search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகளிர் உரிமைத் தொகை"

    • மேல்முறையீட்டு மனுவை ஆர்.டி.ஓ. ஆய்வு செய்து 30 நாட்களுக்குள் முடிவு செய்ய வேண்டும் என்று அரசு உத்தரவிட்டு உள்ளது.
    • உரிமைத் தொகை மறுக்கப்பட்டவர்களுக்கு மற்றொரு வாய்ப்பாக மீண்டும் மேல்முறையீடு செய்யலாம் என்று தமிழக அரசு ஏற்கனவே அறிவித்து இருந்தது.

    சென்னை:

    தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகையாக மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது. இந்த திட்டத்துக்கு விண்ணப்பம் செய்ததில் 57 லட்சம் பெண்களுக்கு ரூ.1000 உரிமைத் தொகை மறுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு என்ன காரணத்துக்காக உரிமைத் தொகை நிராகரிக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்து விண்ணப்பதாரர்களுக்கு செல்போனில் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டு வருகிறது.

    அதில் கார் வைத்திருப்பது, சொத்து அதிகம் இருப்பது, மின்சாரம் அதிகம் பயன்படுத்தியது போன்ற காரணங்கள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.

    உரிமைத் தொகை மறுக்கப்பட்டவர்களுக்கு மற்றொரு வாய்ப்பாக மீண்டும் மேல்முறையீடு செய்யலாம் என்று தமிழக அரசு ஏற்கனவே அறிவித்து இருந்தது.

    இ-சேவை மையம் வழியாகத்தான் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அதில் நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து இ-சேவை மையங்களிலும் பெண்கள் கூட்டம் அலை மோத தொடங்கி உள்ளது.

    இ-சேவை மையம் திறப்பதற்கு பல மணி நேரத்துக்கு முன்பே பெண்கள் காத்து நிற்கின்றனர். வருகிற 30-ந் தேதிக்குள் மேல் முறையீடு செய்ய வேண்டும் என்று தேதி நிர்ணயிக்கப்பட்டு உள்ளதால் அரசு நடத்தும் இ-சேவை மையங்கள், தனியார் இ-சேவை மையங்கள், இண்டர்நெட் மையங்களிலும் பெண்கள் கூட்டம் தினமும் அதிகரித்து வருகிறது.

    நூற்றுக்கணக்கான பெண்கள் திரண்டு விடுவதால் தள்ளுமுள்ளு ஏற்படுகிறது. மணலி மண்டல அலுவலகத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் அங்கிருந்த கதவு கண்ணாடி உடைந்தது. இ-சேவை மையத்தில் இருந்த கம்ப்யூட்டர் மற்றும் பொருட்களும் கீழே விழுந்து உடைந்துவிட்டது.

    இ-சேவை மைய ஊழியர் கீதாவை பெண்கள் நெருக்கியதால் அவர் மயங்கி விழுந்துவிட்டார். இப்போது அவர் ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இப்படி ஒவ்வொரு இ-சேவை மையங்களிலும் பெண்கள் பொறுமை இழந்து வாக்குவாதம் செய்யும் சம்பவங்கள் தினமும் அரங்கேறி வருகிறது.

    மேல்முறையீடு செய்ய வரும் பெண்கள் ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றுடன் செல்போனில் வந்துள்ள குறுஞ்செய்தியை காண்பித்து விண்ணப்பித்து விட்டு செல்கின்றனர்.

    இந்த மேல்முறையீட்டு மனுவை ஆர்.டி.ஓ. ஆய்வு செய்து 30 நாட்களுக்குள் முடிவு செய்ய வேண்டும் என்று அரசு உத்தரவிட்டு உள்ளது. இந்த விண்ணப்பங்களை தேர்வு செய்ய அவர்களது வீடுகளுக்கு சென்று விசாரிக்க தேவையான ஊழியர்களை தாசில்தார் ஏற்பாடு செய்து வருகிறார்.

    இதன் அடிப்படையில் கள ஆய்வு செய்யும் பணிகள் தொடங்கப்பட உள்ளது. இந்த ஆய்வுக்கு பிறகு தகுதியான பயனாளிகள் உரிமைத் தொகை திட்டத்தில் சேர்க்கப்பட உள்ளனர்.

    இதற்கிடையே மேல் முறையீடு செய்த பெண்கள், எம்.எல்.ஏ.க்களை அணுகி எனக்கு பணம் வரவில்லை. பணம் கிடைக்க ஏற்பாடு செய்யுங்கள் என்று சிபாரிசுக்கு வந்து செல்கின்றனர்.

    இதே போல் கவுன்சிலர்கள் மற்றும் உள்ளூர் தலைவர்களிடமும் நிலைமையை எடுத்து கூறி ரூ.1000 பணம் கிடைக்க உதவிடுமாறு கேட்டு வருகின்றனர்.

    • விண்ணப்பித்தவர்களில் மூன்றில் இரு பங்கிற்கும் குறைவானவர்களுக்கு மட்டும் உரிமைத் தொகை வழங்குவது எந்த வகையிலும் சரியல்ல.
    • இந்தியாவில் பொது வினியோகத் திட்டத்தை வருமான வரம்பு இல்லாமல் அனைவருக்கும் செயல்படுத்திய முதல் மாநிலம் தமிழ்நாடு தான்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வீதம் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தில் நடைபெறும் குளறுபடிகள் தமிழ்நாடு முழுவதும் பெண்களிடையே பெரும் ஏமாற்றத்தையும், கோபத்தையும் ஏற்படுத்தி உள்ளது. தகுதி இருந்தும் மகளிர் உரிமைத் தொகை மறுக்கப்படுவது ஒருபுறம் இருக்க, மேல்முறையீடு செய்யச் செல்லும் இடங்களில் அவர்கள் நடத்தப்படும் விதம் கண்டிக்கத்தக்கதாகும்.

