search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதிய மசோதாக்கள்"

    • பாரதிய நீதிச்சட்ட மசோதா, பாரதிய குடிமக்கள் பாதுகாப்பு சட்ட மசோதா, பாரதிய சாட்சியங்கள் சட்ட மசோதா என்று அம்மசோதாக்களுக்கு பெயரிடப்பட்டுள்ளது.
    • பாராளுமன்ற நிலைக்குழு பரிந்துரைகளை சேர்க்க பல்வேறு திருத்தங்கள் கொண்டுவர வேண்டி இருக்கும்.

    புதுடெல்லி:

    ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சியங்கள் சட்டம் ஆகியவை இன்னும் நடைமுறையில் உள்ளன.

    தற்காலத்துக்கு ஏற்றவகையில், இவற்றில் மாற்றங்கள் செய்து, 3 புதிய மசோதாக்களை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கடந்த ஆகஸ்டு மாதம் தாக்கல் செய்தார்.

    பாரதிய நீதிச்சட்ட மசோதா, பாரதிய குடிமக்கள் பாதுகாப்பு சட்ட மசோதா, பாரதிய சாட்சியங்கள் சட்ட மசோதா என்று அம்மசோதாக்களுக்கு பெயரிடப்பட்டுள்ளது.

    அவை பாராளுமன்ற நிலைக்குழு ஆய்வுக்கு அனுப்பிவைக்கப்பட்டன. நிலைக்குழு தனது பரிந்துரையை சமர்ப்பித்துள்ளது.

    இந்நிலையில், ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட 3 குற்றவியல் மசோதாக்களையும் நேற்று பாராளுமன்ற மக்களவையில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வாபஸ் பெற்றார்.

    அவற்றுக்கு பதிலாக, பாராளுமன்ற நிலைக்குழு பரிந்துரைகள் சேர்க்கப்பட்ட புதிய குற்றவியல் மசோதாக்களை தாக்கல் செய்தார். அந்த மசோதாக்களை படித்து பார்க்க போதிய கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று எம்.பி.க்கள் கேட்டுக்கொண்டனர்.

    பின்னர், அமித்ஷா பேசியதாவது:-

    பாராளுமன்ற நிலைக்குழு பரிந்துரைகளை சேர்க்க பல்வேறு திருத்தங்கள் கொண்டுவர வேண்டி இருக்கும். அதற்கு பதிலாக, அந்த பரிந்துரைகளுடன் புதிதாக மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்தது.

    முக்கியமாக 5 உட்பிரிவுகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இலக்கணம், வார்த்தைகள் தொடர்பான மாற்றங்கள்தான் பெரும்பாலும் செய்யப்பட்டுள்ளன.

    இந்த மசோதாக்கள் மீது 14-ந்தேதி (நாளை) விவாதம் நடைபெறும். எனவே, மசோதாக்களை படித்து பார்க்க 48 மணி நேர அவகாசம் இருக்கிறது. 15-ந் தேதி ஓட்டெடுப்பு நடத்தப்படும்.

    நிலைக்குழு ஏற்கனவே பரிந்துரைகளை அளித்துவிட்டதால், இம்மசோதாக்களை கூட்டுக்குழுவுக்கு அனுப்ப வேண்டியது இல்லை.

    இவ்வாறு அவர் பேசினார்.

    3 மசோதாக்கள் மீதான விவாதத்துக்கு மொத்தம் 12 மணி நேரம் ஒதுக்கப்படுவதாக சபாநாயகர் ஓம் பிர்லா கூறினார்.

    ×