search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மிச்சாங் புயல்"

    • சாலை மிச்சாங் புயலினால் மிகவும் சேதம் அடைந்து போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் காணப்பட்டது.
    • கவுன்சிலர் சுமித்ரா குமார் போக்குவரத்திற்கு தற்காலிகமாக சீர் செய்தார்.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த பழவேற்காடு லைட் ஹவுஸ் ஊராட்சி பழவேற்காடு காட்டுப்பள்ளி ஒன்றிய சாலை மிச்சாங் புயலினால் மிகவும் சேதம் அடைந்து போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் காணப்பட்டது.

    இதனை அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்பு சமரசம் பேசி சாலையில் மணல் கொட்டி கவுன்சிலர் சுமித்ரா குமார் போக்குவரத்திற்கு தற்காலிகமாக சீர் செய்தார்.

    இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது, சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாக பரவி வருகிறது

    • நேரம் செல்ல செல்ல உமாமகேஸ்வரி நினைத்தது போலவே நடந்தது. கொஞ்சம் கொஞ்சமாக வீட்டுக்குள் வெள்ளம் புகுந்தது.
    • நிலமையை நினைத்து கலங்கிய உமாமகேஸ்வரிக்கும் பயம் சூழ்ந்தது.

    சென்னையை மிதக்க விட்ட வெள்ளத்துக்குள் சிக்கி மீண்டவர்களும், மீட்கப்பட்டவர்களும் திகில் நிறைந்த தங்கள் அனுபவங்களை சொல்வதை கேட்கும் போது மிகப்பெரிய வியப்பை ஏற்படுத்துகிறது.

    அவ்வாறு மீட்கப்பட்டவர்களில் 30 வயதான உமா மகேஸ்வரியும், அவரது 2 மகன்களும் அடங்குவார்கள். இவர் தண்ணீருக்குள் உயிருக்காக போராடியது மிகவும் திகிலானது. அவர் கூறும்போது:-

    எங்கள் சொந்த ஊர் விழுப்புரம். மேற்கு தாம்பரத்தில் குடும்பத்துடன் வாடகை வீட்டில் வசிக்கிறோம். கூலி வேலை பார்க்கிறோம். கடந்த 3-ந்தேதி மாலையில் தொடங்கிய மழை இரவிலும் ஓயாமல் பெய்து கொண்டிருந்தது.

    காலையில் எழுந்ததும் கதவை திறந்து பார்த்தால் வெள்ளக்காடாக காட்சி.

    ஊரெல்லாம் வெள்ளக்காடாக காட்சி அளித்திருக்கிறது. இருப்பினும் வெளியே புறப்பட்ட கணவரிடம், இன்றைக்கு வெளியே போகாதீங்க... மழை வெள்ளம் ஒரு மாதிரி மிரட்டுகிறது. வீட்டுக்குள்ளும் வெள்ளம் வந்து விடுமோ என்று பயமாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

    ஏய்... இதுக்கு போய் பயப்படலாமா? வீட்டுக்குள் எல்லாம் தண்ணீர் வரப்போவதில்லை. தைரியமாக இருங்கள் என்று கூறி விட்டு அவர் வெளியே கிளம்பி சென்று விட்டார்.

    நேரம் செல்ல செல்ல உமாமகேஸ்வரி நினைத்தது போலவே நடந்தது. கொஞ்சம் கொஞ்சமாக வீட்டுக்குள் வெள்ளம் புகுந்தது.

    வெள்ளம் முட்டளவை தாண்டியதும் அவரது மகன்கள் இரண்டு பேரும் 'அம்மா... பயமா இருக்கும்மா...' என்று உமாமகேஸ்வரியை கட்டிப்பிடித்து அழுது இருக்கிறார்கள்.

    நிலமையை நினைத்து கலங்கிய உமாமகேஸ்வரிக்கும் பயம் சூழ்ந்தது. வெளியே எங்கு பார்த்தாலும் கடல் போல் வெள்ளம் நின்றது. சிலர் படகுகளில் சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டதை பார்த்ததும் 'எங்களை காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்..' என்று அபய குரல் எழுப்பி இருக்கிறார்.

    ஆனால் உமாமகேஸ்வரியின் குரல் யாருக்கும் கேட்கவில்லை. அவர்கள் தண்ணீரில் தத்தளித்தது யாருக்கும் தெரியவும் இல்லை.