    கடந்த 18-ந் தேதி முதல் மேல்முறையீடு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. அங்கு அவர்கள் மரியாதைக்குறைவாக நடத்தப்படுவதுடன், தொழில்நுட்பக் குறைபாடு உள்ளிட்ட காரணங்களைக் காட்டி அலைக்கழிக்கப்படுகின்றனர். இது தமிழ்நாட்டு ஏழைக் குடும்பத்து பெண்களிடம் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

    மகளிர் உரிமைத் தொகை என்பதே அனைவருக்கும் அடிப்படை வருவாய் என்ற தத்துவத்தின் அடிப்படையிலானது ஆகும். பல நாடுகளில் இந்த உரிமைத் தொகை திட்டம் அனைவருக்கும் தான் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையிலும் கூட இந்த திட்டம் அனைவருக்கும் செயல்படுத்தப்படும் என்று தான் கூறப்பட்டிருந்ததே தவிர, கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு செயல்படுத்தப்படும் என்று எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை. அதற்கு மாறாக, மொத்த குடும்பங்களின் எண்ணிக்கையில் பாதிக்கும் குறைவாகவும், விண்ணப்பித்தவர்களில் மூன்றில் இரு பங்கிற்கும் குறைவானவர்களுக்கு மட்டும் உரிமைத் தொகை வழங்குவது எந்த வகையிலும் சரியல்ல.

    அதுமட்டுமின்றி, இந்தியாவில் பொது வினியோகத் திட்டத்தை வருமான வரம்பு இல்லாமல் அனைவருக்கும் செயல்படுத்திய முதல் மாநிலம் தமிழ்நாடு தான். அதற்காக உச்சநீதி மன்றத்தின் பாராட்டுகளையும் தமிழகம் பெற்று உள்ளது. அதே அணுகுமுறை தான் மகளிர் உரிமைத் தொகை வழங்குவதிலும் தொடர வேண்டும். அதன் படி, தமிழ்நாட்டில் அரிசி குடும்ப அட்டை வைத்துள்ள அனைத்து குடும்பங்களின் தலைவிகளுக்கும் மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்க வேண்டும். குறைந்த பட்சம், ஏற்கனவே விண்ணப்பித்தவர்களுக்கும், இனி விண்ணப்பிக்க இருப்பவர்களுக்கும் எந்த வகையான கட்டுப்பாடும் இல்லாமல் ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கடந்த 14-ந் தேதி முதலே பலருக்கும் வங்கி கணக்கில் உரிமை தொகை வரவு வைக்கப்பட்டது.
    • மகளிர் உரிமை தொகை கிடைக்காத ஏமாற்றத்தில் இருந்த பெண்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர்.

    மதுரை:

    கடந்த 2021-ம் ஆண்டில் தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு உடனடியாக பெண்களுக்கு அரசு பஸ்களில் இலவச பயண அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக வெளியிட்டார். அதைத் தொடர்ந்து மாதம் ரூ.1000 வழங்கும் மகளிர் உரிமை தொகை திட்டம் எப்போது அமலுக்கு வரும் என ஆவலுடன் காத்திருந்தனர். இந்த நிலையில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 15-ந் தேதி அண்ணா பிறந்த நாளன்று மகளிர் உரிமை தொகை திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

    இதற்காக சுமார் 1.5 கோடி பெண்கள் விண்ணப் பம் செய்திருந்தனர். இதில் 50 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக கூறப்பட்டது. சுமார் 1 கோடி பெண்களுக்கு மகளிர் உரிமை தொகையாக மாதம் ரூ.1000 கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. கடந்த 14-ந் தேதி முதலே பலருக்கும் வங்கி கணக்கில் உரிமை தொகை வரவு வைக்கப்பட்டது.

    இந்த நிலையில் மகளிர் உரிமை தொகை வங்கி கணக்கில் கிடைக்காத பெண்கள் ஏமாற்றம் அடைந்தனர். அவர்கள் தொடர்ச்சியாக கணக்கில் பணம் வந்து விட்டதா? என பார்த்துக் கொண்டிருந்தனர். ஏ.டி.எம். மையங்களிலும் சென்று பார்த்தனர். பணம் கிடைக்கவில்லை என்றதும் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    தங்கள் பகுதியில் யாருக்கெல்லாம் கிடைத்திருக்கிறது, யாருக்கு கிடைக்கவில்லை என தீவிரமாக விசாரித்துக் கொண்டிருந்தனர். தங்களுக்கு கிடைப்பதற்கு என்ன செய்ய வேண்டும்? யாரை அணுக வேண்டும் என விசாரித்தபடி இருந்தனர்.

    அப்போது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்களுக்கு அது தொடர்பான குறுஞ்செய்தி அனுப்பப்படும் என்றும், அதில் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் கூறப்பட்டிருக்கும் என்றும், அதனை சரி செய்து மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்றும் தமிழக அரசு அறிவித்தது. இதற்காக பல்வேறு இடங்களில் உதவி மையங்களும் தொடங்கப்பட்டன. ஆனால் விண்ணப்பத்தின் நிலை குறித்து பலருக்கும் குறுஞ்செய்தி கிடைக்க வில்லை. இதனால் அவர்கள் குழப்பமடைந்தனர். அதனால் உதவி மையங்களை நாட தொடங்கினர்.

    இதற்கிடையே வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் பணம் கணக்கில் இருக்க வேண்டிய தொகைக்காக பிடித்தம் செய்து கொள்ளப்படுவதாக தகவல்கள் வெளியாகின. இதைத் தொடர்ந்து வங்கி கணக்கில் செலுத்தப்படும் உரிமைத் தொகையை பிடித்தம் செய்யக் கூடாது என தமிழக அரசு வங்கிகளுக்கு அறிவுறுத்தியது.

