search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகளிர் உரிமைத் தொகை"

    • தாய் தமிழ்நாட்டுக்கு 'தமிழ்நாடு' எனறு பெயர் சூட்டிய பேரறிஞர் அண்ணா இனி இந்த பெயரை யாராலும் நீக்க முடியாது.
    • எத்தனை ஆண்டுகளுக்கு பெண்கள் உரிமைத் தொகை பெறுகிறார்களோ, அத்தனை ஆண்டுகளுக்கும் இந்த ஸ்டாலின் தான் ஆள்கிறான் என்று பொருள்.

    காஞ்சிபுரம்:

    கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தை தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    என்னுடைய அரசியல் பயணத்துக்கு எத்தனையோ உந்துசக்திகள் இருக்கலாம் எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்த மாதிரி இருந்தது. இந்த காஞ்சி மாநகர் ரொம்ப சின்ன வயதில், கோபாலபுரம் வீதியிலே, இளைஞர் தி.மு.க. என்ற அமைப்பை ஏற்படுத்தி அந்த அமைப்பின் மூலமாக பொது வாழ்வில் என்னை ஈடுபடுத்திக் கொண்டேன்.

    அப்போது பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துவது என்னுடைய வழக்கம். 1971-ம் ஆண்டு அண்ணாவின் கல்லறையிலே மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தி அண்ணா சதுக்கத்தில் இருந்து அண்ணா சுடரை கையில் ஏந்தி தொடர் ஓட்டமாக நானும் நண்பர்களும் புறப்பட்டு காஞ்சீபுரம் வந்து கழக மாநாட்டு மேடையில் தலைவர் கலைஞர் கையில் அண்ணா சுடரை நான் ஒப்படைத்தேன்.

    இன்றைக்கு தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும் தலைவர் கலைஞரும் எடுத்து வந்த சுயமரியாதை, சமத்துவம், சமூகநீதி, மாநில சுயாட்சி உள்ளிட்ட தமிழ் சமுதாயத்தை காக்க கூடிய திராவிட சுடரை ஏந்தி வந்துள்ளேன்.

    அவரது கொள்கைகளை ஏற்று வாழ்வதால்தான் தமிழ் சமூகத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த போகிறேன். கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தை தொடங்கி வைக்க இங்கு வந்துள்ளேன். இந்த திட்டத்தை நான் தொடங்கி வைப்பது என் வாழ்நாளில் எனக்கு கிடைத்த மிகப்பெரிய பேராக நான் கருதுகிறேன்.

    தாய் தமிழ்நாட்டுக்கு 'தமிழ்நாடு' எனறு பெயர் சூட்டிய பேரறிஞர் அண்ணா இனி இந்த பெயரை யாராலும் நீக்க முடியாது. இந்த பெயர் நீடிக்கும் காலமெல்லாம் இந்த நாட்டை அண்ணா துரை தான் ஆள்கிறான் என்றார்.

    அதே போல் இன்றைக்கு மகளிர் உரிமைத் திட்டத்தை தொடங்கும் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் சொல்கிறேன். இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு பெண்கள் உரிமைத் தொகை பெறுகிறார்களோ, அத்தனை ஆண்டுகளுக்கும் இந்த ஸ்டாலின் தான் ஆள்கிறான் என்று பொருள்.

    இந்த 2½ ஆண்டில், எத்தனை திட்டங்கள், மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து வசதி பெற விடியல் பயணத் திட்டம், பசியோடு பள்ளிக்கு வரும் குழந்தைகளுக்கு காலை உணவுத் திட்டம், உயர்கல்வி கற்க வரும் மாணவிகளுக்கு 1000 ரூபாய் வழங்குகிற புதுமைப் பெண் திட்டம், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் நான் முதல்வன் திட்டம், இந்த திட்டங்களை தொடங்கிய நாட்களில் எப்படிப்பட்ட மகிழ்ச்சியை நான் அடைந்தேனோ, அதைவிட அதிகமான மகிழ்ச்சியில் இப்போது இருக்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் நேற்றைய தினமே பயனாளிகளின் வங்கி கணக்குகளுக்கு ரூ.1000 வந்து சேர்ந்துள்ளது.
    • கலைஞர் மகளிர் உரிமை தொகை நெருக்கடியான நேரங்களில் உதவியாக இருக்கும்.

    கரூர்:

    தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த சட்டமன்ற தேர்தலின்போது குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும் என வாக்குறுதி அளித்தார்.

    அதன்படி 2023-24 ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டில் அந்த திட்டத்திற்கு ரூ. 7000 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. பின்னர் சிறப்பு முகாம்கள் நட த்தப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதன் பின்னர் தகுதியான விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டன.

