search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விதிமுறையை"

    • குமரி மாவட்டத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை
    • நாகர்கோவில் போக்குவரத்து பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது

    நாகர்கோவில் : குமரி மாவட்டத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து போக்குவரத்து போலீசார் மற்றும் போலீசார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    ஹெல்ெமட் அணியாமல் செல்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. நாகர்கோவில் போக்குவரத்து பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது வாலிபர் ஒருவர் ஹெல்மெட் அணியாமல் வந்தார். அவரை போலீசார் பிடித்தனர். அவரிடம் சோதனை செய்தபோது அவர் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியது தெரியவந்தது.

    போலீசார் அவரது செல்போனை சோதனை செய்தபோது பிடிபட்ட நபர் தனது செல்போனில் அதிவேகமாக பைக் ரேசிங் ஈடுபடுவது போன்ற காட்சிகள் இருந்தது. மேலும் இதை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் போக்குவரத்து விதிமுறையை மீறிய அந்த வாலிபருக்கு ரூ.12,000 அபராதம் விதித்தனர். இதேபோல் குளச்சல் பகுதியிலும் வாலிபர் ஒருவர் ஹெல்மெட் அணியாமல் வந்து சிக்கினார்.

    அவரது செல்போனை சோதனை செய்த போதும் அதிவேகமாக ஓட்டி சென்று இன்ஸ்டாகிராமில் வீடியோ பதிவேற்றம் செய்து இருப்பது தெரியவந்தது. அந்த வாலிபருக்கும் ரூ.12 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. பிடிபட்ட நபருக்கு 17 வயதே ஆனதையடுத்து அந்த நபரின் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். பிடிபட்ட 2 வாலிபரின் பெற்றோருக்கும் ரூ.5000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து போலீசார் கூறுகையில், போக்குவரத்து விதிமுறைகளை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும். விதிமுறைகளை கடைபிடிக்காதவர்களுக்கு பாரபட்சமின்றி அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. 18 வயதுக்கு குறைவான நபர்கள் வாகனம் ஓட்டக்கூடாது. இதை பெற்றோர்கள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிவேகமாக வாகனம் ஓட்டினால் உயிருக்கு ஆபத்து ஏற்படும். மேலும் ஹெல்மெட் அணிவது நமது உயிர் கவசம் போன்றதாகும். எனவே அனைவரும் இரு சக்கர வாகன ஓட்டும் ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும் என்றார்.

    ×