என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 322983"
- கேரள மாநிலம் வைக்கத்தில் மகாதேவ ஆலயம் உள்ளது. அங்கு 4 மூலைகளிலும் நந்தி வைக்கப்பட்டுள்ளது.
- மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள நந்திக்கு கருவறை நந்தி என்று பெயர்.
1. நந்தி என்றால் ஆனந்தம், மகிழ்ச்சி தருபவர் என்று பொருள்.
2. நந்தியின் வேலை தடுப்பது ஆகும். அதாவது இவர் அனுமதி பெறாமல் ஈசன் உறையும் இடங்களுக்குள் யாராலும் செல்ல இயலாது. நந்தி அமைதி கிடைத்தால்தான் ஈசன் அருளைப்பெற முடியும். எனவேதான் முக்கிய சம்பவங்களின் போது யாராவது தடுத்தால், "என்ன இவன் நந்தி மாதிரி தடுக்கிறான்''என்று சொல்லும் வழக்கம் ஏற்பட்டது.
3. பிரதோஷ காலங்களில் நந்தியை தவறாமல் வழிபடுபவர்களுக்கு அருள் வரம் தரும் பேறு கிடைக்கும் என்பது ஐதீகம்.
4. நந்தி தேவர் சிவபெருமானுக்கு பூஜை செய்யும் அற்புத காட்சி ஒன்று, நாகை மாவட்டம் ஆத்தூர் மந்தாரவனேசுவரர் கோவிலில் உள்ளது.
5. சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள ஆதிபுரீஸ்வரர் கோவிலில் பிரமாண்ட அதிகார நந்தி வாகனம் உள்ளது. இந்த அதிகார நந்தியை தமிழ்ப்பேரறிஞர் தெ.பொ. மீனாட்சி சுந்தரனாரின் தந்தை பொன்னுசாமி கிராமணி என்பவர் செய்து கொடுத்தார்.
6. ஆந்திர மாநிலம் லேபாட்சியில் உள்ள கருங்கல்லில் வடிக்கப்பட்ட நந்தியே இந்தியாவில் உள்ள கல் நந்திகளில் பெரிய நந்தியாம்.
7. தமிழ்நாடு மக்களுக்கு நந்நி என்றதும் தஞ்சை பெரிய கோவில் நந்திதான் நினைவுக்கு வரும். இந்த நந்தி ஒரே கல்லால் ஆனது.
8. மதுரை ஆவணி மூல வீதியில் "மாக்காளை" எனப்படும் சுதையால் அமைக்கப்பட்ட பிரமாண்ட நந்தி உள்ளது. இத்தகைய மாக்காளை நந்திகளை நெல்லை, சுசீந்திரம், ராமேஸ்வரம், திருவிடைமருதூர் ஆலயங்களிலும் காணலாம்.
9. திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் ஜோதி நந்தி உள்ளது. இந்த நந்தி முன் தீபம் ஏற்றி வலம் வந்து மலையை நோக்கி வழிபடுவதை பக்தர்கள் வழக்கத்தில் கொண்டுள்ளனர்.
10. திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் குறிப்பிட்ட ஒரு இடத்தில் இருந்து பார்த்தால், மலையானது, நந்தி ஒன்று படுத்து இருப்பது போன்ற தோற்றத்தில் காட்சித்தரும். அந்த இடத்தை "நந்திமுக தரிசனம்'' என்கிறார்கள்.
11. மைசூர் சாமுண்டி மலை மீதுள்ள நந்தி கண்கவர் அழகான நந்தியாகும். இது சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
12. கேரள மாநிலம் வைக்கத்தில் மகாதேவ ஆலயம் உள்ளது. அங்கு 4 மூலைகளிலும் நந்தி வைக்கப்பட்டுள்ளது.
13. மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள நந்திக்கு கருவறை நந்தி என்று பெயர்.
14. திருவாரூர் தியாகராஜர் கோவில் சன்னதியில் ஈசனை ஆச்சரியத்துடன் பார்த்தபடி எழுந்து நிற்கும் நிலையில் நந்தி உள்ளது. இந்த நந்தியை வழிபட்டால் செய்த பாவங்கள் எல்லாம் தொலைந்து போகும் என்பது நம்பிக்கை.
15. திருமந்திரம் எனும் நூலை எழுதிய திருமூலருக்கு குருவாக நந்தி திகழ்ந்தார். திருமூலருக்கு நந்தி பெருமான்தான் 9 வேத ஆகமங்களை விளக்கி அருளியதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
16. சனகர், சனந்தர், சனாதனர், சனத்குமார், பதஞ்சலி, சிவயோக மாமுனி, வியாக்கிரமர், திருமூலர் ஆகிய 8 பேரும் நந்தி பெருமானின் மாணவர்களாவர்.
17. கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் நந்தி துர்கா மலையே பரவலாக நந்தி மலை என்று அழைக்கப்படுகிறது. நந்தி மலையே பென்னாறு, பாலாறு பொன்னையாறு ஆகிய ஆறுகளில் பிறப்பிடமாக கருதப்படுகிறது. கடல் மட்டத்தில் இருந்து 1,500 அடி உயரத்தில் இருக்கின்றது. ஆயிரம் வருடத்து பழமை வாய்ந்த நந்தி கோவிலால் நந்தி மலை என்ற பெயர் ஏற்பட்டது.
18. நந்திகேசுரரின் வரலாற்றை லிங்க புராணம் கூறுகிறது. பிறப்பில் எம்பெருமானாகிய சிவபெருமானே நந்திகேசுவரராகப் பிறந்து கணங்களின் தலைவரானார் என்பது புராண மரபு.
19. இந்திய வரலாற்றை ஆராய்ந்தால் தத்துவம், யோகம், நாட்டியம், இசை, ஆயுர்வேதம், அஸ்வவேதம், காமவேதம் முதலிய பல்வேறு சாத்திரங்களைத் தோற்றிவைத்தவராக நந்திகேசுரர் என்ற முனிவர் வாழ்ந்திருக்கிறார் என அறியலாம்.
20. சிவபெருமான் நாட்டியக் கலையைப் பிரும்மாவுக்கு கற்றுக் கொடுக்க அம்முறையை அறிந்த நந்தி பரத முனிவருக்குப் போதித்தார் என்று அபிநய தர்ப்பணம் கூறுகிறது.
21. தமிழ்நாட்டில் ஆடவல்ல பெருமான் தண்டுவுக்கு நாட்டியம் கற்றுக்கொடுப்பதாக ஒரு சிற்பம் மாமல்லபுரத்தில் தர்மராஜ ரதத்தில் உள்ளது. இங்கு சிவன் நாட்டியாசாரியராகவும் தண்டு முனிவர் மனித உருவிலும் உள்ளனர்.
22. காஞ்சிபுரத்தில் இராஜசிம்மன் கட்டிய கைலாய நாதராலயத்தில் பின்புறச் சுவரில் ஒரு சிற்பம் உள்ளது. அதில் சிவபிரான் ஊர்த்துவதாண்டவம் புரிகிறார். அவர் அருகில் நந்திகேசுவரர் ஆனந்தமாக நாட்டியம் கற்றுக் கொண்டு ஆடுகிறார்.
23. தமிழ்நாட்டில் நந்திகேசுவரரின் மதம் கி.பி. 700லேயே சிறப்பிடம் பெற்றிருந்தது.
24. தமிழ்நாட்டிலும் கேரளத்திலும் பிற இடங்களிலும் உள்ள சிற்பங்களில் சிவன் ஆடும்போது நந்திகேசுவரர் பஞ்சமுக வாத்யம் என்னும் குடமுழா வாத்தியத்தை வாசிப்பதாக உள்ளதைக் காணலாம். திருவாரூர், திருத்துறைபூண்டி ஆகிய தலங்களில் இன்றும் பஞ்சமுக வாத்தியம் வாசிக்கப்படுகிறது.
25. பஞ்சமுக வாத்திய லட்சணம் என்னும் சுவடியில் குடமுழா வாத்தியம் நந்திகேசுவரரால் இசைக்கப்பட்டது என்றும், ஆதலின் இதை இசைக்கும் முன்னர் நந்திகேசுவரருக்குச் சிறப்பு வழிபாடு செய்ய வேண்டும் என்றும் கூறுகிறது.
26. காமசாஸ்திரத்தை தோற்றுவித்தவரும் நந்திகேசுவரரே என்று பல நூல்கள் கூறுகின்றன. நந்தி இயற்றிய பல செய்யுட்களை "ரதி ரகசியம்" என்று தம் நூலில் கொக்கோகர் மேற்கோளாகக் காட்டுகிறார்.
27. ஆகம சாஸ்திரங்களையும், சைவசித்தாந்த தத்துவங்களையும் சிவபெருமானிடம் அறிந்து உலகுக்குப் போதித்தவர் நந்திகேசுவரரே. சைவமரபில் தலையாயது "சிவஞான போதம்" என்னும் நூல். இதை நந்திகேசுவரரே முதலில் போதித்தார்
28. சிவாலயங்களில் துவாரபாலர் இருவரில் தலையில் சூலம் தரித்து நிற்பவர் நந்திகேசுவரர் ஆவார்.
29. சிதம்பரம் நடராஜப் பெருமானின் கோவிலில் நான்கு கோபுரங்களிலும் அதிகார நந்தியின் உருவத்தைக் காணலாம்.
30. நந்திகேசுவரரின் மறு அவதாரமாக அனுமான் கருதப்படுகிறார்.
31. சில சிவாலயங்களில் நந்திக்குப் பதிலாகக் குரங்கு தூவாரபாலனாகத் திகழ்வதைக் காணலாம். எவ்வாறு சிவதத்துவத்தை நந்தி வாயிலாகப் பரமன் போதித்தாரோ அதே போல ராமதத்துவம் அனுமன் வாயிலாகப் போதிக்கப்பட்டது.
32. தானும் நந்தியும் வேறல்ல, ஒருவரே என்று சிவபெருமான் நந்தி புராணத்தில் கூறுகிறார். நந்தியைத் தொழுவது சிவபெருமானைத் தொழுவதே ஆகும்.
33. முனிவர்களுக்கும் சித்தர்களுக்கும் யோகிகளுக்கும் நந்திதேவரே ஆதி குரு.
34. 'நந்தி' என்ற வார்த்தையுடன் 'ஆ' சேரும்போது 'ஆநந்தி' என்ற பொருள் தருகிறது. 'நீயும் ஆனந்தமாக இரு, பிறரையும் ஆனந்தமாக வைத்திரு!' என்று சிவபெருமான் நந்திக்கு அளித்த வரம் அது.