    தற்போது இந்த திட்டத்தில் 1 கோடியே 6 லட்சத்து 55 ஆயிரம் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

    அண்ணா பிறந்தநாளான இன்று காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பன் ஆண்கள் கல்லூரி மைதா னத்தில் உரிமை தொகையை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைப்பதாக முதலமைச்சர் அறிவித்திருந்தார். அதன்படி இன்று அந்த திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். இந்தத் திட்டம் பெண்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

    தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் நேற்றைய தினமே பயனாளிகளின் வங்கி கணக்குகளுக்கு ரூ.1000 வந்து சேர்ந்துள்ளது.

    திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, கரூர் ஆகிய மாவட்டங்களில் பயனாளிகளின் வங்கி கணக்குக்கு நேற்றைய தினமே ரூ.1000 வந்துள்ளது.

    கரூர் பசுபதிபாளையத்தைச் சேர்ந்த குடும்பத் தலைவி மகேஸ்வரி கூறும்போது;-

    எனது கணவர் டீக்கடை மாஸ்டராக உள்ளார். எங்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

    தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தாய் உள்ளத்துடன் இந்த திட்டத்தை அறிவித்துள்ளார்.

    பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

    சின்ன சின்ன தேவைகளுக்கு கூட கணவரை எதிர்பார்த்து இருக்க வேண்டிய நிலை இருந்தது. எனது சிறிய தேவைகளை கலைஞரின் மகளிர் உரிமைத் தொகை கொண்டு பூர்த்தி செய்வேன். முதலமைச்சருக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    கரூர் ஆத்தூர் பிரிவு பகுதியைச் சேர்ந்த இல்லத்தரசி சுசீலா கூறுகையில், எனது கணவர் சலூன் கடை வைத்துள்ளார்.

    நாங்கள் வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறோம். சொந்த வீடு கிடையாது. இரண்டு குழந்தைகள் பள்ளியில் படித்து வருகின்றனர். சில நேரங்களில் வாடகை கொடுப்பதற்கும் பள்ளி செலவினங்களுக்கும் கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்படும்.

    இனிமேல் கலைஞர் மகளிர் உரிமை தொகை நெருக்கடியான நேரங்களில் உதவியாக இருக்கும். நேற்றைய தினமே எனது வங்கி கணக்கில் பணம் வந்து சேர்ந்து விட்டது. முதலமைச்சருக்கு என்றும் நன்றி கடன் பட்டவர்களாக இருப்போம்.

    திருச்சி தாராநல்லூர் அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த குடும்பத்தலைவி விஜயலட்சுமி கூறும்போது,

    எனது கணவர் மரக்கடையில் மாதம் ரூ.10,000 சம்பளத்துக்கு வேலை செய்கிறார். வாடகை வீட்டில் இருக்கிறோம். மாத வாடகையாக ரூ. 3000 கொடுக்க வேண்டும். அரசு உதவி பெறும் பள்ளியில் ஒரு மகன் பத்தாம் வகுப்பு, இன்னொரு மகன் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்கள். நான் எந்த வேலைக்கும் செல்லாமல் குழந்தைகளை பராமரித்து வருகிறேன்.

    சில நேரங்களில் குழந்தைகளுக்கு நோட்டுப் புத்தகம் வாங்குவதற்கு கூட கையில் பணம் இருக்காது.

    கலைஞர் உரிமைத்தொகை என்னை போன்று வீட்டில் இருக்கும் குடும்பத் தலைவிகளுக்கு வரப் பிரசாதமாக இருக்கும்.

    சொந்த காலில் நிற்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. முதலமைச்சருக்கு எங்கள் மனமார்ந்த நன்றி.

    திருச்சி முத்தரசநல்லூர் கூடலூர் பகுதியைச் சேர்ந்த இல்லத்தரசி நதியா கூறுகையில்,

    நேற்று பிற்பகல் 2:30 மணிக்கு எனது வங்கி கணக்குக்கு ரூ. 1000 வந்தது. அதை பார்த்ததும் சந்தோஷமாக இருந்தது.

    எனது கணவர் நகைக்கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். எனக்கு ஒரு மகள் ஒரு மகன் உள்ளனர்.

    எனது கணவரின் வருமானத்தில் சேமிப்பு என்பது இதுவரை இல்லை. வீட்டு வாடகைக்கும், சாப்பாட்டுக்குமே சரியாக இருக்கும்.

    எனது மகளின் எதிர்கால தேவைக்கு இனிமேல் இந்த கலைஞர் உரிமைத்தொகையை சேமிக்கலாம் என இருக்கிறேன். முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றி.

    குளித்தலை தெற்கு மயிலாடி புவனேஸ்வரி கூறும்போது, எனது கணவர் கூலி வேலை செய்து வருகிறார். தினமும் வேலை இருக்காது.

