search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திண்டுக்கல் தொழிலதிபர்"

    • திண்டுக்கல் தொழிலதிபர் ரத்தினம் வீட்டில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் மீண்டும் சோதனைக்கு வந்தனர்.
    • தொழிலதிபர் ரத்தினம் வீட்டில் சோதனை நடைபெறுவதாக வந்த தகவலையடுத்து அவரது வீட்டின் முன்பு ஆதரவாளர்கள் ஏராளமானோர் குவிந்து வருகின்றனர்.

    திண்டுக்கல்:

    தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்ததாகவும், மணல் ஒப்பந்த குவாரிகளில் வந்த வருமானத்தை சட்ட விரோதமாக பண பரிமாற்றம் செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

    இதனைத் தொடர்ந்து சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த செப்டம்பர் மாதம் 12-ந்தேதி ஒரே நேரத்தில் புதுக்கோட்டை மாவட்டம் முத்துப்பட்டினத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ராமச்சந்திரன், திண்டுக்கல் ஜி.டி.என். சாலையில் உள்ள தொழிலதிபர் ரத்தினத்தின் வீடு, அலுவலகம், உறவினர் கோவிந்தன், மணல் குவாரி அதிபர் கரிகாலன் மற்றும் பொதுப்பணித்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற பொறியாளர் திலகம், நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையா ஆகியோருக்கு சொந்தமான வீடுகள் மற்றும் எழிலகத்தில் உள்ள நீர்வளத்துறை அலுவலகம் என மொத்தம் 34 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.

    2 நாட்களுக்கு மேல் நீடித்த இந்த சோதனையில் மணல் குவாரி அதிபர் ராமச்சந்திரன், திண்டுக்கல் தொழிலதிபர் ரத்தினம், கரிகாலன் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகளின் வீடுகள் ஆகியவற்றில் இருந்து கணக்கில் வராத பல கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள், ரூ.12.82 கோடி ரொக்கம், ரூ.56.86 லட்சம் மதிப்புள்ள 1024 கிராம் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    இந்த சோதனையைத் தொடர்ந்து 10 மாவட்ட கலெக்டர்கள், நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையா, ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை பொறியாளர் திலகம் ஆகியோரை விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது.

    இந்த சம்மனைத் தொடர்ந்து நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையா, நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் சில முக்கிய ஆவணங்களுடன் நேரில் ஆஜராகி விளக்கமளித்தார். மேலும் மாவட்ட கலெக்டர்களுக்கு அனுப்பப்பட்ட சம்மனை எதிர்த்து தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு வருகிற திங்கட்கிழமை விசாரணைக்கு வர உள்ளது.

    இந்நிலையில் திண்டுக்கல் தொழிலதிபர் ரத்தினம் வீட்டில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் மீண்டும் சோதனைக்கு வந்தனர். காலை 9.15 மணிக்கு 2 கார்களில் வந்த 4 பேர் கொண்ட குழுவினர் வீட்டுக்குள் சென்று ரத்தினம் உள்ளாரா? என கேட்டனர். அவர் நேற்று இரவு வெளியூர் சென்று விட்டதாக குடும்பத்தினர் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் தங்கள் 2-ம் கட்ட விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

    சோதனையை முன்னிட்டு அவரது வீட்டுக்கு முன்பு துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படை போலீசார் நிறுத்தப்பட்டனர். ஏற்கனவே அவரது வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஏற்கனவே நடந்த சோதனை 3 நாட்கள் வரை நீடித்த நிலையில் தற்போது எத்தனை நாட்கள் சோதனை தொடரும் என பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே தொழிலதிபர் ரத்தினம் வீட்டில் சோதனை நடைபெறுவதாக வந்த தகவலையடுத்து அவரது வீட்டின் முன்பு ஆதரவாளர்கள் ஏராளமானோர் குவிந்து வருகின்றனர்.

    ×