35. நந்தியைத் தொழாமல் சிவபெருமானைத் தொழ முடியாது. ஆலயத்தில் நந்தியை மட்டுமே தொழுதுவிட்டு திரும்பிவிட்டால் கூட சிவபெருமானை வணங்கியதன் முழுபலனும் கிட்டும்.
36. ஆலயங்களைக் காவல் காக்கும் அதிகாரமும் நந்திக்கே உரியது என்பது தெளிவாகிறது. இதன் அடையாளமாகத் தான் திருக்கோவில்களின் மதில் சுவர்களில் நந்தியின் திருவுருவை அமைத்துள்ளனர்.
37. நந்தி தேவருக்கு சிவபெருமானைப் போலவே நெற்றிக்கண்ணும் நான்கு புஜங்களும், கையில் பிரம்பும், உடைவாளும், இருபுஜங்களில் மான் மழுவும் உண்டு. மானும் மழுவும் வேதத்தைக் குறிக்கிறது. மழு வீரத்தை அல்லது ஆண்மையைக் குறிக்கிறது எனவும் கூறுவர்.
38. நந்திக்கு இவ்வுலகத்தின் எதையும் கண்டிக்கவும் தண்டிக்கவும் அதிகாரம் வழங்கியுள்ளான் பரமேஸ்வரன்.
39. நந்தியின் அருள் இருந்தால்தான் மனிதர்களுக்கு மட்டுமின்றி தேவர்களுக்கும் முக்தி கிடைக்கும். அதனாலேயே தேவர்களும் நந்திதேவரைப் போற்றித் துதிக்கின்றனர்.
40. எல்லா உயிர்களையும் ஒரு காலத்தில் ஓய்வு படுத்துதல் மகாசங்காரம் எனப்படும். இந்த அதிகாரத்தை சிவபெருமான் நந்தி தேவருக்கு வழங்கியிருக்கிறார்.
41. நந்திதேவருக்கு ருத்திரன் என்ற பெயரும் உண்டு. ருத் என்பது துக்கம். ரன் என்பது ஓட்டுகிறவன். துக்கத்தை ஓட்டுகிறவன் என்பதே ருத்திரன். தூயவன், சைலாதி எனவும் நந்தியை அழைப்பர்.
42. மாலாங்கன், இந்திரன், சோமன், பிரமன், ருத்திரன், கந்துரு, காலாங்கி, கஞ்சமாலையன் போன்ற தேவர்களெல்லாம் நந்தியைக் குருவாகக் கொண்டு வேதம் கற்றவர்கள் ஆவர்.
43. பிரவிர்த்தி என்ற சேர்க்கையை விட்டு நிவிருத்தி என்ற விலகலைத் தேர்ந்தெடுப்பது ஞானத்தின் மார்க்கம். இதைக் கற்றுக் கொடுத்தவர் நந்திதேவரே. இவர் வழி வந்தவர்களே மெய் கண்ட சந்தானத்தின் குருபரம்பரை என்றழைக்கப்படுகிறார்கள்.
44. சிவபெருமானின் முக்கண்ணின் பார்வைக்கு எதிரில் நிற்க நந்திதேவரைத் தவிர வேறு யாராலும் இயலாது. இது சிவபெருமானே நந்தி தேவருக்கு அளித்த வரமாகும்.
45. சிவ பெருமான் திருநடனம் புரிகையில் நந்திதேவரே மத்தளம் வாசித்ததாக சிவபுராணம் கூறுகிறது.
46. பிரதோஷ காலம் மட்டுமின்றி எக்காலத்தும் நாம் சிவபெருமானிடம் வைக்கும் வேண்டுதல்களை நந்திதேவரிடம் வைத்தால் போதும். அவர் அதைப் பரமேஸ்வரனிடம் கொண்டு சேர்த்துவிடுவார் என்பது ஐதீகம்.
47. நந்தியை வழிபடும்போது, 'சிவனடியில் சரணம் புகுந்து சிவத்தியானத்தில் ஆழ்ந்திருக்கும் மகா புண்ணியம் பெற்ற நந்திகேசுவரரே! சன்னிதிக்குச் சென்று உமையோடு கூடிய ஈஸ்வரனைத் தரிசிக்க எனக்கு உத்தரவு தருக' என்று பிரார்த்திக்க வேண்டும்.
48. நந்திதேவருக்கு அருகம்புல் மாலையும், சிவப்பு அரிசி நிவேதனமும் நெய்விளக்கும் வைத்து வழிபட வேண்டும்.
49. பிரபஞ்சத்தில் உள்ள தீர்த்தங்கள் எல்லாம் பிரதோஷ காலத்தில் பீஜத்தை வந்தடைகின்றன. அதனால் நந்தியின் பீஜத்தைத் தொட்டு வணங்கிய பிறகே சிவதரிசனம் காணவேண்டும். பிறகு வாலைத் தொட்டு வணங்க வேண்டும்.
50. நாட்டியம் பயில்வோரும் இசை பயில்வோரும் நந்தியை வழிபட்டால் அவர்களின் கலைகள் தடையின்றி சிறந்து வளரும்.
- அமிர்தத்தைப் பெற வேண்டி திருபாற்கடலை தேவர்களும், அசுரர்களும் சேர்ந்து கடைந்த போது ஆலகால விசம் அதிலிருந்து வெளிப்பட்டது.
- சகல நன்மைகளையும் தரும் பிரதோச வழிபாட்டின் பெருமையை முதலில் அறிமுகப்படுத்தியவர் சிவகணங்களின் முதல்வரும், அன்னை அப்பரின் வாகனமுமான நந்தி தேவர்தான்.
பிரதோச வழிபாடு சிவ வழிபாட்டிற்குரிய மிகச்சிறப்பான மிக முக்கியமான வழிபாடாகும். தோசம் என்ற வடமொழிச்சொல்லிற்கு குற்றம் என்று பொருள். பிரதோசம் என்றால் குற்றமற்றது என்று பொருள். குற்றமற்ற இந்தப்பொழுதில் ஈசனை வழிபட்டோமானால் நாம் செய்த சகல பாவங்களும் நீங்கும் என்பது ஐதீகம். பிரதோச காலமென்பது மாலை 4 மணி – 6 மணி வரையான காலமாகும். திங்கட்கிழமை பிரதோசம் சோமவாரப் பிரதோசம் என்றும் சனிக்கிழமைப் பிரதோசம் சனிப்பிரதோசம் என்றும் அழைக்கப்படும்.
பிரதோச காலம் தோன்றிய கதை என்ன என்பதை பார்ப்போம். அமிர்தத்தைப் பெற வேண்டி திருபாற்கடலை தேவர்களும், அசுரர்களும் சேர்ந்து கடைந்த போது ஆலகால விசம் அதிலிருந்து வெளிப்பட்டது. பாற்கடலை கடையத்தொடங்கியது தசமித் திதியாகும். ஆலகால விசம் வெளிப்பட்ட நாள் ஏகாதசித் திதியாகும். ஆலகால விசத்தின் கடுமை தாங்க முடியாமல் தேவர்களும், அசுரர்களும் சிவபெருமானிடம் முறையிட்டு வேண்ட சிவனும் அந்த விசத்தை அப்படியே எடுத்து உண்டார். விசம் முழுமையாக இறைவனின் வயிற்றில் இறங்கினால் எங்கே இறைவனிற்கு ஏதாவது தீங்கு நேர்ந்து விடுமோ என அஞ்சிய அன்னை பார்வதி தேவி இறைவனின் கண்டத்தை அழுத்த விசமானது கழுத்திலேயே தங்கிவிட்டது. அன்று முதல் இறைவனும் திருநீலகண்டர் என்று ஒரு திருநாமமும் பெற்று அழைக்கப்பட்டு வரலானார். அதன் பின்பு சிவனின் கட்டளைப்படி தொடர்ந்து திருப்பாற்கடலை கடைந்த போது துவாதசியன்று அமிர்தம் தோன்றியது. அமிர்தத்தை உண்ட தேவர்கள் அந்த சந்தோசத்தில் இறைவனை மறந்து இறைவனை வழிபடாமல் ஆடிப்பாடி மகிழ்ந்திருந்தனர். மறுநாள் திரயோதசி அன்று தங்கள் தவறினை உணர்ந்து சிவபொருமானிடம் தங்களை மன்னிக்கும் படி மனமுருகி வேண்டினார்கள். பரம கருணாமூர்த்தியான சிவபெருமானும் மனம் இரங்கி, மனம் மகிழ்ந்து தம்முன் இருந்த ரிசப தேவரின் கொம்புகளிற்கிடையில் நின்று அன்னை பார்வதி தேவி காண திருநடனம் புரிந்தார். இது பிரதோச வேளையாகும். அன்று முதல் திரயோதசி திதியன்று மாலை 4 - 6 பிரதோச காலம் என வழங்கலாயிற்று. அமாவாசையிலிருந்து 13 ம் நாளும் பௌர்ணமியிலிருந்து 13 ம் நாளும் திரயோதசி திதியாகும். மாதத்தில் இரண்டு பிரதோசமாகும்.
பிரதோசத்தில் பத்து வகையுண்டு:-
1. நித்திய பிரதோசம்:- தினமும் 4 மணி முதல் 6 மணி வரையிலான நேரம்.
2. நட்சத்திர பிரதோசம்:- திரயோதசி திதி எந்த நட்சத்திரத்தில் எந்த நட்சத்திரம் வருகிறதோ அந்த நட்சத்திர உருவமாக சிவனை வழிபடுவது.
3. பட்ச பிரதோசம்:- சுக்ல பட்ச அதாவது வளர்பிறையில் வரும் திரயோதசி திதியில் பட்ச லிங்க வழிபாடு செய்வது.
4. மாதப் பிரதோசம்:- கிருஸ்ண பட்ச அதாவது தேய்பிறையில் வரும் திரயோதசி திதியில் சந்திர கலையில் நின்று சிவனை வழிபடுவது.
5. பூர்ண பிரதோசம்:- திரயோதசி திதியும் சதுர்த்தி திதியும் பின்னப்படாமல் இருக்கும் போது சிவனை வழிபாடு செய்வது. சுயம்பு லிங்க வழிபாடு சிறப்பான பலனைத் தரும்.
6. திவ்ய பிரதோசம்:- துவாதசியும் திரயோதசியும் அல்லது திரயோதசியும் சதுர்த்தசியும் ஆக இரட்டைத் திதிகள் சேர்ந்து வருவது. மரகத லிங்க வழிபாடு சிறப்பான பலனைத் தரும்.
7. அபய பிரதோசம்:- ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி மாதங்களில் வரும் திரயோதசி திதியில் சப்தரிசி மண்டலத்தை வழிபடுவது.
8. தீபப் பிரதோசம்:- திரயோதசி திதியில் தீபத் தானங்கள் செய்து வழிபடுவது. சிவாலயங்களில் தீப அலங்காரங்கள் செய்வது. பஞ்சாடசர தீப ஆராதனை முறைப்படி செய்து சிவனை வழிபடுவது.
