என் மலர்
நீங்கள் தேடியது "மே தினம்"
- புலி பதுங்குவது பாய்வதற்குதான்.
- ஜெயலலிதாவின் ஆட்சியை கொண்டுவர மோடியுடன் கூட்டணி அமைத்துள்ளோம்.
மே தினத்தை முன்னிட்டு, அமமுக சார்பில் இன்று ராணிப்பேட்டையில் மே தின கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பங்கேற்றார்.
இந்த கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர்," புலி பதுங்குவது பாய்வதற்குதான்" என்றார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்," புலி பதுங்குவது பாய்வதற்குதான். ஆகையால் என்னை யாரும் குறைத்து எடைபோட வேண்டாம்.
ஜெயலலிதாவின் ஆட்சியை கொண்டுவர மோடியுடன் கூட்டணி அமைத்துள்ளோம்.
திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. இந்த ஆட்சி ஒழிக்கப்பட வேண்டும்" என்றார்.
- உழைப்பாளர் உரிமை காப்போம் !
- மே தினத்தில் உழைப்பாளர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்!
மே 1 உழைப்பாளர் தினத்தையொட்டி தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
ஓய்வறியா உழைப்பினை முதலீடாக்கி, உதிரத்தை உரமாக்கி, உறுதியை, ஒற்றுமையைப் படிக்கற்களாக்கி எங்கள் வலிமை என எடுத்துக் காட்டி எடுத்த பணியை முடித்துக்காட்டி உலகிற்கு அச்சாணியாகத் திகழும் தொழிலாளர்களுக்கு எந்நாளும் உறுதுணையாய் நிற்போம்!
உழைப்பாளர் உரிமை காப்போம்!
இந்த மே தினத்தில் உழைப்பாளர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்!
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உழைப்பாளர் தினத்தையொட்டி மே 1 விடுமுறை நாளை சட்டமாக்கியவர் கலைஞர்.
- விரைவில் மாமேதை கார்ல் மார்க்ஸ் சிலை சென்னையில் அமைக்கப்பட உள்ளது.
சென்னை:
உலக உழைப்பாளர் தினத்தையொட்டி சென்னை சிந்தாதிரிப் பேட்டையில் உள்ள மே தின நினைவு சின்னத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
அவருடன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., அமைச்சர்கள் எ.வ.வேலு, சிவசங்கர், ஆவடி நாசர், பி.கே.சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், சி.வி.கணேசன், ஆ.ராஜா எம்.பி.
தொ.மு.ச. பொதுச் செயலாளர் சண்முகம், தலைவர் நடராஜன், செல்வராஜ், தயாநிதிமாறன் எம்.பி., தி.மு.க. தலைமை நிலைய செயலாளர் பூச்சி முருகன், பிரபாகரராஜா எம்.எல்.ஏ.., பரந்தாமன் எம்.எல்.ஏ., மாவட்டக் கழக செயலாளர் நே.சிற்றரசு, சேப்பாக்கம் மதன்மோகன் உள்பட ஏராளமானோர் மரியாதை செலுத்தினார்கள்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
மே 1-ம் நாள் தொழிலாளர் தினமாக நாம் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடி கொண்டு இருக்கிறோம். குருதியை வியர்வையாக்கி உழைப்பால் உலகை உயர்த்தும் உழைப்பாளர்களுக்கு வாழ்த்துகள்.
உழைப்பாளர்களையும், உழைப்பையும் போற்றும் ஆட்சியாக திராவிட மாடல் அரசு நடைபோடுகிறது.
மே நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தி.மு.க. அரசு செயல்படுத்தி உள்ளது. 4 லட்சத்து 37 ஆயிரத்து 750 அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,200 ஓய்வூதியம் வழங்கியது தி.மு.க. அரசு.
