search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "யானைகள் மறுவாழ்வு மையம்"

    • கோவில்கள் மற்றும் தனியார் வசம் இருந்து மீட்கப்படும் யானைகளுக்கு இங்கு புத்துணர்வு அளிக்கப்படுகிறது.
    • காட்டுக்குள் இருப்பது போன்று யானைகள் இங்கு சுதந்திரமாக சுற்றித் திரிகின்றன.

    திருச்சி:

    திருச்செந்தூர் முருகன் கோவிலில் கோவில் யானை தெய்வானை தாக்கியதில் பாகன் உள்பட 2 பேர்பலியான சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது கோவில் யானைகளை பராமரிப்பவர்கள், தனியார் யானை பராமரிப்பாளர்கள் மற்றும் பொதுமக்களையும் அதிர்ச்சி அடைய செய்தது.

    இதுபோன்ற துயர சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அரசு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கோவில் யானை மற்றும் தனியார் யானை பராமரிப்புகளுக்கு தமிழக அரசின் வனத்துறை வழிகாட்டி நெறிமுறைகளை வகுத்துள்ளது.

    அதனை பின்பற்றாதது விபரீதங்களுக்கு காரணமாக அமைகிறது. கோவில் யானைகள் மற்றும் 24 மணி நேரமும் கட்டிப் போடப்படும் தனியார் யானைகளுக்கு புத்துணர்வு அளிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    திருச்சி அருகே எம்.ஆர். பாளையத்தில் யானைகள் மறுவாழ்வு மையம் அமைந்துள்ளது. 50 ஏக்கர் பரப்பளவில் விசாலமாக அமைந்துள்ள இந்த மையத்தில் உள்ள யானைகள் தினமும் உற்சாக குளியல், நடைப்பயிற்சி என குதூகலமாக இருக்கின்றன. வனச்சரக அலுவலர் வி பி சுப்பிரமணியம் தலைமையிலான வனவர் மற்றும் வனக்காப்பாளர்கள் மேற்பார்வையில் இந்த யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.

    கோவில்கள் மற்றும் தனியார் வசம் இருந்து மீட்கப்படும் யானைகளுக்கு இங்கு புத்துணர்வு அளிக்கப்படுகிறது. தினமும் யானைகளூக்கு காலை 6 மணிக்கு யானைகள் எழுந்தவுடன் 8 முதல் 12 கிலோமீட்டர் தூரம் வரை நடை பயிற்சி அளிக்கப்படுகிறது. பின்னர் சிறிய குளியல் போடுகிறது.

     

    அதன் பின்னர் கால் நகத்துக்கு இடையில் வியர்வை சுரப்பி இருப்பதால் புட் கேர் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதில் வேப்ப எண்ணெய், கட்டி கற்பூரம், பூண்டு உள்ளிட்டவை கலந்து காய்ச்சி டெக்காமலி ஆயில் போட்டு தடவி விடுகிறார்கள். இதன் மூலம் கிருமிகள் அதனை அண்டாமல் பாதுகாக்கிறார்கள். அதன் பின்னர் காலை 9 மணிக்கு திட உணவு அளிக்கப்படுகிறது. அதன் பின்னர் மண் குளியல் குளியல், நடைப்பயிற்சி அளிக்கப்படுகிறது. அவ்வப்போது சோளத்தட்டை மர இலை போன்ற தீவனங்கள் வழங்கப்படுகிறது.

    இவ்வாறு நாள் முழுவதும் யானைகள் புத்துணர்வுடன் பராமரிக்கிறார்கள். இது தொடர்பாக வனச்சரக அலுவலர் வி பி சுப்பிரமணியம் கூறியதாவது:-

    தற்போது எம்.ஆர்.பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்தில் 10 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இங்கு 11 யானைகள் இருந்தன. அதில் ஒரு யானை சமீபத்தில் உடல் நலக்குறைவால் இறந்துவிட்டது. அதனை காப்பாற்ற பலகட்ட முயற்சிகள் எடுத்தோம். பலனளிக்கவில்லை.

     

    வனத்துறை சார்பில் 7 பேர் இங்கு பணியாற்றி வருகிறோம். ஒவ்வொரு யானையையும் பராமரிக்க மாவூத், காவடி என 2 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். காட்டுக்குள் இருப்பது போன்று யானைகள் இங்கு சுதந்திரமாக சுற்றித் திரிகின்றன. பொதுவாகவே வனத்துறை சார்பில் கோவில் மற்றும் தனியார் யானைகளுக்கு விதிமுறைகள் வழங்கப்பட்டுள்ளது.