9. சப்த பிரதோசம்:- திரயோதசி திதியில் ஒள~ன நடனங்கள் காட்டி சாகா கலையை விளக்குவது. இது யோகிகளிற்குரிய முறையாகும்.
10. மகா பிரதோசம்:- ஈசன் விசமுண்டது கார்த்திகை மாதம் திரயோதசி திதி சனிக்கிழமை ஆகும். சனிக்கிழமை திரயோதசி திதி வரும் பிரதோச வழிபாடே மகா பிரதோச வழிபாடாகும்.
சகல நன்மைகளையும் தரும் பிரதோச வழிபாட்டின் பெருமையை முதலில் அறிமுகப்படுத்தியவர் சிவகணங்களின் முதல்வரும், அன்னை அப்பரின் வாகனமுமான நந்தி தேவர்தான். தட்சனின் சாபத்தினால் தேய்ந்து கொண்டிருந்த சந்திரன் சாப விமோசனத்திற்காக சிவனை வேண்ட சிவனும் சந்திரனிற்கு சாப விமோசனம் அருளினார். ஆனால் அந்த சாபம் சிவனை வந்தடைந்து சிவன் தேய ஆரம்பித்தார். இது கண்டு மனம் வருந்திய நந்தி தேவர் அன்னை சக்தியை சிவலிங்க பீடத்தில் அமரச்செய்து முறைப்படி பிரதோச பூஜை செய்தார். இதன் பலனாக சிவனும் சாபவிமோசனம் பெற்றார். நந்திதேவர் செய்த பூஜையானது கொடிமரத்தையும், பலிபீடத்தையும் இடதுபுறமாக கடந்து நந்திக்கு முதற்பூஜை செய்து பின் பிரதட்சணமாக தட்சிணாமூர்த்தி வரை சென்று பின் அப்பிரதட்சணமாக நந்திக்கு பின்புறமாக சண்டிகேசர்வரை சென்று பின் மீண்டும் பிரதட்சணமாக நந்தி தேவர் வரை வந்து நந்தி தேவரிற்கு வலதுபுறம் நின்று கொம்புகளிற்கிடையில் பார்வையை மட்டும் செலுத்தி "ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் க்லீம் சௌம் நமோ பகவதே" என்ற சக்தித் தாயின் வசிய மந்திரத்தை ஜெபித்து பூசை செய்தார்.
நந்தி தேவர் வழிபட்ட பாதையை கவனித்தோமானால் ஒரு திரிசூலம் அமையும்.
தேய்பிறை பிரதோசம் ஞாயிற்றுக்கிழமைகளில் வரும்போது ராகு காலமும் பிரதோச வேளையும் கூடி வரும் 4.30– 6.00 மணி வரையிலான காலத்தில் மேலே குறிப்பிட்ட வழிமுறையில் பஞ்சாட்சர மந்திரத்தை ஜெபித்தபடி சிவனை வழிபடுவதற்கு முனிவர் சாபம், முன்னோர் சாபம், கிரக தோசங்கள் அனைத்தும் நீங்கும் என்பது ஆன்றோர் வாக்கு. 13 பிரதோசங்கள் தொடர்ந்து முறைப்படி பிரதோச வழிபாடு செய்பவர்களிற்கு வாழ்வில் சகல நலமும், வளமும் கிடைக்கும். 108 பிரதோச பூசை செய்து அவர்கள் செய்த சகல பாவங்களும் நீங்கி சிவனின் திருவடியில் வசிக்கும் பலன் கிட்டும்.
சகல பாவங்களையும் போக்கும் பிரதோச வழிபாட்டினைக்
கடைப்பிடித்து வாழ்வில் சகல நலனும் பெறுவோமாக.
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெலாம்.
இந்துவாக வாழ்வோம் இந்து தர்மம் காப்போம்.
- மூன்று தேவியருக்கும் தனித்தனியாக உள்ள இந்த பதினெட்டு நாமாவளிகளும் மிகுந்த சக்தி வாய்ந்தவை.
- செல்வத் திருமகளே! மோகனவல்லியே!எல்லாரும் கொண்டாடும் வேதவல்லியே!
நவராத்திரி நேரத்தில் அஷ்டோத்திரம், சகஸ்ரநாமம் எனச் சொல்ல நேரமில்லாதவர்கள் இந்த சிறிய நாமாவளிகளைச் சொல்லலாம். மூன்று தேவியருக்கும் தனித்தனியாக உள்ள இந்த பதினெட்டு நாமாவளிகளும் மிகுந்த சக்தி வாய்ந்தவை.
துர்க்கா தேவி
ஓம் துர்க்காயை நம
ஓம் மகா காள்யை நம
ஓம் மங்களாயை நம
ஓம் அம்பிகாயை நம
ஓம் ஈஸ்வர்யை நம
ஓம் சிவாயை நம
ஓம் க்ஷமாயை நம
ஓம் கௌமார்யை நம
ஓம் உமாயை நம
ஓம் மகாகௌர்யை நம
ஓம் வைஷ்ணவ்யை நம
ஓம் தயாயை நம
ஓம் ஸ்கந்த மாத்ரே நம
ஓம் ஜகன் மாத்ரே நம
ஓம் மகிஷ மர்தின்யை நம
ஓம் சிம்ஹ வாஹின்யை நம
ஓம் மாகேஸ்வர்யை நம
ஓம் திரிபுவனேஸ்வர்யை நம
லெட்சுமி ஸ்ரீதேவி
ஓம் மகாலக்ஷ்ம்யை நம
ஓம் வரலெக்ஷ்ம்யை நம
ஓம் இந்த்ராயை நம
ஓம் சந்த்ரவதனாயை நம
ஓம் சுந்தர்யை நம
ஓம் சுபாயை நம
ஓம் ரமாயை நம
ஓம் ப்ரபாயை நம
ஓம் பத்மாயை நம
ஓம் பத்மப்ரியாயை நம
ஓம் பத்மநாபப் ப்ரியாயை நம
ஓம் சர்வ மங்களாயை நம
ஓம் பீதாம்பரதாரிண்யை நம
ஓம் அம்ருதாயை நம
ஓம் ஹரிண்யை நம
ஓம் ஹேமமாலின்யை நம
ஓம் சுபப்ரதாயை நம
ஓம் நாராயணப் பிரியாயை நம
சரஸ்வதி தேவி
ஓம் சரஸ்வத்யை நம
ஓம் சாவித்ர்யை நம
ஓம் சாஸ்த்ர ரூபிண்யை நம
ஓம் ஸ்வேதா நநாயை நம
ஓம் ஸ§ரவந்திதாயை நம
ஓம் வரப்ரதாயை நம
ஓம் வாக்தேவ்யை நம
ஓம் விமலாயை நம
ஓம் வித்யாயை நம
ஓம் ஹம்ஸ வாகனாயை நம
ஓம் மகா பலாயை நம
ஓம் புஸ்தகப்ருதே நம
ஓம் பாஷா ரூபிண்யை நம
ஓம் அக்ஷர ரூபிண்யை நம
ஓம் கலாதராயை நம
ஓம் சித்ரகந்தாயை நம
ஓம் பாரத்யை நம
ஓம் ஞானமுத்ராயை நம
நவராத்திரி ஸ்லோகம்
கிராவஹர் தேவீம் த்ருஹிண க்ருஹிணீ மாகமவிதோ
ஹரே: பத்நீம் பத்மாம் ஹரஸ ஹசரீ மத்ரித நயாம்!
துரீயா காபி த்வம் துரதிகம் நிஸ்ஸீம மஹிமா
மஹாமாயா விச்வம் ப்ரமயஸி பரப்ரஹ்ம மஹிஷி!!
பொருள்: இறைவனோடு இணைந்திருக்கும் சக்தியே! வேதங்களின் உட்பொருளை உணர்ந்தவர்கள் உன்னை சரஸ்வதி என்றும்,
லட்சுமி என்றும், சிவனின் பத்தினியாகிய பார்வதி என்றும் பலவிதமாகக் கூறுகிறார்கள். மனதிற்கும் வாக்கிற்கும் அப்பாற்பட்டவளே! எல்லையற்ற மகிமை கொண்டவளே! மகாமாயாவாக இருந்து
உலகை இயக்கச் செய்து பிரமிக்க வைப்பவளே! அருள்புரிவாயாக.
துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி வழிபாடு
அம்பாள் (துர்க்கை)
காஞ்சி காமாட்சி மதுரை மீனாட்சி
காசி விசாலாட்சி கருணாம்பிகையே!
தருணம் இதுவே தயை புரிவாயம்மா!
பொன் பொருள் எல்லாம்
வழங்கி எம்மை வாழ்த்திடுவாயம்மா!
ஏன் என்று கேட்டு என் பசி தீர்ப்பாய்
என் அன்னை நீயே அம்மா!
மங்களம் வழங்கிடும் மகாசக்தியே!
மங்கலத் தாயே நீ வருவாயே!
என்னுயிர் தேவியே! எங்கும் நிறைந்தவளே!
எங்கள் குலவிளக்கே! நீ வருவாயே!
பயிர்களில் உள்ள பசுமையில்
கண்டேன் பரமேஸ்வரி உனையே!
சரண் உனை அடைந்தேன்
சங்கரி தாயே, சக்தி தேவி நீயே!
அரண் எனக் காப்பாய்
அருகினில் வருவாய் அகிலாண்டேஸ்வரியே!
லட்சுமி
செல்வத் திருமகளே! மோகனவல்லியே!
எல்லாரும் கொண்டாடும் வேதவல்லியே!
எண் கரங்களில் சங்கு சக்கரம்
வில்லும் அம்பும் தாமரை
மின்னும் கரங்களில் நிறைகுடம்
தளிர்த் தாம்பூலம் அணி சியாமளையே!
வரத முத்திரை காட்டியே
பொருள் வழங்கும் அன்னையே!
சிரத்தினில் மணி மகுடம்
தாங்கிடும் சிந்தாமணியே!
பல வரம் வழங்கிடும் ரமாமணியே!
வரதராஜ சிகாமணியே!
தாயே! தனலட்சுமியே!
சகல வளமும் தந்திடுவாய்
சரஸ்வதி
கலைவாணி நின் கருணை தேன்மழையே
விளையாடும் என் நாவில் செந்தமிழே
அலங்கார தேவதையே வனிதாமணி
இசைக்கலை யாவும் தந்தருள்வாய் கலைமாமணி!
மரகத வளைக்கரங்கள் மாணிக்க வீணை தாங்கும்
அருள் ஞானக்கரம் ஒன்றில் ஜெபமாலை விளங்கும்
ஸ்ருதியோடு லயபாவ ஸ்வரராக ஞானம்
சரஸ்வதி மாதா உன் வீணையில் எழும் நாதம்!
