற்றி பெற்றது என்பது, உங்களது கடினமான உழைப்பையும், கூர்மையான அறிவையும், விடாமுயற்சியையும் எடுத்துக் காட்டுகிறது.

    சாதாரணமாக யாருக்கும் இந்த வெற்றி கிடைத்து விடாது என்பதை என்னை விட நீங்கள் நன்றாக அறிவீர்கள். லட்சக்கணக்கானவர்கள் தேர்வில் பங்கேற்றாலும் சிலரால் மட்டுமே வெற்றி பெற முடியும். அந்த விரல்விட்டு எண்ணக் கூடிய சிலரில் நீங்களும் ஒருவர் என்பதுதான் முக்கியத்துவம்.

    உங்களது முகங்களை பார்க்கும்போது கிராமப்புற முகங்களும் தென்படுகிறது. உங்கள் குடும்பத்தை சார்ந்த முதல் தலைமுறை பட்டதாரியாகவும் நீங்கள் இருக்கலாம். நடுத்தர குடும்பத்தை சார்ந்தவர்களாகவும் இருக்கலாம். உங்கள் அனைவரையும் நான் கேட்டுக்கொள்வது இந்த இடத்துக்கு உங்களை உயர்த்தியவர்களை வாழ்க்கையில் எந்நாளும் மறக்காதீர்கள் என்று நான் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்.

    ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ். பணிகள் என்பது உயர்ந்த அரசுப் பணிகள் என்பதை தாண்டி அதற்கென ஒரு தனி பொறுப்பும் கடமையும் உள்ள பதவி என்பதையும் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    எப்போதுமே உயர்ந்த பதவி என்பது அதைவிட பன்மடங்கு கடமையும் பொறுப்பும் உள்ளடக்கியது என்பதுதான் உண்மை.

    இந்த நாட்டின் எளிய மக்கள் குறிப்பாக கிராமப்புற பகுதி மக்களின் வாழ்வானது அரசாங்கத்தின் பல்வேறு திட்டங்களினால்தான் மேம்பட வேண்டும். இந்தியாவை போன்ற மக்கள் தொகை அதிகமான நாட்டில் இது மிக மிக முக்கியமானது. அதற்கு அரசு திட்டங்கள் முறையாக அவர்களை சென்று அடைய வேண்டும். அது நடைபெற வேண்டும் என்றால், நாளைய தினம் முக்கியப் பொறுப்புகளில் அமரப்போகும் உங்களைப் போன்ற சிறந்த அலுவலர்கள் திட்டங்களை கண்காணித்து செயல்படுத்திட வேண்டும்.

    தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத் தொகை என்ற திட்டத்தை செப்டம்பர் 15-ந்தேதி முதல் செயல்படுத்த இருக்கிறோம்.

    உலகளாவிய பாலின இடைவெளி அறிக்கையில் தரவரிசைப்படுத்தப்பட்ட 146 நாடுகளில் இந்தியா 127-வது இடத்தை பெற்றுள்ளது என்பதும் மிகவும் கவலைக்குரிய செய்தியாகும்.

    இதனை நீக்குவதற்கான முயற்சியாகவும், இந்த திட்டத்தை திட்டமிட்டுள்ளோம். நமது தமிழ்நாட்டை 5 முறை ஆட்சி செய்த முதலமைச்சர் தலைவர் கலைஞர் பெயர் அந்த திட்டத்துக்கு சூட்டப்பட்டு உள்ளது. அவர்தான் பெண்களுக்கு சொத்தில் சமபங்கு உண்டு என்று 1989-ம் ஆண்டு சட்டம் கொண்டு வந்தவர்.

    இப்படி ஒரு திட்டத்தில் ஒரு கோடி மகளிருக்கு மாதம் தோறும் 1000 ரூபாய் தர இருக்கிறோம். மகளிருக்கு பொருளாதார வலிமை ஏற்படுத்தும் திட்டமாக இதனை வடிவமைத்து உள்ளோம்.

    யாருக்கெல்லாம் இது கிடைக்கும் என்று கேட்டபோது யாருக்கெல்லாம் 1000 ரூபாய் அவசியத் தேவையோ அவர்களுக்கெல்லாம் கிடைக்கும் என்று நான் சொன்னேன். திட்டத்தை இப்போதே அறிவித்து விட்டோம்.

