search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீரேற்று பாசனம்"

    • நீரேற்று பாசன திட்டத்தின் மூலம் யாருக்கும் கடந்த சில நாட்களாக தண்ணீர் விநியோகம் செய்யப்படவில்லை.
    • மோட்டார்களை இயக்கி தண்ணீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் அருகே உள்ள மணப்பள்ளி கிராமத்தில், மணப்பள்ளி நீரேற்று பாசன கூட்டுறவு சங்கம், கடந்த 50 ஆண்டுகளுக்கு மேல் செயல்பட்டு வருகிறது. இச்சங்கத்தில், அப்பகுதியை சேர்ந்த, 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். இச்சங்கத்தின் மூலம், 400 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு, காவிரி ஆற்றின் அருகில் உள்ள கிணற்றில் இருந்து, மின் மோட்டார் மூலம் தண்ணீர் எடுத்து, விவசாயிகளுக்கு பகுதி வாரியாக பிரித்து, முறை வைத்து குழாய்கள் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது.

    இந்த தண்ணீரைக் கொண்டு, விவசாயிகள் நெல், கரும்பு, வாழை, மரவள்ளி கிழங்கு உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். இந்நிலையில், சங்க நிதியில் இருந்து முறைகேடு செய்துள்ளதாக, நீரேற்றுப் பாசன சங்கத் தலைவர் அப்பாவு மீது, ஏற்கனவே விவசாயிகள் அதிகாரிகளிடம் புகார் மனு அளித்திருந்தனர்.

    இதனால் கோபமடைந்த அப்பாவு விவசாயிகளுக்கு தண்ணீர் எடுத்துவிடும் மோட்டார் அறையை, கடந்த சில நாட்களுக்கு முன், பூட்டி விட்டதாக கூறப்படுகிறது.

    அதனால், நீரேற்று பாசன திட்டத்தின் மூலம் யாருக்கும் கடந்த சில நாட்களாக தண்ணீர் விநியோகம் செய்யப்படவில்லை. தண்ணீர் இன்றி, தோட்டத்தில் பயிரிட்டுள்ள பயிர்கள் காய்ந்ததால், விவசாயிகள் கடும் அதிர்ச்சியும், அதிருப்தியும் அடைந்தனர்.

    இதற்கிடையில், விடுமுறை நாளான நேற்று சங்கத்தின் முன்னாள் செயலாளர் சண்முகம், மோட்டார் பம்ப் ஆப்ரேட்டர்கள் மலையப்பன், சுப்ரமணியன் ஆகிய 3 பேரும் அலுவலகத்தைத் திறந்து உள்ளே சென்றனர். அதைக்கண்ட விவசாயிகள், கடந்த சில நாட்களாக தண்ணீர் திறந்துவிடாத நிலையில், 3 பேரையும் சங்க அலுவலகத்திற்குள் அடைத்து வைத்து, சங்க அலுவலகத்தை பூட்டி வைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    தகவல் அறிந்த மோகனூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் நடராஜன், சங்கர் ஆகியோர் வந்து, விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, சமரசம் செய்தனர். அதையடுத்து, சங்க அலுவலகத்தை திறந்து, 3 பேரையும் மீட்டனர்.

    தொடர்ந்து, மோட்டார்களை இயக்கி தண்ணீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர்.

    ×