search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தென்மாவட்டங்களில் மழை"

    • மழை வெள்ள பாதிப்பால் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
    • 1,064 குடிசை வீடுகள் முற்றிலும் இடிந்து சேதம்.

    நெல்லை :

    நெல்லை மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட சேதங்கள் குறித்து நேற்றுவரை எடுக்கப்பட்ட பாதிப்பு விவரங்களை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

    மழை வெள்ள பாதிப்பால் 16 பேர் உயிரிழந்துள்ளனர். 67 மாடுகள், 135 கன்றுகள், 504 ஆடுகள், 28,392 கோழிகள் உயிரிழப்பு. 1,064 குடிசை வீடுகள் முற்றிலும் இடிந்து சேதம் அடைந்துள்ளது.


    இழப்பீடு நிவாரணமாக ரூ.2.87 கோடி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ரூ.58.14 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

    • நெல்லையில் மழையால் உயிரிழந்த 11 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண தொகையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
    • கால்நடைகளை இழந்தவர்களுக்கும், முழுமையாக சேதமடைந்த குடிசை வீடுகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் நிவாரண தொகையை வழங்கினார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் கடந்த 17 மற்றும் 18-ந்தேதிகளில் பெய் அதீத கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதையடுத்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த வாரம் அறிவித்தார்.

    அதன்படி, இன்று நெல்லையில் மழையால் உயிரிழந்த 11 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண தொகையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். மேலும் கால்நடைகளை இழந்தவர்களுக்கும், முழுமையாக சேதமடைந்த குடிசை வீடுகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் நிவாரண தொகையை வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, எ.வ.வேலு, சபாநாயகர் அப்பாவு, மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பங்கேற்றனர்.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், 100 வருடத்திற்கு பிறகு இதுபோன்ற மழை பெய்துள்ளது. மக்கள் புரிந்து கொள்வார்கள் என்றார்.

    மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வருகை குறித்த கேள்விக்கு, முதலில் பேரிடர் இல்லை என்றார். இப்போ பாதிப்பை பார்க்க வருகிறார்கள். பாதிப்பை பார்த்த பிறகு தகுந்த நிதி தருவார்கள் என நம்புகிறோம் என்றார்.

    • வெள்ள பாதிப்புகளை பார்வையிட புதுச்சேரி துணைநிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தூத்துக்குடிக்கு வந்தார்.
    • தென் மாவட்டங்களில் மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை முறையாக எடுத்திருக்க வேண்டும்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17 மற்றும் 18-ந்தேதிகளில் பெய்த அதீத கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், வெள்ள பாதிப்புகளை பார்வையிட புதுச்சேரி துணைநிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தூத்துக்குடிக்கு வந்தார்.

    அப்போது விமான நிலையத்தில் அவர் கூறியதாவது:-

    * தென் மாவட்டங்களில் மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை முறையாக எடுத்திருக்க வேண்டும்.

    * தென் மாவட்டங்களில் ஆறு, குளங்கள் எதுவும் தூர்வாரப்படவில்லை.

    * இந்த சூழ்நிலையை மாநில அரசு மிக மோசமாக கையாண்டுள்ளது.

    * மழை வெள்ளத்தை கையாள்வதில் மாநில அரசு தோல்வி அடைந்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் மீட்பு மற்றும் சீரமைப்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் நடை பெற்று வருகிறது.
    • தூத்துக்குடி நகர பகுதிகளில் தண்ணீர் தேங்கிய பகுதிகளில் அதனை வெளியேற்ற தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17, 18-ந் தேதிகளில் பெய்த கனமழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மாவட்டம் முழுவதும் பெரும் சேதம் அடைந்தது.

    இந்நிலையில் தூத்துக்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை தமிழக தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா நேற்று பார்வையிட்டார். தூத்துக்குடி மாநகர பகுதியில் வெள்ள சேதங்களை பார்வையிட்ட பின் மாவட்டத்தில் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.

    அந்த வகையில் ஏரல், ஸ்ரீவைகுண்டம், முக்காணி, வாழ வல்லான் மற்றும் தாமிரபரணி கரையோர பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்தார்.

    இந்நிலையில் 2-வது நாளாக இன்றும் தூத்துக்குடியில் ஆய்வு செய்தார். கனமழை காரணமாக கோரம்பள்ளம் குளத்தில் உடைப்பு ஏற்பட்டதன் காரணமாக தூத்துக்குடி மாநகர பகுதிகள் பெரும் சேதத்தை சந்தித்தன.