    செப்டம்பர் மாதம் 15-ந்தேதிதான் வழங்கப் போகிறோம். இதற்கிடையே வருகின்ற அனைத்து ஆலோசனைகளையும் ஏற்று எந்த சிக்கலும் இல்லாமல், அதனை செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம்.

    என்னுடைய முழு கவனம் என்பது இதில்தான் இப்போது இருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர்கள் கூட்டத்தை கூட்டி அவர்களிடம் முழு பொறுப்பையும் ஒப்படைத்துள்ளேன்.

    அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் மிகுந்த ஆர்வத்தோடு இதில் இறங்கி விட்டார்கள். ஏனென்றால் ஒவ்வொரு மாவட்ட மக்களும் இதில் பயனடைய இருக்கிறார்கள். இத்தகைய துடிப்பும் ஆர்வமும் கொண்டவர்களாக நீங்களும், நீங்கள் பணியாற்றும் இடங்களில் செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    உங்களை நாடி வரும் ஏழை எளிய மக்களின் தேவைகளை நிறைவேற்றும் பொறுப்பு உங்களுக்கு உள்ளது. மக்களிடம் கனிவாக பழகுங்கள். அவர்கள்தான் நமக்கு உண்மையான மேலதிகாரிகள். அவர்களிடம் தான் முதலில் நீங்கள் நற்பெயர் எடுக்க வேண்டும். இதை நீங்கள் எப்போதும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    நிறைய படித்து இந்த பதவியை கைப்பற்றி இருக்கிறீர்கள். இத்தோடு போதும் என்று படிப்பை நிறுத்திவிடாதீர்கள்.

    இந்த சமூகத்தைப் பற்றி படியுங்கள். அதுதான் உங்களை மிகச் சரியாக வழி நடத்தும். உங்களது பயிற்சி காலத்தில் சட்டவிதிகள் நடைமுறைகள் அரசுத் திட்டங்கள், அவற்றுக்கான விதிமுறைகள் ஆகியவற்றை பற்றியெல்லாம் முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள். அதனை எந்த விதத்திலும் எந்த இடத்திலும் விட்டுக்கொடுக்காமல் செயல்படுங்கள்.

    சட்டம் என்ன சொல்கிறது என்றும் பாருங்கள். உங்கள் மனசாட்சி என்ன சொல்கிறது என்பதையும் பாருங்கள் அதன் பிறகு செயல்படுங்கள்.

    அகில இந்திய தேர்வை சிறப்பாக எதிர்கொண்ட நீங்கள் அடுத்து வரும் உங்களது பயிற்சி காலத்தையும் மிக சிறப்பாக நிறைவு செய்வீர்கள் என்று நான் நம்புகிறேன்.

    பல்வேறு பணிகளில் பிற்காலங்களில் பொறுப்பேற்க போகும் உங்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். உங்கள் பணிகளால் நமது தமிழ்நாடும், உங்கள் குடும்பமும் பெருமைப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • இல்லம் தேடி கல்வி பணியில் ஈடுபட்டு வரும் தன்னார்வலர்களை இந்த பணியில் முழுமையாக ஈடுபடுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
    • 500 கார்டுக்கு ஒருவர் வீதம் 20 ஆயிரம் பேரை இப்பணியில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    சென்னை:

    குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் செப்டம்பர் 15-ந் தேதி முதல் செயல்பாட்டுக்கு வர உள்ளது.

    இந்த தொகையை பெறுவதற்கு ரேஷன் கார்டில் பெயர் உள்ள 21 வயது நிரம்பிய பெண் விண்ணப்பிக்கலாம்.

    முதியோர் ஓய்வூதியம், விதவை ஓய்வூதியம், அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரிய ஓய்வூதியம் போன்ற சமூக பாதுகாப்பு திட்ட ஓய்வூதியம் மற்றும் அரசிடம் இருந்து ஓய்வூதியம் பெறும் குடும்பங்கள் இந்த திட்டத்தில் பணம் பெற தகுதி இல்லை. விண்ணப்பம் செய்தால் அந்த மனு நிராகரிக்கப்பட்டுவிடும்.

    ஆண்டுக்கு வீட்டு உபயோகத்துக்கு 3,600 யூனிட்டுக்கு அதிகமாக மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கும் ரூ.1000 பணம் கிடைக்காது.

