search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நெல்லை அரசு ஆஸ்பத்திரி"

    • உடனிருந்த கவனித்து கொள்ள ஆள் இல்லாத காரணத்தினால், வார்டில் இருந்து வெளியேற்றியதாக கூறப்படுகிறது.
    • தகவல் அறிந்த டீன் ரேவதி பாலன், உடனடியாக அந்த நோயாளியை மீட்டு வார்டில் சேர்க்க உத்தரவிட்டார்.

    நெல்லை:

    நெல்லை பாளையங்கோட்டை ஐகிரவுண்டில் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி அமைந்துள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான வெளிநோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கிறார்கள். நோயின் தீவிரத்துக்கு ஏற்ப, ஏராளமானோர் உள்நோயாளிகளாகவும் தங்கி சிகிச்சை பெறுகிறார்கள்.

    இந்த நிலையில் சக்திவேல் (வயது 60) என்ற நோயாளி உடல்நலம் பாதிக்கப்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இவரை உடனிருந்த கவனித்து கொள்ள ஆள் இல்லாத காரணத்தினால், வார்டில் இருந்து வெளியேற்றியதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து அவர் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் மரத்தடியில் படுத்திருந்தார். நேற்று முன்தினம் மாலையில் மழை பெய்து கொண்டிருந்தது. மழையில் நனைந்து விட்டதால் சக்திவேல் தவழ்ந்தபடி அவசர சிகிச்சை கட்டிடத்தை நோக்கி சென்றார்.

    இதனைப் பார்த்த சிலர் தங்களது செல்போனில் வீடியோ எடுத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த டீன் ரேவதி பாலன், உடனடியாக அந்த நோயாளியை மீட்டு வார்டில் சேர்க்க உத்தரவிட்டார்.

    இதையடுத்து ஆஸ்பத்திரி ஊழியர்கள், முதியவரை மீட்டு சக்கர நாற்காலியில் அமர வைத்து வார்டுக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் நோயாளி மழையில் நனைந்தபடி தவழ்ந்து செல்வதும், அவரை மீட்டு ஊழியர்கள் ஆஸ்பத்திரியில் சேர்க்கும் காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் பரவியதால் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • போலீசார் கார்த்திக்கை நேற்று மதியம் கைது செய்தனர்.
    • ஆஸ்பத்திரியில் இருந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி கார்த்திக் போலீசாரின் கண்ணில் மண்ணை தூவி விட்டு அங்கிருந்து கைவிலங்குடன் தப்பி ஓடிவிட்டார்.

    நெல்லை:

    நெல்லை சந்திப்பு உடையார்பட்டியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒரு ஜெராக்ஸ் கடையின் பூட்டை உடைத்து அங்கிருந்த ஒரு செல்போன் மற்றும் ரூ.1,500-ஐ மர்ம நபர் ஒருவர் திருடிச்சென்றார்.

    இதுகுறித்து கடையின் உரிமையாளர் நெல்லை சந்திப்பு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அதில், தச்சநல்லூர் மேலக்கரை பகுதியை சேர்ந்த பழனிமுருகன் மகன் பரத் என்ற கார்த்திக் (வயது 19) என்பவர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் கார்த்திக்கை நேற்று மதியம் கைது செய்தனர். பின்னர் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக அவரது கையில் விலங்கு மாட்டி நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு மருத்துவ பரிசோதனைக்காக அழைத்து சென்றனர்.

    இருந்தபோதும் ஆஸ்பத்திரியில் இருந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி கார்த்திக் போலீசாரின் கண்ணில் மண்ணை தூவி விட்டு அங்கிருந்து கைவிலங்குடன் தப்பி ஓடிவிட்டார். இதனால் மாநகரம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு முக்கிய இடங்களில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

    ஆனாலும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. தொடர்ந்து போலீசார் கார்த்திக்கை தீவிரமாக தேடி வந்தனர். இந்தநிலையில் அவர் மேலக்கரையில் உள்ள தனது வீட்டுக்கே சென்று பதுங்கி இருந்தது தெரியவந்தது. அங்கு விரைந்து சென்ற போலீசார் அவரை கைது செய்தனர்.

    ×