    மகளிர் உரிமை தொகை கிடைக்காதவர்கள் விண்ணப்பத்தின் நிலையை அறிந்து கொள்வதற்காகவும், விவரங்களை தெரிந்து கொள்வதற்காகவும் பிரத்யேக இணைய தளத்தை தமிழக அரசு அறிமுகப் படுத்தியது. ஆனால் உரிமை தொகை கிடைக்காதவர்கள் இணையதளத்தை ஆக்கிரமித்தனர். லட்சக்கணக்கானோர் ஒரே நேரத்தில் இணைய பக்கத்தை பார்க்க முயற்சித்ததால் விண்ணப்பத்தின் நிலையை அறியும் இணையபக்கம் முடங்கியது. இதையடுத்து விரைவில் சீரமைக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்தது. ஆனால் கடந்த 4 நாட்களாக இணைய பக்கமும் முடங்கிய நிலையிலேயே இருந்தது.

    மகளிர் உரிமை தொகை கிடைக்காதவர்கள், ஏற்கனவே விண்ணப்பிக்காதவர்களும் மீண்டும் மகளிர் உரிமை தொகைக்காக விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து தாசில்தார் அலுவலகங்களில் பெண்கள் குவிந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 2 தினங்களாக சத்தமே இல்லாமல் பல பெண்களுக்கு தபால் துறை மூலம் மணி ஆர்டரில் வீடு தேடி சென்று போஸ்ட்மேன்கள் மகளிர் உரிமை தொகையை கொடுத்து வருகின்றனர்.

    இதனால் மகளிர் உரிமை தொகை கிடைக்காத ஏமாற்றத்தில் இருந்த பெண்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். இந்த தகவலை உடனடியாக பலருக்கும் பகிர்ந்து தபால்காரரிடம் கேட்கும் படி கூறினர்.

    மகளிர் உரிமை தொகைக்காக கொடுத்த வங்கி, ஆதார் விவரங்களில் தவறு இருந்தால் வங்கி கணக்கில் நேரடியாக பணம் செலுத்த முடியாது. அவர்களுக்கு மாற்று ஏற்பாடாக தமிழக அரசு மணி ஆர்டரில் மகளிர் உரிமை தொகை கிடைக்கச் செய்துள்ளது.

    விண்ணப்பத்தில் விவரங்களை சரியாக கொடுக்காதவர்களுக்கு காரணம் காட்டி நிறுத்தி வைக்காமல் மணி ஆர்டர் மூலம் பணம் அனுப்பி வைத்த தமிழக அரசின் நடவடிக்கையை பெண்கள் பாராட்டுகின்றனர்.

    • விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டவர்கள், இணைய சேவை மையங்களை அணுகி மேல்முறையீடு செய்ய வழி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
    • குறுஞ்செய்தி பெறப்பட்ட 30 நாட்களுக்குள் இணைய சேவை மையங்களின் வழியே மேல்முறையீடு செய்யலாம் என்றும் கூறப்பட்டு உள்ளது.

    சென்னை:

    கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் தமிழகம் முழுவதும் நடைமுறைக்கு வந்துள்ளது.

    1.06 கோடி மகளிர் தகுதியானவர்களாக அடையாளம் காணப்பட்டனர். 57 லட்சம் பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு உள்ளன. விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதற்கான காரணம், செல்போனுக்கு குறுஞ்செய்தியாக வரும் என அறிவிக்கப்பட்டது.

    நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு கடந்த 18-ந்தேதி முதல் குறுஞ்செய்தி வரும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் பெரும்பாலானவர்களுக்கு குறுஞ்செய்தி வரவில்லை எனக் கூறப்படுகிறது.

    இதனால் விண்ணப்பதாரர்கள் பலர் பதற்றம் அடைந்தனர். தங்களுக்கு ரூ.1000 பணம் கிடைக்காமல் போய் விடுமோ என்று நினைத்தனர். இதையடுத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும், சென்னை மாநகராட்சி மண்டல அலுவலகங்களிலும் குவியத் தொடங்கி உள்ளனர்.

    அங்கு அமைக்கப்பட்டு உள்ள உதவி மையங்களில் விண்ணப்பத்தின் நிலை பற்றி விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. இதில் அவ்வப்போது சர்வர் பிரச்சனை எழுவதால் அனைவருக்கும் விண்ணப்ப நிலையை உடனுக்குடன் தெரிந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டவர்கள், இணைய சேவை மையங்களை அணுகி மேல்முறையீடு செய்ய வழி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. குறுஞ்செய்தி பெறப்பட்ட 30 நாட்களுக்குள் இணைய சேவை மையங்களின் வழியே மேல்முறையீடு செய்யலாம் என்றும் கூறப்பட்டு உள்ளது.

    மகளிர் உரிமைத் தொகைத் திட்ட விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்களை விண்ணப்பதாரர்களே அறிந்து கொள்ள தனி இணைய தளம் (https://kmut.tn.gov.in) தொடங்கப்பட்டது. இந்த இணையதளத்தில் ஆதார் எண்ணையும், பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண்ணையும் குறிப்பிட்டால் ஒரு முறை பயன்படுத்தும் கடவு எண் கைப்பேசிக்கு வரும். இதைக் கொண்டு விண்ணப்ப நிலையை அறிந்து கொள்ளலாம்.

    இந்த இணையதளம் ஓரிரு நாட்களாக பயன்பாட்டில் இல்லாமல் முடங்கி உள்ளது. இணையதளம் பராமரிப்பில் இருப்பதாகவும், விரைவில் பயன்பாட்டுக்கு வரும் எனவும் இணையப் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனால் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வரப்பெற்றவர்கள், இணைய சேவை மையங்களை நாடினாலும் மேல்முறையீடு செய்ய முடியாத நிலை உள்ளது.

    இதுகுறித்து இணைய சேவை மையத்தினர் கூறுகையில், "மேல்முறையீட்டுக்கான வசதி இணைய சேவை மையங்களில் இதுவரை ஏற்படுத்தித் தரவில்லை. விண்ணப்பத்தின் நிலையை மட்டுமே இலவசமாக பார்த்து விண்ணப்பதாரர்களுக்கு கூறி வருகிறோம்" என்றனர்.