    இதற்கிடையே உடைப்பு ஏற்பட்ட தாமிரபரணி ஆற்றின் கடைசி குளமான கோரம்பள்ளம் குளத்தை இன்று தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆய்வு செய்தார்.

    அப்போது குளம் உடைப்பு ஏற்பட்டது குறித்து மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி, போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் மற்றும் அனைத்து துறை அதிகாரிகளிடமும் விவரங்கள் கேட்டறிந்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கனமழை பெய்த நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பொதுமக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    அதன்படி நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் மீட்பு மற்றும் சீரமைப்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் நடை பெற்று வருகிறது. இதற்காக அனைத்து துறை அதிகாரிகளும் தீவிரமாக பணியாற்றி வருகிறார்கள்.

    அடிப்படை வசதிகளான மின் கம்பம் சீரமைப்பு, சாலைகள் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. குடிநீர் வசதிகளும் பொதுமக்களுக்கு செய்து கொடுக்கப்பட்டு வருகிறது.

    மழை, வெள்ளத்தால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் எந்த அளவு பாதிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து கணக்கெடுக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி நகர பகுதிகளில் தண்ணீர் தேங்கிய பகுதிகளில் அதனை வெளியேற்ற தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    தூத்துக்குடி மாநகர மற்றும் ஊரக பகுதிகளில் சீரமைப்பு, நிவாரண பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது ரூ.12 கோடியில் கோரம்பள்ளம் குளம் சீரமைக்கப்பட்ட நிலையில் உடைப்பு ஏற்பட்டுள்ளது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, அதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்றார்.

    தொடர்ந்து நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தில் சிக்கி ஏராளமான இருசக்கர, 4 சக்கர வாகனங்கள் பழுதடைந்துள்ளது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு அவர் பதிலளிக்கையில், சமீபத்தில் சென்னையில் பெய்த மழை வெள்ளத்தில்போது வாகனங்கள் பழுதடைந்தது. அப்போது இன்சூரன்ஸ் நிறுவனங்களை அழைத்து முகாம்கள் அமைத்து பாதிக்கபட்ட வாகனங்கள் சீரமைக்கும் பணிகள் நடைபெற்றது. அதேபோல் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்ஸ்சூரன்ஸ் நிறுவனங்களை அழைத்து முகாம் அமைத்து சீரமைப்பு பணிகள் நடத்தப்படும் என்றார்.

    • தூத்துக்குடி மாவட்டத்தில் சமீபத்தில் பெய்த கனமழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
    • சேதம் அடைந்த அரிசி மூட்டைகளை விரைவாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தூத்துக்குடி:

    இந்திய உணவுக்கழகத்துக்கு சொந்தமான குடோன் தூத்துக்குடியில் அமைந்து உள்ளது. இங்கு பொது வினியோகத்துக்கான அரிசி, பருப்பு, கோதுமை உள்ளிட்டவை இருப்பு வைக்கப்படுகின்றன.

    ஆந்திரா மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் அரிசி கொண்டு வரப்பட்டு இருப்பு வைக்கப்பட்டு உள்ளது. இந்த குடோனில் சுமார் 24 ஆயிரம் டன் அரிசியும், 2 ஆயிரம் டன் கோதுமையும் இருப்பு வைக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் சமீபத்தில் பெய்த கனமழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த வெள்ளநீர் தூத்துக்குடி-மதுரை பைபாஸ் ரோட்டில் உள்ள இந்திய உணவுக்கழக குடோனையும் சூழ்ந்து உள்ளே புகுந்தது.

    இதனால் குடோனில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த அரிசி மூட்டைகள் மழைநீரில் நனைந்து சேதம் அடைந்து உள்ளன. அதேபோன்று கோதுமை மூட்டைகளும் நனைந்து முளைக்க ஆரம்பித்து உள்ளன. இதில் சுமார் 8 ஆயிரம் டன் வரை ரேஷன் அரிசியும், 500 டன் வரை கோதுமையும் சேதம் அடைந்து இருப்பதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து தமிழ்நாடு இந்திய உணவுக்கழக ஊழியர் சங்க செயலாளர் கதிர்வேல் கூறுகையில், 'தூத்துக்குடியில் பெய்த கனமழை காரணமாக இந்திய உணவுக்கழக குடோனுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் குடோனில் வைக்கப்பட்டு இருந்த அரிசி மூட்டைகள் மழைநீரில் நனைந்து சேதம் அடைந்து உள்ளன. இதில் சுமார் 6 ஆயிரம் முதல் 8 ஆயிரம் டன் வரை சேதம் அடைந்து இருக்கலாம். இதனால் சேதம் அடைந்த அரிசி மூட்டைகளை விரைவாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் தாமதம் ஆனால் சேதம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

    இதற்கு இந்திய உணவுக்கழக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று தெரிவித்தார்.

