search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமெரிக்க அதிபர் தேர்தல் 2024"

    • போராட்டத்தின் போது காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நால்வர் உயிரிழந்தனர்
    • குடியரசு கட்சியின் பிற வேட்பாளர்களும் விலக வேண்டும் என்றார் விவேக்

    அமெரிக்காவில் அடுத்த வருடம் நவம்பர் மாத காலகட்டத்தில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது.

    தற்போதைய அதிபரான ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் (Joe Biden) மீண்டும் போட்டியிட உள்ளார். அவரை எதிர்த்து குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் (Donald Trmup) தீவிரமாக களம் இறங்கி உள்ளார்.

    கடந்த 2020ல் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றதாக அங்கீகரிக்கப்பட்டு சான்றிதழ் அளிக்கப்படும் நிலையில் டிரம்பின் ஆதரவாளர்கள் பாராளுமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர்.

    அமெரிக்க சட்டத்தின்படி தேசத்துரோகமாக கருதப்படும் இந்த செயலுக்கு தூண்டுதலாக டிரம்ப் செயல்பட்டதாக அவர் மீது கொலராடோ (Colorado) மாநில நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்தது.

    இந்நிலையில் வழக்கின் விசாரணை முடிந்து கொலராடோ நீதிமன்றம், 2024 அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு டிரம்பிற்கு தடை விதித்துள்ளது. அந்நாட்டு தேர்தல் முறைப்படி குடியரசு கட்சியின் "பிரைமரி" (primary) தேர்தல் எனப்படும் முதல்நிலை வாக்குப்பதிவில் டிரம்பின் பெயர் வாக்குச்சீட்டில் இருக்க கூடாது என உத்தரவிட்டது.

    இதை எதிர்த்து டிரம்ப் மேல்முறையீடு செய்ய உள்ளார்.

    குடியரசு கட்சி சார்பில் போட்டியிட விரும்பும் பிற வேட்பாளர்களில் ஒருவரான இந்திய வம்சாவளி தொழிலதிபர் விவேக் ராமசாமி, "இதை சட்டவிரோதமான நடவடிக்கையாக பார்க்கிறேன். இது அமெரிக்காவில் மோசமான விளைவை ஏற்படுத்தும். டிரம்ப் பெயர் வாக்குச்சீட்டில் இடம் பெறாமல் இருந்தால் நானும் போட்டியிலிருந்து விலகுவேன். இதே போன்று குடியரசு கட்சியின் பிற வேட்பாளர்களும் விலக வேண்டும் என வலியுறுத்துகிறேன்" என எக்ஸ் சமூகவலைதளத்தில் தனது அதிகாரபூர்வ கணக்கில் பதிவிட்டுள்ளார்.

    இது ஒரு புறமிருக்க, தேர்தலில் கொலராடோ ஜனநாயக கட்சிக்கே அதிக சாதகமானது என்பதால் டிரம்பிற்கு விதிக்கப்பட்டுள்ள தீர்ப்பும் மேல்முறையீடும் பெரிதாக தேர்தல் முடிவில் மாறுதலை ஏற்படுத்தாது என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்தனர்.

    • விவேக்கின் நிகர சொத்து மதிப்பு $630 மில்லியன் என கணக்கிடப்பட்டுள்ளது
    • கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 42 பிரசார கூட்டங்களில் பங்கேற்றுள்ளார் விவேக்

    அமெரிக்காவில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் களமிறங்க உள்ள நிலையில், அவரை எதிர்த்து முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தீவிரமாக களம் இறங்கி நாடெங்கிலும் பிரசாரம் செய்து வருகிறார்.

    சில மாநிலங்களில் டிரம்ப் மீது பதிவாகி உள்ள வழக்குகளின் தீர்ப்பை பொறுத்தே அவரது அரசியல் பயணம் அமையும் என்பதால், குடியரசு கட்சியில் டிரம்பிற்கு மாற்றாக உள்ள வேட்பாளர்களில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஓஹியோ (Ohio) மாநில தொழிலதிபர் விவேக் ராமசாமி (38) தனக்கு ஆதரவு தேடும் முயற்சியில் தீவிரமாக உள்ளார்.

    அமெரிக்காவின் கனெக்டிகட் (Connecticut) மாநிலத்தில் உள்ள புகழ் பெற்ற யேல் (Yale) சட்ட கல்லூரியில் பட்டம் பெற்ற விவேக்கின் நிகர சொத்து மதிப்பு $630 மில்லியன் என கணக்கிடப்பட்டுள்ளது.