    விண்ணப்பங்களின் நிலையை அறிய வட்டாட்சியர் அலுவலகங்கள், மாநகராட்சி அலுவலகங்களில் மகளிர் குவிந்திருக்க, விண்ணப்பங்கள் நிகாகரிக்கப்பட்டவர்களோ மேல்முறையீடு செய்வது எங்கே என தெரியாமல் தவிக்கிறார்கள்.

    எனவே இதற்கான உரிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு விரைந்து வெளியிட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

    இதற்கிடையே விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டவர்களுக்காக சிறப்பு முகாம்களை நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகத் கூறப்படுகிறது.

    விண்ணப்பப் படிவங்களை வட்டாட்சியர் அலுவலகங்கள், மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் பெற்று, பூர்த்தி செய்த படிவங்களை சிறப்பு முகாம்களில் அளிக்க யோசனைகள் முன் வைக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

    • மதுரையில் 500-க்கும் மேற்பட்ட மகளிருக்கு உரிமை தொகை பெறுவதற்கான டெபிட் கார்டுகளை வழங்கி உள்ளேன்.
    • புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் படிக்கும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 பெறுகின்ற திட்டத்தினை கொடுத்தார்.

    மதுரை:

    மதுரை பாண்டி கோவில் அருகே துவாரகா பேலஸ் மண்டபத்தில் தமிழக அரசின் கலைஞர் உரிமைத் திட்டத்தின் கீழ் பயனாளிகள் 500-க்கும் மேற்பட்டோருக்கு அதற்கான வங்கி பரிவர்த்தனை அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அமைச்சர் மூர்த்தி தலைமை தாங்கினார்.

    சிறப்பு திட்ட இயக்குனர் தரேஸ் அகமது முன்னிலை வகித்தார். கலெக்டர் சங்கீதா வரவேற்றார். இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு வங்கி அட்டையை வழங்கினார். விழாவில் அவர் பேசியதாவது:-

    முதலமைச்சர் கடந்த செப்டம்பர் 15-ந்தேதி அண்ணா பிறந்தநாளில் காஞ்சிபுரத்தில் கலைஞர் உரிமைத்தொகை திட்டத்தை தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக இன்று மதுரையில் 500-க்கும் மேற்பட்ட மகளிருக்கு உரிமை தொகை பெறுவதற்கான டெபிட் கார்டுகளை வழங்கி உள்ளேன். இது வெறும் டெபிட் கார்டு அல்ல பெண்களின் வாழ்க்கையை மாற்றும் துருப்புச் சீட்டு ஆகும்.

    இன்று இந்தியா முழுவதும் இந்தத் திட்டத்தை பின்பற்றி வருகிறார்கள். பெண்கள் முன்னேற்றத்தில் பெரியார் கண்ட கனவுகளுக்கு நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகம் தான் செயல் வடிவம் கொடுத்து வருகிறது. டாக்டர் கலைஞர் அதை செய்தார். அதனைத்தொடர்ந்து நம்முடைய முதல்வரும் பெண்களின் முன்னேற்றத்திற்கான பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். எனவே தான் இந்த அரசை அனைவரும் பாராட்டும்படி திராவிட மாடல் அரசு என்று நாம் கூறுகிறோம்.

    பெண்கள் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக மூன்று நிலைகள் இருக்கிறது என்று பெரியார் ஆழ்ந்து சிந்தித்து சொன்னார். ஒன்று கலாச்சாரத்துறை ரீதியாக தடுக்கப்பட்டிருக்கிறது. இரண்டு சட்டரீதியாக தடுக்கப்பட்டிருக்கிறது. மூன்று பொருளாதார ரீதியாக தடுக்கப்பட்டிருக்கிறது. இந்த மூன்று தடைகளையும் நீக்கினால் தான் பெண்கள் சுதந்திரமாக முன்னேற முடியும் என பெரியார் சொல்லி இருக்கிறார். பெண்கள் முன்னேற மேல் ஜாதி, கீழ் ஜாதி என்ற பாகுபாடும், முதலாளி, தொழிலாளி என்ற பாகுபாடும் உள்ளது.

    விதவை என்று சொல்லி பெண்களை செயல்படாமல் வைத்திருப்பது போன்ற பாகுபாடுகள் எல்லாம் 100 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது. இதனை நீக்குகின்ற வகையில் அண்ணா விதவை மறுமணம் திட்டம், சுயமரியாதை திருமண திட்டத்தை தொடங்கி வைத்தார். பொருளாதார ரீதியாக முன்னேற வேண்டும் என்பதற்காக டாக்டர் கலைஞர் 30 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தாய் வயிற்றில் பிறந்தாலும் சொத்தில் பெண்களுக்கு பங்கு இல்லை என்ற நிலையை போக்க சொத்தில் பெண்களுக்கு சம உரிமை என்ற சட்டத்தை நிறைவேற்றினார்.

    தற்போது தமிழக முதல்வர் பெண்கள் அனைத்திலும் முன்னேற வேண்டும் என்பதற்காக அதுவும், பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும் என்பதற்காக பெண் குழந்தையாக இருக்கும்போது தந்தையே நம்பி இருக்கிறார். வளர்ந்து பெரிய பெண்ணான பின்னர் திருமணம் முடித்த பின்னர் கணவனை நம்பி இருக்கிறார். பின்னர் வயதானவுடன் மகனோ அல்லது மகளையோ நம்பி இருக்கிறார். எனவே இந்த நிலையை மாற்ற வேண்டும் என்பதற்காக தான் நம்முடைய முதல்வர் மு.க.ஸ்டாலின் பொருளாதார ரீதியாக பெண்கள் முன்னேற வேண்டும் என்று கருதி முதல்வர் பதவியை ஏற்றவுடன் முதல் கையெழுத்தாக கட்டணமில்லா பேருந்தில் மகளிர் செல்வதற்காக கையெழுத்து இட்டார்.