    இந்த நிபந்தனை மட்டுமல்ல அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், வங்கி ஊழியர்கள், தொழில் வரி செலுத்துபவர்கள், கூட்டுறவு அமைப்புகளின் ஊழியர்கள் பல பேர் இந்த திட்டத்தில் பணம் பெற இயலாது. இதற்காக 8 வகை நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. நடுத்தர ஏழை, எளியவர்கள், சாமானிய மக்களுக்குதான் இந்த 1000 ரூபாய் உதவித்தொகை கிடைக்க வாய்ப்பு உள்ளது.

    இதற்காக வீடு வீடாக விண்ணப்பம் வினியோகிக்கப்பட உள்ளன. ஆங்காங்கே உள்ள தன்னார்வலர்கள் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    இதற்காக மொத்தம் 20 ஆயிரம் தன்னார்வலர்களை தேர்வு செய்ய முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. மாவட்ட வாரியாக இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    இல்லம் தேடி கல்வி பணியில் ஈடுபட்டு வரும் தன்னார்வலர்களை இந்த பணியில் முழுமையாக ஈடுபடுத்த அரசு திட்டமிட்டுள்ளது.

    இது தவிர தாமாக முன்வந்து பணியாற்றும் நபர்களையும், நலச்சங்க நிர்வாகிகளையும் இதில் ஈடுபடுத்த முன்னுரிமை வழங்கப்படும் என தெரிகிறது.

    500 கார்டுக்கு ஒருவர் வீதம் 20 ஆயிரம் பேரை இப்பணியில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இதற்கு முன்னதாக எந்தெந்த பகுதியில் சிறப்பு முகாம்கள் நடத்துவது, எந்தெந்த மண்டபங்கள், சமுதாய நலக்கூடங்களில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பெறுவது என்பது பற்றிய அறிவிப்பும் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட உள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • அனைத்து நியாய விலை கடைகளிலும் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்.
    • நியாய விலை கடைகளில் கைரேகை பதிவு கருவியை முறையாக சீரமைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

    சென்னை:

    குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் செப்டம்பர் 15-ந் தேதி முதல் செயல்பாட்டுக்கு வர உள்ளது.

    இந்த தொகையை பெறுவதற்கு ரேஷன் கார்டில் பெயர் உள்ள 21 வயது நிரம்பிய பெண் விண்ணப்பிக்கலாம்.

    முதியோர் ஓய்வூதியம், விதவை ஓய்வூதியம், அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரிய ஓய்வூதியம் போன்ற சமூக பாதுகாப்பு திட்ட ஓய்வூதியம் மற்றும் அரசிடம் இருந்து ஓய்வூதியம் பெறும் குடும்பங்கள் இந்த திட்டத்தில் பணம் பெற தகுதி இல்லை. விண்ணப்பம் செய்தால் அந்த மனு நிராகரிக்கப்பட்டுவிடும்.

    ஆண்டுக்கு வீட்டு உபயோகத்துக்கு 3,600 யூனிட்டுக்கு அதிகமாக மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கும் ரூ.1000 பணம் கிடைக்காது.

    இந்த நிபந்தனை மட்டுமல்ல அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், வங்கி ஊழியர்கள், தொழில் வரி செலுத்துபவர்கள், கூட்டுறவு அமைப்புகளின் ஊழியர்கள் பல பேர் இந்த திட்டத்தில் பணம் பெற இயலாது. இதற்காக 8 வகை நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. நடுத்தர ஏழை, எளியவர்கள், சாமானிய மக்களுக்குதான் இந்த 1000 ரூபாய் உதவித்தொகை கிடைக்க வாய்ப்பு உள்ளது.

    இந்நிலையில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயனடைய விண்ணப்பிக்கும்போது பயனாளர்களின் கைவிரல் ரேகை பதிவு கட்டாயம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

    அனைத்து நியாய விலை கடைகளிலும் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்.

    நியாய விலை கடைகளில் கைரேகை பதிவு கருவியை முறையாக சீரமைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

    வரும் 17ம் தேதிக்குள்ளாக அனைத்து நியாய விலை கடைகளிலும் கைவிரல் ரேகை பதிவு செய்யும் கருவி இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என அனைத்து துணை ஆணையர்களுக்கும் உணவு பாதுகாப்பு துறை உத்தரவிட்டுள்ளது.

