search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மருந்து சிகிச்சை"

    • கொடிய நோய்களில் இரண்டாவது என உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது
    • கதிரியக்க சிகிச்சைக்கு வித்திட்ட மேரி கியூரி பிறந்த தினம் நவம்பர் 7

    நோய் தாக்குதலுக்கு உள்ளாகாத மனிதர்கள் இருப்பது அபூர்வம்.

    மனிதர்களுக்கு இயற்கை அளித்துள்ள எதிர்ப்பு சக்தி, சமநிலையான சத்தான உணவு மற்றும் கட்டுப்பாடான வாழ்க்கைமுறை ஆகியவற்றால் மனிதர்கள் பெறுகின்ற ஆரோக்கியம், வாழ்நாள் முழுதும் அவர்கள் உடலை நோய் அண்டாத நிலையில் வைத்திருக்க உதவுகிறது. இதனால் பொதுவாக சாதாரணமாக நோய் வந்தாலும் மனிதர்கள் பெரும்பாலும் மனதளவில் அஞ்சுவதில்லை.

    ஆனால், ஒரு சில நோய்கள் இதற்கு விதிவிலக்காக உள்ளது. அவற்றில் கேன்சர் (cancer) எனப்படும் "புற்றுநோய்" அடங்கும். புற்றுநோயை உலகின் கொடிய நோய்களில் இரண்டாவது என உலக சுகாதார அமைப்பு (WHO) அறிவித்துள்ளது.

    மனிதர்களின் உடலில் உள்ள செல்கள் புதிதாக தோன்றுவதும், வளர்வதும், பிறகு பழைய செல்கள் இறப்பதும் தினந்தோறும் நடைபெறும் ஒரு இயற்கை மாற்றம்.

    ஆனால், ஒரு சிலரின் உடலில் திடீரென செல்கள் கட்டுப்பாடின்றி வளர்வதும், தேவையற்ற புதிய செல்கள் தோன்றுவதும், பழைய செல்கள் இறக்காமல் தங்கி விடுவதும், அபரிமிதமான எண்ணிக்கையில் செல்களை ஒரே இடத்தில் ஒன்று சேர வழிவகுக்கும். இந்நிலையைத்தான் மருத்துவத்தில் 'புற்றுநோய்' என அழைக்கின்றனர்.

    ஒரு இடத்தில் தோன்றும் இந்த நோய், பிற உறுப்புகளுக்கும் பரவும் அபாயம் உள்ளது. புற்றுநோயில் பல வகைகள் உள்ளன.

    புற்றுநோய் சிகிச்சை முறையில் ஒன்றான ரேடியோதெரபி (radiotherapy) எனப்படும் கதிரியக்க சிகிச்சை முறைக்கு வித்திட்டவரான பிரான்ஸ் நாட்டை சேர்ந்த மேரி கியூரி, பிறந்த தினம் நவம்பர் 7.

    அவர் நினைவாக இந்தியாவில் ஒவ்வொரு நவம்பர் 7, "தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்" என கடைபிடிக்கப்படுகிறது.

    2014 செப்டம்பரில் இதற்கான அறிவிப்பை முதன்முதலாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர். ஹர்ஷ்வர்தன் வெளியிட்டார். 



    முன்கூட்டியே துல்லியமாக நோயை கண்டறிவது குறித்தும், நோய் சிகிச்சைக்கான வழிமுறைகளை கணிப்பது குறித்தும் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவது இந்த தினத்தின் நோக்கங்கள்.

    புள்ளி விவரங்களின்படி இந்தியாவில் ஆண்டுக்கு 1 கோடி பேர் இந்நோயால் உயிரிழக்கின்றனர். நம் நாட்டில் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை, 2025ல் சுமார் 3 கோடியாக ஆகலாம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் (ICMR) தெரிவித்துள்ளது.

    வளிமண்டல மாசு அதிகரிப்பால் நுரையீரல் புற்றுநோய் உண்டாகலாம். புகைப்பழக்கம், புகையிலை, குட்கா, பான்மசாலா போன்றவற்றை பயன்படுத்துதல் வாய் புற்றுநோய் தோன்றும் வாய்ப்பை அதிகப்படுத்தும். செயற்கை வேதிப்பொருட்கள் பயன்படுத்தப்பட்ட உணவு மற்றும் தின்பண்டங்கள் அதிகம் உட்கொள்வதால் வயிறு சார்ந்த புற்றுநோய் உண்டாகலாம். மது அருந்துவதால் ஒரு சிலருக்கு உடல் உறுப்புகளில் புற்றுநோய் உண்டாகலாம்.

    மரபுவழி உணவு பழக்கம், தினசரி உடற்பயிற்சி, புகை மற்றும் மது தவிர்த்தல், செயற்கை வேதிப்பொருட்கள் மிகுந்த உணவுகளை தவிர்த்தல் போன்றவை இந்நோய் அண்டாமல் வைக்கும் வழிமுறைகள் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

    ஆரம்ப நிலையில் கண்டறியப்பட்டால் இந்நோயை கட்டுப்படுத்துவது எளிதாகும். பாதிப்பை பொறுத்தே சிகிச்சைக்கான கால அளவு நிர்ணயிக்கப்படுகிறது.

    ×