    ஆகவே குடும்ப செலவுகளுக்கு திணறும் விலை ஏற்படும்.

    இந்தநிலையில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கு நானும் விண்ணப்பித்திருந்தேன். எனது விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டு முதலமைச்சர் எனது வங்கி கணக்குக்கு ரூபாய் ஆயிரம் அனுப்பியுள்ளார்.

    இது மகிழ்ச்சி அளிக்கிறது பெண்களுக்கு உரிமை தொகை வழங்கிய முதலமைச்சருக்கு மனமார்ந்த நன்றிகள்.

    ஏற்கனவே மகளிருக்கு இலவச பேருந்து கட்டணம் வழங்கி வருகிறார். இந்த திட்டத்தின் மூலம் பெண்கள் பொருளாதார விடுதலையை பெறுவார்கள்.

    முதலமைச்சருக்கு வாழ்நாள் முழுவதும் நன்றி உள்ளவர்களாக இருப்போம் என்றார்.

    • பெண்களுக்கான கடன் திட்டங்கள், பயிற்சித் திட்டங்கள், தொழில் முனைவோர் திட்டங்களும் குறிப்பிடப்பட்டு உள்ளது.
    • பணத்தை எதற்காக சேமிக்கணும்? பணத்தை எங்கே சேமிக்கணும், பணத்தை எப்படி சேமிக்க வேண்டும் என்ற விவரங்களும் அதில் உள்ளது.

    சென்னை:

    கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் ரூ.1000 வாங்கும் பெண்களுக்கு 70 பக்க கையேடு ஒன்றும் இன்று வழங்கப்பட்டது.

    அதில் தமிழக அரசின் மகளிர் நலத்திட்டங்கள், அரசின் சுழல்நிதி வழங்கும் விவரம், மகளிருக்கான வங்கி கடன், சிறு தொழில் தொடங்கும் விவரங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் அதில் இடம்பெற்று உள்ளன.

    அதுமட்டுமின்றி இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதிய திட்டம், விதவை ஓய்வூதிய திட்டம், ஆதரவற்ற விதவை ஓய்வூதிய திட்டம், முதிர்கன்னி ஓய்வூதிய திட்டம், இந்திராகாந்தி தேசிய மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதிய திட்டம், மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதிய திட்டம், முதலமைச்சர் உழவர் பாதுகாப்பு திட்டம், வேலையில்லாதவர்களுக்கு வேலை உருவாக்கும் திட்டம், கல்வி உதவித்தொகை திட்டம், திருமண உதவித்திட்டம் உள்ளிட்ட அரசு திட்டங்கள் பற்றிய முழு விவரங்கள் அனைத்தும் அதில் இடம்பெற்றுள்ளன.

    மாணவ-மாணவிகள் உதவித்தொகை, அரசு தரும் உதவித்தொகைகள் உள்ளவைகளும், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டங்களும் அதில் விரிவாக இடம் பெற்றுள்ளது.

    பெண்களுக்கான கடன் திட்டங்கள், பயிற்சித் திட்டங்கள், தொழில் முனைவோர் திட்டங்களும் அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது. மாதவிடாய் சுகாதார திட்டம், தடுப்பூசி திட்டம், மருத்துவ சேவை திட்டம், நோய்கிருமி தொற்றில் இருந்து பாதுகாத்தல் ஆகிய விவரங்களும் அதில் உள்ளது.

    விடியல் பயணத் திட்டம், புதுமைப்பெண் திட்டம், பெண்கள் முன்னேற்றத்துக்கான பயிற்சி திட்டம், நான் முதல்வன் திட்டம் ஆகியவையும் அதில் இடம்பெற்று உள்ளன.

    பணத்தை எதற்காக சேமிக்கணும்? பணத்தை எங்கே சேமிக்கணும், பணத்தை எப்படி சேமிக்க வேண்டும் என்ற விவரங்களும் அதில் உள்ளது.

    வங்கிகள், அஞ்சலகங்களில் என்னென்ன சேமிப்பு திட்டங்கள் உள்ளது ஆகியவையும் அதில் உள்ளது.

    ஏ.டி.எம். அட்டையில் செய்யக்கூடாத விசயங்கள் என குறிப்பிட்டு பின் நம்பர், ஓ.டி.பி. எண்ணை யாருடனும் பகிர வேண்டாம், ஏ.டி.எம்.மில் அன்னியர் உதவியை நாட வேண்டாம், தொலைபேசி அழைப்புகளில் வங்கி விவரங்களை தெரிவிக்க வேண்டாம்.

    கந்து வட்டிக்கு கடன் வாங்க வேண்டாம், அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு போலியான நிதி நிறுவனங்களில் முதலீடு செய்ய வேண்டாம் ஆகிய விவரங்களும் அதில் இடம் பெற்று உள்ளது.