    அதனைத் தொடர்ந்து புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் படிக்கும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 பெறுகின்ற திட்டத்தினை கொடுத்தார். மேலும் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் காலையில் உணவு சாப்பிட முடியாத நிலையில் அனுப்புகிறோமே என்று தாயின் கவலையை போக்குகின்ற வகையில் இன்று 31,000 பள்ளிக்கூடங்களில் 17 லட்சம் மாணவ, மாணவிகள் பயன் பெறுகின்ற வகையில் காலை உணவு திட்டத்தினை நம்முடைய முதல்வர் தொடங்கி வைத்திருக்கிறார். தற்போது இந்த பெண்கள் உரிமை தொகை என்பது உதவித் தொகை அல்ல என்று நம்முடைய முதல்வர் கூறி பெண்களின் முன்னேற்றத்திற்காக மாதம் தோறும் ரூபாய் ஆயிரம் பெறுகின்ற வகையில் இந்த உரிமை தொகை திட்டத்தினை செயல்படுத்தி இருக்கிறார்.

    சுயமாக சிந்திக்க வேண்டும், சுத்தமாக சிந்திக்க வேண்டும். அப்போதுதான் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பெண்களுக்கு பணம் கிடைத்தால் அந்த பணத்தை குடும்பத்திற்காகவும், சமுதாயத்திற்காகவும், நாட்டுக்காகவும் செலவு செய்வார்கள். எனவே பெண்கள் பொருளாதார ரீதியாக முன்னேற வேண்டும் என்பதே நமது கடமை.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • பலர் புதிதாக மகளிர் உரிமைத்தொகை கேட்டு விண்ணப்பித்தனர்.
    • ஏராளமானோர் ஒரே நேரத்தில் அலுவலகத்திற்குள் செல்ல முயன்றதால் கடும் நெரிசல் ஏற்பட்டது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் 5 லட்சத்து 77 ஆயிரத்து 801 பேர் மகளிர் உரிமை திட்டத்தில் விண்ணப்பம் செய்து இருந்தனர்.

    இதில் 2,170 பேருக்கு முதல் கட்டமாக மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது. பெரும்பாலானோரின் விண்ணப்பம் ஏற்கப்படவில்லை என மாவட்ட நிர்வாகம் எஸ்.எம்.எஸ். அனுப்பியதாக தெரிகிறது.

    இதனால் அதிருப்தி அடைந்த விண்ணப்பித்து இருந்த குடும்ப தலைவிகள் ஏராமானோர் நேற்று திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் திரண்டு விபரங்களை கேட்டறிந்தனர். பலர் புதிதாக மகளிர் உரிமைத்தொகை கேட்டு விண்ணப்பித்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை சுமார் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் 2-வது நாளாக திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் குவிந்தனர்.

    தங்களது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது ஏன்? என்று அங்கிருந்த ஊழியர்களிடம் கடும் வாக்குவாதம் செய்தனர். மேலும் ஏராளமானோர் ஒரே நேரத்தில் அலுவலகத்திற்குள் செல்ல முயன்றதால் கடும் நெரிசல் ஏற்பட்டது. பெண்கள் ஒருவருக்கொருவர் முண்டியடித்து செல்ல முயன்றனர்.

    தகவல் அறிந்ததும் கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விரைந்து வந்து பெண்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி நெரிசலை சரி செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்து மீண்டும் உரிமைத்தொகை மனு பெற்று அனுப்பி வைத்தனர். தொடர்ந்து பெண்கள் வந்து கொண்டே இருப்பதால் வட்டாட்சியர் அலுவலகம் பரபரப்பாக காணப்படுகிறது.

    • இ-சேவை மையம் மூலமாக சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியர்களிடம் மேல்முறையீடு செய்யலாம்.
    • விண்ணப்பங்கள் 30 நாட்களுக்குள்ளாக தீர்வு காணப்படும்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் ஏற்கப்பட்ட விண்ணப்பங்கள் போக மீதமுள்ள விண்ணப்பங்கள் கள ஆய்வுக்குட்படுத்தி அதன் அடிப்படையில் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

    விண்ணப்பதாரர்களின் விண்ணப்ப முடிவு நிலை குறித்து விண்ணப்பதாரர்களின் பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண்ணிற்கு 29.9.2023 வரை குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்படும்.

    மேலும் விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பங்கள் குறித்த விவரமறிய, மாவட்ட கலெக்டர் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட உதவி மையத்தினை தொடர்பு கொண்டு தங்களுடைய ஆதார் எண் மற்றும் தொலைபேசி எண் ஆகிய விவரங்களுடன் தங்களுடைய விண்ணப்பம் பற்றிய விவரங்களை எவ்வித கட்டணமும் இன்றி அறிந்து கொள்ளலாம்.

    கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் ஏற்கப்படாத விண்ணப்பதாரர்கள் குறுஞ்செய்தி பெறப்பட்ட நாளில் இருந்து 30 நாட்களுக்குள் மகளிர் உரிமைத் திட்டத்தில் தான் தகுதியானவர் என கருதும்பட்சத்தில் இ-சேவை மையம் மூலமாக சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியர்களிடம் மேல்முறையீடு செய்யலாம்.

    கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்கள் குறித்த நிலை அறியவோ, மேல்முறையீடு செய்யவோ எந்த கட்டணமும் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் 30 நாட்களுக்குள்ளாக தீர்வு காணப்படும்.

    தகுதியற்ற பயனாளிகள் ஒருவேளை தவறுதலாக தேர்வாகி இருந்தால் அது குறித்த குறிப்பான தகவல்களையும் தெரிவிக்கலாம்.

    கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பங்கள் குறித்த தகவல்களை மாவட்ட கலெக்டர் அலுவலக உதவி மைய எண் 9003758638-யை அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • வங்கி கணக்கில் அரசு ரூ.1000 செலுத்தியதில் பலரது கணக்கில் அவற்றை வங்கிகள் பிடித்தம் செய்து கொண்டன.
    • வங்கியில் 2 வகையான சேமிப்பு கணக்குகள் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது.

