search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகளுக்கு கோவில்"

    • தனது மகள் மீது அளவில்லா அன்பு வைத்த சவுந்தரபாண்டியன், உயிரிழந்த மகளின் நினைவால் தினமும் தவித்து வந்தார்.
    • எனக்கு பெண் குழந்தை என்றால் மிகவும் பிடிக்கும்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள புள்ளமங்கலத்தைச் சேர்ந்தவர் சவுந்தரபாண்டியன் (வயது 40). இவர் திருவாரூரில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மஞ்சுளா என்கிற மனைவியும், சபரிவாசன் என்ற மகனும் உள்ளனர். சக்தி பிரக்யா என்ற மகள் இருந்தாள்.

    கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு 2 வயது குழந்தையாக இருந்த சக்தி பிரக்யா, வீட்டு வாசலில் விளையாடிக்கொண்டு இருந்தபோது வீட்டின் அருகே இருந்த குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தாள்

    தனது மகள் மீது அளவில்லா அன்பு வைத்த சவுந்தரபாண்டியன், உயிரிழந்த மகளின் நினைவால் தினமும் தவித்து வந்தார். தனது மகளை பெண் தெய்வமாக நினைத்த அவர் தனது வீட்டு பூஜை அறையில் மகள் சக்தி பிரக்யா புகைப்படத்தை வைத்து பூஜை செய்து தினமும் வழிபாடு நடத்தினார்.

    இந்த நிலையில் தனது செல்ல மகளுக்கு கோவில் கட்ட சவுந்தரபாண்டியன் முடிவு எடுத்தார். இதனையடுத்து சிறுக, சிறுக சேமித்து வைத்த பணத்தை கொண்டு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தனது வீட்டிற்கு அருகில் கோவில் கட்டும் பணியினை தொடங்கினார். கோவில் கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில் நேற்று முன்தினம் குடமுழுக்கு நடத்தினார். தனது மகளை அம்மனாக பாவித்து, மகளின் சாயலில் அம்மன் சிலை வைத்து சக்தி பிரக்யா அம்மன் என்ற பெயரில் கோவில் கட்டி சவுந்தரபாண்டியன் கும்பாபிஷேகம் நடத்தினார்.

    இறந்த தனது குழந்தையை மறக்க முடியாமல் அந்த குழந்தைக்கு சவுந்தரபாண்டியன் கோவில் கட்டியது அந்த பகுதி மக்களை நெகிழ்ச்சி அடைய செய்தது.

    இதுகுறித்து சவுந்தரபாண்டியன் கூறுகையில், அன்பே தெய்வம் என்பார்கள். நான் எனது மகள் மீது வைத்த அன்பால், 2 வயதில் உயிரிழந்த எனது மகள் என்னுள் தெய்வம் ஆனாள். எனது மகள் உயிருடன் இருந்து அவளுக்கு திருமணம் செய்தால் என்ன செலவு ஆகும் என்பதை நினைத்துத்தான் இதை நான் செய்துள்ளேன்.

    எனக்கு பெண் குழந்தை என்றால் மிகவும் பிடிக்கும். என் மகள் நினைவாக கட்டிய இந்த கோவிலில் ஆண்டுதோறும் திருவிழா நடத்துவேன் என்றார்.

    ×