search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்திய மருத்துவ சங்கம்"

    • சந்தீப் கோஷ் பல்வேறு நிதிமுறைகேடுகளில் ஈடுபட்டதாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.
    • சந்தீப் கோஷிடம் இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் அவர் அளித்த பதில் திருப்தி அளிக்கவில்லை.

    கொல்கத்தா:

    கொல்கத்தாவில் பெண் பயிற்சி டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    கடந்த 9-ந்தேதி அங்குள்ள ஆர்.ஜி.கர். அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கருத்தரங்கில் இந்த சம்பவம் நடைபெற்றது. கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவை தொடர்ந்து சி.பி.ஐ. இந்த வழக்கை விசாரித்து வருகிறது.

    பயிற்சி டாக்டரின் கொலையை தற்கொலையாக மாற்ற முயன்றதாக ஆர்.ஜி.கர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வராக இருந்த சந்தீப் கோஷ் மீது குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக அவரிடம் சி.பி.ஐ. கடந்த 16-ந்தேதி முதல் விசாரணை மேற் கொண்டு வருகிறது. நாள்தோறும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 100 மணி நேரம் அவரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி உள்ளனர்.

    சந்தீப் கோஷ் பல்வேறு நிதிமுறைகேடுகளில் ஈடுபட்டதாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. ஆஸ்பத்திரிக்கு தேவையான உபகரணங்கள் வாங்கியது உள்ளிட்ட பல வகைகளில் அவர் முறைகேடு செய்தது தெரிய வந்தது.

    இந்த நிதி முறைகேடு தொடர்பாக சந்தீப் கோஷ் வீடு மற்றும் அலுவலகங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தினார்கள். சி.பி.ஐ.யின் ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் 7 பேர் காலை 8 மணி முதல் சோதனையை தொடங்கினார்கள். பெலியா கட்டாவில் உள்ள அவரது வீட்டில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    மத்திய பாதுகாப்பு படையினருடன் சி.பி.ஐ. குழுவினர் காலை 6 மணிக்கே அவரது வீட்டிற்கு சென்று விட்டனர். ஒன்றரை மணி நேரத்துக்கு மேலாக காத்திருந்த பிறகு அவர்கள் உள்ளே சென்று சோதனை நடத்தினார்கள்.

    மொத்தம் 14 இடங்களில் அதிரடி சோதனை மேற் கொள்ளப்பட்டது. மருத்துவ மனையில் உள்ள அவரது அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டது.

    அதோடு கல்வி வளாகத்தில் உள்ள உணவகத்துக்கு சென்றும் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை செய்தனர். அவருக்கு நெருக்கமானவர்களிடமும் சோதனை நடத்தப்பட்டது .

    சந்தீப் கோஷிடம் இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் அவர் அளித்த பதில் திருப்தி அளிக்கவில்லை. இதைத் தொடர்ந்து அவரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக சி.பி.ஐ. தரப்பில் கூறும்போது, பெண் பயிற்சி டாக்டர் கொலையை மறைக்க சந்தீப் கோஷ் தீவிரமாக முயற்சி செய்துள்ளார். இதனால் அவரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

    பெண் பயிற்சி டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான சஞ்சய் ராயிடமும் உண்மை கண்டறியும் சோதனையை சி.பி.ஐ. மேற் கொண்டது. அப்போது அவரிடம் பல கேள்விகள் எழுப்பப்பட்டது.

    பெண் டாக்டரை பாலியல் பலாத்காரம் செய்தது யார்? அவரை கொலை செய்தது யார்? கல்லூரி முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷை முன்கூட்டியே தெரியுமா? எத்தனை பேர் மருத்துவமனை கருத்தரங்கு கூடத்தில் இருந்தீர்கள் என்பது உட்பட 20 கேள்விகள் கேட்கப்பட்டது. இதற்கு சஞ்சய் ராய் அளித்த பதில்கள் முழுமையாக பதிவு செய்யப்பட்டன.

    4 டாக்டர்கள் உள்பட மேலும் 5 பேரிடமும் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது.