    சென்னை:

    தமிழக அரசு சார்பில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்படி குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படுகிறது.

    முதல் கட்டமாக ஒரு கோடியே 6 லட்சம் பெண்கள் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட்டுள்ளது.

    வங்கி கணக்கில் அரசு ரூ.1000 செலுத்தியதில் பலரது கணக்கில் அவற்றை வங்கிகள் பிடித்தம் செய்து கொண்டன. கணக்கில் இதுவரையில் பணம் இல்லாமல் பண பரிவர்த்தனை மேற்கொள்ளாமல் இருந்ததால் அபராதமாக பிடிக்கப்பட்டது. இது பெண்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    தங்கள் கணக்கில் செலுத்தப்பட்ட ரூ.1000-ம் குறைந்தபட்சம் இருப்பு வைத்திருக்க வேண்டும் என்ற அடிப்படையில் பலரது வங்கி கணக்கிற்கு பணம் செலுத்தப்பட்டதும் தானாகவே அபராத தொகையாக வசூலிக்கப்பட்டு விட்டன.

    இதனால் இத்திட்டத்தின் பயன் குடும்ப தலைவிகளுக்கு முழுமையாக கிடைக்காமல் போய் விடக்கூடாது என்பதற்காக அரசு வங்கி தலைமை அதிகாரிகளுக்கு தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கை எடுத்தது.

    இந்தநிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு வங்கி ஊழியர் சம்மேளன தலைவர் சி.எச்.வெங்கடாசலம் கடிதம் எழுதி உள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

    மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் தகுதியுள்ள பெண்கள் வங்கி கணக்கில் பணம் செலுத்தியதை எடுக்கும்போது சில கஷ்டங்களும், பிரச்சினைகளும் ஏற்படுகின்றன.

    வங்கியில் 2 வகையான சேமிப்பு கணக்குகள் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது.

    'ஜீரோ பேலன்ஸ்' கணக்கு என்று சொல்லக் கூடியதாகும். அதாவது கணக்கில் சிறு தொகை கூட இருப்பு இல்லாமல் முழுமையாக எடுக்கவும், டெபாசிட் செய்யக்கூடிய வசதியாகும். இவ்வகை வங்கி கணக்கில் இருந்து முழுமையான தொகை எடுத்தாலும கூட அபராதம் எதுவும் வசூலிக்கப்பட மாட்டாது.

    மற்றொரு வகை சாதாரண சேமிப்பு கணக்காகும். இந்த கணக்கில் குறைந்தபட்சம் ரூ.500 அல்லது ரூ.1000 இருப்பு இருக்க வேண்டும். குறைந்தபட்ச இருப்பை விட பணம் குறையும்போது அபராதம் வசூலிக்கப்படும் நடைமுறை உள்ளது.

    வங்கி விதிகளின்படி ஜீரோ பேலன்ஸ் கணக்கை சாதாரண சேமிப்பு கணக்கிற்கு மாற்றலாம். ஆனால் சாதாரண சேமிப்பு கணக்கை ஜீரோ பேலன்ஸ் கணக்கிற்கு மாற்றம் செய்ய இயலாது.

    இத்திட்டத்தில் பெரும்பாலான பயனாளிகள் கொடுத்துள்ள வங்கி கணக்கு சாதாரண சேமிப்பு கணக்காகும். 'ஜீரோ பேலன்ஸ்' கணக்கு வைத்திருக்கவில்லை. அதனால் குறைந்தபட்ச இருப்பு இல்லாத காரணத்திற்காக குறிப்பிட்ட சிறு தொகை அபராதமாக வசூலிக்கப்படுகிறது.

    எனவே வங்கிகள் குறைந்த இருப்பிற்காக வசூலிக்கப்படும் அபராதத்தை தள்ளுபடி செய்ய வேண்டும். அல்லது சாதாரண சேமிப்பு கணக்கு வைத்துள்ள பெண்களின் கணக்கை 'ஜீரோ பேலன்ஸ்' கணக்காக மாற்ற அரசு வங்கிகளுக்கு ஆலோசனை வழங்க வேண்டும்.

    இத்திட்டத்தில் பயன் அடையும் பெண்கள் எவ்வித கஷ்டமும் இல்லாமல் அபராத கட்டணமும் இன்றி முழுமையாக பணத்தை பெற இந்த இரண்டு வழிகளில் ஏதாவது ஒன்றை பின்பற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார்.

    • கலைஞர் உரிமைத்தொகைக்காக விண்ணப்பித்த சிலருக்கு இன்னமும் பணம் அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படவில்லை.
    • எங்கள் வங்கி கணக்கில் பணமும் வரவு வைக்கப்படவில்லை. நாங்கள் சாதாரண கூலி வேலை செய்பவர்கள்.

    ஈரோடு:

    தமிழகம் முழுவதும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடங்கப்பட்டு பயனாளிகளுக்கு அவர்களது வங்கி கணக்கில் ஆயிரம் வரவு வைக்கப்பட்டது. சிலருக்கு கடந்த 14-ந் தேதி முதலே அவர்களது வங்கி கணக்கில் கலைஞர் உரிமைத் தொகையான ரூ.1000 வரவு வைக்கப்பட்டது.

    இந்நிலையில் கலைஞர் உரிமைத்தொகைக்காக விண்ணப்பித்த சிலருக்கு இன்னமும் பணம் அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படவில்லை. இதையடுத்து அவர்களுக்கு ஒரு வாய்ப்பாக மேல்முறையீடு செய்து உரிமைத் தொகையை பெற்றுக் கொள்ளலாம் என அரசு தெரிவித்து இருந்தது.