    அது மட்டுமின்றி ஒவ்வொரு மாவட்ட கலெக்டர் தொலைபேசி எண்கள், மாவட்ட வருவாய் அதிகாரி, ஊரக வளர்ச்சி அதிகாரி, மகளிர் திட்ட இயக்குனர் ஆகியோரின் தொலைபேசி எண்களும் அதில் இடம் பெற்றுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாரத தேசம் முழுவதும் சுமார் 50 கோடி ஜன் தன் வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.
    • முண்டியடித்துக்கொண்டு வரிசையில் நின்று அரசு மானியங்களை பெற்றதும், கமிஷன் கொடுத்ததும் மறைந்து போனது.

    சென்னை:

    தமிழக அரசு குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    இதற்கு மகிழ்ச்சி தெரிவித்து தெலுங்கானா கவர்னர் டாக்டர் தமிழிசை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழகத்தில் அனைத்து மகளிர்க்கும் எல்லா உரிமையும் கிடைத்தால் மகிழ்ச்சியே....

    தமிழகத்தில் உரிமைத்தொகை பெறும் சகோதரிகள் மகிழ்ச்சி அடைய ஒரு சகோதரனாக தொலை நோக்குப் பார்வையுடன் அன்றே ஜன் தன் வங்கி கணக்கை தொடங்கிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

    இந்த உரிமைத்தொகையை நேரடியாக வங்கி கணக்கில் செலுத்துவதற்கு முதல் காரணமாக இருந்தவர் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தான்.

    முதன் முதலில் அனைத்து பெண்களுக்கும் வங்கி கணக்கு தொடங்க வேண்டும் என்று ஜன் தன் வங்கி கணக்கை தொடங்கி வைத்து அவர்களை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்கிறார்கள்.

    ஜன்தன் வங்கிக்கணக்குகளின் மூலம் ஏழை, எளிய மக்களின் வங்கி கணக்குகளில் மத்திய, மாநில அரசின் மானியங்கள் நேரடியாக பரிமாற்றம் செய்யப்படுகிறது. பாரதப் பிரதமருக்கு நம் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வோம்.

    பாரத தேசம் முழுவதும் சுமார் 50 கோடி ஜன் தன் வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இதில் 56 சதவீத பெண்கள் ஜன் தன் வங்கி கணக்குகளை தொடங்கி உள்ளனர்.

    கொரானா தொற்று காலத்தில் ஜன் தன் வங்கி கணக்கு வைத்திருந்த அனைத்து பெண்களுக்கும் மூன்று மாதம் மத்திய அரசு 500 ரூபாய் உதவித்தொகை அளித்தது.

    முண்டியடித்துக்கொண்டு வரிசையில் நின்று அரசு மானியங்களை பெற்றதும், கமிஷன் கொடுத்ததும் மறைந்து போனது. இப்போது எந்தவித சிக்கல்களும் இல்லாமல் நேரடியாக வங்கி கணக்குகளில் பெறுகிறோம். இதுவே டிஜிட்டல் இந்தியா.

    இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மகளிர் உரிமைத் திட்டத்தில் சேர ஒரு கோடியே 63 லட்சம் பெண்கள் விண்ணப்பித்தனர்.
    • தகுதி வாய்ந்த குடும்பத்தலைவிகளின் வங்கிக்கணக்குகளுக்கு ஏற்கனவே ரூ.1 அனுப்பி சோதனை செய்யப்பட்டது.

    சென்னை:

    கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக வெளியிடப்பட்ட தி.மு.க. தேர்தல் அறிக்கையின் கடைசி பக்கத்தில், 'தமிழ்நாட்டில் உள்ள குடும்பத்தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்குவோம்' என்று அறிவிக்கப்பட்டது.

    அந்த தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சி அமைத்த நிலையில், பல்வேறு அறிவிப்புகள் நடைமுறைக்கு வந்தாலும், குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் திட்டம் அந்த பட்டியலில் இடம்பெறாமலேயே இருந்து வந்தது.

