search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொதிக்கும் எண்ணெய்"

    • தான் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க எண்ணெய் சட்டியில் கையை விட தயார் என கங்கம்மா ஒப்புக்கொண்டார்.
    • தொடர்ந்து பெண் அதிகாரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் தேன் பள்ளி பஞ்சாயத்து எஸ்.டி.காலனியைச் சேர்ந்தவர் குண்டய்யா. இவருடைய மனைவி கங்கம்மா. இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர்.

    கங்கம்மாவிற்கு அதே கிராமத்தைச் சேர்ந்த வேறு ஒருவருடன் தகாத உறவு இருப்பதாக குண்டய்யாவுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    இதனால் மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்து வந்தார். இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என குண்டய்யா அந்த ஊர் பெரியவர்களிடம் தெரிவித்தார். இது சம்பந்தமாக அந்த கிராமத்தில் பஞ்சாயத்து கூடியது.

    அப்போது கங்கம்மா கொதிக்கும் எண்ணெயில் கையை விட வேண்டும். அவரது கையில் காயம் ஏற்பட்டால் நடத்தையில் தவறு இருப்பது உறுதி செய்யப்படும்.

    கையில் காயம் ஏற்படாமல் நன்றாக இருந்தால் அவர் பத்தினி குற்றமற்றவர் என்பதை ஒப்புக்கொள்வோம் என பஞ்சாயத்தில் தீர்ப்பு கூறினர்.

    இதனைக் கேட்டதும் கங்கம்மா அதிர்ந்து போனார். இது போன்ற விபரீத சோதனை வேண்டாம் என அவர் கேட்டுக் கொண்டார். ஆனாலும் கண்டிப்பாக எண்ணெய் சட்டியில் கைவிட வேண்டும் என அவரை சித்ரவதை செய்தனர்.

    இதனை தொடர்ந்து தான் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க எண்ணெய் சட்டியில் கையை விட தயார் என கங்கம்மா ஒப்புக்கொண்டார்.

    தொடர்ந்து பஞ்சாயத்து நடந்த இடத்தில் எண்ணெய் நன்றாக காய்ச்சி கொதிக்க வைத்தனர். சட்டியில் வைத்து பஞ்சாயத்து முன்னிலையில் கொண்டு வந்து வைத்தனர். இதற்கிடையே அந்த பகுதியைச் சேர்ந்த சிலர் இதுகுறித்து சமூக நல அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவலறிருந்து பதறிப் போன சமூகநல அதிகாரி கவுரி என்பவர் சம்பவ இடத்திற்கு வந்தார்.

    கங்கம்மா எண்ணெய் சட்டியில் கைவிடுவதற்காக சென்றார். அந்த நேரத்தில் வந்த அதிகாரி கவுரி அதனை தடுத்து நிறுத்தினார்.

    இது போன்ற செயலில் ஈடுபடுவது தவறு என எச்சரிக்கை விடுத்தார். ஆனால் அவரது பேச்சை மதிக்காத கிராம மக்கள் அதிகாரியிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    தொடர்ந்து பெண் அதிகாரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    அவர்கள் குண்டய்யா மற்றும் அவரது மனைவி கங்கம்மாவை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அவர்கள் இருவருக்கும் அறிவுரை கூறி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் வரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

    ×