    • பணி ஒதுக்கீடு வழங்கும் போது இயன்ற வரையில் இரண்டு கிலோ மீட்டருக்கு மிகாமல் பணி ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
    • விண்ணப்பப் பதிவு பணிக்கு தேவைப்படும் போது இவர்களை விண்ணப்பப்பதிவு தன்னார்வலர்களாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    சென்னை:

    கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் வெளியிடப்பட்டு உள்ளது.

    இதன்படி வருகிற செப் டம்பர் 15-ந் தேதியில் இருந்து மாதம் ரூ.1000 வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற யார்-யார் தகுதியானவர்கள் என்ற விதிமுறைகளையும் அரசு வெளியிட்டிருந்தது. இதைத் தொடர்ந்து ரேஷன் குடும்ப அட்டை வாரியாக ஒவ்வொரு குடும்பத்துக்கும் விண்ணப்பப் படிவம் வழங்கப்பட உள்ளது.

    இந்த பணியை மேற்கொள்ள ரேஷன் கடைக்காரர்களுடன் இணைந்து பணியாற்ற தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.

    இதுகுறித்து கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட சிறப்பு பணி அலுவலர் இளம் பகவத் மாவட்ட கலெக்டர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கலைஞர் மகளிர் உரிமை திட்ட விண்ணப்பப் பதிவு தன்னார்வலர் பணிக்கு இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களின் விவரங்களைப் பகிர, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இருந்து கோரிக்கைகள் வரப் பெற்று உள்ளன.

    சில மாவட்டங்களில் தன்னார்வலர்களின் விவரங்கள் பகிரப்பட்டுள்ளன.

    இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள் எந்தெந்த நியாய விலை கடைப் பகுதி யில் வசிக்கிறார்கள். என்ற விவரங்கள் இணைக்கப்பட்ட தொகுப்பு விரைவில் மாநில அலுவலகத்தில் இருந்து மாவட்டங்களுக்குப் பகிரப்படும். இப்பொழுது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் இருந்து பெறப்படும் தகவல்களைக் கொண்டு எவ்வித பணி ஒதுக்கீடுகளும் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது. மாநில அலுவலகத்திலிருந்து தகவல்கள் பகிரப்படும் பொழுது கீழ்க்கண்ட நடைமுறைகளைப் பின்பற்றி தன்னார்வலர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    வட்டார ஆசிரிய ஒருங்கிணைப்பாளர் செய்ய வேண்டிய பணிகள்:

    மாநில அலுவலகத்தில் இருந்து பகிரப்படும் தகவல் தொகுப்பில் ஒவ்வொரு நியாய விலை கடைப்பகுதியில் வசிக்கும் தன்னார்வலர்களின் விவரங்கள் இடம் பெற்று இருக்கும் சில நியாய விலை கடைப்பகுதிகளில் தேவைக்கு அதிகமான தன்னார்வலர்கள் தகவல் தரவு பதிவுப் பணிக்கு விருப்பம் தெரிவித்து பதிவு செய்துள்ளனர். சில நியாய விலை கடை பகுதிகளில் போதிய தன்னார்வலர்கள் விருப்பம் தெரிவிக்கவில்லை.

    இவர்களுக்கான பணி ஒதுக்கீடு வழங்கும் போது இயன்ற வரையில் இரண்டு கிலோ மீட்டருக்கு மிகாமல் பணி ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

    ஒருவேளை இரண்டு கிலோ மீட்டருக்கும் மேற்பட்ட தொலைவில் பயணிக்க தன்னார்வலர் சம்மதம் தெரிவித்தால் அவர்களுக்கு இரண்டு கிலோ மீட்டருக்கு அப்பால் பணி வழங்கலாம்.

    தகவல் உள்ளீடு பணிகளுக்கும் கள ஆய்வுப் பணிகளுக்கும் விருப்பம் தெரிவித்த தன்னார்வலர்களை தொலைபேசி வழியாக தொடர்பு கொண்டு அவர்களுக்கு பணியின் முக்கியத்துவத்தை விளக்கி அவர்களது சம்மதத்தைப் பெற்று பணியில் அமர்த்துதல் வேண்டும். சில தன்னார்வலர்கள் தற்போது இந்தப் பணி செய்ய விருப்பம் இல்லை என்று தெரிவித்தால் அவர்களைக் கட்டாயப் படுத்தக்கூடாது.

