search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "8 வழிச் சாலை"

    • செங்கல்பட்டு- திண்டிவனம் சாலை 8 வழிச் சாலையாக மேம்படுத்த திட்டமிடப்பட்டு இருக்கிறது.
    • ரூ.3,523 கோடியில் இந்த பணி நடைபெற இருக்கிறது.

    சென்னை நகர பகுதிக்கு இணையாக புறநகர் பகுதிகள் அசுர வளர்ச்சி பெற்று வருகிறது. தாம்பரம், பல்லாவரம், பெருங்களத்தூர், கூடுவாஞ்சேரி, உள்ளிட்ட பகுதிகள் வளர்ச்சியாலும் அதன் உள் கட்டமைப்பு வசதிகளாலும் உச்சம் அடைந்து வருகின்றன.

    இதேபோல் பெருகிவரும் மக்கள் தொகை, வாகன பெருக்கம் காரணமாக போக்குவரத்து நெரிசலும் சென்னை நகரத்துக்கு இணையாக புறநகர் பகுதிகளிலும் நீடித்து வருகிறது.

    சென்னைக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினமும் பல்லாயிரக் கணக்கானோர் வந்து செல்கின்றனர். அரசு பஸ்கள், ஆம்னி பஸ்கள், கார்கள், கனரக வாகனங்கள் என லட்சக்கணக்கான வாகனங்கள் புறநகர் பகுதி வழியாக சென்னை நகருக்குள் வந்து செல்கின்றன.

    காலை நேரங்களில் தாம்பரம், பல்லாவரம், பெருங்களத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் இருக்கும். இதேபோல மாலை நேரங்களில் சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் வாகனங்களால் போக்குவரத்து ஸ்தம்பிப்பது தினந்தோறும் நிகழ்ந்து வருகிறது. தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட விடுமுறை நாட்களில் வாகன பயணம் மிக மோசமாக இருக்கும்.

    இதைத் தொடர்ந்து போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் புறநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் மேம்பாலம் கட்டுதல் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகிறது. தற்போது பெருங்களத்தூரில் கட்டப் பட்டு உள்ள மேம்பாலத்தால் போக்குவரத்து பெரும்பாலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில் வாகன போக்குவரத்து எளிதாகும் வகையில் தாம்பரம்- செங்கல்பட்டு இடையே 27 கி.மீட்டர் தூரத்துக்கு உயர்த்தப்பட்ட வழித் தடத்தில் மேம்பாலம் கட்ட திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை நிறைவடைந்து உள்ளன. ரூ.3,523 கோடியில் இந்த பணி நடைபெற இருக்கிறது.

    இதில் 6 வழித்தடங்கள் அமைய உள்ளன. பெருங்களத்தூரில் மேம்பாலம் தொடங்கி பரனூர் சுங்கசாவடியை தாண்டி இந்த பாலம் முடிவடையும். இதற்கான பணியை அடுத்த சில மாதங்களில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தொடங்க உள்ளது.

    இந்த மேம்பாலப் பணி முடிவடையும் போது தாம்பரம்-செங்கல்பட்டு இருவழித்தடத்திலும் குறைந்த நேரத்தில் விரைவாக வாகனங்களில் செல்ல முடியும். இதனால் போக்குவரத்து நெரிசல் இன்றி பயண நேரம் குறையும்.

    மேம்பாலத்தில் கிளாம் பாக்கம் பஸ் நிலையம், பொத்தேரியில் உள்ள தனியார் கல்லூரி, மகேந்திரா சிட்டி ஆகிய இடங்களில் வாகனங்கள் நுழைவு மற்றும் வெளியேறும் படிகள் அமைய இருக்கிறது. வாகனங்கள் சுமார் 100 கி.மீட்டர் வேகத்தில் பயணம் செய்யும் வகையில் பாலம் அமைய இருப்பது குறிப்பிடத்தக்கது.

    இதே போல் செங்கல்பட்டு- திண்டிவனம், ஜி.எஸ்.டி. சாலை விரிவாக்கப் பணியும் நடைபெற உள்ளது. 67.1 கி.மீட்டர் நீளமுள்ள செங்கல்பட்டு- திண்டிவனம் சாலை தற்போது 4 வழிச் சாலையாக உள்ளது. இதில் இருபுறமும் சர்வீஸ் சாலைகளுடன் 8 வழிச் சாலையாக மேம்படுத்த திட்டமிடப்பட்டு இருக்கிறது.

    அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை கணக்கிட்டு இந்த சாலையை மேம்படுத்த தேசிய நெடுஞ் சாலை ஆணையம் முடிவு செய்துள்ளது. இதற்கான திட்ட அறிக்கையும் தயாரிக்கப்பட்டு இருக்கிறது.

    இது குறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரி ஒருவர் கூறும்போது:- ஜி.எஸ்.டி. சாலையில் 94 கி.மீட்டர் தாம்பரம்- திண்டிவனம் பாதைக்கான விரிவாக்க திட்ட அறிக்கை நிறை வடைந்து உள்ளது. இதில் தாம்பரம்- செங்கல்பட்டு இடையேயான 27 கி.மீட்டர் தூரத்துக்கு உயர்மட்ட மேம்பாலம் அமைகிறது. இந்த வழித்தடத்துக்கான கட்டுமான பணி இந்த ஆண்டு மேற்கொள்ளப்படும் என்றார்.

    தாம்பரம்- செங்கல்பட்டு இடையே மேம்பாலம் அமையும்போது லட்சக்கணக்கான வாகனங்கள் செல்லும் இந்த வழித்தடத்தில் சுமார் 50 சதவீத வாகனங்கள் உயர்த்தப்பட்ட மேம்பால சாலையில் செல்லும் வகையில் மாறும். இதனால் வாகன நெரிசலும், விபத்துக்களும் குறையும். ஏற்கனவே இந்த வழித்தடத்தில் 12 இடங்கள் விபத்து அபாயம் உள்ள பகுதியாக கண்டறியப்பட்டு உள்ளது. புதிய பாலத்தால் விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதே போல் திண்டிவனம் வரையிலான வழித்தடத்தில் 20 இடங்கள் விபத்து ஏற்படும் பகுதியாக உள்ளது. இந்த இடங்களில் மேம்பாலங்கள், சுரங்கப் பாதை அமைக்கவும் திட்டமிடப்பட்டு இருக்கிறது.

    மேலும் மாமண்டூர், மதுராந்தகம், படாளம் சந்திப்பு, கருங்குழி சந்திப்பு, சாரம் கிராமம் பகுதிகளில் 6 வழிச்சாலையுடன் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கவும் திட்டம் முன் மொழியப்பட்டு இருக்கிறது. மேல்மருவத்தூர், மற்றும் அச்சரப்பாக்கத்தில் தற்போது உள்ள சுரங்கப்பாதைக்கு மேல் உயர்த்தப்பட்ட சாலை அமைக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்துள்ளது.

    இதேபோல் சென்னை- பெங்களூரு நெடுஞ்சாலை மதுரவாயல்- ஸ்ரீபெரும்புதூர் வரை 23.2 கி.மீட்டர், சென்னை- கொல்கத்தா நெடுஞ்சாலையில், மாதவரம் சந்திப்பு முதல் வெளிவட்ட சாலை வரை 10.4 கி.மீட்டர், திருச்சி- தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் திருச்சி- துவாக்குடி 14 கி.மீட்டருக்கு உயர்த்தப் பட்ட மேம்பாலம் அமைக்கவும் தேசிய நெடுஞ் சாலை ஆணையம் முன் மொழிந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×