இன்றைக்கு தமிழகத்தில் நடைபெற்று கொண்டு இருக்கிற திராவிட மாடல் ஆட்சியின் மூலமாக இந்த 4 ஆண்டு காலத்திலே எத்தனையோ திட்டங்களை எத்தனையோ சாதனைகளை, தேர்தல் நேரத்தில் அறிவித்த திட்டங்களை எல்லாம் நிறைவேற்றி தந்து கொண்டு இருக்கிற இந்த நேரத்திலே, குறிப்பாக தொழிலாளர்களுக்கு கடந்த 4 ஆண்டில் 28 லட்சத்து 87 ஆயிரத்து 382 அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.2 ஆயிரத்து 461 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை நாம் வழங்கி இருக்கிறோம். உழைப்பாளர்களையும், உழைப்பையும் போற்றும் ஆட்சியாக திராவிட மாடல் அரசு நடைபோடுகிறது.
ஊதியத்தோடு தொழிலாளர் நல வாரியம் என கலைஞர் செய்த சாதனைகள் ஏராளம். உழைப்பாளர்களையும், உழைப்பையும் போற்றும் ஆட்சியாக திராவிட மாடல் அரசு நடைபோடுகிறது.
உழைப்பாளர் தினத்தையொட்டி மே 1 விடுமுறை நாளை சட்டமாக்கியவர் கலைஞர்.
தொழிலாளர் நலனுக்காக திராவிட மாடல் ஆட்சியில் ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. எந்த முதலீடு திட்டத்தை தொடங்கி வைத்தாலும், எவ்வளவு பேருக்கு வேலை கொடுப்பீர்கள் என்று முதல் கேள்வியை கேட்பது உண்டு.
ஆகவே வேலை தருபவர் பணியாளர்களுடன் இருக்கக்கூடிய உறவை சமரசத்தின் மூலமாக நாம் சமப்படுத்தி கொண்டு இருக்கிறோம். பிரச்சனைகளை பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு கொண்டு வர வேண்டும். அப்படித்தான் இந்த அரசு செயல்பட்டு கொண்டு இருக்கிறது. இது சாமானிய மக்களுக்கான, சாமானிய ஆட்சி என்பதை யாரும் மறந்து விட வேண்டாம்.
உங்களுக்காக உழைக்கும் திராவிட மாடல் அரசுக்கு நீங்கள் என்றைக்கும் உறுதுணையாக இருந்து இந்த ஆட்சிக்கு பக்கபலமாக இருக்க வேண்டும். விரைவில் மாமேதை கார்ல் மார்க்ஸ் சிலை சென்னையில் அமைக்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
- சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் உள்ள மே தின பூங்கா நினைவு சின்னத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
- துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொ.மு.க. நிர்வாகிகளும் மரியாதை செலுத்தினர்.
உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்களின் பங்களிப்புகள் மற்றும் சாதனைகளை அங்கீகரிக்கும் விதமாகவும், தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் வாய்ப்புகளை மேம்படுத்தும் விதமாகவும் ஆண்டுதோறும் மே 1-ந்தேதியன்று சர்வதேச தொழிலாளர்கள் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
மே 1 உழைப்பாளர் தினமான இன்று சென்னை சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் உள்ள மே தின பூங்கா நினைவு சின்னத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
மே தின பூங்காவில் உள்ள தூணுக்கு மலர் வளையம் வைத்து முதலமைச்சர் மரியாதை செலுத்தினார்.
செஞ்சட்டை அணிந்து வந்து மே தின பூங்கா நினைவு சின்னத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செவ்வணக்கம் செலுத்தினார். அவரைத்தொடர்ந்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொ.மு.க. நிர்வாகிகளும் மரியாதை செலுத்தினர்.
- மே 1 - உழைக்கும் மக்கள் தம் உரிமைகளை வென்றெடுத்த பொன்னாள்!
- உழைப்பாளர் தினத்தன்று ஊதியத்தோடு விடுமுறை - மே தின பூங்கா - தொழிலாளர் நல வாரியம் என முத்தமிழறிஞர் கலைஞர் செய்த சாதனைகள் ஏராளம்.
மே 1 உழைப்பாளர் தினத்தையொட்டி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளர். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:
மே 1 - உழைக்கும் மக்கள் தம் உரிமைகளை வென்றெடுத்த பொன்னாள்!
