search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜவ்வாது மலை"

    • பெரும்பாலான புதைகுழிகள் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு திசையை நோக்கி அமைக்கப்பட்டிருந்தன.
    • இதே போன்ற புதை குழிகள் கிருஷ்ணகிரி மற்றும் கோவை பகுதிகளிலும் ஏற்கனவே காணப்பட்டன.

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஜவ்வாது மலையில் ஏராளமான மலை கிராமங்கள் உள்ளன. இங்கு பல நூற்றாண்டுகளாக பூர்வீக குடிமக்கள் வசித்து வருகின்றனர்.

    ஜவ்வாது மலையில் உள்ள மேல் செப்பிலி மற்றும் கீழ் செப்பிலி கிராமங்களுக்கு அருகில் சில புதைகுழிகள் இருப்பதாக தொல்பொருள் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

    இதனை தொடர்ந்து தொல்லியல் துறை அதிகாரிகள் நேற்று ஜவ்வாது மலை சென்று ஆய்வு செய்தனர்.

    மேல்செப்பிலி மற்றும் கீழ் செப்பிலி கிராமங்களுக்கு அருகே 100-க்கும் மேற்பட்ட பெருங்கற்கால புதை குழிகள் இருப்பதை அவர்கள் கண்டுபிடித்தனர்.

    7.5 மீட்டர் அகலம் 1.5 மீட்டர் உயரம் கொண்ட இந்த கற்கால புதை குழிகளை இறந்தவர்கள் உடல்களை புதைக்க பயன்படுத்தி உள்ளனர். மேலும் இறந்தவர்கள் உடலுடன் அவர்கள் பயன்படுத்திய கற்கால கருவிகளையும் சேர்த்து அதில் வைத்து அடக்கம் செய்துள்ளனர்.

    ஒவ்வொரு புதை குழியிலும் அந்த காலத்தில் பயன்படுத்திய கல் ஆயுதங்கள் இருந்தன. பெரும்பாலான புதைகுழிகள் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு திசையை நோக்கி அமைக்கப்பட்டிருந்தன.

    இதே போன்ற புதை குழிகள் கிருஷ்ணகிரி மற்றும் கோவை பகுதிகளிலும் ஏற்கனவே காணப்பட்டன.

    இதன் மூலம் இங்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே பூர்வீக குடிமக்கள் இருந்திருக்க வேண்டும் என தொல்பொருள் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்த புதைகுழிகள் மூலம் ஜவ்வாது மலையில் அகழாய்வு நடத்த முடிவு செய்துள்ளோம் என அவர்கள் கூறினர். 

    • தமிழகத்தில் முதன் முறையாக தேனீ பூங்கா அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
    • ஐரோப்பிய தேனீக்கள், இந்திய தேனீக்கள் மற்றும் டாமர் தேனீக்கள் என 3 வகையான தேனீக்கள் வளர்க்கப்பட உள்ளன.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் ஜவ்வாது மலையில் அத்திப்பட்டு எனும் பழங்குடியின மக்கள் வாழும் குக்கிராமம் உள்ளது.

    இந்த மலையில் பழங்குடியினர்கள் 272 குக்கிராமங்களில் 30,000-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்

    இங்குள்ள பெரும்பாலான பழங்குடியினக் குடும்பங்கள் தங்கள் வீட்டின் பின்புறங்களில் தேனீக்களை வளர்த்து வந்தனர். ஆனால் தற்போது சுமார் 300 பழங்குடியினர் மட்டுமே மலைகளில் தேன் சேகரிப்பவர்களாக உள்ளனர்.

    பழங்குடியின சமூகத்தினரை அவர்களின் பாரம்பரிய தொழிலான தேன் சேகரிப்பதற்கு மீண்டும் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டு தமிழகத்தில் முதன் முறையாக தேனீ பூங்கா அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

    இந்த பூங்கா 14.8 ஹெக்டேர் பரப்பளவில் பரந்து விரிந்து அமைக்கப்படுகிறது. இங்கு தேன் உற்பத்தி செய்யக்கூடிய வேம்பு, மகிழம், பூவரசம், புளி, சைனாபெர்ரி, வெள்ளைப்பட்டை அகாசியா, கரும் பலகை மரம், உள்ளிட்ட 32 வகை மரங்கள் 6 எக்டேர் பரப்பளவில் நடப்படுகிறது.

    பூர்வீக மர வகைகளை நடவு செய்ய தொடர் வரிசைகளை உருவாக்குதல், பண்ணை குட்டைகள் மற்றும் இந்த குளங்களுக்கு மலைகளில் இருந்து வரும் மழைநீரை சேகரிக்க நீர் சேகரிப்பு அமைப்பு போன்ற பல்வேறு பணிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ஈடுபட்டுள்ளனர்.

    இங்கு ஐரோப்பிய தேனீக்கள், இந்திய தேனீக்கள் மற்றும் டாமர் தேனீக்கள் என 3 வகையான தேனீக்கள் வளர்க்கப்பட உள்ளன. ஏனெனில், அவை குறைவான ஆக்கிரமிப்பு மற்றும் பாதிப்பற்ற கொடுக்குகளை கொண்டுள்ளது.

    இவற்றை பெட்டிகளில் வைத்த பின்னர் வாரத்திற்கு 10 முதல் 15 கிலோ தேனை உருவாக்க முடியும்.

    பூங்காவின் தோட்டப் பகுதிக்குள் தேனீ பெட்டிகள் வைக்கப்படுகின்றன.

    தேனீக்களின் கூட்டத்தைத் தடுக்கவும், தோட்டக்கலை வல்லுநர்கள் பெட்டிகளை தொடர்ந்து கண்காணிக்க வசதியாகவும் ஒவ்வொரு பெட்டிக்கும் இடையே குறைந்தது 5 அடி இடைவெளி விடப்பட்டுள்ளது.

    சுற்றுலா பயணிகள் தேனீ பெட்டிகளை பார்க்க தனி நடைபாதைகளும் உருவாக்கப்படுகிறது.

    முக்கியமாக மலைகளில் உள்ள பழங்குடியின விவசாயிகளுக்காக மொரீஷியஸின் பல்வேறு வகையான அன்னாசி பழத்தை பயிரிடுவதற்கு பூங்காவில் 1 ஏக்கர் செயல்விளக்க தளம் ஏற்படுத்தப்படுகிறது.

    இந்த பூங்காவில் தேன் உற்பத்தி மட்டுமின்றி, பழங்குடியினருக்கு தேன் உற்பத்தியில் சமீபத்திய முறைகள் குறித்தும் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

    அங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்காக , ஜவ்வாது மலைகளின் பாரம்பரிய மர இனங்களை காட்சிப்படுத்தும் மையமும் அமைய உள்ளது.

    ×