search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீண்டும் சேலம்"

    • சந்தோஷை சரமாரியாக கத்தியால் குத்தி படுகொலை செய்து விட்டு தப்பியது.
    • சரணடைந்த இருவரையும் போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.

    ஈரோடு,

    ஈரோடு வீரப்பன்சத்திரம் ஜான்சி நகரை சேர்ந்தவர் சந்தோஷ் என்கிற சம்திங் சந்தோஷ் (29). இவர் மீது கொலை முயற்சி, மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    இந்நிலையில் கடந்த மாதம் 30-ந் தேதி ஈரோடு சூளை அருகே மதுபான பாரில் மது அருந்தி விட்டு வெளியே வந்தபோது அங்கு வந்த ஒரு கும்பல் சந்தோஷை சரமாரியாக கத்தியால் குத்தி படுகொலை செய்து விட்டு தப்பியது.

    இந்த படுகொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட வீரப்பன்சத்திரம் போலீசார் இதில் தொடர்புடைய ரியாஜ் சித்திக்(34), மனோஜ் குமார்(37), சதீஷ்குமார்(30) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

    இதனிடையே இந்த சம்பவத்தின் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட முகமது அலி ஜின்னா (38) மற்றும் மணிகண்டன் (32) ஆகிய 2 பேர் சில தினங்களுக்கு முன்பாக குமாரபாளையம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

    இந்நிலையில் சரணடைந்த இருவரையும் போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகின. இது குறித்து போலீசார் கூறியதாவது:-

    கொலை செய்யப்பட்ட சந்தோஷை தனியார் நிதிநிறுவனம் ஒன்று, கடனில் வாகனம் வாங்கி விட்டு தவணை செலுத்தாதவர்களிடம் வாகனங்களை பறிமுதல் செய்யும் பணியில் ஈடுபடுத்தி உள்ளது. அவ்வாறு குமரன் என்பவரின் காரை பறிமுதல் செய்ய சந்தோஷ் சென்ற போது, குமரன் தனது காரை காப்பாற்றி கொள்ள அம்ஜத்கான் என்பவர் மூலம் முகமது அலி ஜின்னாவின் உதவியை நாடி உள்ளார்.

    எனினும் அதையும் மீறி சந்தோஷ், குமரனின் காரை பறிமுதல் செய்து நிதிநிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளார். இதனால் சந்தோஷ் மற்றும் ஜின்னா இடையே, யார் பெரிய ஆள் என்பதில் போட்டியும் தகராறும் ஏற்பட்டு கொலையில் முடிந்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இந்நிலையில் போலீஸ் காவல் முடிவடைந்ததை அடுத்து முகமது அலி ஜின்னா, மணிகண்டன் ஆகியோர் மீண்டும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்  இந்த வழக்கில் தொடர்புடைய அம்ஜத்கானை போலீசார் தேடி வருகின்றனர்.

    ×