    மிக கடுமையாக பிரசாரம் செய்து, அமெரிக்கா சந்திக்கும் சவால்கள் குறித்தும் அவற்றை எதிர்கொள்ள தன் வசம் உள்ள திட்டங்கள் குறித்தும் ஆழமாக விவரித்து நாடெங்கிலும் விவேக் பயணம் செய்து வருகிறார்.

    சனிக்கிழமையுடன் நிறைவடைந்த கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 42 பிரசார கூட்டங்களில் பங்கெடுத்துள்ளார் விவேக் ராம்சாமி. 2024 அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு போட்டியிடும் மற்ற எந்த வேட்பாளர்களையும் விட விவேக்கின் பிரசார நிகழ்ச்சிகளின் எண்ணிக்கை அதிகம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    அடுத்த வாரம் 38 நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார் விவேக்.

    ஓய்வின்றி உழைக்கும் அவருக்கு சக்தியாக விளங்குவது எது என கேட்கப்பட்டது.

    அதற்கு பதிலளித்த விவேக், "நாட்டை குறித்து அக்கறையுடன் என் பிரசாரங்களுக்கு வந்து என் பேச்சை கேட்க காத்திருக்கும் மக்களின் சக்திதான் எனக்கு ஊக்க சக்தி.

    மக்களிடமிருந்து விலகி செல்லாமல் பிரசாரம் செய்வதுதான் எந்த மக்களுக்கு பிரதிநிதியாக விரும்புகிறோமோ அவர்களுக்கு பொறுப்பாக இருப்பதை உணர்த்தும் வழி. தொலைக்காட்சி மற்றும் சமூக வலைதளங்கள் வழியாக மக்களுடன் தொடர்பு கொண்டு அவர்கள் உணர்வை புரிந்து கொள்ள முடியும் என நான் நம்பவில்லை.

    அதிர்ஷ்டம் எனும் சொல்லிற்கான எழுத்துக்கள், "உ, ழை, ப், பு" என என் பெற்றோர் கூறிய அறிவுரைதான் எனக்கு கல்வியிலும், பணியிலும், தொழிலிலும், அரசியலிலும் பயனளித்து வருகிறது. " என விவேக் தெரிவித்தார்.

    விவேக்கின் நீண்ட நாள் நண்பர்கள், நாளில் 16 மணி நேரம் வரை உழைக்க தயங்காத விவேக், ஓய்வெடுப்பதற்காக தனியே நேரம் ஒதுக்கியதே இல்லை என அவரது உழைக்கும் திறன் குறித்து தெரிவிக்கின்றனர்.

    ஓடுதல், டென்னிஸ், புஷ்-அப் (push-up) ஆகியவை விவேக் தவறாமல் செய்து வரும் உடற்பயிற்சிகள்.

    • மீண்டும் அதிபராக தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறார் டிரம்ப்
    • பல கண்டங்களிலிருந்தும் அமெரிக்காவிற்கு உள்ளே அகதிகள் குவிகிறார்கள் என்றார் டிரம்ப்

    அமெரிக்காவில் அடுத்த வருடம் அந்நாட்டு பாராளுமன்றத்திற்கான தேர்தல் நடைபெற உள்ளது.

    இருகட்சி ஜனநாயகம் நடைமுறையில் உள்ள அமெரிக்காவில், தற்போது ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடன் பிரதமராக உள்ளார். அவர் மீண்டும் அடுத்த வருட தேர்தலில் பிரதமர் வேட்பாளராக களம் இறங்க உள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட தயாராகி வரும் குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் நாடு முழுவதும் தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறார்.

    இந்நிலையில், அமெரிக்காவின் நியூ ஹேம்ப்ஷையர் (New Hampshire) மாநிலத்தின் டுர்ஹாம் (Durham) நகரில் ஒரு பேரணியில் டொனால்ட் டிரம்ப் உரையாற்றினார்.