வீணையில் எழும் நாதம் தேவி உன் சுப்ரபாதம்
வேணுவில் வரும் நாதம் வாணி உன் சக்ரபாதம்
வானகம் வையகம் உன் புகழ் பாடும்.
நவராத்திரி பாடல்
மங்கள ரூபிணி மதியளி சூலினி மன்மத பாணியளே
சங்கடம் நீங்கிட சடுதியில் வந்திடும் சங்கரி சவுந்தரியே
கங்கண பாணியன் கனிமுகம் கண்டநல் கற்பகக் காமினியே
ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி துக்கநிவாரணி காமாட்சி
கான் உறுமலர் எனக் கதிர் ஒளி காட்டிக் காத்திட வந்திடுவாள்
தான்உறு தவஒளி தார்ஒளிமதி ஒளி தாங்கியே வீசிடுவாள்
மான்உறு விழியாள் மாதவர் மொழியாள் மாலைகள் சூடிடுவாள்
ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி துக்க நிவாரணி காமாட்சி
சங்கரி சவுந்தரி சதுர்முகன் போற்றிட சபையினில் வந்தவளே
பொங்கரி மாவினில் பொன்னடி வைத்துப் பொருந்திட வந்தவளே
எம்குலம் தழைத்திட எழில் வடிவுடனே எழுந்த நல் துர்க்கையளே
ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி துக்க நிவாரணி காமாட்சி
தணதண தந்தண நவில்ஒளி முழங்கிட தண்மதி நீ வருவாய்
கணகண கங்கண கதிர்ஒளி வீசிட கண்மணி நீ வருவாய்
பணபண பம்பண பறைஒலி கூவிட பண்மணி நீ வருவாய்
ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி துக்க நிவாரணி காமாட்சி
பஞ்சமி பைரவி பர்வத புத்திரி பஞ்சநல் பாணியளே
கொஞ்சிடும் குமரனைக் குணமிகு வேழனைக் கொடுத்த நல் குமரியளே
சங்கடம் தீர்த்திட சமர் அது செய்த நல் சக்தி எனும் மாயே
ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி துக்க நிவாரணி காமாட்சி
எண்ணியபடி நீ அருளிட வருவாய் எம் குலதேவியளே
பண்ணிய செயலின் பலனது நலமாய்ப் பல்கிட அருளிடுவாய்
கண்ணொளி அதனால் கருணையே காட்டி கவலைகள் தீர்ப்பவளே
ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி துக்க நிவாரணி காமாட்சி
இடர் தருதொல்லை இனிமேல் இல்லை என்று நீ சொல்லிடுவாய்
சுடர்தரு அமுதே சுருதிகள் கூறிச் சுகமது தந்திடுவாய்
படர்தரு இருளில் பரிதியாய் வந்து பழவினை ஓட்டிடுவாய்
ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி துக்க நிவாரணி காமாட்சி
ஜெய ஜெய பாலா சாமுண்டேஸ்வரி ஜெய ஜெய ஸ்ரீதேவி
ஜெய ஜெய துர்க்கா ஸ்ரீபரமேஸ்வரி ஜெய ஜெய ஸ்ரீதேவி
ஜெய ஜெய ஜெயந்தி மங்கள காளி ஜெய ஜெய ஸ்ரீதேவி
ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி துக்க நிவாரணி காமாட்சி.
- “சிங்கி” என்று அழைக்கப்பட்ட நந்தி தேவர், ஆனந்த கூத்தனின் நடனத்திற்கு மிருதங்கம் வாசித்துக் கொண்டிருந்தார்.
- இதனால் சிவபெருமானின் நடனத்தை, நந்தி தேவரால் காண முடியாமல் போய்விட்டது.
செங்கல்பட்டில் இருந்து காஞ்சிபுரம் செல்லும் சாலையில் வாலாஜாபாத் அருகே அவளூர் என்ற இடத்தில் சிங்கீஸ்வரர் கோவில் அருமைந்துள்ளது.
ஒரு முறை சிவபெருமான் பஞ்ச சபைகளில் ஒன்றான திருவாலங்காட்டில் ஆனந்த தாண்டவம் ஆடியபொழுது, "சிங்கி" என்று அழைக்கப்பட்ட நந்தி தேவர், அந்த ஆனந்த கூத்தனின் நடனத்திற்கு மிருதங்கம் வாசித்துக் கொண்டிருந்தார். அவ்வாறு மிருதங்கத்தை இசைத்துக் கொண்டிருந்த நந்தி தேவர் தொழில்மீது இருந்த பக்தியின் காரணமாக கண்ணை மூடிக்கொண்டு மிருதங்கம் வாசிப்பதில் லயித்துப் போனார்.
இதனால் சிவபெருமானின் நடனத்தை, நந்தி தேவரால் காண முடியாமல் போய்விட்டது. தான் மெய்மறந்து மிருதங்கத்தை வாசித்துக் கொண்டிருந்த காரணத்தால், சிவபெருமானின் நடனத்தை தரிசிக்க முடியாமல் போய்விட்டதே என்று நினைத்து கவலையுற்றார். பின்னர் சிவபெருமானிடம், தன்னல் அவரது நடனத்தை காணமுடியாது போனது பற்றி எடுத்துரைத்து மீண்டும் தனக்கு ஆனந்த நடனத்தை காட்டியருளும்படி வேண்டி விண்ணப்பித்தார்.
நந்தியிடம், அவரது தொழில் பக்தியை வெகுவாக பாராட்டிய சிவபெருமான், "பூலோகத்தில் அவளூர் என்ற இடத்தில் உள்ள தலத்திற்கு சென்று வணங்கி வா! அங்கு யாம் வந்து உனக்கு ஆனந்த நடனத்தை புரிந்து அருள்புரிவோம்" என்று கூறினார். இதனை கேட்டதும் சற்றும் தாமதிக்காத நந்தி தேவர் உடனடியாக அவளூர் சென்று அங்கிருந்த லிங்கத்திற்கு பூஜை செய்ய தொடங்கினார். அவரது இடைவிடாத பூஜையின் காரணமாக அகமகிழ்ந்த ஈசன், தனது அன்பரின் கோரிக்கையை நிறைவேற்றும் முகமாக அந்த தலத்திற்கு வந்து நந்தி தேவருக்காக மட்டும் மீண்டும் தனது நடனத்தை ஆடிக்காட்டினார்.
"சிங்கி" என்ற நந்தியார் வணங்கிய தலம் என்பதால் இங்குள்ள இறைவன் சிங்கீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். இந்த கோவிலில் இறைவியாக காமாட்சி என்ற நாமத்தில் அம்மன் அருள்பாலித்து வருகிறார். நந்தியின் வேண்டுதலை நிறைவேற்றியது போல் நம்முடைய வேண்டுதலையும் நிச்சயம் சிங்கீஸ்வரர் நிறைவேற்றுவார்.
- பாரத யுத்தம் முடிந்த பின் ஜனமேஜயர் என்ற மகாராஜா, வைசம்பாயனர் என்னும் ரிஷியிடம் பாரதக் கதையைக் கேட்க வந்தார்.
- கிருஷ்ணர் இத்தலத்தில் தன் பாதங்களை பூமியில் அழுத்தி விஸ்வபாத யோக சக்திகளை கொண்டு அருள்கிறார்.
பாண்டவர்களைக் காக்க கிருஷ்ணர் லீலைகளைக் நிகழ்த்திவிட்டு, பாண்டவ தூதப் பெருமாள் என்ற பெயரில் காஞ்சிபுரத்தில் கோவில் கொண்டார். அதன் பின்னணியில் உள்ள வரலாறு வருமாறு:-
பாண்டவர்களுக்காக ஐந்து வீடாவது கேட்டு வாங்கி வர, துரியோதனிடம் பகவான் கிருஷ்ணன் தூது சென்றார். அவரை அவமானப்படுத்த நினைத்தார் துரியோதனன். அவர் அமர்வதற்காக போடப்பட்ட ஆசனத்தின் கீழே, ஒரு நிலவறையை உண்டாக்கி அதன் மீது பசுந்தழைகளை போட்டு மறைத்தான். கண்ணனும் வந்து அமர்ந்தார். திட்டப்படி நிலவறை சரிந்து உள்ளே விழுந்தது. கண்ணன் உள்ளே விழுந்தார். அங்கே அவரைத் தாக்க சில மல்யுத்த வீரர்கள் தயாராக நின்றனர். அவர்களை அழித்து விஸ்வரூபம் எடுத்தார் கிருஷ்ணர்.
பாரத யுத்தம் முடிந்த பின் ஜனமேஜயர் என்ற மகாராஜா, வைசம்பாயனர் என்னும் ரிஷியிடம் பாரதக் கதையைக் கேட்க வந்தார். அப்போது ராஜா, கிருஷ்ணர் தூது சென்ற போது நிலவறையில் அமர்ந்த கோலத்தில் எடுத்த விஸ்வரூப தரிசனத்தை நானும் தரிசிக்க வேண்டும் என வேண்டினார். ரிஷி கூறிய அறிவுரையின் படி இத்தலத்தில் தவம் செய்து, கிருஷ்ணரின் விசுவரூப தரிசனத்தை அவர் கண்டார். இந்த கிருஷ்ணரின் பெயர் தூதஹரி எனப்படும். திருதராஷ்டிரனுக்கு கண்பார்வை அளித்து தனது விஸ்வருப தரிசனத்தை கிருஷ்ண பகவான் இத்தலத்தில் காட்டியருளினார்.
25 அடி உயரம் உடைய அவரது சிலை அமர்ந்த கோலத்தில் காட்சி அளிக்கிறது. இந்த பிரமாண்ட சிலை சுதையால் செய்யப்பட்டது. எனவே இந்த மூலவருக்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை. ஆண்டுக்கு ஒரு தடவை தைலகாப்பு மட்டும் செய்யப்படுகிறது. இந்த பாண்டவ பெருமாளை வாசலில் நின்று சற்று குனிந்து பார்த்தால்தான் முழு உருவத்தையும் தரிசிக்க முடியும். வித்தியாசமான இவரை அவசியம் ஒவ்வொரு வரும் கிருஷ்ண ஜெயந்தியன்று தரிசிக்க வேண்டும்.
ரோகிணி தேவி கிருஷ்ண பகவானை வழிபட்டு சந்திரனை அடையும் பேறு பெற்றாள். ரோகிணி தனக்கு ஞான சக்திகளையும், விஸ்வரூப தரிசனமும் கொடுத்த கிருஷ்ணனை இத்தலத்தில் சூட்சும வடிவில் தினமும் வழிபாடு செய்வதாக ஐதீகம். எனவே ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இத்தலத்திற்கு வந்து கிருஷ்ணனை தரிசித்து வந்தால் எந்த பிரச்சினைகள், துயரங்கள் இருந்தாலும் விலகி விடும் என்பது நம்பிக்கை.
