search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பசு கால்முறிவு"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தாசம்மா பசுவை குழந்தையை போல பாசம் காட்டி வந்தார்.
    • கால்முறிந்த பசுவுக்கு செயற்கை கால் பொருத்த முடியுமா? என்று கால்நடை டாக்டர்களிடம் ஆலோசனை கேட்டார்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவின் கொச்சியை அடுத்த பாலூர் பகுதியை சேர்ந்தவர் தாசம்மா. இவர், வீட்டில் 2 வயதான பசு ஒன்றை வளர்த்து வந்தார். இந்த பசு தினமும் 3 லிட்டர் அளவுக்கு பால் கொடுத்து வந்தது. இதனால் தாசம்மா, அந்த பசுவை குழந்தையை போல பாசம் காட்டி வந்தார்.

    கடந்த சில வாரங்களுக்கு முன்பு மாட்டு கொட்டிலில் கட்டப்பட்டிருந்த பசு திடீரென கத்தியது. சத்தம் கேட்டு வெளியே வந்த தாசம்மா, அங்கு வந்த நாயை பார்த்து பசு கத்துவதை கண்டார். நாயிடம் இருந்து தப்பிக்க பசு ஓடியபோது அதன் பின்னங்கால் இடறிவிழுந்து முறிந்து விட்டது.

    இதனை கண்டு பதறிபோன தாசம்மா மற்றும் அவரது குடும்பத்தினர், அந்த பசுவை கால்நடை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு பசுவை பரிசோதித்த டாக்டர், பசுவின் பின்னங்காலை வெட்டி அகற்றினால் மட்டுமே பசுவை காப்பாற்ற முடியும் எனக்கூறினார். இதனை கேட்ட அக்கம்பக்கத்தினர், அந்த பசுவை இறைச்சிக்கு விற்று விடும்படி கூறினர்.

    தாசம்மா அக்கம்பக்கத்தினரின் ஆலோசனையை கேட்க மறுத்தார். கால்முறிந்த பசுவுக்கு செயற்கை கால் பொருத்த முடியுமா? என்று கால்நடை டாக்டர்களிடம் ஆலோசனை கேட்டார். அவர்கள் செயற்கையாக பிளாஸ்டிக் கால் பொருத்தினால் பசுவை நடக்க வைக்க முடியும் என்று கூறினர்.

    உடனே தாசம்மாவும், அவரது குடும்பத்தினரும் தாங்கள் ஆசையாக வளர்த்த பசுவுக்கு செயற்கை கால் பொருத்த ஏற்பாடு செய்தனர். அதன்படி கால்நடை டாக்டர், பசுவுக்கு செயற்கை கால் பொருத்தினார். பின்னர் அதற்கு நடக்கவும் பயிற்சி அளித்தார்.

    இதில் அந்த பசு மெல்ல மெல்ல எழுந்து நிற்க தொடங்கியது. இப்போது நடக்கவும் தொடங்கி உள்ளது. இதனை கண்ட தாசம்மாவும், அவரது குடும்பத்தினரும் மகிழ்ச்சியில் திளைக்கிறார்கள்.

    ×