    வெள்ளம் அதிகரித்து மகன்களை மூழ்கடிக்கும் அளவுக்கு வந்து விட்டது. நிலைமை விபரீதமாகி விடும் என நினைத்த உமாமகேஸ்ரி நாம் இறந்தாலும் பரவாயில்லை. நம் பிள்ளைகள் பிழைத்து கொள்ளட்டும் என நினைத்து இருவரையும் வீட்டுக்குள் இருந்த பரண் (லாப்ட்) மீது தூக்கி உட்கார வைத்துள்ளார்.

    மகன்கள் 'அம்மா நீயும் வந்துரும்மா' என்று கதறி இருக்கிறார்கள். "நான் ஏற முடியாதுடா செல்லம். நீங்கள் பயப்படாமல் பத்திரமாக இருங்கள்" என்று அவர்களை தைரியப்படுத்தி இருக்கிறார்.

    காலை 10 மணியளவில் கதவு மட்டத்துக்கும் மேலே வெள்ளம் வந்து கொண்டிருந்தது. அதை பார்த்ததும் எப்படியும் தப்பிக்க முடியாது என்று கருதி இருக்கிறார். ஒரே அறை உள்ள வீடு அது. வேறு எங்கும் செல்லவும் முடியாது.

    கடைசி கட்ட முயற்சியாக கியாஸ் சிலிண்டரை எடுத்து போட்டு அதன் மீது ஏறி நின்றுள்ளார். இப்படியே சுமார் 12 மணி நேரம் நின்றுள்ளார்.

    இரவில் அந்த வழியாக மீட்பு பணிக்கு சென்ற பேரிடர் மீட்பு குழுவினர் அவர்களை பார்த்துள்ளார்கள்.

    பயந்து நடுங்கிய அவர்களை பார்த்ததும் 'இனி பயப்படாதீர்கள் நாங்கள் காப்பாற்றி விடுவோம்' என்று தைரியம் அளித்து ஒவ்வொருவராக மீட்டு வெளியே கொண்டு வந்தார்கள்.

    உயிர் பிழைத்த 3 பேரும் இன்னும் கொஞ்சம் நேரம் யாரும் வந்திருக்காவிட்டால் செத்திருப்போம் என்று நடுங்கியபடியே கூறினார்கள்.

    • செரப்பணஞ்சேரி வருவாய் ஆய்வாளர் அலுவலகம் ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.
    • அரசு ஆவணங்களை இழந்த பொது மக்கள் நகல் சான்றிதழ்களை பெற சிறப்பு முகாம்கள் நடைபெறும்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    குன்றத்தூர் வட்டத்தில் மிச்சாங், புயலின் தாக்கத்தால் மிக அதிக கனமழை பொழிந்து ஏற்பட்ட பெரு வெள்ளத்தின் காரணமாக சேதமடைந்த குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, பிறப்புச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் இருப்பிடச் சான்றிதழ், வாரிசு சான்றிதழ் பள்ளி கல்லூரி சான்றிதழ்கள் உள்ளிட்ட அரசு ஆவணங்களை இழந்தவர்கள் அவற்றின் நகல் சான்றிதழ்களை பெறுவதற்காக விண்ணப்பிக்க இன்று(11-ந்தேதி) முதல் முதல் 10.01.2024 வரை காலை 10 மணி முதல் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது.

    முகாம்கள் குன்றத்தூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகம், மாங்காடு வருவாய் ஆய்வாளர் அலுவலகம், கொளப்பாக்கம் வருவாய் ஆய்வாளர் அலுவலகம், வரதராஜபுரம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம், செரப்பணஞ்சேரி வருவாய் ஆய்வாளர் அலுவலகம் ஆகிய இடங்களில் நடைபெறுகிறது. எனவே மிச்சாங் புயலினால் ஏற்பட்ட பெரு வெள்ளத்தின் காரணமாக சான்றிதழ்கள் மற்றும் அரசு ஆவணங்களை இழந்த பொது மக்கள் நகல் சான்றிதழ்களை பெற சிறப்பு முகாம்கள் நடைபெறும் இடங்களில் கட்டணமின்றி விண்ணப்பிக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகர் 6-வது பிரதான சாலையில் தண்ணீர் அதிக அளவில் தேங்கி காணப்படுகிறது.
    • சோழிங்கநல்லூர் விப்ரோ தெருவில் சுமார் 2 கி.மீ தூரத்துக்கு சாலையில் வெள்ளம் தேங்கியுள்ளது.

      சென்னை:

    'மிச்சாங்' புயல் காரணமாக சென்னையில் கடந்த 3 மற்றும் 4-ந்தேதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் சென்னை நகரமே வெள்ளத்தில் மூழ்கியது. ஏராளமான வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. சாலைகள் மற்றும் தெருக்களிலும் தண்ணீர் சூழ்ந்து காணப்பட்டது. இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்தன.