    இந்த நிலையில், தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட 2023-2024-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கும் திட்டத்துக்கு ரூ.7 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இந்த திட்டம் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15-ந் தேதி (இன்று) தொடங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

    இந்த திட்டத்துக்காக பெண்கள் விண்ணப்பிக்கும் முகாமை கடந்த ஜூலை மாதம் 24-ந்தேதி தர்மபுரி மாவட்டம் தொப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதற்காக தமிழகம் முழுவதும் 35 ஆயிரத்து 925 முகாம்கள் நடத்தப்பட்டன. இந்தப் பணியில், 68 ஆயிரத்து 190 தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

    கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்துக்காக விரிவான வழிகாட்டு நெறிமுறைகளையும் அரசு வெளியிட்டது. இந்த திட்டத்தில் சேர ஒரு கோடியே 63 லட்சம் பெண்கள் விண்ணப்பித்தனர். இதில், தகுதி இல்லாத சுமார் 56 லட்சத்து 50 ஆயிரம் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இறுதியாக, தகுதிவாய்ந்த ஒரு கோடியே 6 லட்சத்து 55 ஆயிரம் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

    பேரறிஞர் அண்ணாவின் 115வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுவதையொட்டி காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

    இதைத்தொடர்ந்து அண்ணா பிறந்த காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பன் ஆண்கள் கல்லூரி மைதானத்தில் குடும்பத்தலைவிகள் ஆவலுடன் எதிர்பார்த்த ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முறைப்படி தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து பிற மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் தொடங்கி வைத்தார்கள்.

    தகுதி வாய்ந்த குடும்பத்தலைவிகளின் வங்கிக்கணக்குகளுக்கு ஏற்கனவே ரூ.1 அனுப்பி சோதனை செய்யப்பட்டது. இந்த நிலையில், நேற்று முதலே பலரது வங்கிக்கணக்குகளில் ரூ.1,000 வரவு வைக்கப்பட்டது. இது அந்த பெண்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது.

    மேலும், நிராகரிக்கப்பட்ட மனுதாரர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. ஆவண சரிபார்ப்பில் தகுதியான பயனாளியாக இருந்தால், அவர்களும் ரூ.1,000 மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.

    • பெற்றவர்களே ஆயிரம் ரூபாய் கொடுப்பது சாத்தியமில்லை
    • குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை இந்த ஆட்சியால் பயன் அடைந்து வருகிறார்கள்- ஈரோடு பெண்

    கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று முறைப்படி தொடங்கி வைக்கிறார். ஆனால், தகுதியுடையவர்களுக்கு நேற்றில் இருந்து வங்கிக் கணக்கில் பணம் போடப்பட்டு வருகிறது.

    பணம் கிடைத்த பெண்கள் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர்.

    ஈரோடு மாவட்டைத் சேர்ந்த வீட்டு வேலைக்குச் செல்லும் பெண் ஒருவர் 1000 ரூபாய் கிடைக்கப் பெற்றது குறித்து கூறியதாவது:-

    ஆயிரம் ரூபாய் கிடைத்ததில் ரொம்ப ரெம்ப மகிழ்ச்சி. முதலமைச்சர் பெண்களுக்காக இலவச பயணம், புதுமைப் பெண் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். பெற்றவர்களே ஆயிரம் ரூபாய் கொடுப்பது சாத்தியமில்லை. முதலமைச்சர் கொடுப்பது தாய் வீட்டு சீர் போன்று உள்ளது. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை இந்த ஆட்சியால் பயன் அடைந்து வருகிறார்கள். பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் முதலமைச்சருக்கு நன்றி, வாழ்த்துக்கள். ஹேப்பி முதலமைச்சர் சார்... என மகிழ்ச்சி பொங்க தெரிவித்தார்.

    டெய்லர் வேலை பார்க்கும் பெண் கூறுகையில் ''இந்த பணத்தை செல்வ மகள் திட்டத்திற்கு பயன்படுத்துவேன். இதை நான் செலவு செய்ய மாட்டேன்'' என்றார்.

    வேலூரை சேர்ந்த பெண்கள் ''ஆயிரம் ரூபாய் கிடைத்தது மகிழ்ச்சி. இரண்டு வருடத்திற்கு முன்பாக இதை கொடுத்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். இதை வைத்து மளிகை பொருட்கள், ஆஸ்பத்திரி செலவை சமாளிக்கலாம்'' என்றனர்.

    சேலம் மாவட்டைச் சேர்ந்தவர் பெண் ஒருவர் ''சிலிண்டர் வாங்குவதற்கு, சொந்த செலவிற்கு, மருத்துவ செலவு ஏற்பட்டால் பயனுள்ளதாக இருக்கும்'' என்றார்.

    மற்றொரு பெண் ''எனது கணவர், கால் முறிந்து வேலைக்கு போகாமல் உள்ளார். நானும் காலில் அடிப்பட்டு வேலைக்கு செல்லவில்லை. இந்த நேரத்தில் இந்த பணம் உதவியாக இருக்கும். முதல்வருக்கு நன்றி. இவ்வளவுதான் எனக்கு பேசத்தெரியும்'' என்றார்.

    • கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் நாளை தொடங்கப்பட உள்ளது.
    • தகுதியுள்ள விண்ணப்பதாரர்களின் வங்கி கணக்குகளை சரிபார்க்கும் பணிகள் நடைபெற்றது.