உலக உழைப்பாளர் தினமான இன்று உழைப்பால் உலகை இயக்கும் அத்தனை தோழர்களுக்கும் என் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்றைக்கு உழைப்பாளிகள் சிந்திய ரத்தத்தின் பலனே இன்றைக்கு உழைப்பாளர்களுக்கு கிடைத்துள்ள உரிமைகள்.
உழைப்பாளர் தினத்தன்று ஊதியத்தோடு விடுமுறை - மே தின பூங்கா - தொழிலாளர் நல வாரியம் என முத்தமிழறிஞர் கலைஞர் செய்த சாதனைகள் ஏராளம்.
கலைஞர் வழியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் அரசும் தொழிலாளர் நலன் காக்கும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
உழைப்பாளர் ஒற்றுமை ஓங்கட்டும்! உழைக்கும் மக்களின் உரிமைகளை என்றென்றும் பாதுகாப்போம்!
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உழைக்கும் தொழிலாளர்களின் உரிமைகள் உலகெங்கும் பாதுகாக்கப்பட வேண்டும்.
- புதுச்சேரி மாநிலத்தில் வருகிற மே மாதம் 1-ந்தேதி மே தின விழா பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளன.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
மே தின கொண்டாட்டங்கள் மூலம் தொழிலாளர்களின் பெருமையை உலகிற்கு பறைசாற்றுவதோடு நின்றுவிடாமல், உழைக்கும் தொழிலாளர்களின் உரிமைகள் உலகெங்கும் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் வரலாற்று சிறப்பு மிக்க மே தினத்தைக் கொண்டாடும் வகையில் கழக அண்ணா தொழிற்சங்க பேரவையின் சார்பில் அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்ட தலைநகரங்களிலும், புதுச்சேரி மாநிலத்திலும் வருகிற மே மாதம் 1-ந்தேதி (திங்கட்கிழமை) அன்று மே தின விழா பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மதுரை மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் மே தின சிறப்பு கிராமசபை கூட்டம் நடக்கிறது.
- இந்த தகவலை மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் வெளியிட்டுள்ளார்.
மதுரை
மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் மே 1-ந்தேதி தொழிலாளர் தினத்தன்று சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த கிராமசபைக் கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை ஒப்புதல் பெறுதல், சுத்தமான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்தல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், பிரதம மந்திரி ஊரகக் குடியிருப்புத் திட்டம், அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு, பிரதம மந்திரி கிராம சாலை திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) சுகாதாரம், ஜல் ஜீவன் இயக்கம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க பணிகள் குறித்து விவாதிக் கப்படவுள்ளது.
இந்த கூட்டங்களில் அனைத்து வாக்காளர்களும் கலந்து கொள்வது முக்கிய கடமையாகும். மேலும், கிராமசபை விவாதங்களில் பயனாளிகள் தேர்வு மற்றும் அரசால் நிறைவேற்றப்படும் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது. எனவே, மதுரை மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் அனைவரும் பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் கடைகள், அரசு மதுபானக்கூடங்கள், பார்கள் மூடப்பட வேண்டும்.
- டாஸ்மாக் கடை உரிமையாளர்கள் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
கடலூர்:
கடலூர் கலெக்டர் பாலசுப்ரமணியம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது -
மே தினத்தை முன்னிட்டு ஒரு நாள், கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் கடைகள், அரசு மதுபானக்கூடங்கள், பார்கள் மூடப்பட வேண்டும். மே 1-ந் தேதி (திங்கட்கிழமை ) மதுபானக் கடைகளை திறந்து மதுபானங்கள் விற்றாலோ, அரசு மதுபானக்கூடங்கள் மற்றும் மதுபானக்கூடங்களில் மதுபானங்கள் விற்றாலோ சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர்கள் மற்றும் உரிமையாளர்கள் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உழைப்பே உயர்வு தரும், மனநிறைவு தரும், ஒளிமயமான எதிர்காலத்திற்கு வழிவகுக்கும்.
