search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீஸ் கோரிக்கை"

    • சாமி தரிசனத்துக்கு பக்தர்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை நிலவி வருகிறது.
    • குழந்தைகளுடன் வந்தவர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் சாமி தரிசனம் செய்ய போலீசார் உதவி செய்தனர்.

    திருவனந்தபுரம்:

    மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்தமாதம் (நவம்பர்) 16-ந்தேதி திறக்கப்பட்டது. அன்று முதல் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    ஆன்லைன் முன்பதிவு அடிப்படையிலேயே பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இருந்த போதிலும் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் திரண்டு வருகின்றனர். இதன் காரணமாக சாமி தரிசனத்துக்கு பக்தர்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை நிலவி வருகிறது.

    பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் சாமி தரிசனம் செய்வதற்கு தரிசன நேரம் அதிகரிப்பு, வரிசை வளாகங்கள் உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகளை தேவசம்போர்டு செய்திருக்கிறது. இருந்த போதிலும் பக்தர்கள் கூட்டம் கட்டுக் கடங்காத வகையில் இருப்பதால், சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் வெகுநேரம் காத்திருப்பது தொடர் கதையாகவே உள்ளது. இந்த விவகாரத்தில் தலையிட்டிருக்கும் கேரள ஐகோர்ட்டு, சபரிமலையில் ஏற்படும் நெரிசல் குறித்து ஆய்வு செய்ய 12 பேர் அடங்கிய சட்டக்குழுவை நியமிக்க பரிசீலித்து வருகிறது. மேலும் பக்தர்களின் குறைகளை ஆய்வு செய்யவும், பக்தர்களுக்கான வசதிகளை மதிப்பீடு செய்யவும் சட்டக்குழு நியமிக்கப்படும் என்றும் ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.

     

    கடந்த 2 நாட்களாக சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் மிகவும் கட்டுக் கடங்காத வகையில் இருந்தது. இதன் காரணமாக பம்பையிலேயே பக்தர்கள் வரிசையில் காத்திருந்து மலையேற வேண்டிய நிலை நிலவியது. மலைப்பாதை எங்கும் பக்தர்கள் கூட்டமாகவே காணப்பட்டது.

    கோவிலில் நடைப்பந்தல், சன்னிதான பகுதி என அனைத்து பகுதியிலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. பதினெட்டாம் வழியாக ஒரு நிமிடத்திற்கு 80 முதல் 85 பேர் வரை செல்ல அனுமதிக்கப்பட்டனர். குழந்தைகளுடன் வந்தவர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் சாமி தரிசனம் செய்ய போலீசார் உதவி செய்தனர்.

    கோவில் நடை திறக்கப்பட்ட 25 நாட்களில் 16 லட்சம் பக்தர்கள் சபரிமலைக்கு வந்திருக்கின்றனர். கடந்த சில நாட்களாகவே தினமும் 90ஆயிரம் பக்தர்கள் மெய்நிகர் வரிசை வழியாக வந்து சாமி தரிசனம் செய்திருக்கின்றனர். அந்த எண்ணிக்கையை நீதிமன்றம் 80 ஆயிரமாக குறைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    ஆனால் சாமி தரிசனத்துக்கான உடனடி முன்பதிவுக்கு எந்த கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை. இதனால் உடனடி முன்பதிவு செய்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வருகின்றனர். இதன்காரணமாகவே பக்தர்கள் கூட்ட நெரிசல் கட்டுக்கடங்காத வகையில் இருப்பதாக கூறப்படுகிறது.

    இதனால் சாமி தரிசனத்துக்கான உடனடி முன்பதிவை நிறுத்த வேண்டும் என்று போலீசார் வலியுறுத்தியுள்ளனர். இது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.

    ×