    சென்னை:

    கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். இந்தத் திட்டத்துக்காக 1.63 கோடி பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் குடும்பத் தலைவிகள் தகுதியானவர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    இதையடுத்து தகுதியுள்ள விண்ணப்பதாரர்களின் வங்கி கணக்குகளை சரிபார்க்கும் பணிகள் நடைபெற்றது. சென்னை உள்பட பல மாவட்டங்களில் விண்ணப்பதாரர்களின் வங்கிக் கணக்குகளுக்கு கடந்த இரு தினங்களாக ஒரு ரூபாய் மற்றும் மேசேஜ் அனுப்பி வைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது.

    இந்நிலையில் இன்று தகுதியான குடும்பத் தலைவிகளுக்கு ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் படிப்படியாக ரூ.1000 செலுத்தப்பட்டு வருகிறது. திட்டம் நாளை அதிகாரப்பூர்வமாக தொடங்க உள்ள நிலையில் இன்று வங்கி கணக்கில் பணம் வந்ததால் குடும்ப தலைவிகள் ஹேப்பியோ... ஹேப்பி...

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரம் சென்று இந்த திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார்.
    • பயனாளிகளுக்கு நாளை வங்கிக்கணக்கில் ரூ.1000 வரவு வைக்கப்படுகிறது.

    சென்னை:

    தி.மு.க. தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி தகுதி வாய்ந்த குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் அண்ணா பிறந்தநாளான நாளை தொடங்கப்படுகிறது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரம் சென்று இந்த திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார். நாளையே ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்த திட்டம் நடைமுறைக்கு வந்து விடும்.

    இந்த திட்டத்தில் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் குடும்ப தலைவிகள் மாதந்தோறும் ரூ.1000 பெறப்போகிறார்கள்.

    மொத்தம் 1 கோடியே 63 லட்சம் விண்ணப்பங்கள் வந்திருந்த நிலையில் கிட்டத்தட்ட 57 லட்சம் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயன்பெறும் பெண்களுக்கென பிரத்யேக ஏ.டி.எம். கார்டு வழங்கப்படும். காஞ்சிபுரத்தில் நாளை ஏ.டி.எம். கார்டுகளை வழங்கி இத்திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

    பயனாளிகளுக்கு நாளை வங்கிக்கணக்கில் ரூ.1000 வரவு வைக்கப்படுகிறது. ஏ.டி.எம். கார்டில் பெயர், மாதம், வருடம் உள்ளிட்ட தகவல்கள் இடம் பெற்றுள்ளது.

    • திட்ட விதிமுறைகளைப் பூர்த்தி செய்த 1.065 கோடி மகளிர் இந்த திட்டத்தில் பயனாளிகளாக தேர்வு.
    • தகுதியின்மைக்கு உள்ளான விண்ணப்பங்கள் ஏற்கப்படவில்லை.

    தமிழகம் முழுக்க குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகையாக வழங்கிட தமிழக அரசால் 'கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம்' செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தில் மாநிலம் முழுக்க இரண்டு கட்டங்களாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதுதவிர சிறப்பு முகாம் வழியாகவும் விண்ணப்பங்கள் பெறப்பட்டு பதிவு செய்யப்பட்டன.

    கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ் பெறப்பட்ட விண்ணப்பங்கள் அரசிடம் உள்ள தகவல் தரவு தளங்களில் உள்ள தகவல்களுடன் ஒப்பிட்டு சரிபார்க்கப்பட்டும், அரசு அலுவலர்களால் நேரடி கள ஆய்வுகளின் மூலம் சரிபார்க்கப்பட்டும், திட்ட விதிமுறைகளைப் பூர்த்தி செய்த 1.065 கோடி மகளிர் இந்த திட்டத்தில் பயனாளிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.

    கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட விண்ணப்பதார்களின் தகுதிகள் சரிபார்க்கப்பட்டு, அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளைப் பூர்த்தி செய்யாத விண்ணப்பங்களும், தகுதியின்மைக்கு உள்ளான விண்ணப்பங்கள் ஏற்கப்படவில்லை. விண்ணப்பதாரர்களின் விண்ணப்ப நிலை குறித்த குறுஞ்செய்தி விண்ணப்பதார்களின் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணிற்கு 18.09.2023 முதல் அனுப்பி வைக்கப்பட உள்ளது.

    இவ்வாறு ஏற்கப்படத விண்ணப்பதாரர்கள் மேல்முறையீடு செய்ய விரும்பினால், குறுஞ்செய்தி பெறப்பட்ட நாளில் இருந்து 30 நாட்களுக்குள் இ-சேவை மையம் வழியாக வருவாய் கோட்டாட்சியருக்கு மேல்முறையீடு செய்யலாம் என்று தமிழக அரசு தெரிவித்து உள்ளது. மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் 30 நாட்களுக்குள் தீர்வு செய்யப்படும்.