    இது தொடர்பாக தகவல் பதிவை கூகுள் சீட்டில் பதிவு செய்ய வேண்டும். ஆசிரிய ஒருங்கிணைப்பாளர்கள் ஒவ்வொரு வருவாய் வட்டத்திலும் உள்ள வட்டாட்சியருடன் இணைந்து தன்னார்வலர்களுக்குப் பணி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

    வருவாய் வட்டாட்சியர்கள் செய்ய வேண்டிகள் பணிகள்-

    தன்னார்வலர்களின் தகவல் விவரம் கிடைக்கப் பெற்றவுடன் புதிய தன்னார்வலர்கள் இல்லாத நியாய விலை கடைப் பகுதிகளுக்கு புதிய தன்னார்வலர்களை கண்டறிய வேண்டும். குறிப்பாக நகரப் பகுதிகளில் போதிய இல்லம் தேடி கல்வித் தன்னார்வலர்கள் இல்லை. இப்பகுதிகளில் சுய உதவி குழு உறுப்பினர்கள், வேறு பகுதியில் உள்ள இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களை ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் மூலமாக அடையாளம் கண்டு நியமிக்கலாம்.

    வட்டார ஆசிரிய ஒருங்கிணைப்பாளர்களைக் கலந்து ஆலோசிக்காமல் பணி ஒதுக்கீடுகள் எதுவும் செய்ய வேண்டாம் என் அறிவுறுத்தப்படுகிறது.

    20 சதவீதம் கூடுதல் தன்னார்வலர்களைப் பதிலி தன்னார்வர்களாக பயன்படுத்துவதற்காக அடையாளம் கண்டு வைத்திருக்க வேண்டும். இவர்களுக்கு உதவி மையத் தன்னார்வலர்கள் பொறுப்பு வழங்கலாம்.

    விண்ணப்பப் பதிவு பணிக்கு தேவைப்படும் போது இவர்களை விண்ணப்பப்பதிவு தன்னார்வலர்களாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    நியாய விலைக் கடை அளவிலான பணி ஒதுக்கீடுகளை வருவாய் வட்ட அளவில் செய்ய வேண்டும். மேற்கண்ட தகவல்களை அனைத்து கள அலுவலர்களுக்கும் தெரியப்படுத்துமாறு மாவட்ட கலெக்டர்களையும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களையும் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தன்னார்வலர்களுக்கு பணி ஒதுக்கீடு வழங்கும் போது 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு மிகாமல் பணி ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
    • 2 கிலோ மீட்டருக்கு மேற்பட்ட தொலைவில் பயணிக்க தன்னார்வலர் சம்மதம் தெரிவித்தால் பணி வழங்கலாம்.

    சென்னை:

    குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செப்டம்பர் 15-ம் தேதி முதல் தொடங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகள், பயனாளிகளை கண்டறிதல் உள்ளிட்ட பணிகளை மாவட்டத்தோறும் மேற்கொள்ள அதிகாரிகள், அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பொருளாதார அளவுகோல் மற்றும் இதர விவரங்களை கொண்டு தகுதி வாய்ந்த மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கப்பட உள்ளது.

    இந்த திட்டத்திற்கான மாதிரி விண்ணப்ப படிவம் 2 நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது. சிறப்பு முகாம்கள் நடத்தி பயனாளிகளை கண்டறிந்து விண்ணப்பங்கள் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரேஷன் கடைகள், சமுதாயக் கூடங்கள் உள்ளிட்ட இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தி விண்ணப்பங்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்நிலையில், கலைஞர் மகளிர் உரிமை தொகை தொடர்பாக சிறப்பு முகாம் நடத்துவது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக வெளியிட்டுள்ளது.