    அதில் அவர் தெரிவித்ததாவது:

    ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்கா உள்ளிட்ட பல கண்டங்களிலும் உள்ள பல நாடுகளிலிருந்து அமெரிக்காவிற்கு உள்ளே அகதிகள் குவிந்து வருகின்றனர். அவர்களால் நம் நாட்டு "ரத்தம்" விஷமாகி வருகிறது. அவர்கள் உலகம் முழுவதும் உள்ள மனநல காப்பகங்கள், சிறைச்சாலைகள் உள்ளிட்ட இடங்களை "விஷம்" ஆக்கி வருகின்றனர். மீண்டும் அதிபராக நான் தேர்வானால் இவ்வாறு லட்சக்கணக்கில் மக்கள் சட்ட விரோதமாக நம் நாட்டிற்குள் நுழைவதை முற்றிலும் ஒழித்து விடுவேன்."

    இவ்வாறு டிரம்ப் கூறினார்.

    தனது பிரசாரம் முழுவதும் எல்லைகளை பலப்படுத்த சட்ட விரோதமாக வரும் அகதிகளை தடுக்க மிக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க உள்ளதாக தெரிவித்து வரும் டிரம்ப், ஏற்கெனவே கடந்த செப்டம்பரில் அகதிகளை "அமெரிக்க ரத்தத்தை விஷம் ஆக்குபவர்கள்" என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வாக்களிப்பவர்களுக்கு பொது அறிவு இருப்பதை சோதிக்க வேண்டும் என்கிறார் விவேக்
    • வாக்களிக்கும் உரிமையை கல்வியறிவுடன் கலப்பதை விமர்சகர்கள் எதிர்க்கின்றனர்

    அமெரிக்காவில் அடுத்த வருடம் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியை சேர்ந்த தற்போதைய அதிபர் ஜோ பைடனை எதிர்த்து முன்னாள் அமெரிக்க அதிபரும் குடியரசு கட்சியை சேர்ந்தவருமான முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தீவிரமாக களம் இறங்கி உள்ளார். ஆனால், டொனால்ட் டிரம்ப் மீதுள்ள பல்வேறு வழக்குகளில் வரப்போகும் தீர்ப்பினை பொறுத்தே அவரது அரசியல் எதிர்காலம் அமையும் நிலை உள்ளது.

    இதனால் குடியரசு கட்சி வேட்பாளர்களில் டிரம்பிற்கு அடுத்த நிலையில் அதிக ஆதரவு உள்ள இந்திய வம்சாவளி தொழிலதிபர் விவேக் ராமசாமி ஆதரவு கோரி பிரசாரம் செய்து வருகிறார்.

    பல்வேறு நகரங்களில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் அமெரிக்காவை சூழ்ந்துள்ள சிக்கல்கள் குறித்தும் அவற்றிற்கான தீர்வுகள் குறித்தும் பேசி வரும் விவேக் ராமசாமி, முதன்முறை மற்றும் இளம் வாக்காளர்கள் குறித்து பேசிய கருத்து ஒன்று சர்ச்சையை கிளப்பியுள்ளது.

    அமெரிக்க அரசியலமைப்பு சட்டத்தின்படி 18 வயது நிறைவடைந்தவர்கள் தேர்தல்களில் வாக்களிக்க தகுதி பெறுகிறார்கள்.

    ஆனால், விவேக் ராமசாமி முன்மொழிந்துள்ள மாற்று திட்டத்தின்படி, 18 வயதை எட்டியவர்கள் தேர்தலில் வாக்களிக்க அடிப்படை பொது அறிவிற்கான ஒரு தேர்வை எழுதி வெற்றி பெற வேண்டும் அல்லது 6 மாதங்கள் ராணுவத்தில் பணியாற்றி இருக்க வேண்டும் அல்லது முதல்நிலை அவசர சேவை பணியாளர்களாக சில காலங்கள் பணியாற்றி இருக்க வேண்டும்.

    தனது இந்த நிலைப்பாட்டில் உறுதியாக உள்ள விவேக், வாக்களிக்க விரும்பும் இளைஞர்களுக்கு அடிப்படை பொது அறிவு அவசியம் என கூறுகிறார். தான் வென்றால் இதற்கான அரசியலமைப்பு சட்ட மாறுதல்களை கொண்டு வர உத்தேசித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