    • சோதனை அடிப்படையில் ஒரு ரூபாய் அனுப்பப்படுவதாக தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
    • கைப்பேசி வழியாக விண்ணப்பதாரர்களை தொடர்பு கொண்டு வங்கிக் கணக்கு விவரங்கள் உறுதி செய்யப்பட்டு வருகின்றன.

    சென்னை:

    கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் வருகிற 15-ந்தேதி தொடங்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்துக்காக 1.63 கோடி பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் குடும்பத் தலைவிகள் தகுதியானவர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் தகுதியுள்ள விண்ணப்பதாரர்களின் வங்கி கணக்குகளை சரிபார்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சென்னை உள்பட பல மாவட்டங்களில் விண்ணப்பதாரர்களின் வங்கிக் கணக்குகளுக்கு கடந்த இரு தினங்களாக ஒரு ரூபாய் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

    ஒரு ரூபாய் அனுப்பியவுடன் விண்ணப்பதாரர்களின் கைப்பேசிக்கு குறுஞ்செய்தி வழியாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. தவறான வங்கிக் கணக்குகளுக்கு உரிமைத் தொகை சென்று விடக்கூடாது என்ற எண்ணத்தில் சோதனை அடிப்படையில் ஒரு ரூபாய் அனுப்பப்படுவதாக தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

    மேலும் கைப்பேசி வழியாக விண்ணப்பதாரர்களை தொடர்பு கொண்டு வங்கிக் கணக்கு விவரங்கள் உறுதி செய்யப்பட்டு வருகின்றன.

    • கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் அண்ணா பிறந்தநாளான வருகிற 15-ந்தேதி தொடங்கப்படுகிறது.
    • ஆண்டுக்கு 3,600 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் வீட்டின் விண்ணப்பம்தான் பெரும்பாலும் நிராகரிக்கப்பட்டு உள்ளது.

    சென்னை:

    தி.மு.க. தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி தகுதி வாய்ந்த குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் அண்ணா பிறந்தநாளான வருகிற 15-ந்தேதி தொடங்கப்படுகிறது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரம் சென்று இந்த திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார். அதே நாளில் ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்த திட்டம் நடைமுறைக்கு வந்து விடும்.

    இந்த திட்டத்தில் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் குடும்ப தலைவிகள் மாதந்தோறும் ரூ.1000 பெறப்போகிறார்கள்.

    மொத்தம் 1 கோடியே 63 லட்சம் விண்ணப்பங்கள் வந்திருந்த நிலையில் கிட்டத்தட்ட 57 லட்சம் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    இதற்கான காரணத்தை குறிப்பிட்டு அவரவர்களுக்கு செல்போனில் குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிவித்தார்.

    இதில் மன நிறைவு அடையாத குடும்பத் தலைவிகள் மறுபடியும் அதிகாரிகளிடம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருமாத கால அவகாசம் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது.

    இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒவ்வொரு சட்டசபை தொகுதி வாரியாக தனி அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளனர். அவர்கள் பயனாளிகளுக்கு தகுந்த விளக்கங்களை அளிப்பார்கள்.

    கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் 1 கோடியே 6 லட்சம் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்ட நிலையில் கிட்டத்தட்ட 57 லட்சம் பேர்களின் விண்ணப்பங்கள் என்ன காரணத்தால் நிராகரிக்கப்பட்டது என்று ஒரு அதிகாரியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    இந்த திட்டத்தில் மாதந்தோறும் ரூ.1000 பெறுவதற்கு யார்-யார்? தகுதியானவர்கள் என்பதை தேர்ந்தெடுக்க குறிப்பிட்ட தகுதிகள் அளவுகோலாக வைக்கப்பட்டது.

    அதன்படி 2.5 லட்சத்திற்கு கீழ் வருமானம் உள்ள குடும்பங்கள், 5 ஏக்கருக்கு குறைவாக நன்செய் நிலம் அல்லது 10 ஏக்கருக்கு குறைவாக புன்செய் நிலம் வைத்திருக்கும் குடும்பங்கள்.

    இதற்கு அடுத்தபடியாக ஆண்டுக்கு வீட்டுக்கு உபயோகத்துக்கு 3,600 யூனிட்டிற்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்கள் யார்-யார் உள்ளார்களோ அவர்களுக்குதான் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

    அதற்கேற்ப கணினியில் சாப்ட்வேர் உருவாக்கப்பட்டு இருந்தது.