    • தற்போது மாவட்டத்தில் இயல்புநிலை திரும்பி உள்ள நிலையில் தாமிரபரணி ஆற்றிலும் வெள்ளம் குறைந்து விட்டது.
    • கால்நடைகளையும் நீர்நிலைகளில் இறக்க வேண்டாம்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் கடந்த 17, 18-ந்தேதிகளில் பெய்த பெருமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் இரு கரைகளையும் தொட்டபடி வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

    தற்போது மாவட்டத்தில் இயல்புநிலை திரும்பி உள்ள நிலையில் தாமிரபரணி ஆற்றிலும் வெள்ளம் குறைந்து விட்டது. இதன் காரணமாக பொதுமக்கள் மீண்டும் ஆற்றில் குளிக்க தொடங்கியுள்ளனர்.

    இந்நிலையில் ஆற்றில் பொதுமக்கள் குளிக்க வேண்டாம் என மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக கலெக்டர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து பெரிய அளவில் குறைந்து இருந்தாலும் வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட மரங்கள், புதர் செடிகள், பாறைகள் ஆங்காங்கே நீருக்கடியில் உள்ளன. மேலும் பல்வேறு நீர் நிலைகளில் சகதி அதிகமாக உள்ளது.

    எனவே தாமிரபரணி ஆறு உள்ளிட்ட நீர் நிலைகளுக்குள் இறங்கினால் இதுபோன்ற புதர்கள், கற்பாறைகள், சகதிகளில் சிக்கிக் கொள்ளக்கூடிய அபாயம் உள்ளது. அவ்வாறு சிக்கிக்கொண்டால் மீட்பது மிகவும் கடினமாகும்.

    எனவே பொதுமக்கள் எக்காரணம் கொண்டும் தாமிரபரணி உள்ளிட்ட ஆறுகள், கால்வாய்கள், ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட எந்த நீர் நிலைகளுக்குள்ளும் இறங்க வேண்டாம். மேலும் கால்நடைகளையும் நீர்நிலைகளில் இறக்க வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

    இதேபோல், பெருமழை வெள்ள காலத்தில் பல்வேறு இடங்களில் வீடுகள், விவசாய நிலங்களில் தண்ணீர் புகுந்துள்ளது. நீர் வடிந்துள்ள இடங்களில் வீடுகளுக்கு செல்லும் மக்கள் மின் இணைப்புகளை முறையாக பரிசோதித்த பிறகு அவற்றை கையாள வேண்டும். இல்லாவிட்டால் மின்சாரம் தாக்க வாய்ப்புள்ளது.

    விவசாய நிலங்கள், மரங்கள் ஆகிய பகுதிகளில் மின்கம்பிகள் ஏதேனும் உரசிக்கொண்டு உள்ளதா?, அறுந்துள்ளதா என்பதை எல்லாம் கவனமாக பார்த்த பிறகே மக்கள் செல்ல வேண்டும்.

    இது தொடர்பாக புகார்கள், தகவல்கள் ஏதும் இருந்தால் உடனடியாக 'மின்னகம்' உதவி மையத்தை 94987 94987 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • வெள்ளம் பாதித்த தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 2,682 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டது.
    • 93 நடமாடும் மருத்துவ முகாம்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் நடத்தப்படுகிறது.

    நெல்லை:

    நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வெள்ள நீர் புகுந்த இடங்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று ஆய்வு செய்தார். அப்போது சபாநாயகர் அப்பாவு, அரசு மருத்துவக் கல்லூரி டீன் ரேவதி ஆகியோர் உடன் இருந்தனர்.

    மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவு, டிஜிட்டல் எக்ஸ்ரே பிரிவு உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன் பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பில் தூத்துக்குடி மாவட்டம் அதிக பாதிப்பை சந்தித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. தரைத்தளத்தில் 6 முதல் 7 அடி உயரத்திற்கு தண்ணீர் வந்த நிலையில் அங்குள்ள கேத் லேப் பாதிக்கப்பட்டுள்ளது. அதனை சரி செய்ய ஒரு மாத கால ஆகும். அதுவரை நெல்லை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படும்.