    விவேக்கின் இந்த கருத்திற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

    இது கருப்பினத்தவர்களுக்கான வாக்களிக்கும் உரிமையை பறிக்கும் முயற்சி என்றும் பல்வேறு பயனற்ற மற்றும் பதில் தெரியாத கேள்விகள் கேட்கப்பட்டு அவற்றிற்கு பதிலளிக்க முடியாததால், வாக்குரிமை இழக்கும் அபாயம் தோன்றும் என கருத்து தெரிவிக்கும் கருப்பின பிரதிநிதிகள், கல்வியையும் வாக்களிக்கும் உரிமையையும் ஒன்றுடன் ஒன்று கலக்க கூடாது என வலியுறுத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே, இதற்கான அரசியலமைப்பு சட்ட மாறுதலை கொண்டு வர அமெரிக்க பாராளுமன்றத்தின் இரண்டு சபைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிட்ட வேண்டியது அவசியம் என்றும், 4ல் 3 மாநில சட்டசபைகளிலும் இதற்கு ஒப்புதல் பெறப்பட வேண்டும் என்றும் அதனால் இது நிறைவேறுவது கடினம் என்றும் சட்ட வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

    விவேக் ராமசாமி முன்மொழிந்துள்ள மாறுதல்கள் அதிபர் தேர்தலில் அவருக்கும் அவரது குடியரசு கட்சிக்கும் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது வரும் நாட்களில்தான் தெரிய வரும் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

    • வெற்றிகரமான கதாநாயகனாகவும், கலிபோர்னியா கவர்னராகவும் இருந்தார் ஆர்னால்ட்
    • கென்னடி மற்றும் ரீகன் காலம் போன்று பிரசாரம் நடக்கவில்லை என்றார் ஆர்னால்ட்

    அமெரிக்காவில் அடுத்த வருடம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் தற்போதைய அதிபரான ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடன் (81) மீண்டும் போட்டியிட உள்ளார். அவரை எதிர்த்து முன்னாள் அமெரிக்க அதிபரும் குடியரசு கட்சியை சேர்ந்தவருமான டொனால்ட் டிரம்ப் (77) தீவிரமாக களம் இறங்கி உள்ளார்.

    தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் இருந்தாலும், இருவரும் இப்போதே தங்களுக்கு ஆதரவு தேடி பிரசாரம் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில், இந்தியா உட்பட உலகெங்கும் லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்ட தொழில்முறை பாடிபில்டரும், பிரபல ஹாலிவுட் முன்னணி கதாநாயகனும், அமெரிக்காவின் கலிபோர்னியா மாநில முன்னாள் கவர்னருமான அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர் (76) அதிபர் தேர்தல் குறித்து கருத்து தெரிவித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:

    அமெரிக்கர்களை குறித்து கவலைப்படுகிறேன். 2024 தேர்தலில் மீண்டும் ஜோ பைடனுக்கும் டொனால்ட் டிரம்புக்கும் போட்டி என்பது ஏமாற்றமடைய செய்கிறது. இருவருக்கும் அதிக வயதாகி விட்டது என்பதனால் மட்டுமல்ல; அவர்கள் சிறப்பானவர்கள் என்று நான் கருதவில்லை.

    வெள்ளை மாளிகையில் புதிய ரத்தம் வேண்டும். புதிய சிந்தனைகளை உடைய தலைவர்கள் வேண்டும். இரு கட்சிகளிலும் அப்படி ஒரு புதிய முகம் இல்லாதது கவலை அளிக்கிறது.

    பைடன் பேட்டி அளித்தால் அனைத்து பத்திரிகையாளர்களும் அதை படம் பிடிக்கின்றனர். டிரம்ப் எது கூறினாலும் அதையும் படம் பிடிக்கின்றனர். தலைப்பு செய்திகள் முழுவதும் பைடன் அல்லது டிரம்ப் குறித்தே உள்ளது. இந்நிலையில் வேறு ஒரு புதிய முகம் எவ்வாறு உருவாக முடியும்?

    நாட்டின் முன் உள்ள பெரிய சிக்கல்களை எதிர்கொள்ள மிகுந்த திறன் படைத்த ஒருவர் வேண்டும். ஜான் கென்னடி மற்றும் ரொனால்ட் ரீகன் காலகட்ட பிரசாரம் போன்று தற்போது நடைபெறுவதில்லை. இரு கட்சிகளிலும் திறமையானவர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களை ஒன்றிணைக்கும் புதிய முகம் வேண்டும்.

    இவ்வாறு ஆர்னால்ட் தெரிவித்தார்.

