search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "3 பேர் ஜெயிலில் அடைப்பு"

    • நயினாம்பட்டி புதுப்பேட்டை பகுதியை சேர்ந்த அன்வர் பாஷா மகன் அசேன் (வயது 36). லாரி டிரைவர்.
    • பாத்திமா என்பவரை கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

    எடப்பாடி:

    சேலம் மாவட்டம் எடப்பாடி நயினாம்பட்டி புதுப்பேட்டை பகுதியை சேர்ந்த அன்வர் பாஷா மகன் அசேன் (வயது 36). லாரி டிரைவர்.

    காதல் திருமணம்

    இவர் அதே பகுதியை சேர்ந்த நிஷா என்ற பாத்திமா என்பவரை கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    இதற்கிடையே கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. குடும்பத்தினர் இருவரையும் சமாதானம் செய்து வந்தனர். கடந்த 1-ந் தேதி அசேன் வீட்டில் சுயநினைவு இல்லாமல் கிடந்தார். 108 ஆம்புலன்சு ஊழியர்கள் வந்து அசேனை பரிசோதித்து பார்த்த போது அவர் இறந்து இருப்பது தெரிய வந்தது.

    காதல் மனைவி தாயுடன் கைது

    இது தொடர்பாக எடப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அவருடைய மனைவி நிஷாவிடம் விசாரித்த போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். போலீசார் அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

    அப்போது, தன்னுடைய தாய் ரஜியா, சித்தி சகிராபானு ஆகியோருடன் சேர்ந்து அசேனை கொலை செய்ததாக தெரிவித்தார். இதையடுத்து போலீசார் நிஷா, ரஜியா, சகிராபானு ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

    திடுக்கிடும் தகவல்

    இந்த கொலை எதற்காக நடந்தது என விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதன் விபரம் வருமாறு:-

    அசேனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இதனால் மது குடித்து விட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்தார். தொடர்ந்து அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் தினம், தினம் கணவர் செய்யும் டார்ச்சரால் சகித்துக் கொண்டு வாழ்வதை விட அவரை தீர்த்துக்கட்டி விட்டு நிம்மதியாக வாழலாம் என நிஷா கருதியதாக தெரிகிறது.

    கழுத்தை இறுக்கினர்

    சம்பவத்தன்று அசேன் மீண்டும் நிஷாவிடம் தகராறு செய்து அவரை அடித்து உதைத்துள்ளார். இதை தடுக்க சென்ற மாமியார் ரஜியாவையும் தாக்கி உள்ளார். உடனே அவர்கள் பதிலுக்கு அசேனை தாக்கி உள்ளனர். தொடர்ந்து நிஷா தனது தாய் ரஜியா, சித்தி சகிராபானு ஆகியோருடன் சேர்ந்து சேலையால் அசேன் கழுத்தை இறுக்கி உள்ளதாக தெரிகிறது. இதில் அசேன் பரிதாபமாக இறந்தார்.

    இதனை அறியாத அவர்கள், அசேன் மூச்சு பேச்சு இல்லாமல் கிடப்பதாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவர்கள் வந்து பார்த்த பிறகுதான் அசேன் இறந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    ஜெயிலில் அடைப்பு

    இதையடுத்து கைதான நிஷா, ரஜியா, சகிராபானு ஆகிய 3 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் பெண்கள் சிறையில் அடைத்தனர்.

    ×