search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உலகக் கோப்பை கிரிக்கெட்"

    • உலகக் கோப்பை போட்டி 10 மைதானங்களில் நடக்கிறது.
    • இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை எதிர் கொள்கிறது. இந்த ஆட்டம் சேப்பாக்கத்தில்தான் அக்டோபர் 8-ந்தேதி நடக்கிறது.

    சென்னை:

    13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) அக்டோபர் 5-ந்தேதி முதல் நவம்பர் 10-ந்தேதி வரை இந்தியாவில் உள்ள 10 நகரங்களில் நடக்கிறது.

    இதில் போட்டியை நடத்தும் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், இலங்கை, நெதர்லாந்து ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன.

    உலகக் கோப்பை போட்டியின் 48 ஆட்டங்களும் அகமதபாத், சென்னை, மும்பை, கொல்கத்தா, டெல்லி, ஐதராபாத், பெங்களூர், புனே, லக்னோ, தர்மசாலா ஆகிய 10 மைதானங்களில் நடக்கிறது.

    உலகக் கோப்பை போட்டி நடைபெறும் இடங்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) குழு ஏற்கனவே பார்வையிட்டு ஆய்வு செய்து இருந்தது.

    இதற்கிடையில் ஐ.சி.சி.யின் தலைமை ஆடுகள பராமரிப்பாளர் உலகக் கோப்பை போட்டி நடைபெறும் மைதானங்களை தற்போது ஆய்வு செய்து வருகிறது.

    அதன்படி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் ஐ.சி.சி. தலைமை ஆடுகள பராமரிப்பாளர் ஆன்டி அட்கின்சன் நேற்று ஆய்வு செய்தார். முழு வீச்சில் தயாராகி வரும் ஆடுகள தன்மை, அவுட் பீல்டு உள்ளிட்ட பகுதிகளை அவர் ஆய்வு செய்தார்.

    இதுகுறித்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் ஆர்.ஐ.பழனி கூறும்போது, "மிகப்பெரிய போட்டிக்கு முன்பு நடத்தப்படும் வழக்கமான ஆய்வு இதுவாகும். அனைத்து வசதிகளையும், நாடுகள் செய்த பணியையும் பார்த்து அவர் மகிழ்ச்சி அடைந்தார்" என்றார்.

    உலகக் கோப்பை போட்டிக்காக ஐ.பி.எல். முடிந்த பிறகு சேப்பாக்கத்தில் எந்த போட்டியும் நடத்தப்படவில்லை.

    உலக கோப்பை போட்டியில் சேப்பாக்கம் மைதானத்தில் 5 ஆட்டங்கள் நடக்கிறது. இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை எதிர் கொள்கிறது. இந்த ஆட்டம் சேப்பாக்கத்தில்தான் அக்டோபர் 8-ந்தேதி நடக்கிறது.

    நியூசிலாந்து-வங்காளதேசம் (அக்டோபர் 13), நியூசிலாந்து-ஆப்கானிஸ்தான் (அக்டோபர் 18), பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் (அக்டோபர் 23), பாகிஸ்தான்-தென்ஆப்பிரிக்கா (அக்டோபர் 27) போட்டிகளும் சேப்பாக்கத்தில் நடக்கிறது.

    • இன்ஸ்டா பக்கத்தில் உலகக் கோப்பையை வைத்து எடுத்த புகைப்படங்களை நடிகை மீனா ஷேர் செய்துள்ளார்.
    • ஈஃபிள் டவருக்கு கீழே நின்று உலகக் கோப்பையுடன் நடிகை மீனா எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இந்தியாவில் வரும் அக்டோபர் மாதம் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான பயிற்சி ஆட்டங்கள் குறித்த அட்டவணை சில நாட்கள் முன்னர் அறிவிக்கப்பட்டது. இந்த தொடருக்காக இந்திய அணி வீரர்கள் நேற்று பயிற்சி முகாமை தொடங்கினர். இந்த முகாமில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் உலகக் கோப்பை தொடரை முன்னிட்டு பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உலகக் கோப்பை 2023-ஐ நடிகை மீனா அறிமுகப்படுத்தி உள்ளார். ஈஃபிள் டவருக்கு கீழே நின்று உலகக் கோப்பையுடன் நடிகை மீனா எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    அவரது இன்ஸ்டா பக்கத்தில் உலகக் கோப்பையை வைத்து எடுத்த புகைப்படங்களை ஷேர் செய்துள்ள நடிகை மீனா விரைவில் நடைபெற உள்ள ஆண்களுக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் வெற்றிக் கோப்பையை அறிமுகப்படுத்தும் பாக்கியம் எனக்கு கிடைத்ததில் மகிழ்ச்சி எனக் கூறியுள்ளார்.