- மே தினத்தின் பாரம்பரியத்தை உயர்த்திப் பிடித்து, தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாத்திட மே தினத்தில் சூளுரைப்போம்.
சென்னை:
நாளை (மே 1) தொழிலாளர் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி:
உடலினை எந்திரமாக்கி, உழைப்பினை உரமாக்கி, உலகத்தை இயங்க வைக்கும் தொழிலாளப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த மே தின நல்வாழ்த்துக்களை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். தொழிலாளர்கள் வருடத்தில் ஒருநாள் மட்டுமே நினைத்துப் போற்றப்பட வேண்டியவர்கள் அல்ல. வருடம் முழுவதும் நினைத்துப் பாராட்டப்பட வேண்டியவர்கள்.
உழைப்பே உயர்வு தரும், மனநிறைவு தரும், ஒளிமயமான எதிர்காலத்திற்கு வழிவகுக்கும் என்ற நம்பிக்கையோடு, தளர்வறியா உழைப்பின் மூலம் நம் நாட்டின் பெருமையை உயர்த்தி வரும் தொழிலாளப் பெருமக்கள் அனைவருக்கும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது நல்வழியில் எனது நெஞ்சார்ந்த மே தின வாழ்த்துக்களை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்:
1886-ம் ஆண்டு மே ஒன்றாம் தேதி அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு 'எட்டு மணி நேர வேலை' கோரிக்கையை முன்வைத்து போராட்டம் நடத்தியதுதான் மே தினம் உருவானதற்கான அடித்தளம். உழைப்பின் உயர்வை நன்கு உணர்ந்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மானிட சமுதாயத்தில் உழைக்கும் தொழிலாளி வர்க்கத்தினரே முதன்மையானவர்கள் என முழங்கினார்.
தமிழ்நாட்டில் எட்டு மணி நேர வேலைக்கு ஆபத்து வந்தவுடன் அதற்கு எதிராக குரல் கொடுத்த இயக்கம் எங்கள் இயக்கம்.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி:
தொழில் வளர்ச்சி குன்றிய நிலையில் ஏற்பட்ட வேலை இழப்பினால் தொழிலாளர்களின் வாழ்வில் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிற நிலையில் தங்களது உரிமைகளை பாதுகாக்கிற வகையில், உரிமைக்குரல் எழுப்பும் நாளாக மே 1-ந் தேதி அமைய வேண்டும்.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ:
தொழிலாளர் வர்க்கம் போராடிப் பெற்ற உரிமைகளை பாதுகாக்கவும், தொழிலாளர் விரோத போக்குகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் மே தினத்தில் உறுதி ஏற்போம்.
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன்:
மே தினத்தையொட்டி, தொழிலாளத் தோழர்களின் வருங்கால வாழ்வு சிறக்க இறைவன் துணை நிற்க வேண்டி, த.மா.கா சார்பில் மே தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன்:
நாட்டிலேயே முதன் முறையாக 1923-ஆம் ஆண்டு சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் சென்னையில் செங்கொடியை உயர்த்தி மே தினத்தை கொண்டாடிய 100-வது ஆண்டு நிறைவுப்பெறுகிறது. 8 மணி நேர வேலை 8 மணி நேர ஓய்வு, 8 மணிநேர உறக்கம் என்ற மே தின முழக்கத்தை பாதுகாக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு உள்ளது. மே தினத்தின் பாரம்பரியத்தை உயர்த்திப் பிடித்து, தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாத்திட மே தினத்தில் சூளுரைப்போம்.
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா:
1884 முதல் 1889 வரை உலக அரங்கில் நடைபெற்ற தொழிலாளி வர்க்கத்தின் புரட்சியின் நீட்சிதான் இந்த மே தினம்.
தொழிலாளர் வர்க்கத்திற்குச் சவால்கள் நிறைந்த இச்சூழலில் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க உறுதி எடுப்போம்.
அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன்:
உலகளாவிய பொருளாதாரம், பெரு நிறுவனங்களின் பணி சூழலில் 8 மணி நேர வேலை, வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட உரிமைகள் தொழிலாளர்களுக்கு தடையின்றி தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்வதுதான் தொழிலாளர்களுக்கான உண்மையான மே தின கொண்டாட்டமாகும்.
சமத்துவ மக்கள் கழகம் தலைவர் எர்ணாவூர் நாராயணன்:
வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த மே தின நினைவாக அப்போதைய முதலமைச்சர் காமராஜர் சென்னை மெரினா கடற்கரையில் 1959-ம் ஆண்டு உழைப்பாளர் சிலை நிறுவ பாடுபட்டார். சென்னை மெரினாவிலுள்ள உழைப்பாளர் சிலை, இந்திய உழைப்பாளர்களின் வரலாற்று அடையாளமாக இன்றும் திகழ்ந்து வருகிறது.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்:
உழைப்பில்லையேல் உயர்வில்லை, உழைப்பாளிகள் இல்லையேல் உலகில் இயக்கம் இல்லை. நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும். தொழிலாளர்களின் முன்னேற்றத்திற்கும் முக்கியத்துவம் அளித்து அவர்கள் வாழ்வு வளம் பெற செய்வது அரசின் கடமை.
பெருந்தலைவர் மக்கள் கட்சித்தலைவர் என்.ஆர்.தனபாலன்:
உலகமெங்கும் வாழும் தொழிலாளர்களின் இன்னல்கள் தீர்ந்து ஒற்றுமையுடனும் ஒருமைபாட்டுட னும் நாட்டின் முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் தொழிலாளர்களின் பங்களிப்பு மகத்தானது இந்த நாளில் தொழிலாளர்களுக்கு மே தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இதே போல் புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தொழில் அதிபர் வி.ஜி.சந்தோசம், திருநாவுக்கரசர் எம்.பி. ஆகியோரும் மே தின வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
- ரத்தம் சிந்தி உழைப்பவர்களை நினைவு கூரும் வகையில் மே தினம் கொண்டாடப்படுகிறது.
- தமிழகத்தில் 1 லட்சத்து 37 ஆயிரம் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 247 கோடி பண பலன்கள் வழங்கப்பட்டுள்ளது.
சேலம்:
தமிழகம் முழுவதும் தி.மு.க. இளைஞரணி புதிய நிர்வாகிகளுக்கான நேர்காணல் மண்டல வாரியாக நடைபெற்று வருகிறது. அதன்படி மண்டலம் 4-ல் உள்ள சேலம், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கான நேர்காணல் சேலத்தில் இன்று காலை தொடங்கியது. இதில் மாநகர அமைப்பாளர், துணை அமைப்பாளர், பொறுப்புகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான நேர்காணல் சேலம் ரேடிசன் ஓட்டலில் நடைபெற்று வருகிறது.
இதில் தி.மு.க. இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு அவர்களுடன் நேர்காணலை நடத்தி வருகிறார். அப்போது கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட இளைஞரணி நேர்காணல் முதலில் தொடங்கியது. அப்போது நேர்காணலுக்கு வந்த இளைஞர்களிடம் அரசியல் அனுபவம், பொது சேவைகள், கழக அமைப்புகளின் பணியாற்றியது தொடர்பான புகைப்படங்கள், கழக உறுப்பினர் அட்டைகள், வயதை நிரூபிப்பதற்கான சான்றிதழ்களையும் ஆய்வு செய்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அரசியல் குறித்த பல்வேறு கேள்விகளையும் கேட்டறிந்தார். தொடர்ந்து கிருஷ்ணகிரி மேற்கு, தருமபுரி மேற்கு, கிழக்கு, சேலம் மேற்கு, கிழக்கு, மத்திய மாவட்டத்திற்கான நேர்காணல் நடக்கிறது. இதையொட்டி ரேடிசன் ஓட்டல் முன்பு தி.மு.க.வினர் ஏராளமானோர் திரண்டுள்ளனர்.
