search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமெரிக்க கார் விபத்து"

    • டி.கியூ. மிட்ஜெட் கார்களை வேகமாக ஓட்டுவதில் ஆஷ்லியா திறமையானவர்
    • கார் மோதி கொண்டதில் ஆஷ்லியா காரிலிருந்து தூக்கி வீசப்பட்டார்

    அமெரிக்காவின் மத்தியமேற்கு பகுதியை சேர்ந்த மாநிலம் இண்டியானா. இதன் தலைநகரம் இண்டியானாபொலிஸ்.

    இந்நகரை சேர்ந்தவர் ஆஷ்லியா ஆல்பர்ட்ஸன் (24). ஆஷ்லியா கார் பந்தயத்தில் பிரபலமானவர்.

    தனது 10வது வயதிலிருந்தே கார் பந்தயத்தில் ஆர்வம் கொண்டிருந்த இவர் டி.கியூ. மிட்ஜெட் வகை கார்களை வேகமாக ஓட்டுவதில் திறமையானவர் என பெயர் பெற்றிருந்தார்.

    இவர் ஜி.எம்.சி. டெரைன் கார் ஒன்றில் சக பயணியாக பயணம் செய்து கொண்டிருந்தார். அக்காரை இவரது 31-வயது நண்பர் ஜேக்கப் கெல்லி சாலையின் இடதுபுறமாக ஓட்டி கொண்டிருந்தார். அப்போது அவர்கள் அருகில் ஒரு கருப்பு நிற செவர்லே மலிபு காரை ஆஸ்டின் கூப்பர் (Austin Cooper) எனும் 22-வயது ஆண் வலதுபுறமாக வேகமாக ஓட்டி வந்தார்.

    ஒருவரையொருவர் முந்தி செல்லும் நோக்கில் இரண்டு கார்களும் அருகருகே மிக வேகமாக சென்றதால், ஒருவர் மற்றொருவருக்கு வழி விட மறுத்து முன்னேறி கொண்டிருந்தனர்.

    அப்போது மலிபு காரை ஓட்டியவர் திடீரென தனது பாதையிலிருந்து ஜி.எம்.சி. சென்ற பாதையின் குறுக்கே வந்தார். இதனை எதிர்பாராத கெல்லி, செயலிழந்தார். இதில் ஜி.எம்.சி. கார் சுழன்றது. இதன் விளைவாக இரண்டு கார்களும் மிக பயங்கரமாக மோதிக்கொண்டன. இதில் ஆஷ்லியா காரிலிருந்து தூக்கி வீசப்பட்டார்.

    உடனடியாக காவல்துறைக்கும், அவசர மருத்துவ சேவைக்கும் அங்கிருந்தவர்கள் தகவல் தெரிவித்து, அவர்கள் விரைந்து வந்து அனைவரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். லூயிவில் பல்கலைகழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆஷ்லியா மற்றும் கெல்லிக்கு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டது.

    ஆனால், சிகிச்சை பலனின்றி ஆஷ்லியா உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர். லேசான காயங்களுக்காக கெல்லிக்கு அங்கே சிகிச்சை அளிக்கப்பட்டது. மலிபுவை ஓட்டிய ஆஸ்டினுக்கும் அவருடன் பயணித்த ஒரு 18 வயதுக்குட்பட்ட நபருக்கும் லேசான காயங்களுக்காக ஷ்னெக் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இந்த விபத்து குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். "ஆஷ்லியா உயிரிழந்தது குறித்து எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன். இச்சம்பவம், உயிர் எவ்வளவு முக்கியமானது என்பதை நமக்கு நினைவூட்டுகிறது. ஆஷ்லியா நினைவாக இனியாவது சாலைகளில் வாகனம் ஓட்டும் போது ஒருவரையொருவர் முந்தி செல்லும் வெறியை ஓட்டுனர்கள் குறைத்து கொள்ள வேண்டும்," என பிரபல கார் பந்தய வீரர் டோனி ஸ்டூவர்ட் தெரிவித்துள்ளார்.

    ×