search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விதைப்பு மேற்கொள்ள வேண்டும்"

    • விவசாயிகள் முந்தைய விளைச்சலில் இருந்து கிடைக்கும் விதைகளையே அடுத்த சாகுபடிக்கு பயன்படுத்தி வருகிறார்கள்.
    • முறையற்ற சேமிப்பு முறைகளினால் ஈரப்பதம், பூச்சி நோய் தாக்குதல் இவற்றின் பாதிப்பின் காரணமாக முளைப்புத்திறன் பாதிக்கப்படுகிறது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி விதை பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர் லோகநாயகி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    விதையின் கவனம் அறுவடையில் மகிழ்ச்சி என்பதற்கேற்ப விதைக்கும் முன் விதைத்தரம் அறிந்து விதைப்பு மேற்கொள்ள வேண்டும். நல்ல விதையில், அதிக முளைப்புத் திறன், அதிக புறத்தூய்மை, அளவான ஈரப்பதம், பிற ரக கலப்பு இல்லாமல் இருத்தல், பூச்சி நோய் தாக்குதல் இல்லாமல் இருத்தல் ஆகும். விதை பரிசோதனை செய்வதால், விதைப்பதற்கு தகுதியான விதைகளின் தரம் நிர்ணயிக்கப்படுகிறது.

    விதைத்தரத்தில் ஏற்படும் பிரச்சனைகளையும், அதற்குண்டான காரணங்களையும் அறிய முடிகிறது. விதைகளை காய வைக்கவும், சுத்தம் செய்ய வேண்டியதன் அவசியத்தை அறிந்து கொள்ள உதவுகிறது.

    விதைத்தரத்திற்கு உட்பட்டு, சான்றளிப்பிற்கு ஏற்றதா அல்லது உண்மை நிலை தரத்திற்கு ஏற்றதா என கண்டறிய உதவுகிறது. விதைப் பரிசோதனை செய்து விதைப்பது, நல்ல சாகுபடிக்கு அடிப்படையானதாகும்.

    நல்ல தரமான விதையே நல்ல மகசூலைத் தரும். ஒரு விதை தரமானதா அல்லது தரமற்றதா என்பதனை அதன் முளைப்புத் திறன், அளவான ஈரப்பதம், சரியான புறத்தூய்மை, இனத்தூய்மை கொண்டுள்ளதும், பூச்சி, நோய் தாக்குதல் இல்லாமல் வீரிய நாற்றுக்களை கொடுக்கக்கூடிய திறன் இதனைக் கொண்டே அறிய வேண்டும்.

    விவசாயிகள் முந்தைய விளைச்சலில் இருந்து கிடைக்கும் விதைகளையே அடுத்த சாகுபடிக்கு பயன்படுத்தி வருகிறார்கள். அத்தகைய விதைகளில் வீரியம் குறைவான, நோய் தாக்கியும், உடைந்த விதைகள் ஆகியவையும் இருக்கும். வீரியம் குறைவான விதைகளும் முளைக்கும். ஆனால் தரமான நாற்றுக்களை கொடுக்காது. நோய் தாக்கிய விதைகளும் முளைத்து மூன்று அல்லது நான்கு நாட்களில் கருகிவிடும்.

    இதனை விதைப்பரிசோதனையில் கண்டுபிடித்து, முளைப்புத் திறனில், இயல்பானது, இயல்பற்றது, கடின விதைகள், பூச்சி நோய் தாக்குதல் சதவீதம் என கண்டறிந்து, வகைப்படுத்தி தர நிர்ணயம் செய்யப்படுகிறது. அவ்வாறான தரமான விதைகளைப் பயன்படுத்தினால் தான் நாம் எதிர்பார்க்கும் மகசூலைப் பெற முடியும்.

    மேலும், வீரியமிக்க சான்று பெற்ற விதைகளையே விவசாயிகள் பயன்படுத்த வேண்டும். ஆனால், விவசாயிகள் தங்களின் சென்ற ஆண்டு, அதற்கு முந்தைய ஆண்டின் சாகுபடியில் இருந்து சேமித்து வைத்துள்ள, விதை இருப்பினை தொடர் சாகுபடிக்கு பயன்படுத்துவதால், அவ்விதையின் வீரியம் குறைந்து வீரியமற்ற நாற்றுகளையே கொடுக்கும். இதன் காரணமாக குறைவான மகசூலையே விவசாயிகள் பெறுகின்றனர்.

    முறையற்ற சேமிப்பு முறைகளினால் ஈரப்பதம், பூச்சி நோய் தாக்குதல் இவற்றின் பாதிப்பின் காரணமாக முளைப்புத்திறன் பாதிக்கப்படுகிறது. எனவே, விதைப்புக்கு முன்பு தாங்களே முளைப்புப் பரிசோதனை செய்து, போதிய அளவு முளைப்புத் திறன் இருந்தால் மட்டுமே விவசாயிகள் விதைப்பு மேற்கொள்ள வேண்டும். அதிலும், மேற்குறிப்பிட்டவாறு முளைக்கும் அனைத்து விதைகளுமே வீரியமான நாற்றுக்களை தரக்கூடியவை அல்ல.

    எனவே, குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களிடம் உள்ள விதைகளை மாற்றி, சான்று பெற்ற விதைகளை விதைப்பு செய்யவேண்டும். எனவே, ஒவ்வொரு வருடமும் சான்று பெற்ற விதைகளை வாங்கி விதைப்புக்கு பயன்படுத்திட வேண்டும். அல்லது சொந்த விதையினை விதைப்பதாக இருந்தால், கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள ஒருங்கிணைந்த வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்தில் இயங்கி வரும் விதைப் பரிசோதனை நிலையத்தில் தங்களின் விதை சேமிப்பிலிருந்து மாதிரி கொண்டு வந்து, பரிசோதித்து, தரமானதாக, வீரியமுள்ள நாற்றுக்கள் தரவல்லதா என சோதித்து, அதன் அடிப்படையில் விவசாயிகள் விதைப்பு மேற்கொண்டால் நல்ல மகசூல் பெறலாம். இப்பரிசோதனைக்கான கட்டணம் ஒரு விதை மாதிரி விதைப் பரிசோதனைக்கு ரூ.80 மட்டுமே ஆகும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×