search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிதீஷ்குமார்"

    • மக்கள் மனதை பெரிதும் கவர்ந்தது முத்தமிழ் அறிஞர் கலைஞரின் பேச்சே, எழுத்தே என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெறுகிறது.
    • பீகார் முதல்வர் நிதீஷ் குமார் கலைஞர் கோட்டத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றுகிறார்.

    திருவாரூர்:

    திருவாரூர் அருகே காட்டூரில் தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் ரூ.12 கோடி மதிப்பீட்டில் கலைஞர் கோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் கலைஞரின் உருவச்சிலை, அவரது தந்தையான முத்துவேல் பெயரின் நூலகம், கலைஞரின் வாழ்க்கை வரலாற்றை குறிக்கும் வகையில் அருங்காட்சியகம் மற்றும் கூட்ட அரங்கு உள்ளிட்ட கட்டமைப்புகள் இடம் பெற்றுள்ளது.

    இந்த கலைஞர் கோட்டத்தின் திறப்பு விழா வருகிற 20-ந்தேதி நடைபெறுகிறது. ஒரு முழு நாள் நிகழ்வாக நடைபெறும் இந்த திறப்பு விழா நிகழ்ச்சியில் கவியரங்கம், பட்டிமன்றம், பாட்டரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளும் நடைபெறுகின்றன.

    விழாவையொட்டி அன்று காலை 10 மணிக்கு திருவாரூர் சகோதரிகளின் மங்கள இசையுடன் நிகழ்ச்சி தொடங்குகிறது. இதனைத் தொடர்ந்து கவியரசு வைரமுத்து தலைமையில் கவியரங்கம் நடைபெறுகிறது. இதில் கவிஞர்கள் கபிலன், பா.விஜய், ஆண்டாள் பிரியதர்ஷினி, தஞ்சை இனியன் ஆகியோர் பங்கேற்று கவிதை வாசிக்கின்றனர்.

    அதன் பிறகு, மக்கள் மனதை பெரிதும் கவர்ந்தது முத்தமிழ் அறிஞர் கலைஞரின் பேச்சே, எழுத்தே என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெறுகிறது. பட்டிமன்றத்திற்கு சாலமன் பாப்பையா நடுவராக இருந்து நடத்துகிறார். இதில் பேச்சே என்ற தலைப்பில் திருவாரூர் சண்முகவடிவேல், கவிதாஜவகர், ராஜா ஆகியோரும் எழுத்தே என்ற தலைப்பில் புலவர் ராமலிங்கம், மாது, பாரதி பாஸ்கர் ஆகியோர் பேசுகின்றனர்.

    பின்னர் மதிய உணவு இடைவேளைக்கு பிறகு மாலை 3.30 மணிக்கு மாலதி லக்ஷ்மன் குழுவினரின் பாட்டரங்கம் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து கலைஞர் கோட்ட திறப்பு விழா நடைபெற உள்ளது. தயாளு அம்மாள் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் டாக்டர் மோகன் காமேஸ்வரன் வரவேற்புரை ஆற்றுகிறார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விழாவிற்கு தலைமை தாங்கி கலைஞர் கோட்டத்தில் உள்ள கலைஞர்கள் உருவச் சிலையை திறந்து வைக்கிறார்.

    பீகார் முதல்வர் நிதீஷ் குமார் கலைஞர் கோட்டத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றுகிறார். பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் முத்துவேல் நினைவு நூலகத்தை திறந்து வைக்கிறார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர்.

    விழாவில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஞாயிற்றுக் கிழமை) மாலை சென்னையில் இருந்து விமான மூலம் திருச்சி வருகிறார். அங்கிருந்து கார் மூலம் திருவாரூர் வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் சன்னதி தெருவில் உள்ள அவரது இல்லத்தில் தங்குகிறார். நாளை 19-ந்தேதி காலை கலைஞர் கோட்ட திறப்பு விழா ஏற்பாடுகளை நேரில் சென்று பார்வையிடுகிறார்.

    மீண்டும் சன்னதி தெருவில் உள்ள அவரது இல்லத்தில் தங்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் 20-ந்தேதி திறப்பு விழா நிகழ்வுகளில் பங்கேற்கிறார். அதனைத் தொடர்ந்து அன்று இரவு மன்னை விரைவு ரெயில் மூலம் சென்னை திரும்புகிறார். இதேபோல் இந்நிகழ்வில் பங்கேற்பதற்காக பீகார் முதல்வர் நிதீஷ்குமார் மற்றும் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் 20-ந்தேதி விமானம் மூலம் திருச்சி வருகின்றனர். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவாரூர் வருகை தர உள்ளனர்.

    ஹெலிகாப்டர் இறங்கி ஏறுவதற்கு வசதியாக திருவாரூர் வா.சோ.ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஹெலிபேட் அமைக் கப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர் மூலம் திருவாரூர் வருகை தரும் பீகார் முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் அங்கிருந்து கார் மூலம் காட்டூர் சென்று கலைஞர் கோட்ட திறப்பு விழா நிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றனர்.

    அன்று மாலை நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் திருச்சி சென்று அங்கிருந்து பீகார் செல்கின்றனர். கலைஞர் கோட்டை திறப்பு விழாவை முன்னிட்டு திருச்சி ஐ.ஜி. கார்த்திகேயன், தஞ்சை டி.ஐ.ஜி ஜெயச்சந்திரன், திருவாரூர் எஸ்.பி சுரேஷ்குமார் ஆகியோர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இறுதியில் தயாளு அம்மாள் அறக்கட்டளை அறங்காவலர் சம்பத்குமார் நன்றி கூறுகிறார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி, அவர் பயணிக்கும் வழித்தடங்களில் பாதுகாப்பு கருதி டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி யாராவது டிரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருச்சி மாவட்ட கலெக்டர் மா.பிரதீப்குமார் தெரிவித்துள்ளார். 

    ×