search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மரங்கள் வெட்டி சாய்ப்பு"

    • வக்கீல் சுப்பிரமணி என்பவரது தோட்டத்தில் இருந்த 200 பாக்கு மரங்கள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட வாழை மரங்களையும் மர்ம நபர்கள் வெட்டி சாய்த்தனர்.
    • பாக்கு மரம் மற்றும் வாழை மரங்கள் வெட்டப்பட்ட பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் பகுதியில் கடந்த மார்ச் மாதம் முதல் தொடர்ந்து வீடுகள், வாகனங்களுக்கு தீ வைப்பு, வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல், விவசாய பயிர்கள் வெட்டி சாய்க்கப்பட்ட சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. இதனை தடுக்கவும் குற்றவாளிகளை பிடிக்கவும் அப்பகுதியில் 1000-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் துப்பாக்கி ஏந்திய போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    இதனிடையே மீண்டும் ஜேடர்பாளையம் அருகே உள்ள கொத்தமங்கலம் பகுதியில் தர்மலிங்கம் (வயது 56), நல்லசிவம் (62), புலவர் சுப்பிரமணி, வக்கீல் சுப்பிரமணி (68) ஆகியோரது தோட்டத்தில் இருந்த சுமார் 2000-க்கும் மேற்பட்ட வாழை மரங்களை மர்ம நபர்கள் நேற்று நள்ளிரவு வெட்டி சாய்த்தனர்.

    மேலும் வக்கீல் சுப்பிரமணி என்பவரது தோட்டத்தில் இருந்த 200 பாக்கு மரங்கள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட வாழை மரங்களையும் மர்ம நபர்கள் வெட்டி சாய்த்தனர். இதனால் அந்த பகுதிகளில் பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.

    இது குறித்து தகவல் அறிந்த நாமக்கல் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜூ தலைமையிலான போலீசார் வாழை மரங்கள் மற்றும் பாக்கு மரங்கள் வெட்டப்பட்ட தோட்டத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பாக்கு மரம் மற்றும் வாழை மரங்கள் வெட்டப்பட்ட பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

    வாழை மரங்கள் மற்றும் பாக்கு மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் உள்ள மக்களிடையே பெரும் அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது. ஜேடர்பாளையம் பகுதியில் தொடரும் இச்சம்பவத்திற்கு போலீசார் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வடகரையாத்தூர் ஊராட்சி வி.கரப்பாளையம் பகுதியில் கடந்த மார்ச் 11-ந் தேதி ஆடு மேய்க்க சென்ற பட்டதாரி இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார்.
    • தொடர்ந்து ஜேடர்பாளையம் பகுதியில் உள்ள வெல்ல ஆலை கொட்டகைகள், டிராக்டர்கள், குடிசைகள், பள்ளி பேருந்து போன்ற வற்றிற்கு தீ வைப்பு, ஏரி தண்ணீரில் விஷம் கலப்பது போன்ற சம்பவங்கள் நடைபெற்றது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் அருகே வடகரையாத்தூர் ஊராட்சி வி.கரப்பாளையம் பகுதியில் கடந்த மார்ச் 11-ந் தேதி ஆடு மேய்க்க சென்ற பட்டதாரி இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார்.

    தொடர்ந்து ஜேடர்பாளை யம் பகுதியில் உள்ள வெல்ல ஆலை கொட்டகைகள், டிராக்டர்கள், குடிசைகள், பள்ளி பேருந்து போன்ற வற்றிற்கு தீ வைப்பு, ஏரி தண்ணீரில் விஷம் கலப்பது போன்ற சம்பவங்கள் நடைபெற்றது.

    கடந்த 13-ம் தேதி வி.புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த முத்துசாமி என்பவருக்கு சொந்தமான வெல்லம் ஆலை கொட்டகையில் தூங்கி கொண்டிருந்த வட மாநில தொழிலாளர்கள் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர். தொடர் அசம்பாவித சம்பவங்களால், ஜேடர்பாளையம் பகுதியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 1000-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு இரவு, பகலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த சூழலில், நேற்று நள்ளிரவு முத்துசாமியின் மருமகன் ஜேடர்பாளையம் பகுதியைச் சேர்ந்த முருகேசனுக்கு சொந்தமான வாழை தோப்பில் புகுந்த மர்ம நபர்கள், அங்கிருந்த சுமார் 600-க்கும் மேற்பட்ட வாழை, பாக்கு மரங்களை வெட்டி சாய்த்தனர்.

    அதிகாலை தோட்டத் திற்கு தண்ணீர் பாய்ச்ச வந்த முருகேசன் மற்றும் அவரது மனைவி செல்வி ஆகியோர் மரங்கள் வெட்டப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனடியாக இதுகுறித்து ஜேடர்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் தலைமையிலான போலீசார், சம்பவ இடத்தை பார்வையிட்டு தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    சவால் விடுக்கும் மர்ம கும்பல்

    ஜேடர்பாளையம் சுற்றுவட்டார பகுதி முழுவதும் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் இரும்பு தடுப்பு ஏற்படுத்தி வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும், எவ்வித சலனமும் இன்றி மர்ம நபர்கள் தைரியமாக அடுத்தடுத்து வன்முறை சம்பவங்களை நிகழ்த்தி போலீசாருக்கு சவால் விடுத்து வருகின்றனர்.

    பதட்டம்

    இதனிடையே அடுத்து என்ன நடக்கும் என்ற அச்சத்துடனே இப்பகுதி பொதுமக்கள் உள்ளனர். தொடர்ந்து இப்பகுதியில் பதட்டம் நிலவுவதால் 144 தடை உத்தரவு பிறப்பிக்க போலீஸ் அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

    சமூக விரோத கும்பல்களை உடனடியாக கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×