search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எம்பிக்கள் சஸ்பெண்டு"

    • 15 எம்.பி.க்கள் நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்
    • ஏன், எப்படி இந்த சம்பவம் நடந்தது என தெரிந்தாக வேண்டும் என ஜெய்ராம் ரமேஷ் கூறினார்

    நேற்று மக்களவையில், பார்வையாளர்கள் அரங்கில் இருந்து அவையில் குதித்த இரு இளைஞர்கள், சபாநாயகரை நோக்கி கோஷமிட்டு கொண்டே ஓடி, தங்கள் உடலில் மறைத்து வைத்திருந்த புகை குப்பிகளை வீசினர். அதிலிருந்து மஞ்சள் நிற புகை வெளிக்கிளம்பியதால் அவையில் இருந்த உறுப்பினர்களில் சிலருக்கு கண் எரிச்சல் ஏற்பட்டது.

    உறுப்பினர்களில் சிலர் துணிச்சலாக அந்த இருவரையும் மடக்கி பிடித்து அங்கு விரைந்து வந்த சபை பாதுகாவலர்களிடம் ஒப்படைத்தனர். அதே நேரம், அவைக்கு வெளியே பாராளுமன்ற வளாகத்தில் ஒரு ஆண் மற்றும் பெண் கோஷமிட்டு கொண்டே வர்ண புகை குப்பிகளை வீசினர். அவர்களும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

    நால்வரையும் கைது செய்த புது டெல்லி காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் மக்களவை இன்று கூடிய போது எதிர்கட்சி உறுப்பினர்கள் நேற்றைய சம்பவம் குறித்து விவாதிக்க வேண்டும் என்றும், உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கமளிக்க வேண்டும் என்றும் ஒன்றுபட்டு கோஷங்களை எழுப்பினர். இதனால் அவையில் கூச்சலும், குழப்பமும் நிலவியது.

    இதையடுத்து அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு செய்ததாக 15 பாராளுமன்ற உறுப்பினர்கள் நடப்பு கூட்டத்தொடர் காலம் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

    இந்த சஸ்பென்ஷன் நடவடிக்கை பரவலாக அரசியல் தலைவர்களால் கண்டனம் செய்யப்பட்டு வருகிறது.

    இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்ததாவது:

    உள்துறை அமைச்சர் அமித் ஷா அவைக்கு வர வேண்டும் என்பதைத்தான் நாங்கள் வலியுறுத்தினோம். நேற்றைய சம்பவம் குறித்து அவர் விளக்கம் அளிக்க வேண்டும் என கோரினோம். ஆனால், இந்த சர்வாதிகார அரசால் அதை கூட ஏற்று கொள்ள முடியவில்லை. இது மிகவும் முக்கியமான பிரச்சனை. அவை நடவடிக்கைகள் தொடர வேண்டுமென்றால் அமித் ஷா வந்தே ஆக வேண்டும். எங்களுக்கு வீண் விவாதங்கள் தேவை இல்லை. ஏன், எப்படி இந்த அச்சுறுத்தும் சம்பவம் நடந்தது என தெரிய வேண்டும். பிரதமரும் உள்துறை அமைச்சரும் அமைதி காக்கின்றனர். அவர்கள் இருவரும் அவைக்கு வந்து தங்கள் தரப்பில் கூற வேண்டியதை கூறட்டும். அதற்கு பிறகுதான் அவை நிகழ்ச்சிகள் நடக்கும்.

    இவ்வாறு ஜெய்ராம் கூறினார்.


    ×