    இதையடுத்து இன்று காலை முதலே ஈரோடு தாலுகா அலுவலகத்தில் உரிமைத்தொகை கிடைக்காத பெண்கள் ஏராளமானோர் திரண்டு வந்தனர். அதில் சில பெண்கள் திடீரென தாலுகா அலுவலகத்தில் எதிரே உள்ள திருமகன் ஈவேரா சாலையில் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும் ஈரோடு டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இதேபோல் தாசில்தார் ஜெயக்குமாரும் சம்பவ இடத்துக்கு வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    நாங்கள் கலைஞர் மகளிர் உரிமை தொகைக்காக விண்ணப்பித்திருந்தோம். இதுவரை எங்களுக்கு எந்த ஒரு எஸ்.எம்.எஸ்.வரவில்லை. எங்கள் வங்கி கணக்கில் பணமும் வரவு வைக்கப்படவில்லை. நாங்கள் சாதாரண கூலி வேலை செய்பவர்கள்.

    எங்கள் பகுதியில் பலருக்கும் உரிமைத் தொகை அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து கேட்டபோது இன்று தாலுகா அலுவலகத்திற்கு வந்து விசாரித்து கொள்ளலாம் என்று கூறியிருந்தனர்.

    அதன் அடிப்படையில் நாங்கள் வேலையை விட்டு விட்டு தாலுகா அலுவலகத்திற்கு வந்தோம். இங்கு ஆன்லைன் செயல்படவில்லை என்கிறார்கள். நாங்கள் என்ன செய்யட்டும் என்றனர்.

    இதற்கு பதில் அளித்து பேசிய தாசில்தார் ஜெயக்குமார்,

    விண்ணப்பித்த அனைத்து பெண்களுக்கும் கலைஞர் உரிமைத் தொகை கண்டிப்பாக கிடைக்கும். உங்களுக்கு என்ன காரணத்துக்காக இதுவரை கிடைக்கவில்லை என்று பார்க்கலாம். உங்களுக்கு உரிமைத் தொகை கிடைக்க வழிவகை செயல்படும்.

    உங்களுக்காகவே தாலுகா அலுவலகத்தில் 3 அதிகாரிகள் கொண்ட உதவி மையம் செயல்பட்டு வருகிறது. அவர்களிடம் உங்களுக்கு என்ன சந்தேகம் உள்ளதோ அதை கேட்டு தெளிவுபடுத்திக் கொள்ளலாம். இதுவரை பணம் ஏறாதவர்களுக்கு வரும் 23-ந் தேதிக்குள் பணம் அவர்களது வங்கி கணக்கில் ஏறிவிடும். உங்கள் பிரச்சினையை சரி செய்து கொள்ளலாம் என்றார்.

    இதனை ஏற்று பெண்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலந்து சென்றனர். இதனால் தாலுகா அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    • மகளிர் உரிமைத்தொகை குறுஞ்செய்தி கிடைப்பதில் நடக்கும் குளறுபடியை தவிர்க்க தமிழக அரசு இந்த புதிய இணைய தளத்தை தொடங்கி உள்ளது.
    • மேல்முறையீட்டுக்கு விண்ணப்பிக்க தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள இ-சேவை மையங்கள் மூலமாகத்தான் விண்ணப்பிக்க முடியும்.

    சென்னை:

    தி.மு.க. அரசு தனது தேர்தல் அறிக்கையில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என்று அறிவித்தது. இந்த திட்டம் கடந்த 15-ந் தேதி பேரறிஞர் அண்ணா பிறந்த நாளன்று தொடங்கப்பட்டது. காஞ்சீபுரத்தில் நடந்த விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கிவைத்து மகளிருக்கு ரூ.1,000 உதவித்தொகைக்கான ஆணை மற்றும் அதற்கான பிரத்யேக ஏ.டி.எம். கார்டுகளை வழங்கினார்.

    தமிழகம் முழுவதும் 1 கோடியே 6 லட்சம் பேருக்கு இந்த மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டுள்ளது. அதாவது விண்ணப்பித்தவர்களில் 65 சதவீதம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. 35 சதவீத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு உள்ளன. எனவே தகுதி இருந்தும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டால் அவர்கள் மேல்முறையீடு செய்யலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

    இதற்கிடையே மகளிர் உரிமைத்தொகைக்கான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது ஏன்? என்பதை தெரிந்து கொள்ளும் வகையில் https://kmut.tn.gov.in என்ற புதிய இணையதளம் ஒன்றை தமிழக அரசு தொடங்கி உள்ளது.

    இதுதொடர்பாக அதிகாரிகள் கூறியதாவது:-

    அரசு உருவாக்கி உள்ள இந்த புதிய இணையதளம் மூலம் மகளிர் உரிமைத்தொகை தனக்கு எதனால் கிடைக்கவில்லை என்பதை தாங்களாகவே தெரிந்து கொள்ளலாம். அதாவது அந்த இணையதளத்தில் ஆதார் எண்ணை உள்ளீடு செய்ய வேண்டும். அதில் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பத்தில் கொடுத்த ஆதார் எண்ணை பதிவிட வேண்டும். ஆதாருடன் இணைக்கப்பட்ட செல்போன் எண்ணுக்கு ஓ.டி.பி. வரும். அதை வைத்து என்ன காரணத்துக்காக பணம் வரவில்லை என்பதை பொதுமக்கள் தெரிந்து கொள்ளலாம்.

    மகளிர் உரிமைத்தொகை குறுஞ்செய்தி கிடைப்பதில் நடக்கும் குளறுபடியை தவிர்க்க தமிழக அரசு இந்த புதிய இணைய தளத்தை தொடங்கி உள்ளது. நேற்று மதியம் முதல் பயன்பாட்டுக்கு வந்த இந்த புதிய இணையதள பணிகள் இன்னும் முழுமையடைவில்லை.

    அந்த பணிகள் இன்னும் ஓரிரு நாளில் முடிவடையும். அதன்பிறகு எந்தவொரு சிக்கலும் இல்லாமல் மகளிர் உரிமைத்தொகை வராதது ஏன் என்பதை மட்டும் தெரிந்து கொள்ளலாம்.