    மழை ஓய்ந்த பிறகும் அனைத்து இடங்களிலும் தொடர்ந்து 2 நாட்கள் தண்ணீர் தேங்கி நின்ற நிலையில் அதன் பிறகு வெள்ளம் வடியத் தொடங்கியது. வெள்ளம் வடியாத தெருக்களில் ராட்சத மோட்டார்கள் மூலம் தண்ணீர் அகற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மழை ஓய்ந்து 1 வாரம் ஆகியும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல இடங்களில் இன்னும் வெள்ளம் வடியவில்லை. சுமார் 200-க்கும் மேற்பட்ட தெருக்களில் வெள்ளம் வடியாமலேயே காணப்படுகிறது. இந்த தெருக்களில் ராட்சத மோட்டார்கள் மூலம் மழைநீரை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. ஆனாலும் வெள்ளம் வடியவில்லை.

    பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையில் யமுனா நகர் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டன. இங்கு 15 தெருக்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. ஒரு வாரமாக 10 அடிக்கு மேல் தண்ணீர் நின்று கொண்டு இருந்த நிலையில் தற்போது இடுப்பளவுக்கு தண்ணீர் காணப்படுகிறது. இதனை வெளியேற்ற ஊராட்சி நிர்வாகம் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் தண்ணீர் வடியாமல் உள்ளது.

    இந்த நிலையில் இன்று முதல் பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்கள், பொதுமக்களை ஏற்றி செல்ல பழவேற்காட்டில் இருந்து மோட்டார் படகு வரவழைக்கப்பட்டது. இந்த படகில் 3 ஊழியர்கள் பணியில் உள்ளனர். இடுப்பளவு தண்ணீரில் பொதுமக்கள் ஆபத்தான முறையில் பயணம் செய்து வந்த நிலையில் மக்கள் நலனை கருத்தில் கொண்டு போக்குவரத்திற்காக மாவட்ட நிர்வாகம் இத்தகைய மோட்டார் படகை ஏற்பாடு செய்துள்ளது. அதில் ஏறி இன்று மாணவ-மாணவிகள் பள்ளிக்கு சென்றனர். மேலும் தண்ணீரை வெளியேற்ற ஏற்கனவே டிராக்டர்களுடன் 7 மோட்டார்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது கூடுதலாக 160 குதிரை திறன் கொண்ட புதிய மோட்டார் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் தண்ணீர் முழுமையாக வெளியேற்றப்பட்டு மின் இணைப்புகள் வழங்கப்படும் என்று ஊராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவேற்காடு மெட்ரோ சிட்டி 6-வது தெருவில் 100 வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. அந்த தண்ணீரும் இன்னும் வடியவில்லை. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

    சென்னை திருநின்றவூரில் 100-க்கும் மேற்பட்ட தெருக்களில் தேங்கிய வெள்ளம் இன்னும் வடியவில்லை. திருநின்றவூர் பெரியார்நகர், திருவள்ளுவர் தெரு, பாரதியார் தெரு, முத்தமிழ் தெரு, சுதேசி நகர், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, திருவேங்கட நகர் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட தெருக்களில் சுமார் 2 ஆயிரம் குடும்பங்கள் உள்ளன. இவர்கள் அந்த பகுதியில் தனியார் பள்ளிகளில் அமைக்கப்பட்டு இருந்த நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர்.

    இந்த நிலையில் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டதால் அவர்கள் தேங்கி நிற்கும் தண்ணீரை பொருட்படுத்தாமல் தங்கள் வீடுகளுக்கு சென்று விட்டனர். அவர்களுக்கு போலீசாரும், தன்னார்வலர்களும் படகில் சென்று உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வினியோகம் செய்து வருகிறார்கள். இன்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் பல மாணவ-மாணவிகள் படகிலேயே பள்ளிக்கு சென்றனர். பெரியார் நகரில் தண்ணீரை வெளியேற்றுவதற்காக கொசவன்பாளையம் பகுதியில் விவசாய நிலத்தில் பள்ளம் தோண்டி 50 மீட்டர் தூரத்துக்கு தற்காலிக கால்வாய் அமைத்து தன்ணீரை கூவம் ஆற்றில் விழச்செய்து வெளியேற்றுகிறார்கள். இதற்காக திருவள்ளூர்- பூந்தமல்லி சாலையிலும் குறுக்கே வெட்டப்பட்டு கால்வாய் அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் அந்த வழியாக போக்குவரத்து நடைபெறவில்லை.

