search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாலிசிலிக் அமிலம்"

    • அதிக அளவில் காய்கள் உருவாக தென்னை டானிக் என்ற சத்தூட்டத்தை பயன்படுத்தலாம்.
    • தென்னையில் அதிக அளவு மகசூல் பெற உதவும் ஒரு சத்தூட்ட திரவமாகும்.

    தென்னையில் குரும்பை உதிராமல் இருக்கும் போது தான் அதிக அளவு காய்கள் உருவாகிறது. தென்னை மரத்தில் உருவாகும் குரும்பைகள் உதிராமல் தடுத்து அதிக அளவில் காய்கள் உருவாக தென்னை டானிக் என்ற சத்தூட்டத்தை பயன்படுத்தலாம்.

    தென்னை டானிக் என்று கூறப்படும் ஊட்ட சத்து திரவமானது தென்னையில் அதிக அளவு மகசூல் பெற உதவும் ஒரு சத்தூட்ட திரவமாகும். இந்த டானிக்கில் தென்னை மரத்தின் வளர்ச்சிக்கு தேவையான நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம், மக்னீஷியம், இரும்பு, துத்தநாகம், தாமிரம், மாங்கனீசு, போரான் மற்றும் மாலிப்டினம் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

    இத்துடன் மரத்திற்கு தேவையான ஆக்சிஜன், சாலிசிலிக் அமிலம், அஸ்கார்பிக் அமிலம் முதலிய வளர்ச்சி ஊக்கிகளும் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த டானிக்கின் கார அமில நிலையானது மரத்தின் கார அமில நிலைக்கு ஏற்ப இருக்குமாறு தயார் செய்யப்பட்டுள்ளது.

    டானிக்கின் கார அமில நிலையானது மரத்தின் கார அமில நிலையை பாதிக்காமல் இருப்பதால் டானிக் மரத்திற்கு எளிதாக ஊடுருவி செல்கிறது. இதனால் மரத்திற்கு தேவையான ஊட்டச் சத்துக்களும், வளர்ச்சி ஊக்கிகளும் மரத்தின் அனைத்து பாகங்களுக்கும் எளிதாக பரவுகின்றன. இதனால் மரத்திற்கு நோய், பூச்சி தாக்குதல் மற்றும் வறட்சி ஆகியவற்றில் இருந்து இயற்கையான எதிர்ப்பு சக்தி உண்டாகிறது.

    தென்னை மரத்திற்கு சத்து டானிக்கை வேர் மூலம் செலுத்துவதால் பலவிதமான நன்மைகள் உண்டாகின்றன. இலைகளில் பச்சையம் அதிகரித்து ஒளிச்சேர்க்கை மேம்படுகிறது. இதனால் மரத்தின் வளர்ச்சி அதிகரிக்கிறது. உயிர் வேதியியல் பணிகளுக்கு தேவைப்படும் மூலப்பொருட்களான ஊட்டச்சத்துக்கள் டானிக் மூலம் தடையின்றி கிடைப்பதால் மரத்தின் காய்ப்புத் திறன் அதிகரிக்கின்றது. போரான் மற்றும் துத்தநாகம் போன்ற நுண்ணூட்டங்களும் ஆக்சின் போன்ற வளர்ச்சி ஊக்கியும் டானிக்கில் கலந்திருப்பதால் குரும்பைகள் உதிர்வதும், ஒல்லிக்காய்கள் உற்பத்தியாவதும் வெகுவாக குறைக்கப்படுகிறது. காய்களின் எண்ணிக்கையும் பருமனும் உயர்ந்து மகசூல் அதிகரிக்கிறது.

    தென்னை டானிக்கை மரத்திற்கு வேர் மூலம் மட்டுமே செலுத்த வேண்டும். இவ்வாறு செலுத்துவதற்கு சரியான உறிஞ்சு வேர்களை தேர்வு செய்ய வேண்டும். பொதுவாக, மரத்திலிருந்து இரண்டு முதல் மூன்று அடி தள்ளி சுமார் நான்கு அங்குல ஆழத்திற்கு கீழ் உறிஞ்சு வேர்கள் அமைந்திருக்கும். இந்த வேரில் பென்சில் கனமுள்ள வெள்ளை நிற வேர் ஒன்றை தேர்வு செய்து அதன் நுனியை மட்டும் கத்தி அல்லது பிளேடு பயன்படுத்தி சாய்வாக சீவி விடவும். பின்னர் டானிக் உள்ள பையில் அந்த வேரை நுழைத்து பையின் மேல் பாகத்தை வேருடன் சேர்த்து நூலால் கட்டி டானிக் சிந்தாமல் மண் அணைத்து விடவும்.

    மண்ணில் ஈரத்தன்மை குறைவாக இருந்தால் ஒரு மணி நேரத்தில் டானிக்கை வேர் உறிஞ்சி விடும். எனவே, வெயில் நேரத்திலும் மழை அல்லது பாசனத்திற்கு முன்பும் டானிக்கை கட்டிவிட்டால் வேர் விரைவாக உறிஞ்சி விடும். தென்னை மரங்களுக்கு 6 மாதத்திற்கு ஒரு முறை வேர் வழியாக ஊட்ட மருந்து டானிக்கை செலுத்துவது நல்லது.

    பொதுவாக ஒரு மரத்திற்கு 200 மில்லி என்ற அளவுக்கு டானிக்கை செலுத்த வேண்டும். இந்த டானிக் பாலிதீன் பைகளில் அடைக்கப்பட்டு சீலிடப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. நீண்ட தூரம் பயணம் செய்யும் விவசாயிகள் எளிதில் இந்த டானிக்கை கொண்டு செல்லும் வகையில் அடர் திரவமாக 2 லிட்டர், 10 லிட்டர் மற்றும் 20 லிட்டர் கேன்களிலும் விற்பனை செய்யப்படுகின்றன.

    இதுபோன்ற கேன்களில் விற்பனை செய்யப்படும் அடர்திரவத்தை டானிக்காக மாற்ற சில உத்திகளை கையாள வேண்டும். அதாவது, 10 லிட்டர் அடர்திரவத்துடன் 40 லிட்டர் குடிநீர் சேர்த்து 50 லிட்டர் டானிக் தயாரிக்கலாம். இவ்வாறு தயாரிக்கப்பட்ட டானிக்கை பாலிதீன் பைகளில் 200 மில்லி என்ற அளவில் அடைத்து மரங்களின் வேர்களில் கட்டிவிடலாம்.

    தென்னை ஊட்டமருந்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள் பல நாட்கள் ஆனாலும் கெட்டுப் போவதில்லை. ஆனால் இதில் கலந்துள்ள வளர்ச்சி ஊக்கிகளின் வீரியம் நாளடைவில் குறைய வாய்ப்புள்ளதால் டானிக்கை தயாரித்த 30 நாட்களுக்குள் மரங்களுக்கு பயன்படுத்துவது நல்லது.

    ×