search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இலவச வாக்குறுதிகள்"

    • மத்திய பிரதேசத்தின் ஷாதோல் மாவட்டத்தில் புதிய சுகாதார திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
    • ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு ஜாமீனில் வருபவர்கள் கூட்டணி அமைப்பதாக குற்றச்சாட்டு.

    போபால்:

    மத்திய பிரதேசத்தில் இந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இப்போதே தேர்தல் பிரசாரத்தை அரசியல் கட்சிகள் ஆரம்பித்துவிட்டன. ஆளுங்கட்சியான பாஜகவும், எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியும் வாக்காளர்களுக்கு வாக்குறுதிகளை வழங்கி வருகின்றன.

    முதியோர்களுக்கான இந்து புனித யாத்திரைகள், பெண்களுக்கு மாத உதவித்தொகை 1,000 ரூபாய் மற்றும் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு இருமுறை 2,000 ரூபாய் வழங்கப்படும் என்பதுபோன்ற புதிய திட்டங்களை ஆளும் பாஜக அரசு அறிவித்தது. எதிர்க்கட்சியான காங்கிரசும் இதேபோன்ற பல திட்டங்களுக்கான வாக்குறுதிகளை அளித்துள்ளது.

    இந்நிலையில், மத்திய பிரதேசத்தின் ஷாதோல் மாவட்டத்தில் புதிய சுகாதார திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, இலவச வாக்குறுதிகள் தொடர்பாக எதிர்க்கட்சிகளை விமர்சனம் செய்தார். பிரதமர் பேசியதாவது:-

    காங்கிரஸ் மற்றும் குடும்ப அரசியல் செய்யும் கட்சிகள் வெற்றி பெறுவதற்காக மக்களுக்கு தவறான உத்தரவாதங்களை வழங்குகின்றன. வம்ச கட்சிகள் தங்கள் குடும்ப நலனுக்காக மட்டுமே உழைக்கின்றன. அவர்களுக்கிடையேயான பழைய மோதல்கள் எதிர்க்கட்சிகள் ஒன்றிணையும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை என்பதைக் காட்டுகின்றன. ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு ஜாமீனில் வருபவர்கள் கூட்டணி அமைக்கின்றனர்.

    காங்கிரஸ் உட்பட குடும்பத்தை மையமாகக் கொண்ட கட்சிகள் வழங்கக்கூடிய பொய்யான தேர்தல் வாக்குறுதிகள் விஷயத்தில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அவர்கள் தங்களுடைய சொந்த அரசியல் உத்தரவாதம் இல்லாவிட்டாலும், உத்தரவாதத் திட்டங்களைக் கொண்டு வந்துள்ளனர்.

    எதிர்க்கட்சியினர் வழங்கும் தவறான உத்தரவாதங்கள் வழங்குவதன்மூலம் எங்கேயோ ஏதோ தவறு செய்யப்போகிறார்கள் என்று அர்த்தம். இலவச மின்சாரம், இலவச பயணம், ஓய்வூதியம், பெட்ரோல் விலை குறைப்பு மற்றும் வேலைவாய்ப்பு என அவர்கள் வழங்கும் வாக்குறுதிகள் அனைத்தும் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை.

    இலவச மின்சாரத்திற்கு உத்தரவாதம் அளிக்கும்போது, மின்சாரத்திற்கு அதிக செலவு செய்ய தயாராகிறார்கள். இலவசப் பயணத்திற்கு உத்தரவாதம் அளிப்பதன்மூலம், போக்குவரத்துச் சேவைகள் எதிர்காலத்தில் அழிந்துவிடும். ஓய்வூதியத்தை உயர்த்துவதற்கான உத்தரவாதம் என்பது அந்த மாநிலத்தில் உள்ள அரசு ஊழியர்களுக்கு சரியான நேரத்தில் சம்பளம் கூட கிடைக்த நிலையை உருவாக்கும். குறைந்த விலையில் பெட்ரோல் வழங்குவதாக உத்தரவாதம் அளிப்பதன்மூலம், வரிகளை உயர்த்தி மக்களிடம் இருந்து பணத்தை எடுக்கத் தயாராகி வருகின்றனர். வேலைவாய்ப்பு அதிகரிப்பதற்கான உத்தரவாதத்தை, எதிர்காலத்தில் தொழில்கள் மற்றும் வணிகங்களை அழிக்கும் கொள்கைகளுடன் கொண்டு வருவார்கள்.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

    ×