    கொடுங்கையூர் சேலவாயல் தென்றல் நகர் 2-வது தெருவில் சுமார் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த பகுதியில் தேங்கிய மழை வெள்ளம் இன்னமும் வடியவில்லை. முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கி கிடப்பதால் பொது மக்கள் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இந்த தண்ணீர் சாக்கடையாக மாறி விட்டதால் நோய்த்தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது. சேலவாயல் ராகவேந்திரா நகரில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த பகுதியிலும் இன்னும் தண்ணீர் வடியவில்லை. அங்கு டிராக்டர் மோட்டார் மூலம் தண்ணீர் அகற்றப்பட்டு வருகிறது. திருவொற்றியூர் பெரியார் நகர் பகுதியில் உள்ள 2 தெருக்களில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்கு இன்னும் வெள்ளம் தேங்கி காணப்படுகிறது.

    ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகர் 6-வது பிரதான சாலையில் தண்ணீர் அதிக அளவில் தேங்கி காணப்படுகிறது. இந்த பகுதி பக்கிங்காம் கால்வாயை ஒட்டி உள்ளதால் இங்கு இன்னும் வெள்ளம் வடியாமல் உள்ளது. இந்த பகுதியில் மேலும் 5 தெருக்களில் லேசான அளவில் தண்ணீர் தேங்கி காணப்படுகிறது. சோழிங்கநல்லூர் விப்ரோ தெருவில் சுமார் 2 கி.மீ தூரத்துக்கு சாலையில் வெள்ளம் தேங்கியுள்ளது. இங்கு முட்டளவுக்கு தண்ணீர் தேங்கி காணப்படுவதால் இங்கு வசிக்கும் மக்கள் கடும் சிரமத்தை சந்திக்கிறார்கள்.

    மேலும் போரூர் அருகேயுள்ள ஆலப்பாக்கம் மெயின்ரோடு, பரணிபுத்தூர் அருகேயுள்ள மாங்காடு மெயின்ரோடு, அய்யப்பன்தாங்கல், பெரிய கொளத்துவாஞ்சேரி, வளசரவாக்கம் விஜயாநகரில் உள்ள சில பகுதிகள், போரூர் பெண்கள் அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகம் ஆகிய பகுதிகளிலும் தண்ணீர் இன்னும் வடியவில்லை. தொடர்ந்து இந்த பகுதிகளில் மோட்டார் மூலம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    • நிவாரண நிதியை 3 பிரிவுகளாக வழங்க அரசு திட்டம்.
    • 16-ந்தேதி முதல் டோக்கன் வழங்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

    சென்னை:

    சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் மிச்சாங் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6000 நிவாரண நிதி வழங்கப்படும் என அரசு அறிவித்து இருந்தது. இதற்காக பொதுமக்களுக்கு 16-ந்தேதி முதல் டோக்கன் வழங்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

    இந்த நிவாரண நிதியை 3 பிரிவுகளாக வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாக இன்று கூறப்படுகிறது. அதாவது,

    * ரேசன் அட்டை வைத்திருப்போர்.

    * ரேசன் அட்டைக்கு விண்ணப்பித்திருந்தாலும் நிவாரண தொகை.

    * சென்னையில் பல ஆண்டுகளாக வசிப்போர் வாடகை ஒப்பந்தம், கேஸ் பில் உள்ளிட்ட ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு நிவாரண நிதியை வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • தமிழக அரசு நிவாரண நிதியை ரேசன் கடைகள் மூலம் கொடுப்பதால் அதிகளவில் முறைகேடு ஏற்படும்.
    • வெள்ள நிவாரண நிதியை வங்கிக் கணக்கில் செலுத்துவதால் தமிழக அரசிற்கு எந்தவித பிரச்சனையும் இருக்காது.

    சென்னை:

    மிச்சாங் புயல் மழையால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களை சேர்ந்த மக்களுக்கு நிவாரண நிதியாக ரூ.6 ஆயிரம் ரேசன் கடைகள் மூலமாக வழங்கப்படும் என்று தமிழக அரசு கடந்த வாரம் அறிவித்தது. இதைதொடர்ந்து அதற்கான ஏற்பாடுகளையும் செய்து வருகிறது.

    இந்நிலையில், வெள்ள நிவாரண நிதியை வங்கிக்கணக்கில் செலுத்தக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    சென்னையை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ராமதாஸ் என்பவர் தாக்கல் செய்த மனுவில், தமிழக அரசு நிவாரண நிதியை ரேசன் கடைகள் மூலம் கொடுப்பதால் அதிகளவில் முறைகேடு ஏற்படும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதி சென்றடையாமல் இருப்பதற்கும் வாய்ப்பு உள்ளது. வெள்ள நிவாரண நிதியை வங்கிக் கணக்கில் செலுத்துவதால் தமிழக அரசிற்கு எந்தவித பிரச்சனையும் இருக்காது என கூறியுள்ளார்.