கிருஷ்ணர் இத்தலத்தில் தன் பாதங்களை பூமியில் அழுத்தி விஸ்வபாத யோக சக்திகளை கொண்டு அருள்கிறார். எனவே இங்கு அடிப்பிரதட்சணம், அங்கப்பிரதட்சணம் செய்பவர்களின் 72 ஆயிரம் அங்க நாடிகளும் துடிப்புடன் செயல்படும். சோதனைகளும், துன்பங்களும் விலகும். புதன், சனி, ரோகிணி, அஷ்டமி திதி, எட்டாம் தேதிகளில் இங்கு வழிபடுவது சிறப்பாக கருதப்படுகிறது.
- மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது.
- பெண் வடிவ கருடாழ்வாருக்கு நெய்தீபம், எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபட்டால் திருமண தோஷம் புத்திரதோஷம் விலகிவிடும்.
தமிழ்நாட்டில் மன்னார்குடியில் ராஜகோபால சுவாமி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. ராஜகோபாலர் இக்கோவிலில் இடையன் கோலத்தில் பாலகனாக காட்சி தருகிறார். ஒரு வேட்டி அணிந்து அதையே தலைப்பாகையாகச் சுருட்டி, வலது கையில் வெண்ணெய் மற்றும் சாட்டை வைத்து காட்சி தருகிறார். இடுப்பில் சலங்கை, சாவிக்கொத்து, கையில் வளையல், காலில் தண்டை, கொலுசு ஆகிய குழந்தை அணிகலன்கள் அணிந்திருக்கிறார். உடன் ஒரு பசுவும், இரண்டு கன்றுகளும் உள்ளன.
தாயார் சன்னதி அருகே பெருமாள் சன்னதி எதிரே பெண் வடிவ கருடாழ்வார் இருக்கிறார். மதுரை கள்ளழகர் கோவில் போல, தினமும் மாலையில் மட்டும் தோசை நைவேத்யம் படைக்கப்படுகிறது. ஒருசமயம் கிருஷ்ணன், யமுனையில் நீராடிக்கொண்டிருந்த கோபியருக்கு இடையே ஒரு போட்டி வைத்தார். கோபியர் நீராடிவிட்டு தங்களது ஆடை, ஆபரணங்களை சரியாக அணிந்து கொள்ள வேண்டும் என்பதே போட்டி அந்த போட்டி தொடங்கியதும், கிருஷ்ணர், ஒரு கோபியின் கம்மலை எடுத்து அணிந்து கொண்டார்.
கோபியர்களோ அதைக் கவனிக்காமல் தேடிக் கொண்டே இருந்தனர். இறுதியில் கண்ணனின் காதில் அது இருக்கும் அழகைப் பார்த்து நகைத்து, ஆனந்தம் கொண்டனர். இதன் அடிப்படையில் இங்கு ராஜகோபாலர் வலது காதில் குண்டலமும், இடது காதில் தாடங்கமும் அணிந்திருக்கிறார். இவருக்கு பால் பிரதான நைவேத்யமாக படைக்கப்படுகிறது. இதையே பிரசாதமாகவும் தருகின்றனர். இத்தலத்தில் உள்ள பெண் வடிவ கருடாழ்வாருக்கு நெய்தீபம், எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபட்டால் திருமண தோஷம் புத்திரதோஷம் விலகிவிடும். இங்குள்ள துர்க்கைக்கு ராகு காலத்தில் விசேஷ பூஜை, வழிபாடு நடக்கிறது. புத்திர பாக்கியத்திற்காக இவளிடம் தொட்டில் வளையம் கட்டும் வழக்கமும் உள்ளது.
- பழமையான சிவாலயங்களில் அதிகபட்சம் ஒன்பது நந்திகள் இருக்கும்.
- பத்மநந்தி, நாகநந்தி, விநாய நந்தி, மகாநந்தி, சோமநந்தி, சூரியநந்தி, கருடநந்தி, விஷ்ணு நந்தி, சிவ நந்தியாகும்.
ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலம் தலத்தில் நந்திதேவர் அவதரித்தார் என்றும், தமிழகத்தில் திருவையாறில் நந்திதேவர் அவதரித்ததாகவும் இருவேறு கருத்துகள் உண்டு.
பங்குனி மாத திருவாதிரை நட்சத்திரம் இவரது அவதார தினம். எனவே அன்று நந்திதேவர் ஜனன உற்சவம் இத்தலங்களில் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
பழமையான சிவாலயங்களில் அதிகபட்சம் ஒன்பது நந்திகள் இருக்கும். அவை பத்மநந்தி, நாகநந்தி, விநாய நந்தி, மகாநந்தி, சோமநந்தி, சூரியநந்தி, கருடநந்தி, விஷ்ணு நந்தி, சிவ நந்தியாகும்.
இந்த ஒன்பது நந்திகளையும் நந்தியால், ஸ்ரீசைலம் தலங்களில் தரிசிக்கலாம்.
- ஓம் கந்தனைக் கையால் அமர்த்தினாய் போற்றி...
- ஓம் காலமெல்லாம் ஈசன் சிந்தனையே போற்றி...
அன்பின் வடிவே போற்றி
ஓம் அறத்தின் உருவே போற்றி
ஓம் அகிலத்தை காப்பாய் போற்றி
ஓம் அரனுக்குக் காவலனே போற்றி
ஓம் அரியாய் வந்து அமர்ந்தவனே போற்றி
ஓம் அம்பலக் கூத்தனே போற்றி
ஓம் ஆலயத்தின் முன் இருப்பாய் போற்றி
ஓம் இருளை ஒழிப்பவனே போற்றி
ஓம் இடபமே போற்றி
ஓம் இடர்களைத் தடுப்பவனே போற்றி
ஓம் ஈகை உடையவனே போற்றி
ஓம் உலக ரட்சகனே போற்றி
ஓம் உபதேச காரணனே போற்றி
ஓம் ஊக்கமுடையவனே போற்றி
ஓம் எருது உருவம் கொண்டவனே போற்றி
ஓம் எங்களுக்கு வரம் தருவாய் போற்றி
ஓம் ஏவல்களை ஒழித்தவனே போற்றி
ஓம் ஐயன்பால் அமர்ந்தவனே போற்றி
ஓம் ஒப்பில்லாத தேவனே போற்றி
ஓம் ஓங்கார வடிவானவனே போற்றி
ஓம் ஒளடதமாய் இருப்பவனே போற்றி
ஓம் கணநாயகனே போற்றி
ஓம் கஷ்டங்களைப் போக்குவாய் போற்றி
ஓம் கல்யாண மங்களமே போற்றி
ஓம் கலைகள் பல தெரிந்தோய் போற்றி
ஓம் கற்பகத் தருநிழல் அமர்ந்தாய் போற்றி
ஓம் கஸ்தூரி நிற ஒளி அணிந்தாய் போற்றி
ஓம் கவலைகளை ஒழிக்கும் வல்லவனே போற்றி
ஓம் காலனுக்கும் காவலனே போற்றி
ஓம் கிரிவல்லயன் துணையே போற்றி
ஓம் கீர்த்திகள் பல பெற்றாய் போற்றி
ஓம் குணநிதியே போற்றி
ஓம் குற்றம் களைவாய் போற்றி
ஓம் கூத்தனுக்கு மத்தளம் அடித்தாய் போற்றி
ஓம் கோலங்கள் பல செய்வாய் போற்றி
ஓம் கைலாச வாகனனே போற்றி
ஓம் கந்தனைக் கையால் அமர்த்தினாய் போற்றி
ஓம் காலமெல்லாம் ஈசன் சிந்தனையே போற்றி
ஓம் பஞ்சாசட்ர ஜபம் செய்பவனே போற்றி
ஓம் பஞ்சலிங்கத்தில் ஒருவனாய் ஆனாய் போற்றி
ஓம் பரமசிவன் தன்மை தெரிந்தோய் போற்றி
ஓம் பார்வதிக்கும் வாகனமாய் நின்றாய் போற்றி
ஓம் பிரதோஷ காலம் உடையனே போற்றி
ஓம் பிறவிப் பிணி தீர்ப்பாய் போற்றி
ஓம் பிஞ்ஞகன் ஏவல் செய்வாய் போற்றி
ஓம் புகழ்கள் பல பெற்றாய் போற்றி
ஓம் பூதங்களுக்குத் தலைவனே போற்றி
ஓம் பூதப்பிரதேச பிசாசுகளை அடக்குவாய் போற்றி
ஓம் மகாதேவனே போற்றி
ஓம் மகிமை பல செய்வாய் போற்றி
ஓம் மகேஸ்வரன் தூதனே போற்றி
ஓம் மங்கள நாயகனே போற்றி
ஓம் மதோன்மத்தன் போற்றி
ஓம் மஞ்சள் மகிமை கொடுப்பாய் போற்றி
ஓம் மணங்கள் செய் காரணனே போற்றி
ஓம் யந்திர மகிமை உனக்கே போற்றி
ஓம் அகிலமெல்லாம் உன் அருள் போற்றி
ஓம் மதங்கள் மேல் கொடி ஆனாய் போற்றி
ஓம் லட்சியமெல்லாம் உன் அருள் போற்றி
ஓம் தட்சனுக்கு உபதேசம் செய்தாய் போற்றி
ஓம் தண்டங்களின் மேல் அறிந்தாய் போற்றி
ஓம் தயாபரம் அருள் பெற்றவனே போற்றி
ஓம் தஞ்சமென்றவர்களுக்கு அருள்செய்வாய் போற்றி
ஓம் நஞ்சுண்டவனை நாயகனாய் அடைந்தாய் போற்றி
ஓம் நாகநந்தனின் நயனம் தெரிந்தவனே போற்றி
ஓம் நாதமும் பிந்துவும் ஆனாய் போற்றி
ஓம் பழமும் சுவையும் நீயே போற்றி
ஓம் பண்புகள் பல செய்வாய் போற்றி
ஓம் பார் எல்லாம் உன்புகழ் போற்றி
ஓம் பிறவிப் பிணி அறுப்பாய் போற்றி
ஓம் அடியவர்க்கெல்லாம் அன்பே போற்றி
ஓம் ஆண்டவனிடம் அன்பு கொண்டாய் போற்றி
ஓம் ஆதார சக்திமயம் பெற்றாய் போற்றி
ஓம் சிவனின் வாகனமானாய் போற்றி
ஓம் இன்னல் தீர்க்கும் இறைவனே போற்றி
ஓம் நீண்ட கொம்புடையவனே போற்றி
ஓம் நீலாயதாட்சி அருள் நின்றாய் போற்றி
ஓம் வேதங்களை காலாய் உடையவனே போற்றி
ஓம் வேள்விக்குத் தலைவனே போற்றி
ஓம் வித்யா காரணனே போற்றி
ஓம் விவேகம் எனக்குத் தருவாய் போற்றி
ஓம் விண்ணுலகம் செல்லும் வழியே போற்றி
ஓம் வில்வத்தின் மகிமையே போற்றி
ஓம் விஸ்வே உன் வல்லமையே போற்றி
ஓம் வேல் உடையவனே போற்றி
ஓம் மகா காணனே போற்றி
ஓம் மக்கள் பேறு தருவாய் போற்றி
ஓம் மாயைகளை அகற்றுவாய் போற்றி
ஓம் வெள்ளை நிறம் உடையாய் போற்றி
ஓம் உலகம் அறிந்த உத்தமனே போற்றி
ஓம் உன் மகிமை உலகமெல்லாம் போற்றி
ஓம் ஊஞ்சல் ஆட்டுபவனே போற்றி
ஓம் ஊடலுடக்குதவியவனே போற்றி
ஓம் உபதேசம் பெற்றவனே போற்றி
ஓம் உலகுக்கு அருள்வாய் போற்றி
ஓம் பிழைகள் பொறுப்பாய் போற்றி
ஓம் பிள்ளையார் சோதரனே போற்றி
ஓம் மாயை ஒடுக்கும் மாடாய் நின்றாய் போற்றி
ஓம் மாமன்னரும் உன் பணி செய்வாய் போற்றி
ஓம் மகதேவன் கருணையே போற்றி
ஓம் மகாவிஷ்ணுவே போற்றி
ஓம் பரப்பிரம்மமே போற்றி
- புனேயில் பாண்டேஸ்வரராக காட்சிதரும் இறைவனின் திருக்கோவிலில் புராதனச் சிறப்போடு, புனிதம் நிறைந்ததாக அமைந்திருக்கும் கருவறை நந்தி.