    வாக்காளர்களின் மனநிலை குறித்த ஆய்வுகளில் பல அமெரிக்கர்கள், பைடனின் மன ஆரோக்கியம் மற்றும் டிரம்ப் மீது உள்ள வழக்குகள் குறித்து தங்கள் அதிருப்தியை தெரிவித்தனர். வேறு சிலர் மாறி மாறி வரும் ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சிகளுக்கு மாற்றாக ஒரு கட்சி வேண்டும் என்றும் தெரிவித்திருந்தனர்.

    இப்பின்னணியில், ஆர்னால்டின் கருத்தும் இதனையே பிரதிபலிப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

    • இரு கட்சி ஜனநாயக முறையை கடைபிடித்து வரும் நாடு, அமெரிக்கா
    • 'இப்போது வேண்டாம் டிம்' என மக்கள் கூறுவதாக டிம் தெரிவித்தார்

    அமெரிக்காவில் அடுத்த வருடம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது.

    இரு கட்சி ஜனநாயக முறை உள்ள அமெரிக்காவில், ஜனநாயக கட்சி அல்லது குடியரசு கட்சியை சேர்ந்தவர்களே அதிபர்களாக மாறி மாறி பதவி வகிப்பது வழக்கம்.

    தற்போது ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடன் அதிபராக உள்ளார். இவரை எதிர்த்து குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தீவிரமாக களம் இறங்கியுள்ளார்.

    அந்நாட்டு வழக்கப்படி, அதிபர் தேர்தலில் போட்டியிட ஒரு கட்சியின் சார்பில் களமிறங்க விரும்புபவர்கள், நாட்டின் பல இடங்களில் அக்கட்சியின் சார்பாக நடைபெறும் விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டும். அப்போது அமெரிக்கா எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் அதனை கையாள தங்கள் முன்வசம் உள்ள திட்டங்கள் ஆகியவை குறித்து அவர்கள் விளக்க வேண்டும். அது குறித்து வரும் கேள்விகளையும் திறமையாக கையாண்டு சிறப்பான முறையில் பதிலளிக்க வேண்டும். இதற்கு பிறகே யாரை கட்சிகள் அதிபராக களம் இறக்க போகின்றன என்பது தெரிய வரும்.

    குடியரசு கட்சி சார்பில் களம் இறங்க டொனால்ட் டிரம்ப் தீவிரமாக இருந்தாலும், அவர் மீது அந்நாட்டின் பல மாநிலங்களில் கிரிமினல் குற்ற வழக்கு விசாரணை நடைபெறுவதால், அந்த வழக்குகளின் தீர்ப்பை பொறுத்தே அவரது அரசியல் எதிர்காலம் அமையும்.

    டிரம்பிற்கு அடுத்த இடத்தில் இந்திய வம்சாவளி தொழிலதிபரான விவேக் ராமசாமி முன்னிலையில் உள்ளார்.

    இவர்களை தவிர, இப்போட்டியில் பங்கு பெற்று பிரச்சாரம் செய்து வந்தவர்களில் ஒருவர், அமெரிக்க செனட்டர் டிம் ஸ்காட் (Tim Scott). தொடக்கத்தில் பல இடங்களில் அவருக்கு இருந்து வந்த ஆதரவு, நாட்கள் செல்ல செல்ல குறைய ஆரம்பித்தது.

    டிம் தற்போது போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இவர் அமெரிக்காவின் சவுத் கரோலினா மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும் மற்றொரு குடியரசு கட்சி போட்டியாளரான நிக்கி அதே மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    "பூமியிலேயே அற்புதமான மனிதர்களான வாக்காளர்கள் என்னிடம் 'இப்போது வேண்டாம் டிம்' என கூறுவதாக தெரிகிறது" என தனது முடிவு குறித்து டிம் தெரிவித்தார்.

    மே மாதம் முதல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வந்த டிம், "டொனால்ட் டிரம்ப்பை விட தான் எந்த வகையில் சிறப்பானவர்" என்பதை விவாதங்களில் விளக்க தவறியதால், அவருக்கு பின்னடைவு ஏற்பட்டதாக அரசியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

    இந்நிலையில், டிம் ஸ்காட்டை இதுவரை ஆதரித்து பிரச்சாரங்களுக்கு நிதியுதவி செய்து வந்த தொழில் நிறுவனங்கள் மற்றொரு போட்டியாளாரான நிக்கிக்கு ஆதரவு அளிக்க முன்வந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

    • டிக்டாக் செயலியில் இணைந்து விட்டதாக விவேக் செப்டம்பரில் கூறியிருந்தார்
    • அவரது மகளே இதை பயன்படுத்துகிறார் என விவேக் பதில் கூறினார்

    அமெரிக்காவில் அடுத்த வருடம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது.

