search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டுவிட்டரில் அவதூறு"

    • முக்கிய நிகழ்வான தேர்த் திருவிழா 25-ந்தேதியன்று நடைபெற்றது.
    • கோவிலில் பூஜையில் ஈடுபட்ட தீட்சிதரின் பூணுலை அறுத்து அவரை வெளியேற்றியதாக தகவல் பரவியது.

    கடலூர்: 

    சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா கடந்த 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வான தேர்த் திருவிழா 25-ந்தேதியன்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு கடந்த 24-ந்தேதி முதல், 27-ந்தேதி வரை நடராஜர் கோவிலில் உள்ள கனகசபை மீது ஏறி பொதுமக்கள் தரிசனம் செய்வதற்கு தீட்சிதர்கள் அனுமதி மறுத்தனர். இது தொடர்பாக அறிவிப்பு பலகை வைத்து கனகசபை மீது ஏறும் படிக்கட்டின் கதவுகளை பூட்டினர்.

    இது தொடர்பாக கோவிலில் பணிபுரிந்த முன்னாள் தீட்சிதரின் புகாரின் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள், போலீசார் கோவிலுக்கு சென்று அறிவிப்பு பலகையை அகற்றினர். அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தீட்சிதர்கள், கனகசபைக்கு ஏறும் படிகட்டுகளின் கதவுகளை உட்புறமாக பூட்டி விட்டனர். இதனைத் தொடர்ந்து 4 நாட்கள் முடிந்த நிலையில் கடந்த 28-ந் தேதி முதல் பக்தர்கள் கனகசபை மீது ஏறி தரிசனம் செய்ய தீட்சிதர்கள் அனுமதியளித்து கதவை திறந்து விட்டனர்.

    இந்நிலையில் இந்து அறநிலையத் துறை அதிகாரிகளும், போலீசாரும் விளம்பர பலகையை அகற்றும் போது, கோவிலில் பூஜையில் ஈடுபட்ட தீட்சிதரின் பூணுலை அறுத்து அவரை வெளியேற்றியதாக டுவிட்டர் எனப்படும் சமூக வலைதளத்தில் தகவல் பரவியது. இது குறித்து சிதம்பரம் கிராம நிர்வாக அலுவலர் ஷேக் சிராஜிதின் (38) சிதம்பரம் நகர போலீசாரிடம் புகார் மனு அளித்தார். அதில் அடையாளம் தெரியாத நபர், டுவிட்டர் சமூக வலைதளத்தில் தவறான தகவலை பரப்பியு ள்ளார். இத்தகவலின் அடிப்படையில் சிதம்பரம் பஸ் நிலையம், கஞ்சி தொட்டி முனை ஆகிய இடங்களில் பொதுமக்கள் கடந்த 4 நாட்களாக பரவலாக பேசி வருகின்றனர். பொதுமக்கள் பேசுவதற்கு காரணமான அடையாளம் தெரியாத நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனுவில் கூறியிருந்தார். அதன்படி சிதம்பரம் நகர போலீசார், டுவிட்டரில் தவறான தகவல் பரப்பியதாக அடையாளம் தெரியாத நபர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×