    இதுதொடர்பான மேல்முறையீட்டுக்கு விண்ணப்பிக்க தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள இ-சேவை மையங்கள் மூலமாகத்தான் விண்ணப்பிக்க முடியும். அப்படி மேல்முறையீட்டுக்கு விண்ணப்பிக்கும் போது எந்தவொரு கட்டணமும் வசூலிக்கப்படாது. இதுதொடர்பாக அந்தந்த இ-சேவை மையங்களுக்கு கட்டணம் எதுவும் வசூலிக்க கூடாது எனவும் அரசு சார்பில் அறிவுறுத்தி உள்ளோம்.

    இவ்வாறு அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • கலைஞர் மகளிர் உரிமை திட்ட தொகையை பயனாளிகளிடம் இருந்து வங்கிகள் பிடித்தம் செய்துள்ளது தெரிய வந்துள்ளது.
    • முதலமைச்சரின் உதவி மைய தொலைபேசி எண் 1100-ஐ அழைத்து புகார் அளிக்கலாம்.

    சென்னை:

    தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

    தமிழ்நாடு முழுவதும் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் குடும்ப தலைவிகளுக்கு உரிமைத் தொகை ரூ.1000 வீதம் வழங்கப்படுகிறது.

    இந்நிலையில் கலைஞர் மகளிர் உரிமை திட்ட தொகையை பயனாளிகளிடம் இருந்து வங்கிகள் பிடித்தம் செய்துள்ளது தெரிய வந்துள்ளது.

    இந்த தொகையை பிடித்தம் செய்யக்கூடாது என ஏற்கனவே அறிவுறுத்தியும், அதனை சில வங்கிகள் பின்பற்றாதது ஏற்கத்தக்கது அல்ல.

    இதுகுறித்து முதலமைச்சரின் உதவி மைய தொலைபேசி எண் 1100-ஐ அழைத்து புகார் அளிக்கலாம். இப்புகார்கள் விசாரிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • ஒவ்வொரு மாவட்டத்திலும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.
    • குறுஞ்செய்தி கிடைத்த 30 நாட்களுக்குள் இணையதளம் வழியாக மேல்முறையீடு செய்யலாம்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் கலைஞர் உரிமைத் தொகை ரூ.1000 திட்டத்தில் ஒரு கோடியே 63 லட்சம் பேர் விண்ணப்பித்தனர்.

    விண்ணப்பித்ததும் ஒவ்வாரு விண்ணப்பதாரருக்கும் அவர்களது விண்ணப்பம் பெறப்பட்டதாக கைபேசிகளுக்கு குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்பட்டது.

    அதன் பிறகு கள ஆய்வுகள் செய்யப்பட்டு அதில் ஒரு கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. எஞ்சிய விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.

    ஏற்றுக் கொள்ளப்பட்ட விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் அவர்களது வங்கி கணக்குகளுக்கு உரிமைத் தொகை அனுப்பப்பட்டது. இதுவரை வங்கி கணக்கு தொடங்காதவர்களுக்கு மணியார்டர் மூலம் பணம் அனுப்பப்பட்டது. அடுத்த தவணை பணம் செலுத்துவதற்குள் அவர்களும் வங்கி கணக்கு தொடங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தமிழகம் முழுதும் 57 லட்சம் விண்ணப்பஙகள் நிராகரிக்கப்பட்டுள்ளது. அவர்களில் பலர் தங்களது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது ஏன்? அவர்களை விட வசதி படைத்தவர்களுக்கு உரிமைத் தொகை கிடைத்து இருப்பதாகவும் தங்களது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் புரியவில்லை என்றும் சந்தேகம் அடைந்துள்ளார்கள்.

    அவர்களது சந்தேகத்தை போக்கும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.

    நாளை (18-ந்தேதி) முதல் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் செல்போனுக்கு குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்படும்.

    அந்த குறுஞ்செய்தி கிடைத்த 30 நாட்களுக்குள் இணையதளம் வழியாக மேல்முறையீடு செய்யலாம்.

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் கூறியதாவது:-

    காஞ்சிபுரம் மாவட்டத்தில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பப் பதிவு முகாம்கள் 2 கட்டங்களாகவும், இரண்டு கட்டங்களிலும் விடுபட்டவர்களுக்காக சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டு, மொத்தம் 2 லட்சத்து 77 ஆயிரத்து 386 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

    இதில் சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு அவர்களுக்கு வங்கி கணக்குகளின் வாயிலாக கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டது. மேலும், வங்கி கணக்கு இல்லாத பயணாளிகளுக்கு பணவிடை அஞ்சல் மூலமாக உரிமைத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

    மேலும் அவர்களுக்கு புதிய வங்கி கணக்கு தொடங்கவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏற்கப்பட்ட விண்ணப்பங்கள் போக மீதமுள்ள விண்ணப்பங்கள் கள ஆய்வுக்குட்படுத்தி அதன் அடிப்படையில் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. விண்ணப்பதாரர்களின் விண்ணப்ப முடிவு நிலை குறித்து, விண்ணப்பதாரர்களின் பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண்ணிற்கு நாளை (18-ந் தேதி) குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்படும்.

    மேலும், விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பங்கள் குறித்த விவரமறிய, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட உதவி மையத்தினை தொடர்புகொண்டு விண்ணப்பம் பற்றிய விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

    கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் ஏற்கப்படாத விண்ணப்பதாரர்கள் குறுஞ்செய்தி பெறப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள், மகளிர் உரிமைத் திட்டத்தில் தான் தகுதியானவர் என கருதும்பட்சத்தில் இ-சேவை மையம் மூலமாகவும் அல்லது சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியர்களிடமோ மேல்முறையீடு செய்யலாம். மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் 30 நாட்களுக்குள்ளாக தீர்வு காணப்படும் என்று கூறினார்.

    ×