    • மிச்சாங் புயலால் வரலாறு காணாத பேய் மழையும், வெள்ளமும் தலை நகரை மூழ்கடித்துவிட்டது.
    • தொழில் அதிபர்களும் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக நிதி வழங்கினார்கள்.

    சென்னை:

    மிச்சாங் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு முக்கிய பிரமுகர்கள் பலர் நிதி வழங்கி வருகின்றனர்.

    அந்த வகையில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ இன்று தலைமைச் செயலகம் சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கட்சியின் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத சம்பளத் தொகையான ரூ.10 லட்சத்து 20 ஆயிரத்துக்கான காசோலையை வழங்கினார்.

    பின்னர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-


    மிச்சாங் புயலால் வரலாறு காணாத பேய் மழையும், வெள்ளமும் தலை நகரை மூழ்கடித்துவிட்டது , கடல் அலை 10 அடி உயரம் வந்ததால் கடல் வெள்ள நீரை உள்வாங்கவில்லை.

    திராவிட மாடல் ஆட்சியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் வழிகாட்டு தலால் அனைத்து துறை அதிகாரிகளும் இரவு பகலாக பணியாற்றி மக்களை மீட்டுள்ளனர்.

    ரூ.5 ஆயிரம் கோடி கேட்டதில் 20 சதவீதத்தையே மத்திய அரசு கொடுத்து உள்ளது. முன்பு பா.ஜ.க. வுடன் கூட்டு வைத்திருந்தவர்கள், பா.ஜ.க.விடம் பேசி அந்த நிதியை பெற்றுத் தரலாமே..?


    ம.தி.மு.க. சட்டமன்ற , பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒருமாத ஊதியம் மற்றும் ம.தி.மு.க. கட்சி நிதி என மொத்தம் ரூ.10 லட்சத்து 20 ஆயிரம் புயல் வெள்ள நிவாரணப் பணிக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு காசோலையாக ஒப்படைத்துள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதே போல் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் ரூ.10 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார்.

    மேலும் தொழில் அதிபர்களும் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக நிதி வழங்கினார்கள்.

    • சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 4 மட்டும் இன்று செயல்படவில்லை.
    • வெள்ளம் பாதித்த பகுதிகளில் கடைசி தண்ணீர் வடியும் வரை பணிகள் மேற்கொள்ளப்படும்.

    சென்னை:

    மழை வெள்ள பாதிப்புக்கு பிறகு பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. இதையடுத்து மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் சுகாதார பணிகள் தீவிரப்படுத்துவது குறித்து சென்னை மாநகராட்சி கமிஷனர் ஜெ.ராதாகிருஷ்ணன் நுங்கம்பாக்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு செய்தார்.

    அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 4 மட்டும் இன்று செயல்படவில்லை. தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. நாளை பள்ளியை திறக்க மாற்று ஏற்பாடு செய்யப்படும். குடிநீர், கழிவறை, கொசுக்கள் பாதிப்பு இல்லாமல் இருக்க பொது சுகாதாரத்துறை மூலம் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    வெள்ளம் பாதித்த பகுதிகளில் கடைசி தண்ணீர் வடியும் வரை பணிகள் மேற்கொள்ளப்படும்.

    வெள்ளம் வடிந்த பகுதிகளில் தோல் சம்பந்தப்பட்ட நோய்கள், சேற்றுப்புண், சுவாச பிரச்சனை போன்றவை ஏற்படும். எலி காய்ச்சல் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. எனவே அதற்கான மருந்து, மாத்திரை சாப்பிட வேண்டும்.

    இதுவரை 35 ஆயிரம் மெட்ரிக் டன் குப்பை அள்ளப்பட்டுள்ளது. களப் பணியாளர்கள் முழு வீச்சில் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    எண்ணூரில் எண்ணெய் பாதித்த வார்டு 1, 2 பகுதிகளுக்கு சுற்றுச்சூழல் அதிகாரிகள் மற்றும் தலைமை செயலாளர் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். சி.பி.சி.எல். நிறுவனத்துடன் ஆலோசனை நடத்தினர். தனிக்குழு ஆய்வு மேற்கொள்கிறது. எண்ணெய் பாதிப்பை தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு கூடுதலாக நிவாரண நிதி வழங்கப்படும்.