    • அனைத்து மாநிலங்களிலும் டாக்டர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
    • ஜிப்மர் டாக்டர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

    புதுச்சேரி:

    கொல்கத்தா மருத்துவமனையில் பயிற்சி பெண் டாக்டர் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து அனைத்து மாநிலங்களிலும் டாக்டர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

    புதுவை ஜிப்மரில் பணிபுரியும் டாக்டர்கள் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து கடந்த 13-ந் தேதி முதல் தொடர்ந்து 10 நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர். டாக்டர்களின் இந்த தொடர் போராட்டத்தால் வெளிபுற சிகிச்சை அளிக்கப்படவில்லை இதனால் நோயாளிகள் பெரும் அவதியடைந்தனர்.

    இந்த நிலையில் போராட்டத்தை விலக்கிக்கொள்ளும்படி சுப்ரீம்கோர்ட்டு டாக்டர்களுக்கு அறிவுறுத்தியது. இதனால் ஜிப்மர் டாக்டர்கள் நேற்று மாலை போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

    இதையடுத்து ஜிப்மரில் உள்ள அனைத்து புறநோயாளிகள் பிரிவு, அறுவை சிகிச்சை அரங்குகள், ஆய்வகங்கள் மற்றும் சி.டி., எம்.ஆர்., ஸ்கேன் சேவைகள் அனைத்து சேவை பிரிவுகளும் முழுமையாக இயங்கும் என, ஜிப்மர் இயக்குனர் ராகேஷ் அகர்வால் அறிவித்தார்.

    இதன்படி இன்று (வெள்ளிக்கிழமை) டாக்டர்கள் பணிக்கு திரும்பினர். ஜிப்மரில் அனைத்து மருத்துவ சேவைகளும் வழக்கம் போல இயங்கின.

    • மருத்துவம் படிக்கும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.
    • மருத்துவம் படிக்கும் மாணவிகளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கடந்த சில தினங்களுக்கு முன்பு கொல்கத்தாவில் பெண் பயிற்சி டாக்டர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது மிகவும் வேதனைக்குரியது. இச்சம்பவம் மருத்துவம் படிக்கும் மாணவிகள் மத்தியில் ஒரு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளதால் மருத்துவம் படிக்கும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.

    பெண்கள் படிக்கும் கல்லூரிகளில் பாதுகாப்பை அதிகப்படுத்த வேண்டும். மத்திய-மாநில அரசுகள் இது போன்ற ஒரு சம்பவம் இனி நடைபெறாமல் இருக்க உறுதியான நடவடிக்கைகளில் ஈடுபட்டு, மருத்துவம் படிக்கும் மாணவிகளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • அரசு மருத்துவமனை பணியாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு போராட்டம் நடத்தினார்கள்.
    • மருத்துவமனையில் பாதுகாப்பு வேண்டும் என கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருவள்ளூர்:

    மேற்குவங்காள மாநிலம் கொல்கத்தாவில் மருத்துவக் கல்லூரியில் இரவு பணியில் இருந்த முதுகலை 2ம் ஆண்டு மருத்துவம் படித்து வந்த பெண்பயிற்சி டாக்டர் ஒருவர் கல்லூரி வளாகத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

    பெண் பயிற்சி மருத்துவர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து அகில இந்திய மருத்துவ சங்கங்களுடன் இணைந்து நாடு முழுவதும் டாக்டர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    இந்நிலையில் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தமிழ்நாடு அரசு மருத்துவர் சங்க தலைவர் பிரபு சங்கர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. டாக்டர்கள் ஜெகதீசன், விஜயராஜ், ராஜ்குமார் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் கோபாலகிருஷ்ணன், பிரேம்குமார், மற்றும் மருத்துவ பேராசிரியர்கள், மருத்துவ கல்லூரி மாணவ - மாணவிகள், செவிலியர்கள் மற்றும் அரசு மருத்துவமனை பணியாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு போராட்டம் நடத்தினார்கள். பெண் பயிற்சி மருத்துவர் கொலைக்கு நியாயம் வேண்டியும், மருத்துவர்கள் மீதான தாக்குதலை கண்டித்தும், மருத்துவமனையில் பாதுகாப்பு வேண்டும் என கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    • அகில இந்திய மருத்துவ சங்கம் இன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளது.
    • நீண்ட வரிசையில் வெகு நேரம் நோயாளிகள் காத்து நின்று சிகிச்சை பெற்று சென்றனர்.