    அதில் யானைகளை வேறு நபர்கள் தொடுவது ,உணவு கொடுப்பது, ஆசீர்வாதம் வாங்குவது போன்றவை கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனை கோவில் யானை பராமரிப்பாளர்கள் மற்றும் தனியார் யானை பாகன்கள் தவறாமல் பின்பற்ற வேண்டும் இந்த விதிமுறைகளை பின்பற்றினால் அசம்பாவிதங்களை தடுக்கலாம் .

    இவ்வாறு அவர் கூறினார். 

     

    • 9 யானைகளுக்கு தலா ஒரு பாகன் உடனிருந்து கவனித்து வருகிறார்கள்.
    • வனத்துறையினர் சுமார் 67 வயதான சுந்தரி என்ற பெண் யானையை மீட்டு திருச்சியை அடுத்த எம்.ஆர்.பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்தில் ஒப்படைத்தனர்.

    மண்ணச்சநல்லூர்:

    திருச்சியை அடுத்த சிறுகனூர் அருகே எம்.ஆர்.பாளையத்தில் சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் யானைகள் மறுவாழ்வு மையம் செயல்பட்டு வருகிறது. அனுமதியின்றி தனியாரால் வளர்க்கப்படும் யானைகள் மற்றும் நோயால் பாதிக்கப்பட்ட யானைகள் மீட்கப்பட்டு இந்த மையத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

    இந்த யானைகள் மறுவாழ்வு மையத்தில் தற்போது இந்து, சந்தியா, ஜெயந்தி, மலாச்சி, இந்திரா, கோமதி, சுமதி, கிரபி, ரூபாலி ஆகிய 9 யானைகள் தங்க வைக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது. 9 யானைகளுக்கு தலா ஒரு பாகன் உடனிருந்து கவனித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் திருநெல்வேலி பாளையங்கோட்டை பகுதியில் அனுமதியின்றியும், போதிய பராமரிப்பு இல்லாமலும் வளர்க்கப்பட்ட யானையை பிச்சை எடுக்க வைத்து துன்புறுத்துவதாக தன்னார்வலர்கள் மற்றும் தொண்டு நிறுவனத்தினர் வனத்துறையினருக்கு புகார் அளித்தனர்.

    இதன்படி வனத்துறையினர் சுமார் 67 வயதான சுந்தரி என்ற பெண் யானையை மீட்டு திருச்சியை அடுத்த எம்.ஆர்.பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்தில் ஒப்படைத்தனர். மறுவாழ்வு மையத்தின் புதிதாக வந்துள்ள சுந்தரி யானையை தலைமை வனப்பாதுகாவலர் சதீஷ் ஆலோசனையின்படி திருச்சி மாவட்ட வன அலுவலர் கிரண், உதவி வன பாதுகாவலர் சம்பத்குமார் மற்றும் வனச்சரக அலுவலர் சுப்பிரமணியன் ஆகியோர் பார்வையிட்டனர்.

    மேலும் வனக் கால்நடை மருத்துவ அலுவலர் யானையை பரிசோதித்து அதன் வயது, உடல் நிலை, எடை அளவு ஆகியவற்றின் அடிப்படையில் யானைக்கு வழங்க வேண்டிய உணவு வகைகள் குறித்து அறிக்கை கொடுக்க இருக்கிறார். அதன் அடிப்படையில் தொடர் சிகிச்சை மற்றும் பராமரிப்பு மேற்கொள்ளப்பட உள்ளது. அது மட்டுமின்றி யானைக்கு காச நோய் உள்ளிட்ட ஏதேனும் நோய்கள் உள்ளதா என்பதை அறிய யானையின் சளி, சாணம், சிறுநீர் உள்ளிட்ட மாதிரிகளை கால்நடை மருத்துவர்கள் எடுத்து பரிசோதனைக்காக சென்னைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    பரிசோதனை அறிக்கை முடிவு வந்த பிறகு சில நாட்களில் ஏற்கனவே மறுவாழ்வு மையத்தில் பராமரிக்கப்பட்டு வரும் யானைகளுடன் இந்த யானையும் சேர்க்கப்படும். அதுவரை சுந்தரி யானை தனிமையில் வைத்து பராமரிக்கப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

    புதிதாக வந்துள்ள யானை சுந்தரியை சேர்த்து மறுவாழ்வு மையத்தில் பராமரிக்கப்பட்டு வரும் யானைகளின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.

    ×