search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உரிமைத்தொகை கிடையாது"

    • கார் இருப்பதால் உரிமைத்தொகை கிடையாது என வந்த தகவலை பார்த்து கணவன்-மனைவி அதிர்ச்சி அடைந்தனர்.
    • குறுந்தகவலை ஆதாரமாக கொண்டு வடிவேலு சினிமா பட பாணியில் தனது காரை காணவில்லை என தென்கரை போலீசில் புகார் அளித்தார்.

    திண்டுக்கல்:

    தமிழகம் முழுவதும் பெண்களுக்கு மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 கடந்த செப்டம்பர் மாதம் 15-ந்தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக பயனாளிகள் தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்றது. பல ஊர்களில் தங்களுக்கு உரிமைத்தொகை கிடைக்கவில்லை என்ற புகார் எழுந்தது.

    இதனைதொடர்ந்து மீண்டும் முகாம்கள் அமைத்து பயனாளிகள் விண்ணப்பங்களை அனுப்பலாம் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி தமிழகம் முழுவதும் இதுவரை 7 லட்சம் வரையிலான மனுக்கள் வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகில் உள்ள டி.கள்ளிப்பட்டியை சேர்ந்த ராமமூர்த்தி என்பவர் மனு நிராகரிக்கப்பட்டது. கூலித்தொழிலாளியான இவரது மனைவி ஷீலா மகளிர் உரிமைத்தொகைக்காக விண்ணப்பம் வழங்கி இருந்தார். அந்த மனு நிராகரிக்கப்பட்டு அவருக்கு குறுந்தகவல் வந்தது.

    ஆனால் அதில் வந்த தகவலை பார்த்துதான் ஷீலா மற்றும் அவரது கணவர் அதிர்ச்சி அடைந்தனர். உங்களிடம் கார் இருப்பதால் உரிமைத்தொகை கிடைக்காது என தகவல் வந்தது. தன்னிடம் சைக்கிள் கூட இல்லை என்றும், தனக்கு எப்படி கார் வந்தது என ராமமூர்த்தி அதிர்ச்சி அடைந்தார். அதன்பிறகுதான் தனக்கு வந்த குறுந்தகவலை ஆதாரமாக கொண்டு வடிவேலு சினிமா பட பாணியில் தனது காரை காணவில்லை என தென்கரை போலீசில் புகார் அளித்தார்.

    அந்த புகாரில் வருவாய்த்துறையினர் தன்னிடம் கார் இருப்பதாக சான்றளித்து உள்ளனர். ஆனால் தற்போது அந்த காைர காணவில்லை என மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை ஏற்பதா அல்லது நிராகரிப்பதா என தெரியாமல் தென்கரை போலீசார் குழப்பத்தில் ஆழ்ந்தனர். இதுகுறித்து தாசில்தார் அர்ஜூனனிடம் கேட்டபோது மகளிர் உரிமைத்தொகைக்கான விண்ணப்பத்தில் ஒருசிலருக்கு இதுபோன்ற பிழையுடன் குறுந்தகவல் வருவதாகவும், மீண்டும் அவர்கள் விண்ணப்பித்தால் உரிமைத்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

    ×