முன்னதாக சேலம் மெய்யனூர் அரசு போக்குவரத்து கழக டெப்போ முன்பு மே தினத்தையொட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொ.மு.ச. கொடியை ஏற்றி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
ரத்தம் சிந்தி உழைப்பவர்களை நினைவு கூரும் வகையில் மே தினம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் உங்கள் அனைவருக்கும் இந்த நன்நாளில் வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன். இந்தியாவிலேயே 1923-ம் ஆண்டு முதல் மே தினம் தமிழகத்தில் கொண்டாடப்பட்டது. தொழிலாளர் உயிரை மதிக்கும் இயக்கம் தி.மு.க. இந்தியாவில் முதன் முறையாக விடுப்புடன் சம்பளம், 20 சதவீதம் போனஸ் கொடுத்ததும், கூலி தொழிலாளர்களுக்கு வீடு, கை ரிக்சா ஒழிப்பு, பணிக்கொடை வழங்கல், விபத்து காப்பீட்டு திட்டம் என அனைத்தையும் தந்தது கலைஞர் அரசு. 1990-ம் ஆண்டு நேப்பியர் பூங்காவுக்கு மே தின பூங்கா என கலைஞர் பெயர் சூட்டினார். நான் மே தினத்தில் அங்கு செல்வேன், இன்று உங்களுடன் மே தினம் கொண்டாடுவது சிறப்பு. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அங்கு சென்று மே தின வாழ்த்து சொல்லியுள்ளார்.
தமிழகத்தில் 1 லட்சத்து 37 ஆயிரம் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 247 கோடி பண பலன்கள் வழங்கப்பட்டுள்ளது. 12 மணி நேர வேலை திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறுத்தி வைத்திருந்தார். மே தின விழாவான இன்று அந்த சட்டத்தை திரும்ப பெறுவதாக முதலமைச்சர் அறிவித்துள்ளார். தி.மு.க. அரசு எப்போதும் தொழிலாளர் நலனுக்கு பாடுபடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர்கள் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., டி.எம்.செல்வகணபதி, எஸ்.ஆர்.சிவலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி., மேயர் ராமச்சந்திரன், தேர்தல் பணிக்குழு செயலாளர் தாமரைக்கண்ணன், உதயநிதி மன்ற மாநில செலலாளர் பாபு, மாவட்ட தலைவர் ராஜ்குமார், செயலாளர் தர்மராஜ், பொருளாளர் நடராஜ், தொழில்நுட்ப அணி டாக்டர் தருண் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- தி.மு.க. சார்பில் மே தின விழா நடந்தது.
- தொழிற்சங்க சட்ட ஆலோசகர் தங்கசாமி முன்னிலை வகித்தார்.
திருமங்கலம்
திருமங்கலம் அருகே உள்ள மறவன்குளம் தனியார் ஆலை முன்பு தி.மு.க.வின் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் மே தின கொடியேற்று விழா நடந்தது. மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மணிமாறன் கலந்து கொண்டு தொழிற்சங்க கொடியை ஏற்றி வைத்து பேசினார். தொழிற்சங்க சட்ட ஆலோசகர் தங்கசாமி முன்னிலை வகித்தார். தலைவர் லட்சுமணன், செயலாளர் கொடி. சந்திரசேகரன், பொருளாளர் மணிகண்டன் ஆகியோர் வரவேற்றனர் தலைமை செயற்குழு உறுப்பினர் ஏர்போர்ட் பாண்டியன், திருமங்கலம் நகர செயலாளர் ஸ்ரீதர், நகர்மன்ற தலைவர் ரம்யா முத்துக்குமார், துணைத் தலைவர் ஆதவன் அதியமான், ஒன்றிய செயலாளர்கள் தங்கப்பாண்டி, முத்துராமன், நிர்வாகிகள் சின்னசாமி, செல்வம், திருக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- 1917-ல் ரஷ்யாவில் லெனின் தலைமையில் புரட்சி ஏற்பட்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.
- புதுவையில் பஞ்சாலை தொழிலாளர்கள்தான் பெருமளவில் இருந்தனர்.