    இதில் ஒவ்வொரு குடும்பத் தலைவியின் விண்ணப்பங்களையும் அதில் பதிவிடும்போது தகுதியான விண்ணப்பமா? இல்லையா? என்பது கம்ப்யூட்டரில் உடனே முடிவு வந்து விடும். அந்த வகையில் பட்டியல் தயாரிக்கப்பட்டது.

    இதில் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கும் மேல் சம்பாதிக்கும் குடும்பங்கள், வருமான வரி செலுத்துபவர்கள், ரூ.2.5 லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டி தொழில் வரி செலுத்துபவர்கள், அரசு ஊழியர்கள், வங்கி ஊழியர்கள், வாரியங்கள், உள்ளாட்சி அமைப்பு, கூட்டுறவு அமைப்புகளின் ஊழியர்கள்.

    கார், ஜீப், டிராக்டர் கனரக வாகனம் வைத்திருப்பவர்கள் முதியோர் ஓய்வூதியம், விதவை ஓய்வூதியம் பெறுபவர்கள் இந்த திட்டத்தில் பயன் பெற தகுதி கிடையாது என்று தெளிவாக அறிவிக்கப்பட்டிருந்தது.

    இவைகளில் ஏதாவது ஒரு பாயின்ட் விண்ணப்பத்தில் இடம் பெற்றிருக்கும் பட்சத்தில் தானாகவே விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு விடும். அந்த வகையில்தான் கிட்டத்தட்ட 57 லட்சம் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது.

    இதில் ஆண்டுக்கு 3,600 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் வீட்டின் விண்ணப்பம்தான் பெரும்பாலும் நிராகரிக்கப்பட்டு உள்ளது. லட்சக்கணக்கான விண்ணப்பம் இந்த வகையில் நிராகரிக்கப்பட்டுள்ளது.

    அடுத்தபடியாக ஆண்டு வருமானம் அதிகம் உள்ளவர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது.

    இதே போல் அரசு வேலை பார்ப்பவர்களின் வீட்டில் உள்ள குடும்ப தலைவிகள் விண்ணப்பித்ததில் 3 லட்சம் மனுக்கள் வரை நிராகரிக்கப்பட்டு உள்ளது.

    இப்படி பல்வேறு காரணங்களால் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.

    மொத்தத்தில் விண்ணப்பித்த மனுக்களில் 65 சதவீதம் பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 35 சதவீதம் பேருக்கு கிடைக்கவில்லை.

    தகுதியானவர்களுக்கு மாதா மாதம் பணம் வழங்குவதற்காக தமிழக அரசு மாதம் ரூ.1000 கோடி வீதம் 7 மாதத்திற்கு ரூ.7 ஆயிரம் கோடி செலவிட உள்ளது. இதற்கு நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்போது கூடுதலாக மாதம் ரூ.60 கோடி தேவைப்படும். இதற்கும் நிதி ஒதுக்கப்பட்டு துணை நிதி நிலை அறிக்கையில் சேர்க்கப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • செப்டம்பர் 15 முதல் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்பட உள்ளது.
    • தகுதியான பெண்களுக்கு வழங்குவதற்கான ஏ.டி.எம். கார்டு பிரத்யேகமாக தயாராகி வருகிறது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை அரசு இந்த மாதம் முதல் செயல்படுத்த உள்ளது. இந்த திட்டத்தில் இணைய தமிழகம் முழுவதும் ஒரு கோடியே 63 லட்சம் பெண்கள் விண்ணப்பித்தனர். விண்ணப்பித்தவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு தகுதியான விண்ணப்பதாரர்களை அடையாளம் கண்டு தேர்வு செய்துள்ளனர்.

    ஒரு வாரமாக நடந்த இந்த கள ஆய்வு நிறைவடைந்து விட்டது. மாதம் தோறும் உரிமைத் தொகை அவரவர் வங்கி கணக்கிலேயே செலுத்தப்படும். எனவே பயனாளிகளுக்கு வங்கி கணக்கு அவசியம். வங்கி கணக்கு இல்லாதவர்கள் தேசியமயமாக்கப்பட்ட வங்கி அல்லது கூட்டுறவு வங்கிகளில் வங்கி கணக்கு தொடங்க அறிவுறுத்தப்பட்டனர். தற்போது தகுதியான பெண்களுக்கு வழங்குவதற்கான ஏ.டி.எம். கார்டு பிரத்யேகமாக தயாராகி வருகிறது. ரூபே கார்டாக வழங்கப்படும். இந்த கார்டு மூலம் பணத்தை எடுத்து கொள்ள முடியும்.

    இந்த திட்டத்தை அண்ணா பிறந்தநாளான வருகிற 15-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காஞ்சிபுரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

    இந்நிலையில், மகளிர் உரிமை திட்டம் தொடர்பான இறுதி ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெறுகிறது.

    இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

    ×