    நிவாரணப் பணிகள் முடிந்தாலும் மறுவாழ்வு பணி, மீட்பு பணி போன்றவை தொடர்ந்து நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பள்ளிகள், கல்லூரிகளில் மழை மற்றும் வெள்ளநீர் சூழ்ந்து இருந்தால், அங்கு பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன.
    • மழை வெள்ளத்தால் மாணவ-மாணவிகளுக்கு எத்தகைய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன என்று கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

    சென்னை:

    மிச்சாங் புயல் மழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. மழை ஓய்ந்த நிலையிலும், வெள்ள நீரால் சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட மக்கள் பெரும் சிரமத்தை சந்தித்தனர். மழை, வெள்ள நீரை கருத்தில் கொண்டு சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு கடந்த வாரம் திங்கட்கிழமை முதல் தொடர் விடுமுறை விடப்பட்டது.

    செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் முதல் 2 நாட்களுக்கு பொது விடுமுறை விடப்பட்ட நிலையில், அதன் பிறகு வெள்ள நீர் அதிகம் சூழ்ந்திருந்த பகுதிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது.

    இதேபோல், கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டது. இந்த நிலையில் தொடர் விடுமுறைக்கு பிறகு, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகள் இன்று (திங்கட்கிழமை) முதல் இயங்கத் தொடங்கின.


    பள்ளிகளை பொறுத்தவரையில் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 14 பள்ளிகளில் வெள்ள நீர் வடியாத நிலை இருப்பதாகவும், அதிலும் சென்னையில் மட்டும் 6 பள்ளிகள் உள்ளதாகவும் சொல்லப்பட்டது. அந்த பள்ளிகளில் கடந்த 2 நாட்களாக போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் நடந்தன.

    அதேபோல், இந்த 4 மாவட்டங்களில் இருக்கும் 17 அரசு மருத்துவ கல்லூரிகளில் 2 கல்லூரிகளை தவிர பிற கல்லூரிகளில் தண்ணீர் வடிந்து, மாணவ-மாணவிகள் கற்கும் சூழல் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

    அவ்வாறு மழைநீரால் சூழ்ந்து இருக்கும் பள்ளிகள், கல்லூரிகளை திறப்பது குறித்த முடிவை அந்தந்த மாவட்ட கலெக்டர் முடிவு செய்வார்கள் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

    தொடர் விடுமுறைக்கு பிறகு பள்ளிகள், கல்லூரிகள் இன்று திறக்கப்பட உள்ள நிலையில், மாணவ-மாணவிகளுக்கு பாதுகாப்பான கல்வி கற்கும் சூழலை ஏற்படுத்த கல்வித்துறை சார்பில் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டு, தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    பள்ளிகள், கல்லூரிகளில் மழை மற்றும் வெள்ளநீர் சூழ்ந்து இருந்தால், அங்கு பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன. அதனை பின்பற்றி மாணவ-மாணவிகளுக்கு வகுப்புகளை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    4 மாவட்டங்களிலும் தமிழக அரசு சுமார் ரூ.2 கோடி செலவு செய்து பள்ளிகளை சீரமைத்து உள்ளது. 400-க்கும் மேற்பட்ட பள்ளிகள் முழுமையாக சுத்தப்படுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக இன்று திட்டமிட்டபடி சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களிலும் பள்ளிகள் இயங்கின.

    மாணவ-மாணவிகள் ஒரு வாரத்திற்கு பிறகு வழக்கமான உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்தனர். ஆனால் இன்று பாடங்கள் நடத்தப்படவில்லை. அதற்கு மாறாக மழை வெள்ளத்தால் மாணவ-மாணவிகளுக்கு எத்தகைய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன என்று கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

    எத்தனை மாணவர்களுக்கு சீருடைகள் சேதமடைந்துள்ளன என்று ஆய்வு செய்யப்பட்டது. அதுபோல எத்தனை மாணவர்களுக்கு மழை வெள்ளத்தில் சிக்கி பாட புத்தகங்கள் நாசமாகி விட்டன என்று கணக்கிடப்பட்டது. அனைத்து பள்ளிகளிலும் இன்று காலை தொடங்கி மாலை வரை இந்த பணி நடைபெறுகிறது.

    இன்று மாலை கணக்கெடுப்பு முடிந்த பிறகுதான் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களிலும் மாணவ-மாணவிகளுக்கு எந்தெந்த பொருட்கள் எவ்வளவு தேவை என்பது தெரியவரும். அதன் அடிப்படையில் பாட புத்தகங்கள், சீருடைகள் அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.