- நஞ்சன்கூடு ஆலயத்தின் உள்ளே நுழையும்போது நம்மை நந்தி பார்ப்பதுபோல் திசை மாறி அமைந்திருப்பது வித்தியாசமானது.
நந்தி என்றால் ஆனந்தத்தைத் தருபவர் என்று பொருள். நல்லன யாவும் நந்தி தரிசனத்தால் கிட்டும் என்பது நம்பிக்கை. நலமும் வளமும் பெற சிறப்பான சில நந்திகளை தரிசிப்போம்.
தஞ்சாவூர் நந்தி: நமக்கு மட்டுமல்ல உலக நாடுகள் பலவற்றிலும் இருப்பவர்களுக்கும் கூட நந்தி என்றால் இந்த தஞ்சை நந்தியின் நினைவுதான் வரும். அளவில் மட்டுமல்ல அருளிலும் பெரியவர் இவர்.
மதுரை நந்தி: மதுரை புதுமண்டபம் முன்பாக கீழ ஆவணி மூல வீதியில் சுதையால் அமைக்கப்பட்டுள்ள இந்த நந்தி கம்பீரம் மற்றும் அழகுமிக்கது. இது போன்ற பிரமாண்ட நந்திகளை ராமேஸ்வரம், திருநெல்வேலி, சுசீந்திரம், திருவிடைமருதூர் போன்ற ஆலயங்களில் நாம் காணலாம். இவை, மாக்காளைகள் எனப்படுகின்றன.
திருவண்ணாமலை நந்தி: அண்ணாமலையில் அருள் மணக்க வலம் வரும் அலங்கார நந்தி... அதிகார நந்தி !
சாமுண்டிமலை நந்தி: மைசூரையொட்டிய சாமுண்டிமலை மீது ஏறும்போது மலையின் ஒரு பகுதியில் அமைந்துள்ள இந்த பிரமாண்டமான நந்தி கலையழகுடன் கம்பீரமாக காட்சி தருகிறது.
ஹளேபீடு நந்தி (ஹொய்சளேஸ்வரா ஆலயம்): மாக்கல்லில் வடிக்கப்பட்ட நுணுக்க வேலைப்பாடுகள் உள்ள ஆபரணங்களை உடைய இந்த நந்தியின் கழுத்து மடிப்புகளும், முகத்தில் புடைத்துக் காணப்படும் ரத்த, நாளங்களும் சிற்பியின் திறமையை பறைசாற்றுவன.
லேபாட்சி நந்தி: ஆந்திர மாநிலம் லேபாட்சியில் உள்ள இந்த நந்தியே இந்தியாவில் கருங்கல்லில் வடிக்கப்பட்ட மிகப்பெரிய நந்தி என்ற பெருமையைப் பெறுகிறது.
காஞ்சி கைலாசநாதர் ஆலய நந்தி: பழமையும் பெருமையும் வாய்ந்த இந்த ஆலய நுழைவாயிலிலிருந்து சுமார் 100 அடி தள்ளி ஒரு பெரிய மேடையின் மீது முன்பக்கம் இந்த நந்தி அமைக்கப்பட்டுள்ளது. மேலே சாந்துக்கலவை பூசீ வர்ணம் தீட்டப்பட்டது போன்று அமைக்கப்பட்ட இந்த நந்தி காலமாற்றத்தில் மழையிலும் வெயிலிலும் காய்ந்து வண்ணங்கள் மறைந்தாலும் வனப்பு மாறாது காட்சியளிக்கிறது.
வைக்கம் நந்தி: கேரள மாநிலம் வைக்கம் மகாதேவ் ஆலய நந்தி. வெளிப்பிரகார நான்கு மூலைகளில் அமைக்கப்பட்டுள்ள நந்திகளுக்கு அழகிய பித்தளைக் கவசம் சாத்தி மெருகிட்டு வைத்துள்ளனர்.
கங்கைகொண்ட சோழபுரம் நந்தி: தஞ்சைப் பெரிய கோவிலின் தம்பிபோல் காட்சி தரும் சோழீச்வரர் கோவிலில் அமைந்திருக்கும் எழில்மிகு இடம்.
புனே நகரத்து நந்தி: புனேயில் பாண்டேஸ்வரராக காட்சிதரும் இறைவனின் திருக்கோவிலில் புராதனச் சிறப்போடு, புனிதம் நிறைந்ததாக அமைந்திருக்கும் கருவறை நந்தி.
காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் ஆலய நந்தி: இந்த ஆலயத்தின் முகப்பில் உள்ள நந்தியும் மண்டபமும் ஒரு சேர மிக அழகு. இந்த நந்தியைப் பார்த்தாலே பரவசம் ஏற்படும்.
நஞ்சனகூடு நந்தி: இந்த பிரமாண்டமான நந்தி கலைநயத்துக்கு ஓர் எடுத்துக்காட்டு. நஞ்சன்கூடு ஆலயத்தின் உள்ளே நுழையும்போது நம்மை நந்தி பார்ப்பதுபோல் திசை மாறி அமைந்திருப்பது வித்தியாசமானது.
அதிகார நந்தி: எப்போதும் அமர்ந்தவாறே கம்பீரமாகத் தரிசனமளிக்கும் நந்தி, திருவாரூர் தியாகேசர் சன்னதியில், சுந்தரருக்காகப் பரவை நாச்சியாரிடம் தூது செல்ல அவசரமாகப் போகும் ஈசனை ஆச்சரியமுடன் பார்த்தவாறு எழுந்து நின்று கிளம்பும் நிலையில் காட்சியளிக்கிறார். ஏறக்குறைய இதே நிலையில் வடமாநிலம் உ.பி.யில் தென்படுகிறார் என்பதும் விசேஷம்.
பன்னிரு ஜோதிர் லிங்கத் தலங்களுள் ஒன்றான உஜ்ஜயினி மகா காலேஷ்வர் கோவிலுக்கு அருகில் அமைந்துள்ளது குண்டேஷ்வர் மகாதேவ் ஆலயம். கருவறைக்கு முன் காணப்படும் நந்தி தேவர், தொலைவிலிருந்து பார்க்கையில் சாதாரணமாகக் கால்களை மடித்து அமர்ந்திருப்பதாகவே தோன்றும். ஆனால், சற்று அருகில் சென்று உற்று நோக்கினால் உண்மையில் அவர் எழுந்து நிற்கும் நிலையில் தென்படுவதைக் கண்டு ரசிக்கலாம்! இவரையும் லிங்கத் திருமேனியில் விளங்கும் குண்டேஸ்வரரையும் ஒருசேரத் தரிசித்தால் செய்த பாவங்கள் எல்லாம் தொலைந்து போகும் என்பது நம்பிக்கை. சுங்க வம்சத்து அரசர்களால் நிர்மாணிக்கப்பட்டதாகும் இக்கோவில். இதற்கு அருகில்தான் பகவான் ஸ்ரீகிருஷ்ணரும், அவரது தமையன் பலராமனும் குருகுல வாசம் செய்த சாந்தீபனி மகரிஷியின் ஆசிரமம் உள்ளது.
- ஒரு முறை கிருஷ்ணரிடம் யாருக்கு அன்பு அதிகம் என்பதை, சோதித்துப் பார்க்க ருக்மணியும், சத்திய பாமாவும் விரும்பினர்.
- சத்திய பாமா தன்னிடம் இருந்த நகைகள் மொத்தத்தையும் ஒரு தட்டில் வைத்தாள்.
கிருஷ்ணர் முதலில் ருக்மணியை திருமணம் செய்தார். பின்னர் சத்திய பாமாவை மணந்து கொண்டார்.
ஒரு முறை கிருஷ்ணரிடம் யாருக்கு அன்பு அதிகம் என்பதை, சோதித்துப் பார்க்க ருக்மணியும், சத்திய பாமாவும் விரும்பினர். தங்களுடைய விருப்பத்தை கிருஷ்ணரிடம் தெரிவித்தனர்.
கிருஷ்ணரும் அதற்குச் சம்மதித்தார். அங்கே ஒரு துலாபாரம் (தராசு) கொண்டு வரப்பட்டது. கிருஷ்ணர் அதில் அமர்ந்து, ஏதும் அறியாதவர் போல் நடப்பதை அமைதியாகப் பார்த்துக்கொண்டு இருந்தார். முதலில் சத்திய பாமா தன்னிடம் இருந்த நகைகள் மொத்தத்தையும் ஒரு தட்டில் வைத்தாள். ஆனால் கண்ணன் அமர்ந்திருந்த தட்டில் அசைவே இல்லை.