    இதுவரை எந்தவொரு இந்திய நடிகருக்கும் கிடைக்காத பெருமைக்குரிய அங்கீகாரம் எனக்கு கிடைத்திருப்பதில் ரொம்பவே மகிழ்ச்சியாக உள்ளேன் என நடிகை மீனா தெரிவித்துள்ளார்.

    கணவர் வித்யாசாகர் மறைவுக்கு பிறகு நடிகை மீனாவுக்கு திரையுலகமே ஒன்று திரண்டு நிகழ்ச்சி நடத்தி உற்சாகப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • யுஸ்வேந்திர சாஹலுக்கு பதிலாக அக்ஷர் பட்டேல் தேர்வு செய்யப்பட்டதற்கு அவரது பேட்டிங் திறனே காரணம்.
    • 17 பேர் கொண்ட அணியில் யாராவது காயமடைந்தால் யுஸ்வேந்திர சாஹல் மீண்டும் அணிக்கு திரும்ப வாய்ப்புள்ளது.

    கொல்கத்தா:

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கொல்கத்தாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிறகு நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்தியா உலகக் கோப்பையை வென்று 10 ஆண்டுக்கு மேல் ஆகி விட்டதே என்று கேட்கிறீர்கள். நீங்கள் எல்லாநேரமும் உலகக் கோப்பையை வெல்ல முடியாது. இதில் மோசமான நாட்கள் இருக்கும். பெரிய இடைவெளி விழும். இது எல்லாம் சகஜம். விரைவில் சொந்த மண்ணில் உலகக் கோப்பை போட்டி நடக்க உள்ளது. இதில் இந்தியா கோப்பையை வெல்ல வேண்டும் என்றால் நமது வீரர்கள் பேட்டிங்கில் அசத்த வேண்டும்.

    உலகக் கோப்பை கிரிக்கெட், ஆசிய கோப்பை, ஆஸ்திரேலியாவில் நடக்கும் தொடர்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமானது. அதை ஒப்பிட முடியாது. ஒவ்வொரு தொடரிலும் குறிப்பிட்ட தருணத்தில் எப்படி செயல்படுகிறோம் என்பதை பொறுத்தே முடிவு அமையும். இந்தியா வலுவான அணியாக திகழ்கிறது.

    ஆனால் உலகக் கோப்பை போட்டியின் போது நன்றாக விளையாடியாக வேண்டும். சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹலுக்கு பதிலாக அக்ஷர் பட்டேல் தேர்வு செய்யப்பட்டதற்கு அவரது பேட்டிங் திறனே காரணம். இதை நல்ல முடிவு என்றே சொல்வேன். ஆனால் 17 பேர் கொண்ட அணியில் யாராவது காயமடைந்தால் யுஸ்வேந்திர சாஹல் மீண்டும் அணிக்கு திரும்ப வாய்ப்புள்ளது.

    ஆசியக் கோப்பை போட்டியில் ஆட உள்ள பாகிஸ்தான் சிறந்த அணி. ஷகீன் ஷா அப்ரிடி, நசீம் ஷா, ஹாரிஸ் ரவுப் என்று தரமான பந்து வீச்சாளர்கள் உள்ளனர். சரியான கலவையில் அந்த அணி உள்ளது. இதே போல் இந்தியாவும் பலமிக்க அணி தான். குறிப்பிட்ட நாளில் எப்படி நெருக்கடியை சமாளித்து ஆடுகிறார்கள் என்பதே முக்கியம்.

    இவ்வாறு கங்குலி கூறினார்.

    • ‘சந்திரயான்-2’ தோல்வியால் 2019-ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது.
    • அரை இறுதியில் நியூசிலாந்திடம் 21 ரன்னில் தோற்றது.

    மும்பை:

    இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) அனுப்பிய சந்திரயான்-3 விண்கலம் திட்டமிட்டப்படி நேற்று மாலை 6.04 மணி அளவில் நிலவில் வெற்றிகரமாக தரை இறங்கியது. இதன்மூலம் இந்தியா புதிய உலக சாதனை படைத்தது.

    'சந்திரயான்-3' வெற்றியை நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள். தலைவர்கள், பிரபலங்கள் என பல்வேறு தரப்பிலும் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    'சந்திரயான்-3' வெற்றி தொடர்பாக 5 முறை ஐ.பி.எல். கோப்பை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி வெளியிட்ட டுவீட் வைரலாகி உள்ளது.