    சேலம்:

    மேற்கு வங்காள தலைநகர் கோல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர். அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் பணியில் இருந்த 31 வயது பயிற்சி பெண் டாக்டர் ஒருவர் கடந்த வாரம் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இதில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய கேட்டு நாடு முழுவதும் டாக்டர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் அகில இந்திய மருத்துவ சங்கம் இன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளது. அதன் படி நாடு முழுவதும் டாக்டர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    சேலம் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் செயல்படும் 200-க்கும் மேற்பட்ட தனியார் ஆஸ்பத்திரிகளில் இன்று காலை 6 மணி முதல் வெளி நோயாளிகள் பிரிவு மூடப்பட்டது.

    அவசர சிகிச்சைகள் மட்டும் மேற்கொள்ளப்பட்டன. இதனால் பெரும்பாலான ஆஸ்பத்திரிகள் வெளி நோயாளிகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. வெளி நோயாளிகள் பிரிவு மூடப்பட்டதால் காய்ச்சல் தலைவலி, வயிற்று வலி உள்பட சிகிச்சைக்கு வந்த நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் கடும் அவதிப்பட்டனர். இதையடுத்து அவர்கள் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்றனர். இதனால் அரசு ஆஸ்பத்திரியில் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.

    இந்த நிலையில் இன்று சேலம் அரசு தலைமை மருத்துவமனையில் காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை டாக்டர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வெளி நோயாளிகள் பிரிவில் அதிக நேரம் பயணிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. நீண்ட வரிசையில் வெகு நேரம் நோயாளிகள் காத்து நின்று சிகிச்சை பெற்று சென்றனர்.

    இதேபோல் நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முன்பு இந்திய மருத்துவ சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்ட செயலாளர் சக்திவேல் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கொல்கத்தா மருத்துவ கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்தும், சம்பவத்தில் தொடர்புடையவர்களை தூக்கிலிட வேண்டும். பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.தொடர்ந்து மருத்துவமனை யில் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் 60 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் புற நோயாளிகள் சிகிச்சை பிரிவு மூடப்பட்டுள்ளது. அவசர சிகிச்சை மட்டும் நடைபெறுகிறது.

    • இந்திய மருத்துவ சங்கம் சார்பில் இன்று நாடு தழுவிய ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • அரசு மருத்துவமனைகளில் வழக்கத்தை விட நோயாளிகளின் கூட்டம் அதிகமாக இருந்தது.

    ஈரோடு:

    மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் பயிற்சி பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் டாக்டர்கள், மாணவர்கள் பல்வேறு அமைப்பினர் மருத்துவர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் இன்று நாடு தழுவிய ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர்.

    இதன்படி ஈரோடு மாவட்டத்தில் கொல்கத்தா பயிற்சி பெண் டாக்டர் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் நீதி வேண்டியும், மருத்துவர்களுக்கு பணியிடங்களில் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் இன்று காலை 6 மணி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் மட்டும் 400 மருத்துவமனைகள், 2 ஆயிரம் மருத்துவர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளனர்.

    இது தொடர்பாக தனியார் மருத்துவமனை முன்பு போர்டும் வைக்கப்பட்டுள்ளது. அதில் இன்று தீவிர சிகிச்சை பிரிவு தவிர மற்ற அனைத்து வகையான மருத்துவ சேவைகளும் நடைபெறவில்லை.

    இதனால் இன்று அரசு மருத்துவமனைகளில் வழக்கத்தை விட நோயாளிகளின் கூட்டம் அதிகமாக இருந்தது. அரசு மருத்துவ மனையில் பணிபுரியும் மருத்துவர்கள் பெண் பயிற்சி டாக்டர் படுகொலை சம்பவத்தை கண்டித்து இன்று கருப்பு பேட்ஜ் அணிந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு பணி புரிந்து வருகின்றனர்.

    • பயிற்சி டாக்டர்கள் மற்றும் மாணவர்கள் பந்தல் அமைத்து தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • மற்ற உள் பிரிவு நோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்கவில்லை.

    வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இளங்கலை, முதுகலை பயிற்சி டாக்டர்கள் இன்று 2-வது நாளாக டாக்டர்கள் , பயிற்சி டாக்டர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் கருப்பு பேட்ஜ் அணிந்தபடி பணிக்கு வந்தனர்.