    நாளை (செவ்வாய்க் கிழமை) மாணவ-மாணவிகளுக்கு புதிய பாட புத்தகங்கள், நோட்டுகள் மற்றும் சீருடைகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

    • அதிக மழை பெய்ததால் சென்னை உள்பட 4 மாவட்ட மக்களும் தண்ணீரில் தத்தளித்து இப்போதுதான் பாதிப்பில் இருந்து மீண்டு வருகின்றனர்.
    • தமிழ்நாடு முழுவதும் 2.19 கோடி அரிசி ரேசன் கார்டுதாரர்களுக்கு பச்சரிசி 1 கிலோ, சர்க்கரை மற்றும் ரூ.1000 கடந்த ஆண்டு பொங்கலுக்கு வழங்கப்பட்டது.

    சென்னை:

    தமிழகத்தில் ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகையை மக்கள் அனைவரும் சிறப்பாக கொண்டாடும் வகையில் பொங்கல் பொருட்களுடன் ரொக்கப் பணம் ரூ.1000 வழங்கப்படுவது வழக்கம்.

    அதேபோல் அடுத்த மாதம் வர இருக்கிற பொங்கல் பண்டிகைக்கும் பொங்கல் பொருட்களுடன் ரூ.1000 கிடைக்கும் என பொதுமக்கள் எதிர்பார்க்க தொடங்கிவிட்டனர்.

    இதற்கான முன்னேற்பாடுகளை தமிழக அரசு செய்து வந்த நிலையில் வங்கக்கடலில் உருவான மிச்சாங் புயல் சில நாட்களுக்கு முன்பு சென்னையிலும் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் அதிக பாதிப்பை ஏற்படுத்தியது. இங்கு அதிக மழை பெய்ததால் சென்னை உள்பட 4 மாவட்ட மக்களும் தண்ணீரில் தத்தளித்து இப்போதுதான் பாதிப்பில் இருந்து மீண்டு வருகின்றனர்.

    தமிழக அரசும் சென்னை உள்பட 4 மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரணமாக ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. வருகிற 16-ந்தேதி டோக்கன் வழங்கி 10 நாட்களில் இந்த பணத்தை மக்களுக்கு வழங்க இருக்கிறார்கள்.

    ரேசன் கடைகள் மூலம் இந்த பணத்தை கொடுத்து முடித்ததும், அடுத்த மாதம் (ஜனவரி) பொங்கல் பரிசு பொருட்களுடன் ரூ.1000 வழங்க வேண்டிய நிலையில் அரசு உள்ளது.

    தமிழ்நாடு முழுவதும் 2.19 கோடி அரிசி ரேசன் கார்டுதாரர்களுக்கு பச்சரிசி 1 கிலோ, சர்க்கரை மற்றும் ரூ.1000 கடந்த ஆண்டு பொங்கலுக்கு வழங்கப்பட்டது.

    அதேபோல் அடுத்த மாதம் (ஜனவரி) வர இருக்கிற பொங்கல் பண்டிகைக்கும் ரூ.1000 ரொக்கப் பணத்துடன் ஒரு கிலோ பச்சரிசி மற்றும் சர்க்கரை வழங்கப்படும் என தெரிகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை உணவுத்துறை இப்போதே செய்யத் தொடங்கிவிட்டது.

    தமிழகத்தில் 1 கோடியே 13 லட்சத்து 84 ஆயிரத்து 300 குடும்பத் தலைவிகளுக்கு ஏற்கனவே மாதம் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த பணம் ஒவ்வொரு மாதமும் 15-ந்தேதி அவரவர் வங்கி கணக்கிற்கு சென்று விடுகிறது. அதே போல் இந்த மாதம் 15-ந் தேதி பெண்களுக்கு ரூ.1000 அனுப்பப்படுகிறது. அடுத்த மாதமும் 15-ந்தேதி ரூ.1000 வந்து விடும்.

    இந்த நிலையில் அடுத்த மாதம் (ஜனவரி) ரேசன் கடைகளில் பொங்கல் பொருட்களுடன் ரூ.1000 கிடைக்க உள்ளது. 2.19 கோடி ரேசன் கார்டுதாரர்களுக்கும் இவை வழங்கப்பட உள்ளது. பொங்கலுக்கு 1 வாரத்துக்கு முன்பே இவற்றை வழங்க திட்டமிடப்பட்டு வருகிறது.

    பாராளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு மார்ச் மாதம் அறிவிக்கப்பட உள்ள நிலையில் ஜனவரி மாதம் 2 முறை பொது மக்களுக்கு பணம் கிடைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • முறையற்ற குடிநீர் வழங்கப்படும் போது நோய் தொற்று ஏற்பட வாய்ப்புகள் அதிகமாகும்.
    • சென்னை நகரில் பிளிச்சிங் பவுடர் கூட போடவில்லை.