    இரு கட்சி ஜனநாயக முறை உள்ள அமெரிக்காவில், குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சியை சேர்ந்த இரு வேட்பாளர்கள் ஒருவரை ஒருவர் எதிர்த்து களம் இறங்குவார்கள். தற்போது அங்கு ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடன் அதிபராக உள்ளார்.

    வரவிருக்கும் தேர்தலில், குடியரசு கட்சி சார்பில் எவரை முன்னிறுத்துவது என அக்கட்சியினர் முடிவு செய்ய, போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் பங்கு பெறும் பல விவாத நிகழ்ச்சிகள் அங்கு நடைபெறுவது வழக்கம். அவற்றில் பங்கு பெறும் ஓவ்வொருவரும் அமெரிக்காவின் முன் உள்ள சவால்களையும், அதனை எதிர்கொள்ள அவர்கள் வசம் உள்ள திட்டங்கள் குறித்தும், தங்கள் கருத்துக்களை விரிவாக விளக்குவார்கள். இந்த விவாதத்திற்கு பிறகு கட்சியில் ஒரு இறுதி முடிவு எட்டப்படும். அதன் பின் ஒருமனதாக ஜனநாயக கட்சிக்கு எதிராக அந்த வேட்பாளர் களம் நிறுத்தப்படுவார்.

    தற்போதைய நிலவரப்படி முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்னிலையில் உள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் இந்திய வம்சாவளி தொழிலதிபரான விவேக் ராமசாமி களமிறங்கி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    இதுவரை குடியரசு கட்சியின் வேட்பாளர்கள் பங்கு பெறும் விவாத நிகழ்ச்சிகள் 2 நடந்து முடிந்து விட்டன. தற்போது மூன்றாவதாக அமெரிக்காவின் மியாமி பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு சந்திப்பு நேற்று நடந்தது.

    இதில் விவேக் ராமசாமி, நிக்கி ஹேலி, ரான் டிசான்டிஸ், கிரிஸ் கிரிஸ்டீ, டிம் ஸ்காட் ஆகிய வேட்பாளர்கள் பங்கு பெற்றனர்.

    விவேக் ராமசாமி, கடந்த செப்டம்பர் மாதம், சீன நிறுவனமான பைட் டான்ஸ் (ByteDance) உருவாக்கிய பிரபல டிக்டாக் (TikTok) எனும் செயலியை பயன்படுத்த அதில் கணக்கு தொடங்கி உள்ளதாகவும், இதன் மூலம் இள வயது வாக்காளர்களுக்கு தனது கருத்துக்கள் எளிதாக சென்றடையும் என தாம் நம்புவதாகவும் தெரிவித்தார்.

    ஆனால், சீன மென்பொருள் செயலிகளில் உள்ள பயனர் தகவல்களை சீனா களவாடி, தவறாக பயன்படுத்துவதாக ஒரு பிரச்சாரம் அமெரிக்காவில் பரவி வருகிறது. இச்செயலியை தடை செய்யவும் அங்கு பலர் அரசுக்கு கோரிக்கை வைக்க தொடங்கியுள்ளனர்.

    இந்நிலையில், விவேக் இந்த செயலியை பயன்படுத்தி வருவது குறித்து நிக்கி ஹேலி விமர்சித்திருந்தார்.

    நேற்றைய சந்திப்பில் இது குறித்த விவாதம் நடைபெற்றது.

    அப்போது பதிலளித்த விவேக், "நான் டிக்டாக் செயலியை பயன்படுத்துவதை கடந்த விவாதத்தின் போது நிக்கி கேலி செய்தார். ஆனால், அவரது மகளே அந்த செயலியை நீண்ட காலமாக பயன்படுத்தி வருவது உண்மை. எனவே நிக்கி அவர்களே, முதலில் குடும்பத்தை சரி செய்ய பாருங்கள்" என கூறினார்.

    அப்போது இடைமறித்த நிக்கி, "என் மகளை விவாதத்தில் இழுக்காதீர்கள். நீங்கள் ஒரு கழிவு" என கடுமையாக கூறினார்.