    பேராசிரியர்கள், துறை தலைவர்கள் மற்றும் டாக்டர்கள் புற நோயாளிகள் பிரிவு கட்டிடம் முன்பு கண்டன கோஷங்களை எழுப்பி சுமார் 1 மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பயிற்சி டாக்டர்கள் மற்றும் மாணவர்கள் பந்தல் அமைத்து தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். புறநோயாளிகள் பிரிவு முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதோடு, கையில் பதாகைகளை ஏந்தி கோஷமிட்டு தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

    விபத்து மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சை பிரிவு உள்ளிட்ட அவசர சிகிச்சை பிரிவுகள் மற்றும் வழக்கம்போல் செயல்பட்டது.

    புறநோயாளிகள் பிரிவு, நோயாளிகள் சிகிச்சை பிரிவு உள்ளிட்ட பிரிவுகளில் டாக்டர்கள் இல்லாததால் நோயாளிகள் கடும் அவதிபட்டனர்.

    ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவில் உள்ள மாவட்ட தலைமை மருத்துவமனையில் பணியாற்றும் டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் , அனைத்து அரசு மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில இணை செயலாளர் டாக்டர். கீர்த்தி தலைமையில் இன்று கருப்பு பேட்ஜ் அணிந்து கோஷமிட்டு தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

    தொடர்ந்து பணியில் ஈடுபடுவதாக தெரிவித்தனர்.

    திருவண்ணாமலை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டாக்டர்கள் இன்று காலை 9 மணி முதல் 10 மணி வரை ஒரு மணி நேரம் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர் .

    அவசர சிகிச்சை பிரிவில் உள்ள நோயாளிகளுக்கு மட்டும் மருத்துவம் பார்த்தனர். மற்ற உள் பிரிவு நோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்கவில்லை. இதனால் நோயாளிகள் அவதி அடைந்தனர்.

    • டெல்லியில் இருந்து கேரளா வரை உள்ள மருத்துவமனைகள் மற்றும் கல்லூரிகளில் போராட்டம் நடந்து வருகிறது
    • ஆர்.ஜி மருத்துவமனை வளாகத்தை சேதப்படுத்தியவர்களை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

    பெண் டாக்டர் கொலை வழக்கில் இந்திய மருத்துவ சங்கம் 5 நிபந்தனைகள்

    மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. குற்றத்தில் ஈடுபட்ட மருத்துவமனை ஊழியர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் வழக்கு சிபிஐ வசம் சென்றுள்ளது. உயிரிழந்த சக மருத்துவருக்கு நீதி கேட்டு நாடு முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது.

    இன்றைய தினம் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை இந்திய மருத்தவ சங்கம் [IMA]அறிவித்துள்ளது. இதன்படி எமெர்ஜென்சி சேவைகள் தவிர்த்து வெளி நோயாளுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படாது. டெல்லியில் இருந்து கேரளா வரை உள்ள மருத்துவமனைகள் மற்றும் கல்லூரிகளில் இந்த போராட்டமானது நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த போராட்டத்தின் நோக்கம் குறித்தும், மருத்துவர்களின் பாதுகாப்பை வருங்காலங்களில் உறுதி செய்யவும் ஐந்து நிபந்தனைகளை இந்திய மருத்துவ சங்கம் முன்மொழிந்துள்ளது

    இந்திய மருத்துவ சங்கத்தின் 5 நிபந்தனைகள் 

    ◆தற்போது நடந்துபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க, 'மத்திய சுகாதாரத்துறை பாதுகாப்பு சட்டத்தில்' விதிமுறைகள் வகுக்கப்பட வேண்டும்

    ◆இந்த வழக்கை குறுகிய காலத்தில் விசாரித்து முடிக்க வேண்டும். கடந்த ஆகஸ்ட் 14 அன்று அத்துமீறி நுழைந்து ஆர்.ஜி மருத்துவமனை வளாகத்தை சேதப்படுத்தியவர்களை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

    ◆மருத்துவமனை வளாகங்களைப் பாதுகாக்கப்பட மண்டலங்களாக அறிவிக்க வேண்டும். நாட்டில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் விமான நிலையங்களில் இருக்கும் அளவுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும். அதற்குக் குறைவான பாதுகாப்பை ஏற்க முடியாது. சிசிடிவி கண்கணிப்பை அதிகரித்து, பாதுகாப்பு அதிகாரிகளை நியமிக்க வேண்டும்.