தனது முயற்சியில் சற்றும் தளராது சத்தியபாமா மேலும் தனது கழுத்தில், காதில், உடலில் அணிந்திருந்த எல்லா நகைகளையும் எடுத்து தராசில் வைத்தாள். அப்போதும் நகைகள் வைக்கப்பட்ட தட்டு கீழே வரவில்லை. சத்தியபாமா வெட்கத்தால் தலை குனிந்தாள்.
அடுத்து ருக்மணி, தராசின் அருகில் வந்து கிருஷ்ணரைப் பிரார்த்தித்து ஒரு துளசி இலையில் கிருஷ்ணரின் நாமத்தை எழுதி, தராசின் நகைகள் இருந்த தட்டில் வைத்தாள். என்ன ஆச்சரியம்! அது கிருஷ்ணனுடைய எடைக்குச் சமமாக நின்றது.
இறைவனுக்கும் அவனது திருநாமத்துக்கும் எவ்வித வேறுபாடும் கிடையாது. பக்தியுடன் அவன் நாமத்தைச் சொல்லி ஒரு துளசி இலையைச் சமர்ப்பித்தாலும் பகவான் கிருஷ்ணன் அதை ஏற்றுக்கொள்வார்.
- தினம் ஒரு வேடமிட்டு தெரிந்தவர்கள் வீடுகளுக்கு கொலு பார்க்க வாருங்கள் என அழைப்பு விடுக்க அனுப்புவார்கள்.
- அம்பிகையை முதல் மூன்று நாட்கள் துர்க்கையாகவும்; அடுத்த மூன்று நாட்கள் லட்சுமியின் அம்சமாகவும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதியாகவும் முப்பெரும் சக்தியரை வழிபடுவார்கள்.
ஒரு வருடம் கெடாத தேங்காய்: நவராத்திரி சமயத்தில் நெமிலி திரிபுரசுந்தரி கோயிலில் கலசத்தில் வைக்கப்படும் தேங்காய் அடுத்த வருடம் வரை கெடாமலிருக்கும். அந்தத் தேங்காயை மறுவருட நவராத்திரியின்போது உடைத்து பக்தர்களுக்கு பிரசாதமாக விநியோகிக்கின்றனர்.
அம்பிகையின் வாகனத்திற்கு தேங்காய் நீர்: மும்பை மும்பாதேவி ஆலயத்தில் ரிஷப வாகனத்தில் அமர்ந்து காட்சி தருகிறாள் அம்பிகை. இங்கே நவராத்திரி ஒன்பது நாட்களும் தேங்காய் உடைத்து அதன் நீரை அம்பிகையின் வாகனத்தில் ஊற்றி விடுகின்றனர். நவராத்திரி நாட்களில் வளர்க்கப்படும் ஹோமத்தின் சாம்பலை புருவத்தில் பூசிக் கொள்கின்றனர்.
ஆண்டுக்கு இருமுறை நவராத்திரி கொண்டாடவேண்டும்: ஆண்டுக்கு இருமுறை நவராத்திரி கொண்டாடவேண்டும் என்று தேவி புராணம் கூறுகிறது. சித்திரையில் வரும் நவராத்திரிக்கு வசந்த நவராத்திரி என்றும், புரட்டாசியில் வரும் நவராத்திரிக்கு சாரதா நவராத்திரிஎன்றும் பெயர்.இவ்விரு காலங்களும் எமனுடைய கோரைப்பற்களுக்குச் சமமாகும். கோடை, குளிர் என பருவகாலம் மாறும்போது நோய்நொடிகள் பரவும். இந்த ஆபத்திலிருந்து மக்களைக் காக்கும்படி தேவியைப் பூஜிக்கவேண்டும் என்பதால் இவ்விழாவை நடத்தினர். ஆனால், கோடையில் நடந்த சித்திரை நவராத்திரி காலப்போக்கில் மறைந்து விட்டது. புரட்டாசி சாரதா நவராத்திரியே இப்போது வழக்கத்தில் உள்ளது.
அம்மன் விரும்பும் நவராத்திரி: நவராத்திரி அம்பாளுக்கு மிகவும் விருப்பமான பண்டிகை. பகலும், இரவுமாக ஒன்பது நாட்கள் பூஜை செய்வது நவராத்திரி விரதம். ஆண்டுக்கு நான்குமுறை நவராத்திரி வந்தாலும் புரட்டாசி அமாவாசைக்குப் பின் வரும் சாரதா நவராத்திரியைத்தான் இமயம் முதல் குமரி வரை கொண்டாடுகிறார்கள். நவராத்திரி விழாவை தமிழகத்தில் பொம்மைக் கொலு என்றும்; வங்கத்தில் துர்க்கா பூஜை எனவும்; வடக்கே ராம் லீலா உற்சவமாகவும், கர்நாடகா, குலசேகரப்பட்டினம், குலுமணாலி, ஜகதல்பூர் தண்டேஸ்வரி ஆலயம் போன்ற இடங்களில் தசரா பண்டிகையாகவும் கொண்டாடுகின்றனர். இவ்விழாக் கொண்டாட்டத்தில் பெண் குழந்தைகளுக்குத்தான் ஏக குஷி. ஏனெனில் அவர்களை தினம் ஒரு வேடமிட்டு தெரிந்தவர்கள் வீடுகளுக்கு கொலு பார்க்க வாருங்கள் என அழைப்பு விடுக்க அனுப்புவார்கள். நவராத்திரி கொண்டாடுவதில் குடும்பத்தில் பெரியவர் முதல் சின்னஞ்சிறுவர்கள் வரை அனைவர் பங்கும் உண்டு. இதனால் ஒற்றுமை, மரியாதை, பக்தி உணர்வு அதிகமாகும். கலைத்திறன், கற்பனைத்திறன், பொறுமை, சுறுசுறுப்பு, கைவேலைத்திறன், பாட்டு, நடனத் திறன்களும் வெளிப்படும். நிவேதனப் பொருட்கள் விதம் விதமாய் செய்வதால் சமையல் கலை போற்றப்படுகிறது. விதவிதமான வேடங்கள் போடும்போது ஒப்பனைத்திறன் ஒளிர்கிறது. இவை அனைத்தினாலும் மன மகிழ்ச்சியும், பாராட்டும் கிடைக்கும். பூஜை மகிமையால் மனை சிறக்கும்; மகாசக்தி அருளால் மங்களம் பெருகும்; நினைத்தது நிறைவேறும். எனவே தான் நவராத்திரி சுபராத்திரி எனப்படுகிறது.
நவராத்திரி பூஜையை தெய்வங்களும், தேவர்களும்கூட செய்து பலன் பெற்றுள்ளனர். நாரதர் அறிவுரைப்படி ராமர் கடைப்பிடித்து ராவணனை அழித்து சீதையை மீட்டு வந்தார். கண்ணபிரான், சியமந்தக மணி காரணமாக அடைந்த அபவாதம் இப்பூஜை செய்ததால் நீங்கியது. பஞ்சபாண்டவர்கள் பாரதப் போரில் வென்றதும் இந்த பூஜை செய்ததால்தான். தீய சக்தி மேலோங்கும்போது காத்திட வேண்டினால் அம்பாள் சண்டிகையாக ஒன்பது கோடி வடிவங்கள் எடுத்து தீமையை அழித்து நன்மை செய்வாள் என தேவி மகாத்மியம் கூறுகிறது. நவராத்திரியில் 9 நாட்களும் பூஜை விரதம் அனுஷ்டிக்க வேண்டும். இயலாதவர்கள் அஷ்டமி நாளில் மட்டுமாவது விரதம் இருந்து பூஜை செய்யலாம். விஜயதசமி தினத்தில் அம்பிகை அசுரர்களை அழித்து வெற்றிவாகை சூடினாள். ஆணவம் - சக்தியாலும், வறுமை-செல்வத்தினாலும், அறியாமை-ஞானத்தினாலும் வெற்றி கொள்ளப்பட்ட தினம் என்பதால் வீரம், செல்வம், கல்விக்கு உரிய தேவியரான துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி என முப்பெரும் தேவியர்க்கும் உரியதாக இதை சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். அன்றைய தினம் புதிதாகத் தொடங்கும் எல்லாக் காரியங்களும் எளிதாக வசமாகும் என்பது ஐதீகம். அன்று அபிராமி அந்தாதியினைப் படிப்பது மிகச் சிறந்த பலன் தரும்.
மூன்று சக்தியை ஒன்றாக வழிபடும் நவராத்திரி: நவராத்திரி நாட்களில் அம்பிகையை வெவ்வேறு வடிவங்களில் அலங்கரித்து வழிபடுவர். அம்பிகையை முதல் மூன்று நாட்கள் துர்க்கையாகவும்; அடுத்த மூன்று நாட்கள் லட்சுமியின் அம்சமாகவும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதியாகவும் முப்பெரும் சக்தியரை வழிபடுவார்கள். நவராத்திரியின் முதல் நாள் தேவியான மகேஸ்வரி பாலா, மது கைடபர் அழிவுக்குக் காரணமான தேவி. இரண்டாம் நாள் வழிபடப்படும் கவுமாரி, குமாரியாகப் போற்றப்படுகிறாள். அவளே ராஜ ராஜேஸ்வரியாகவும் ஆராதிக்கப்படுகிறாள். மூன்றாவது நாளுக்கு உரியவாராகி, கன்யா கல்யாணி என்று அழைக்கப்படுகிறாள். நான்காம் நாளில் அருள்பவள், மகாலட்சுமி. இவள் ரோகிணி என்று அழைக்கப்படுகிறாள். ஐந்தாம் நாள் வைஷ்ணவியாகவும் மோகினியாகவும் அலங்கரிப்பர். ஆறாவது நாளுக்குரிய தேவிவடிவம். இந்திராணி. அன்று சர்ப ராஜ ஆசனத்தில் தேவி அமர்ந்திருக்கும் கோலத்தில் பூஜை செய்வது வழக்கம். ஏழாம் நாள், தேவி மகாசரஸ்வதி, சுமங்கலி என அழைக்கப்படுகிறாள். எட்டாவது நாள் தேவியானவள் நரசிம்மிதருமி. நரசிம்மி வடிவின் சினம் தணிந்த கோலம் இது. அன்று அன்னை அன்பே உருவாக அருள்பாலிக்கிறாள். ஒன்பதாம் நாள் அம்பிகை, சாமுண்டி மாதா, அம்பு, அங்குசம் தரித்த லலிதா பரமேஸ்வரியாக அன்னையை வழிபடுவது வழக்கம்.பத்தாம் நாள் அசுரர்களை அழித்து அம்பிகை பெற்ற வெற்றியைக் குறிக்கும் விஜயதசமி. அன்று அன்னை வெற்றித் திருமகளாக அலங்கரிக்கப்பட்டு ஆராதிக்கப்படுகிறாள். இந்த வடிவங்களில் தேவியைத் தரிசித்து வழிபடுவதால் நவநிதிகளும் பெற்று, நீடுழி வாழ்வர் என்பது ஐதிகம்.