    இதனை கேட்ட பார்வையாளர்கள் கை தட்டி இக்கருத்தை வரவேற்றனர்.

    அதற்கு மீண்டும் பதிலளித்த விவேக், "அடுத்த தலைமுறையினர் இதனை பயன்படுத்துகின்றனர் என்பதனையே நான் குறிப்பிட்டேன்" என பதிலளித்தார்.

    மேற்கத்திய நாடுகளில் நடைபெறும் விவாதங்கள் மேடை நாகரிகத்திற்கு ஏற்ப கண்ணியமான முறையில் நடைபெறுவது வழக்கம். ஆனால், அங்கும் சமீப காலமாக தனிப்பட்ட முறையில் விமர்சனங்கள் வைப்பதும், ஒருவரையொருவர் கடும் சொற்களால் தாக்கி கொள்வதும் அரசியல் விமர்சகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

    • விவேக் ராமசாமி ஆதரவு கோரி பிரச்சாரம் செய்து வருகிறார்
    • 14-வது சட்ட திருத்தத்தை நான் நன்றாக படித்து புரிந்து கொண்டுள்ளேன் என்றார் விவேக்

    அமெரிக்காவில் அடுத்த வருடம் அதிபர் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

    ஜனநாயக கட்சியை சேர்ந்த தற்போதைய அதிபர் ஜோ பைடன் மற்றும் குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் அதிபர் பதவிக்கு தீவிரமாக போட்டியிடுகின்றனர். டொனால்ட் டிரம்ப் மீது பல மாநிலங்களில் வழக்குகள் உள்ளதால் அவர் பதவிக்கு வருவதில் சிக்கல் நீடிக்கிறது. இதனால் அக்கட்சியில் அவருக்கு அடுத்த நிலையில் உள்ள இந்திய வம்சாவளி தொழிலதிபரான விவேக் ராமசாமி தேர்தல் களத்தில் தீவிரமாக உள்ளார். பல ஊர்களுக்கு சென்று தனக்கு ஆதரவு கோரி பிரச்சாரம் செய்து வருகிறார்.

    இந்நிலையில், அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள சிமி வேலி பகுதியில் அமைய பெற்ற ரொனால்ட் ரீகன் நூலகம் மற்றும் அருங்காட்சியகத்தில் குடியரசு கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிட விரும்பும் அனைத்து வேட்பாளர்களும் தங்களது திட்டங்கள் குறித்து விளக்கி விவாதம் செய்யும் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    அந்த விவாதத்தில் விவேக் ராமசாமி அகதிகள் குடியுரிமை குறித்து பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:

    சட்ட விரோதமாக இந்நாட்டில் குடியேறிய பெற்றோர்களின் குழந்தைகள் இந்நாட்டில் பிறந்தால் அக்குழந்தைகளுக்கு வழங்கப்படும் "பர்த்ரைட் சிடிசன்ஷிப்" (birthright citizenship) எனப்படும் பிறப்புரிமை குடியுரிமை முறையை நான் ரத்து செய்து விடுவேன். அரசியலமைப்பு சட்டத்தின் 14-வது திருத்தம் குறித்து எதிர்ப்பாளர்கள் வாதிடலாம். ஆனால், நான் அந்த திருத்தத்தை படித்திருக்கிறேன். அதன்படி நாட்டில் சட்ட விரோதமாக குடியேறி, அதன் பின்பு இங்கு பிறக்கும் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்குவதை தடை செய்வது அரசியலமைப்பு சட்டப்படி சரியானதுதான்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    "இதுவரை 14-வது சட்ட திருத்தம் சரியாக புரிந்து கொள்ளப்படவில்லை" என கூறும் மற்றொரு குடியரசு கட்சியின் போட்டியாளரான டிம் ஸ்காட், விவேக்கின் கருத்துக்களுக்கு ஆதரவு தெரிவித்தார்.

    சில தினங்களுக்கு முன்பாக இந்திய மென்பொருள் மற்றும் உயர் தொழில்நுட்ப பணிகளில் உள்ளவர்கள் பலரும் அடைய துடிக்கும் ஹெச்-1பி விசா எனப்படும் அந்நாட்டில் குடியேறி பணி செய்ய அனுமதிக்கும் வழிமுறையை விவேக் ராமசாமி ரத்து செய்து விடுவதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    ×