    ◆உயிரிழந்த பெண் மருத்துவர் வேலை செய்து வந்த 36 மணி நேர பணி ஷிப்ட் உட்பட, ரெசிடெண்ட் மருத்துவர்களின் பணி மற்றும் பாதுகாப்பு சூழலை மேம்படுத்தும் வகையில் முழுமையான மறுசீரமைப்பு செய்யப்பட வேண்டும் 

    ◆பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இழக்கப்பட்ட கொடுமைக்குக்கு அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட 5 நிபந்தனைகளை முன்மொழிந்துள்ளது.

    • பதஞ்சலி நிறுவனத்தின் விளம்பரங்கள் குறித்து இந்திய மருத்துவ சங்கம் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தது.
    • தவறான விளம்பரங்களை வெளியிட்டதற்காக பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்தது.

    புதுடெல்லி:

    ஆயுர்வேத பல்பொடி, சோப்பு, எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை பதஞ்சலி நிறுவனம் தயாரித்து விற்பனை செய்கிறது. நவீன மருந்துகளுக்கு எதிராக பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம் விளம்பரம் செய்து வந்தது.

    இதற்கிடையே, பதஞ்சலி நிறுவனத்தின் தவறான விளம்பரங்கள் குறித்து இந்திய மருத்துவ சங்கம் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. அந்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது அலோபதி மருந்துகளை குறிவைத்து தவறான விளம்பரங்களை வெளியிட்டதற்காக பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம் தெரிவித்தது.

    தவறான விளம்பரங்கள் நீடித்தால் ரூ.1 கோடி அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தது.

    இந்நிலையில், சுப்ரீம் கோர்ட் உத்தரவை மீறி பதஞ்சலி நிறுவனம் அலோபதி மருந்துகளுக்கு எதிராக விளம்பரங்களை வெளியிடுவதாக இந்திய மருத்துவ சங்கம் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

    இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் பதஞ்சலி நிறுவனத்துக்கு மீண்டும் எச்சரிக்கை விடுத்ததுடன், பதஞ்சலி நிறுவனங்களுக்கு எதிராக கடுமையான உத்தரவுகளை பிறப்பிக்க நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    • ஷஹானா திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் முதுகலை இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
    • தற்கொலைக்கு தூண்டுதல், வரதட்சணை தடை சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டு ரூவைசை போலீசார் கைது செய்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள வெஞ்ஞாரமூடு பகுதியை சேர்ந்தவர் அப்துல் அசீஸ் என்பவரின் மகள் ஷஹானா (வயது26). எம்.பி.பி.எஸ். படித்துள்ள இவர், திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் முதுகலை இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், தான் தங்கியிருந்த குடியிருப்பில் கடந்த 4-ந்தேதி மயக்க ஊசி போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

    அவருடைய தற்கொலைக்கு அவரது நண்பரான டாக்டர் ரூவைஸ் தான் காரணம் என்பது தெரியவந்தது. இருவருக்கும் திருமணம் பேசி முடிக்கப்பட்ட நிலையில், அவர்கள் கேட்ட அதிக வரதட்சணையை தர முன்வராத காரணத்தால் திருமணம் செய்துகொள்ள ரூவைஸ் மறுத்திருக்கிறார். இதில் வேதனையடைந்த மாணவி ஷஹானா தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து தற்கொலைக்கு தூண்டுதல், வரதட்சணை தடை சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டு ரூவைசை போலீசார் கைது செய்தனர். பின்பு அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்நிலையில் முதன்மை உறுப்பினர் பதவியில் இருந்து ரூவைசை இந்திய மருத்துவ சங்கம் சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டுள்ளது.

    • 100 கிராமங்களை தத்தெடுப்பது இந்திய மருத்துவ சங்கத்தின் கனவு திட்டமாகும்.
    • விரைவில் மீதி 50 கிராமங்கள் தத்தெடுக்கப்பட உள்ளது.