- அலங்கரிக்கப்பட்ட அன்னையின் திருவுருவம் நெய்க்குளத்தில் அதிஅற்புதமாகப் பிரதிபலிக்கும்.
- நவராத்திரி சமயத்தில், குலு பள்ளத்தாக்கிலுள்ள முந்நூறுக்கும் மேற்பட்ட மலை தெய்வங்கள் பக்தர்கள் புடைசூழ ஊர்வலமாக வந்து ரகுநாத் ஜீக்கு மரியாதை செய்வார்கள்.
திருமீயச்சூர் லலிதாம்பிகையின் நெய்க்குள தரிசனம் மிகப் பிரபலமானது. விஜயதசமி அன்று அம்பாள் கருவறை முன் 15 அடி நீளத்திற்கு வாழை இலை போட்டு, அதில் 4 அடி அகலம், 1 1/2 அடி உயரத்திற்கு சர்க்கரைப் பொங்கலைப் பரப்புவர். அதன் நடுவே குளம்போல் அமைத்து அதனை நெய்யினால் நிரப்புவர். அதன் பின்னரே கருவறையின் திரையை விலக்குவர். அலங்கரிக்கப்பட்ட அன்னையின் திருவுருவம் நெய்க்குளத்தில் அதிஅற்புதமாகப் பிரதிபலிக்கும். இந்த நெய்க்குள தரிசனத்தினைக் காண்போருக்கு மறுபிறவியே இல்லை என்பது நம்பிக்கை. முத்தாரம்மன் சமேத ஞான மூர்த்தீஸ்வரர் ஆலய தசரா, கிராமியக் கலை விழாவாகப் புகழ்பெற்றது. குலசையில் தசரா விழா பன்னிரண்டு நாட்கள் கோலாகலமாக நடக்கும். பக்தர்கள் சுமார் ஒருமண்டலம் விரதமிருந்து ஏதேனும் ஒரு தெய்வம்போல் வேடம் அணிந்து சுவாமி ஊர்வலம் வரும்போது கூடவே வருவார்கள். காளி வேடத்தை ஆண்கள் மட்டுமே புனைவார்கள். ஊர்வலத்தில் கரகாட்டம், மயிலாட்டம், மேளம், தாளம், தாரை, தப்பட்டை, ஒயிலாட்டம் என கிராமியக் கலைகளும் இடம்பெறும். ஒவ்வொரு வருடமும் இவ்விழா கலை நயத்தோடும் மிகுந்த பக்தியுடனும் சிறப்பாக நடைபெறும்.
இமயமலையில் அமைந்துள்ள குலுமணாலியில் இவ்விழா 10 நாட்கள் நடக்கும். இத்தலத்தில் அருள்புரியும் ரகுநாத் ஜீ தெய்வத்தை ஸ்ரீராமனே தன் கட்டை விரல் அளவில் செய்து கொடுத்திருப்பதாக தல வரலாறு சொல்கிறது. நவராத்திரி சமயத்தில், குலு பள்ளத்தாக்கிலுள்ள முந்நூறுக்கும் மேற்பட்ட மலை தெய்வங்கள் பக்தர்கள் புடைசூழ ஊர்வலமாக வந்து ரகுநாத் ஜீக்கு மரியாதை செய்வார்கள். விதவிதமான கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும். பதினோராம் நாள் அனைவரும் வீடு திரும்புவார்கள். சட்டீஸ்கர் மாநிலத்தில் உள்ளது ஜகதல்பூர். இத்தல நாயகி தண்டேஸ்வரி. இங்கே ஒரு நாள் அல்ல இருநாள் அல்ல எழுபத்தைந்து நாட்கள் தசரா விழாவைக் கொண்டாடுவார்கள். இப்பகுதி பழங்குடியினர் அவரவர் பிரிவுக்கு உட்பட்ட ஆலய தெய்வச் சிலைகளை அலங்கரித்து தண்டேஸ்வரி ஆலயத்திற்கு ஊர்வலமாக எடுத்து வருவார்கள். பின் தண்டேஸ்வரி முன் வைத்து பூஜித்து, மரியாதை செய்வர். அதன்பின் தினமும் கலை நிகழ்ச்சிகள் நடத்துவார்கள். இந்த எழுபத்தைந்து நாட்களும் யாரும் வீட்டில் இருக்க மாட்டார்கள். தண்டேஸ்வரி ஆலய சுற்றுப்புறத்திலேயே தங்கி சமைத்து சாப்பிட்டு கலைநிகழ்ச்சி நடத்தி தூங்கி வெட்ட வெளியிலேயே இருப்பர். எழுபத்தாறாம் நாள்தான் அவரவர் தெய்வங்களுடன் இல்லம் திரும்புவர்.
கோவை பொள்ளாச்சி சாலையில் உள்ள மகாலட்சுமி மந்திர் என்னும் அழகிய ஆலயத்தில் சரஸ்வதி, துர்கா, மகாலட்சுமி ஆகிய மூன்று தேவிகளும் கருவறையில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். இந்த ஆலயத்தில் நவராத்திரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கும். மிகப் பெரிய அளவில் இங்கு கொலு வைக்கப்படுவதுண்டு. தினசரி இந்த கொலுவைக் காண நூற்றுக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். விஜயதசமி அன்று புதிதாக பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் பெற்றோருடன் இங்கு கூடுகின்றனர். அன்று அவர்களுக்கு சரஸ்வதி தேவியின் முன்பாக எழுதத் தொடங்கி வைக்கின்றனர். அன்னையின் முன்புள்ள பளிங்கு மண்டபத்தில் நூற்றுக் கணக்கான குழந்தைகள் இப்படி அமர்ந்து எழுதத் தொடங்குவது நம்மை சிலிர்க்க வைக்கும் காட்சியாகும். பொதுவாக, விஜயதசமி பல நல்ல செயல்களைத் தொடங்கவும் வியாபாரங்களைத் தொடங்கவும் நல்ல நாள். எனவே அன்னையை இந்த நவராத்திரியின் போது பல உருவங்களில் நாம் வழிபடுவதுடன் விஜயதசமியன்றும் வழிபட்டு, பாவம் தொலைத்து நலனும் அருளும் பெறுவோமாக !
வைணவ திருத்தலங்களுள் முதன்மையானதாகப் போற்றப்படும் திருவரங்கத்தில் அரங்க நாயகியாக அருள்பாலிக்கும் தாயார், நவராத்திரி நாட்களில் தினமும் மாலையில் புறப்பாடு கண்டருள்வார். புறப்பாடு ஆகும் முன் சங்கநாதம் ஒலிக்கும். பிராகாரங்களை ஒருமுறை வலம் வந்தபின் கொலு மண்டபத்தில் வீற்றிருந்து பின்னர் இரவு 8.30 மணிவாக்கில் மூலஸ்தானம் எழுந்தருள்வார். அதுவரை நாதஸ்வரக் கச்சேரிகள் நடக்கும். மூலஸ்தானத்துக்கு முன்மண்டபத்தில் அன்னை எழுந்தருளும்போது கோயில் யானை துதிக்கையை உயர்த்தி நமஸ்கரிக்கும். மௌத்ஆர்கனை வாயில் வைத்து ஒலி எழுப்பும். பின்னர் பேஷ்கார் எனப்படும் கோயில் அதிகாரிக்கு தாம்பூலம் கொடுக்கும். இதை வேடிக்கை பார்ப்பதற்காகவே குழந்தைகள், பெரியவர்கள் என்று கூட்டம் வரும். நவராத்திரி ஏழாம் நாள் தாயாரின் திருவடிகள் வெளியில் தெரியும்படி அலங்காரம் செய்யப்பட்டு புறப்பாடு ஆகும். இந்தத் திருவடி சேவையைக் காண பக்தர்கள் ஆலயத்தில் குவிந்துவிடுவார்கள். அந்த ஒரு நாள்தான் தாயாரின் திருவடிகள் தரிசனம் கிடைக்கும்.
ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள திருக்கூடலையாற்றூரில் நர்தன வல்லபேஸ்வரர் கோயிலில் இரண்டு அம்மன் சன்னதிகள் உள்ளன. இவற்றுள் ஞானசக்தி அம்மன் சன்னதியில் குங்குமமும்; பராசக்தி அம்மன் சன்னதியில் விபூதியும் பிரசாதமாகத் தரப்படுவது வித்தியாசமானது.
இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி, ஆதி சக்தி, பராசக்தி, குடிலா சக்தி என ஆறு அம்சங்களையும் ஒருங்கே கொண்டு தேவி அருள்பாலிக்கும் தலங்கள் ஒன்பது. அவை காஞ்சி காமாட்சி, ஸ்ரீசைலம் பிரமராம்பாள் தேவி, கோல்ஹாப்பூர் மகாலக்ஷ்மி, உஜ்ஜயினி காளிகாதேவி, கயா மங்களாதேவி, அலகாபாத் அலோபிதேவி, உத்தரப்பிரதேசம் விந்தியவாசினி, நேபாளம் குஹ்யகேஸ்வரி, வாரணாசி விசாலாட்சி.
சக்கரப்பள்ளி, அரிமங்கை, சூலமங்கலம், நந்தி மங்கலம், பசுபதிமங்கலம், தாழை மங்கலம், புள்ளமங்கலம் ஆகிய ஏழு ஊர்களையும் சப்தமங்கலத் தலங்கள் என்று கூறுவர். இத்தலங்களில் முறையே பிராமி, மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வாராகி, இந்திராணி, சாமுண்டியாக அம்பிகை பூஜை செய்ததாகக் கூறுகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் இருந்து உளுந்தூர்பேட்டை செல்லும் சாலையில் சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது காட்டுச் செல்லூர் என்னும் கிராமம். இங்கே உள்ள வேம்பி அம்மன் கோயிலில் சுமார் 1200 ஆண்டுகள் பழைமைவாய்ந்த துர்க்கை அம்மனின் திருமேனி உள்ளது. நின்ற கோலத்தில் காட்சி அளிக்கும் இந்த துர்க்கை அம்மன் சிற்பம் நான்கு திருக்கரங்களுடன் காணப்படுகிறது. மேல் இருகரங்களில் பிரயோகச் சக்கரமும், சங்கும், கீழ் வலக்கரத்தில் ஞான முத்திரையும் திகழ, கீழ் இடக்கரத்தை இடுப்பில் வைத்து அற்புத தரிசனம் தருகிறாள். இக்கரத்தில் கிளி ஒன்று ஏறிச் செல்வது போல் அமைந்திருப்பது சிறப்பாகும். விஜயதசமி அன்று அம்பு போடும் திருவிழா இங்கு மிக விசேஷம்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்