search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "30- க்கும் மேற்பட்ட தேக்கு மரங்கள் இருந்தன"

    • பொதுமக்கள் தர்ணா போராட்டம்
    • தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

    ஆலங்காயம்:-

    திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது.

    இந்த பள்ளி வளாகத்தில் சுமார் 50 ஆண்டுகள் பழமையான 30- க்கும் மேற்பட்ட தேக்கு மரங்கள் இருந்தன. தற்போது அந்த பள்ளியில் காலாண்டுதேர்வுகள் முடிந்து விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் நேற்று பள்ளியில் இருந்த தேக்கு மரங்களை வெட்டி எடுத்துக்கொண்டு, லோடு ஆட்டோ ஒன்று வெளிய வந்தது. இதனை பார்த்த அந்த பகுதி மக்கள் உடனே உள்ளே சென்று பார்த்தனர். அப்போது பள்ளி வளாகத்தில் இருந்த 14 தேக்கு மரங்கள் வெட்டப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    அப்போது இது குறித்து பொதுமக்கள் பள்ளி தலைமை ஆசிரியர் துரையிடம் கேட்டனர்.

    பழைய மரங்கள் என்பதாலும், இதை வெட்டி அதில் வரும் பணத்தை வைத்து மாணவர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்ற எண்ணத்தில் கல்விகுழு உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டத்தில் மரங்கள் வெட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, மரங்களை வெட்டியதாக தலைமை ஆசிரியர் கூறினார்.

    அப்போது பொதுமக்கள், மரங்களை வெட்ட உங்களுக்கு யார் அனுமதி கொடுத்தார்கள்? என்று கூறி தலைமை ஆசிரியருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் தலைமை ஆசிரியரை பள்ளியில் இருந்து வெளியே செல்ல விடாமல் பள்ளி முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்த வட்டார கல்வி அலுவலர் சித்ரா மற்றும் ஆலங்காயம் போலீசார் பொதுமக்களிடம் சமரசம் பேசினர். மேலும் இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கபட்டு விசாரணை நடத்தி துறை ரீதியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.

    இதனைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். அப்போது பொதுமக்கள், தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வட்டார கல்வி அலுவலர் சித்ராவிடம் மனு அளித்தனர்.

    இதை தொடர்ந்து வட்டார கல்வி அலுவலர் சித்ரா, ஆலங்காயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சாந்தி ஆகியோர் தலைமை ஆசிரியர் துரையிடம் விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×