    திருப்பூர் :

    இந்திய மருத்துவ சங்க(ஐ.எம்.ஏ.) அவினாசி டெக்ஸ்சிட்டி கிளை தொடக்க விழா மற்றும் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு, இந்திய மருத்துவ சங்க சி.ஜி.பி. பிரிவு மற்றும் ஏ.எம்.எஸ். பிரிவு தொடக்க விழா, டாக்டர்கள் தின கொண்டாட்டம் ஆகிய ஐம்பெரும் விழா திருப்பூர் காங்கயம் ரோட்டில் உள்ள காயத்ரி ஓட்டலில் நடந்தது. ஐ.எம்.ஏ., டி.என்.எஸ்.பி. தலைவர் டாக்டர் டி.செந்தமிழ் பாரி தலைமை தாங்கினார். ஐ.எம்.ஏ.அவினாசி டெக்ஸ்சிட்டி கிளை தலைவர் டாக்டர் மோகன சுந்தரி வரவேற்புரையாற்றி தனது பொறுப்பை புதிய தலைவர் டாக்டர் அஜாஸ் பி.அன்சாரியிடம் ஒப்படைத்தார்.

    டாக்டர் அஜாஸ் பி.அன்சாரி அவினாசி டெக்ஸ்சிட்டி கிளை செயலாளர் டாக்டர் டி.கார்த்திகேயன், பொருளாளர் டாக்டர் கே.சுந்தரமூர்த்தி, துணை தலைவர் டாக்டர் பி.ஹரிவீர விஜயகாந்த், இணை செயலாளர் டாக்டர் பி.நல்லசிவம், மத்திய கவுன்சில் உறுப்பினர் டாக்டர் முமகது முபாரக் அலி, மாநில கவுன்சில் உறுப்பினர் டாக்டர் கே.பொம்முசாமி, ஆலோசனை குழு உறுப்பினர்கள் டாக்டர் ஆர்.ஜெயராமகிருஷ்ணன், டாக்டர் யு.ரமணி, டாக்டர் என்.ராஜ்குமார், டாக்டர் எஸ்.சரவணன், டாக்டர் ஆர்.பிரகாஷ் ஆகியோரை அறிமுகம் செய்துவைத்தார்.

    திருப்பூர் தெற்கு தொகுதி செல்வராஜ் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் ஆகியோர் காணொலி காட்சி வாயிலாக புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர். இதையடுத்து அவினாசி டெக்ஸ்சிட்டி கிளை சார்பில் அனைத்து மருத்துவ சேவை வழங்குவதற்காக திருப்பூரில் உள்ள கணியாம்பூண்டி கிராமத்தை தத்தெடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் சிறந்த டாக்டர்களுக்கு விருது வழங்கப்பட்டது. இதேபோல் 21 டாக்டர்களுக்கு 'பில்லர்ஸ் ஆப் டெக்ஸ்சிட்டி' என்ற விருதுகள் வழங்கப்பட்டது. இந்த விருதுகளை ஐ.எம்.ஏ., டி.என்.எஸ்.பி. தலைவர் டாக்டர் டி.செந்தமிழ் பாரி வழங்கி பேசியதாவது, பொதுமக்களுக்கு மருத்துவ சேவை வழங்குவதற்காக 100 கிராமங்களை தத்தெடுப்பது இந்திய மருத்துவ சங்கத்தின் கனவு திட்டமாகும். இதற்காக இதுவரை 50 கிராமங்கள் தத்தெடுக்கப்பட்டுள்ளன. விரைவில் மீதி 50 கிராமங்கள் தத்தெடுக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ஐ.எம்.ஏ., டி.என்.எஸ்.பி. செயலாளர் டாக்டர் என்.ஆர்.டி.ஆர்.தியாகரஜன், தேசிய ஐ.எம்.ஏ. முன்னாள் தலைவர் டாக்டர் ஜே.ஏ.ஜெயலால், துணை தலைவர் டாக்டர் ஆர்.குணசேகரன், ஐ.எம்.ஏ., டி.என்.எஸ்.பி. தேர்வு தலைவர் டாக்டர் அபுல் ஹசன், மேற்கு மண்டல துணை தலைவர் டாக்டர் கருணா, முன்னாள் துணை தலைவர் டாக்டர் சி.என்.ராஜா, டி.எம்.எப். டாக்டர் தங்கவேல், ஸ்ரீ குமரன் மருத்துவமனை டாக்டர் செந்தில் குமரன், ஐ.எம்.ஏ., டி.என்.எஸ்.பி. டாக்டர் ராஜ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.முன்னதாக கலை நிகழ்ச்சிகள் நடந்தது. அவினாசி டெக்ஸ்சிட்டி கிளை செயலாளர் டாக்டர் டி.கார்த்திகேயன் நன்றியுரையாற்றினார்.

    ×