search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதுரை பெண் போலீஸ்"

    • அர்ஷத் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் கொடுத்தார்.
    • வசந்தி மீதான குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருந்தால், அவர் மீது வழக்கு பதிவு செய்யலாம் என்று உத்தரவிட்டது.

    மதுரை:

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடியை சேர்ந்தவர் அர்ஷத். இவர் கடந்த 2021-ம் ஆண்டு தொழில் நிமித்தமாக ரூ.10 லட்சம் பணத்துடன் நாகமலை புதுக்கோட்டையில் உள்ள நண்பரை சந்திப்பதற்காக வந்தார். ரோந்து வந்த அப்போதைய நாகமலை புதுக்கோட்டை பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தி, அங்கு நின்றிருந்த அர்ஷத்தை மிரட்டி ரூ.10 லட்சம் பறித்ததாக புகார் எழுந்தது.

    இதுதொடர்பாக அர்ஷத் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், வாலிபரிடம் பணம் பறித்த இன்ஸ்பெக்டர் வசந்தி மீது வழக்குப்பதிவு செய்தனர். இதனை தொடர்ந்து அவர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார்.

    அவர் மீதான வழக்கு மதுரை ஐகோர்ட்டில் நடந்து வருகிறது. சிறையில் அடைக்கப்பட்டிருந்த வசந்தி கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்தார். பணம் பறிப்பு வழக்கில் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த ஒருவர் முக்கிய சாட்சியாக உள்ளார்.

    அவரை ஜாமீனில் வந்த வசந்தி மிரட்டியதாக தெரிகிறது. இதையடுத்து அவரது ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என மதுரை ஐகோர்ட்டில் துணை போலீஸ் சூப்பிரண்டு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனுவை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு வசந்தி மீதான மிரட்டல் புகாரை தென் மண்டல போலீஸ் ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும். இதில் வசந்தி மீதான குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருந்தால், அவர் மீது வழக்கு பதிவு செய்யலாம் என்று உத்தரவிட்டது.

    இதைத்தொடர்ந்து துறைரீதியான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் பணம் பறிப்பு வழக்கில் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தி இந்திய அரசமைப்புச் சட்டம்-311 பிரிவின்படி காவல்துறை பணியில் இருந்து டிஸ்மிஸ் (நிரந்தர நீக்கம்) செய்யப்பட்டு உள்ளார். இதற்கான உத்தரவை மதுரை சரக போலீஸ் டி.ஐ.ஜி பொன்னி பிறப்பித்து உள்ளார்.

    பணம் பறிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியான பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×