    அதில், தன்னார்வலர்கள் இல்லாத ரேசன் கடை பகுதிகளுக்கு புதிய தன்னார்வலர்களை கண்டறிய வேண்டும். இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள், ரேசன் கடைகளில் மகளிர் உரிமை திட்ட விண்ணப்பத்தை பெற முகாம்களில் பணியமர்த்தப்படுவார்கள்

    தன்னார்வலர்களுக்கு பணி ஒதுக்கீடு வழங்கும் போது 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு மிகாமல் பணி ஒதுக்கீடு வழங்க வேண்டும். 2 கிலோ மீட்டருக்கு மேற்பட்ட தொலைவில் பயணிக்க தன்னார்வலர் சம்மதம் தெரிவித்தால் பணி வழங்கலாம். விருப்பமில்லாத தன்னார்வலர்களை விண்ணப்ப பதிவுக்கு பயன்படுத்த கூடாது என கூறப்பட்டுள்ளது. 

    • கிராம பொருளாதாரத்தை சுமப்பதாக பெண்கள் இருக்கிறார்கள் என்பதை மறக்க முடியாது.
    • மகளிர் உரிமைத் தொகையை பெறுவதற்கான வழிகாட்டு முறைகள் விரைவில் வெளியிடப்படும்.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் இன்று மகளிர் உரிமைத்தொகை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கமளித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    * ஆண்கள் அங்கீகரித்தால் பெண்களுக்கான சமூக உரிமை வழங்கிடும் நிலை உருவாகும் என இந்த அரசு நம்புகிறது.

    * தேர்தல் அறிக்கையில் குறிப்பிடாத பல உன்னதமான திட்டங்களை இந்த அரசு செயல்படுத்தி வருகிறது.

    * இந்த ஆண்டின் மகத்தமான திட்டமான மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

    * ஒரு ஆணுடைய வெற்றிக்காகவும், குழந்தைகளின் கல்வி, சமூகத்திற்காகவும் எத்தனை மணி நேரங்கள் அவர்கள் உழைத்திருப்பார்கள்..? அவர்களுக்கான ஊதியம்தான் இது.

    * பெண்களுக்கான சமூக பொருளாதாரத்தை மீட்க எவ்வளவோ தலைவர்கள் வந்தாலும் பெரியாரின் சுயமரியாதை இயக்கமே பெண் விடுதலைக்கு பாதை அமைத்தது.

    * கிராம பொருளாதாரத்தை சுமப்பதாக பெண்கள் இருக்கிறார்கள் என்பதை மறக்க முடியாது.

    * பல்வேறு வகைகளில் விலைமதிப்பில்லாத உழைப்பை வழங்கும் பெண்கள் இந்தத் திட்டத்தால் பயன்பெறுவார்கள்.

    * ஒரு கோடி குடும்பத் தலைவிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும்.

    * மீனவ பெண்கள், சிறுகடை வைத்திருக்கும் பெண்கள், வீட்டு வேலைக்கு செல்லும் பெண்கள் உள்ளிட்ட பலருக்கும் உரிமைத் தொகை வழங்கப்படும்.

    * மகளிர் உரிமைத் தொகையை பெறுவதற்கான வழிகாட்டு முறைகள் விரைவில் வெளியிடப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • உரிமைத் தொகை வழங்குவதற்காக பட்ஜெட்டில் ரூ.7000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    • இல்லத்தரசிகளுக்கு ஊதியம் எனும் கனவை முன்னெடுத்த முதல் இந்தியக் கட்சி மக்கள் நீதி மய்யம் என கமல் கூறி உள்ளார்.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் 2023- 2024ம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், தகுதியுள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் அண்ணா நினைவு நாளான செப்டம்பர் மாதம் 15ம் தேதி முதல் வழங்கப்படும் என்றும், மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான வழிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக பட்ஜெட்டில் ரூ.7000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இந்த அறிவிப்பை, நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் வரவேற்றுள்ளார். இதுதொடர்பாக கமல் கூறியிருப்பதாவது:-

    இல்லத்தரசிகளுக்கு ஊதியம் எனும் கனவை முன்னெடுத்த முதல் இந்தியக் கட்சி மக்கள் நீதி மய்யம். புரட்சிகரமான இந்தத் திட்டம் தமிழ்நாட்டில் குடும்பத்தலைவிகளின் உரிமைத்தொகையாக உருவெடுத்திருப்பதில் மகிழ்கிறேன்.

    வரலாற்று சிறப்புமிக்க இந்த அறிவிப்பிற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை பாராட்டுகிறேன். இல்லத்தரசிகளைப் போற்றுவதில் தமிழ்நாடு இந்தியாவிற்கு வழிகாட்டுகிறது.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    ×