புதுச்சேரி:
18-ம் நூற்றாண்டில் உலகம் முழுவதும் நில பிரபுக்கள், ஜமீன்தார்கள், தொழிலதிபர்கள் தங்களிடம் வேலைபார்க்கும் தொழிலாளர்களை நசுக்கி பிழிந்து வந்தனர்.
1986-ம் ஆண்டு மே 4-ந்தேதி அமெரிக்காவில் சிகாகோ நகரில் ரொட்டி தயாரிப்பு நிறுவன தொழிலாளர்கள் அதிக பணி நேர வேலை, குறைந்த கூலி ஆகியவற்றை எதிர்த்து போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் 8 தொழிலாளர்கள் சுட்டு கொல்லப்பட்டனர். சிலருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
அன்று தொழில்நுட்ப வசதிகள் இல்லாத காரணத்தால் இந்த தகவல் 6 மாதத்திற்கு பிறகு ஜெர்மனில் இருந்த காரல்மார்க்சை சென்றடைந்தது. இதைத்தொடர்ந்து அவர் உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்கள் மே 1-ந் தேதியை தொழிலாளர் தினமாக கடைபிடிக்க வேண்டும் என அறைகூவல் விடுத்தார்.
இதையடுத்து பல நாடுகள் மே 1-ந்தேதியை தொழிலாளர் தினமாக கடைபிடிக்க தொடங்கியது. 1917-ல் ரஷ்யாவில் லெனின் தலைமையில் புரட்சி ஏற்பட்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இந்த ஆட்சி மாற்றம் உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்களுக்கு உத்வேகத்தை ஏற்படுத்தியது.
இதனால் தொழிலாளர்கள் பல நாடுகளில் தங்கள் உரிமைக்காக குரல் எழுப்பி போராட தொடங்கினர். 1923-ம் ஆண்டு மே 1-ந் தேதி பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் சென்னையில் மெரினா கடற்கரையில் சிந்தனைசிற்பி சிங்காரவேலர் முதல்முறையாக தொழிலாளர் தினத்தை கொண்டாடினார்.
இதன் தாக்கம் புதுவையிலும் எதிரொலித்தது. அப்போது புதுவையில் பஞ்சாலை தொழிலாளர்கள்தான் பெருமளவில் இருந்தனர். ஆங்கிலோ பிரெஞ்சு டெக்ஸ்டைல்ஸ், சவானா, கெப்ளே என 3 பஞ்சாலைகள் இயங்கி வந்தது. இதில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர்.
இங்கு பணியாற்றிய தொழிலாளர்கள் 12 மணி நேர வேலைக்கு நிர்பந்திக்கப்பட்டனர். 1936-ம் ஆண்டு கம்யூனிஸ்டு தொழிற்சங்க தலைவர் வ.சுப்பையா தலைமையில் 8 மணி நேர வேலை உரிமைக்காக பஞ்சாலை தொழிலாளர்கள் போராட்டத்தை தொடங்கினர். இந்த போராட்டம் வலுத்தது.
போராட்டத்தை அடக்க 1936-ம் ஆண்டு ஜூலை 30-ந்தேதி பிரெஞ்சு அரசு துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில் 12 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். ஆனாலும் போராட்டம் தொடர்ந்தது.
இதனால் 1937 ஏப்ரல் 6-ந்தேதி பிரெஞ்சு பாராளுமன்றத்தில் தொழிலாளர்களின் 8 மணி நேர வேலைக்காக சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தின் நகல் புதுவைக்கு கிடைத்தது. அது பிரெஞ்சு மொழியில் இருந்ததால் மொழி பெயர்ப்பு செய்து, தமிழிலில் பாரதிதாசன் வெளியிட்டார். தொழிலாளர்கள் உயிரை இழந்து 8 மணி நேர வேலை உரிமையை பெற்றுத் தந்த போராட்டத்தின் நினைவாக மே தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
இன்று 138-வது மே தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. புதுவையிலும் அனைத்து தொழிற்சங்கத்தினரும் கொடியேற்றி தொழிலாளர்களுக்கு இனிப்பு, சீருடை, நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடினர்.