    'சந்திரயான்-2' தோல்வியால் 2019-ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது. அரை இறுதியில் நியூசிலாந்திடம் 21 ரன்னில் தோற்றது. 'சந்திரயான்-3' வெற்றியால் தற்போது நடைபெற இருக்கும் உலக கோப்பையை இந்தியா கைப்பற்றுமா? என்று மும்பை இந்தியன்ஸ் அந்த போஸ்டில் தெரிவித்து உள்ளது. இந்த டுவீட் வைரலாகி உள்ளது.

    இந்திய அணி ஐ.சி.சி. (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) கோப்பையை வென்று 10 ஆண்டுகள் ஆகிறது. கடைசியாக 2011-ம் ஆண்டு டோனி தலைமையிலான அணி ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றியது.

    ஒருநாள் போட்டிக்கான உலகக் கோப்பையை கபில் தேவ் தலைமையில் இந்தியா 1983-ம் ஆண்டு முதல் முறையாக கைப்பற்றியது. 28 ஆண்டுகளுக்கு பிறகு டோனி தலைமையில் இந்தியா 2-வது முறையாக உலகக் கோப்பையை வென்றது. முன்னதாக 2007-ல் அறிமுக 20 ஓவர் உலகக் கோப்பை அவர் பெற்றுக் கொடுத்தார்.

    தற்போது 13-வது உலகக் கோப்பை போட்டி (50 ஓவர்) அக்டோபர் 5-ந்தேதி முதல் நவம்பர் 19-ந்தேதி வரை இந்தியாவில் உள்ள 10 நகரங்களில் நடக்கிறது. இந்த உலகக் கோப்பையை இந்தியா வெல்லுமா? என்பதே ரசிகர்களின் அதிக எதிர்பார்ப்பாக இருக்கிறது.

    உலகக் கோப்பைக்கு முன்பு இந்திய அணி ஆசிய கோப்பையில் விளையாடுகிறது. பாகிஸ்தான், இலங்கையில் நடைபெறும் இந்தப்போட்டி வருகிற 30-ந்தேதி தொடங்குகிறது.

    • உலகக் கோப்பை தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன.
    • கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஹாட் ஸ்டார் புதிய சலுகை ஒன்றை அறிவித்துள்ளது.

    ஆசிய கோப்பை தொடர் வரும் 30-ம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 6 அணிகள் கலந்து கொள்கிறது.

    இதனையடுத்து இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கு தயாராக அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன.

    இந்நிலையில் கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஹாட் ஸ்டார் புதிய சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் மற்றும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை மொபைல் பயனார்கள் இலவசமாக பார்க்கலாம் என அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

    • இரு அணிகளும் ஐசிசி நடத்தும் தொடர்கள் மற்றும் ஆசியக் கோப்பை தவிர நேரடி கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதில்லை.
    • இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் குரூப் சுற்றில் விளையாட உள்ள போட்டி அகமதாபாத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    சென்னை:

    எதிர்வரும் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நேருக்கு நேர் பலப்பரீட்சை செய்ய வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உலகின் பெரிய கிரிக்கெட் மைதானத்தில் உலகக் கோப்பை தொடரின் மிகப் பெரிய மோதல் என இந்தப் போட்டி குறித்து கேப்ஷன் கொடுக்கப்பட்டு வருகிறது.

    வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இந்தியாவில் 2023 ஒருநாள் உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ளது. 10 அணிகள் இந்தத் தொடரில் பங்கேற்று விளையாட உள்ளன. குரூப் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளோடு விளையாட வேண்டும். புள்ளிப் பட்டியலில் டாப் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இந்தத் தொடரின் இறுதிப் போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.

    ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, வங்கதேசம், இங்கிலாந்து, இந்தியா, நியூஸிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் இந்தத் தொடருக்கு தகுதி பெற்றுள்ளன.

    இந்தச் சூழலில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் குரூப் சுற்றில் விளையாட உள்ள போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து அதிகாரபூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.

    அதற்கு முன்னதாக ஆசியக் கோப்பை தொடர் பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், பாகிஸ்தானுக்கு இந்திய அணி சென்று விளையாடுவது இயலாத காரியமாக உள்ளது. அதனால், இந்தத் தொடர் வேறு இடத்தில் நடத்தப்படலாம் என சொல்லப்படுகிறது.

    இரு அணிகளும் ஐசிசி நடத்தும் தொடர்கள் மற்றும் ஆசியக் கோப்பை தவிர நேரடி கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    ×