    விராலிமலை:

    புதுக்கோட்டையில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

    சென்னையில் சுகாதாரத்துறை சுணக்கத்தில் உள்ளது. அரசு நிர்வாகம் செயல் இழந்து விட்டது. தேங்கியிருக்கும் மழை நீரால் மிகப்பெரிய நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது, இறந்து கிடக்கும் பிராணிகளால் பெரிய அளவிலான தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது,

    இயற்கை பேரிடர் என்பது ஒன்று தான், இயற்கை பேரிடரை எதிர்கொள்ள திறன் வேண்டும், மக்களுக்கு நம்பிக்கை என்பது அரசாங்கம் தான். ஆனால் தி.மு.க. அரசு இந்த இயற்கை பேரிடரை எதிர் கொள்வதில் தோல்வி அடைந்து விட்டது.

    தற்போதைய சூழலில் கூட சுகாதாரத்துறை ரொம்ப தாமதமாக இயங்குகிறது. சென்னை நகரில் பிளிச்சிங் பவுடர் கூட போடவில்லை.

    அதேபோல லாரிகளில் வழங்கப்படும் குடிநீரின் சுகாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. குளோரின் கலந்த குடிநீர் வழங்கப்படுகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. எந்த இடத்திலும் அது கண்காணிக்கப்படுவதாக தெரியவில்லை.

    முறையற்ற குடிநீர் வழங்கப்படும் போது நோய் தொற்று ஏற்பட வாய்ப்புகள் அதிகமாகும். எந்த பேரிடர் வந்தாலும் நோய் தொற்று ஏற்படும் என்பது உலக நியதி. அதனை தடுக்க அரசு தயாராக இருந்திருக்க வேண்டும். ஆனால் அரசு எதிர்கொள்ள எந்தவித திட்டமிடலையும் முன்னேற்பாடுகளையும் மேற்கொள்ளவில்லை. ரூ.6 ஆயிரம் நிவாரணத் தொகை அறிவித்து மக்களை ஏமாற்றி விட முடியாது. இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் தான் கேள்வி கேட்க முடியும். இதில் எதிர்க்கட்சிகளை குறை சொல்லி பயனில்லை. இனியாவது சுகாதாரத்துறை விழித்துக் கொண்டு சென்னையில் சுகாதாரத்தை பேணி காக்க முன்வர வேண்டும். குறிப்பாக குடிநீரில் குளோரின் கலந்து உள்ளதா? என்பதை சரி செய்து குளோரின் கலந்து பரிசோதனை செய்து அதன் பிறகு பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும்.

    அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற இயற்கை பேரிடர்களின் அத்தியாவசிய பொருளாக உள்ள குடிநீர் மற்றும் பாலுக்கு எந்த விதமான தட்டுப்பாடும் ஏற்படவில்லை. தற்போதைய தி.மு.க. அரசின் சரியான திட்டங்கள் இல்லாததால் அத்தியாவசிய பொருட்களான பால் மற்றும் தண்ணீர் கூட கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். திறமையாக கையாளாத காரணத்தால் இத்தகைய நிலைமை சென்னையில் ஏற்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பல ரெயில்கள் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு வராத வகையில் நிறுத்தம் செய்யப்பட்டது.
    • ரெயில்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகளிடமிருந்து வந்த வருமானத்தில் ரூ.35 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

    சென்னை:

    மிச்சாங் புயல் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களை புரட்டி போட்டது. புயல் காரணமாக 650 மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் 4 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டன.

    40 ரெயில்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன. பல ரெயில்கள் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு வராத வகையில் நிறுத்தம் செய்யப்பட்டது.

    ரெயில்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகளிடமிருந்து வந்த வருமானத்தில் ரூ.35 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

    ரத்து செய்யப்பட்ட ரெயில்களில் கட்டணத்தை பயணிகள் திரும்ப பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இதற்கு வசதியாக ரெயில் நிலையங்களில் சிறப்பு கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் பயணிகள் தங்களது டிக்கெட் மூலம் பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என தென்னக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    சென்னையில் ஆவடி ,கொருக்குப்பேட்டை, சென்னை கடற்கரை ,எழும்பூர், சென்னை சென்ட்ரல் ஆகியவை வெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளன.

    குறிப்பாக பேசின் பாலத்தில் உள்ள 14-வது எண் பாலத்தின் உயரம் கனமழை பாதிக்காத வகையில் 2 ஆண்டுகளில் புனரமைக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

    ×