    வெள்ளம் பாதித்த தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 2,682 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டது. அதன் மூலம் 95 ஆயிரத்து 127 நபர்களுக்கு தற்போது வரை சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதில் 764 பேருக்கு காய்ச்சல் இருப்பதாக கண்டறியப்பட்டு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. 2,565 நபர்கள் சளி உள்ளிட்ட நோய்கள் பாதிப்பில் இருப்பது கண்டறியப்பட்டு அவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் குணமாகி வருகிறார்கள்.

    இந்த மருத்துவ முகாமை பல நாட்கள் தொடர்ந்து நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    இவை தவிர 93 நடமாடும் மருத்துவ முகாம்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் நடத்தப்படுகிறது. இந்த 4 மாவட்டங்களிலும் சேர்த்து 190 நடமாடும் மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகிறது. இதில் ஒரு மருத்துவர் உள்ளிட்ட 4 மருத்துவ ஊழியர்கள் பணியில் இருப்பார்கள்.

    வெள்ளம் அதிகம் பாதித்த பகுதிகளில் ஏரல், ஸ்ரீவைகுண்டம், தூத்துக்குடி மாநகராட்சி, காயல்பட்டிணம் ஆகிய இடங்களில் அப்பல்லோ, மீனாட்சி மிஷன் உள்ளிட்ட 17 தனியார் மருத்துவமனைகளுடன் இணைந்து மெகா மருத்துவ முகாம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணியில் இருந்து மாலை 4 மணி வரை நடத்தப்படுகிறது.

    நெல்லை மாவட்டத்திலும் தேவைப்பட்டால் மெகா மருத்துவ முகாம் நடத்தப்படும். கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து தூத்துக்குடி மாவட்டத்திற்கு சிகிச்சை அளிக்க 50 முதுநிலை மருத்துவர்கள் கூடுதலாக வரவழைக்கப்பட்டுள்ளனர்.

    தமிழகத்தில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் தற்போது வரை 8,545 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் 10 முதல் 12 ஆயிரம் பேர் வரை டெங்கு காய்ச்சல் பாதிப்பு உள்ள நிலையில் இந்த ஆண்டு பாதிப்பு குறைந்துள்ளது. டெங்கு பாதிப்பை பொறுத்தவரை முழு கட்டுப்பாட்டில் உள்ளது . கொரோனா பரவல் தமிழகத்தில் பெரிய அளவில் இல்லை. அதனையும் கண்காணித்து தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • ஸ்ரீவைகுண்டம், அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 2.5 லட்சம் பிஎஸ்என்எல் இணைப்புகள் பாதிக்கப்பட்டுள்ளது.
    • தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தொலைதொடர்பு சேவை மீண்டும் செயல்பட தொடங்கியது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சுற்று வட்டார பகுதிகளில் நகரும் செல்போன் டவர் அமைக்கப்படும் என்று ட்ராய் அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில்,

    * அண்மையில் கொட்டித்தீர்த்த கனமழை, வெள்ளம் காரணமாக தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் தொலை தொடர்பு சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

    * ஸ்ரீவைகுண்டம், அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 2.5 லட்சம் பிஎஸ்என்எல் இணைப்புகள் பாதிக்கப்பட்டுள்ளது.

    * ஒரு நகரும் செல்போன் டவர் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

    * தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தொலைதொடர்பு சேவை மீண்டும் செயல்பட தொடங்கியது.

    * நகரும் 2 செல்போன் டவர்கள் தூத்துக்குடி கொண்டு வரப்பட்டன.

    * ஸ்ரீவைகுண்டம் சுற்றுவட்டார பகுதிகளில் தொலை தொடர்பு சேவை வழங்க நகரும் செல்போன் டவர் அமைக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மழை வெள்ளத்தால் மருத்துவமனைகளுக்கு பெரிய பாதிப்பு இல்லை.
    • நெல்லையில் 13 சுகாதார நிலையங்கள், 13 துணை சுகாதார நிலையங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    நெல்லை:

    கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்கள் கடும் பாதிப்பை சந்தித்து உள்ளன. தாமிரபரணி ஆற்றில் இன்னும் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் குளங்கள் நிரம்பி உடைந்ததால் வெளியேறிய தண்ணீரால் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் வெள்ளத்தில் தத்தளிக்கிறது.

    இந்நிலையில் நெல்லையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * மழை வெள்ளத்தால் மருத்துவமனைகளுக்கு பெரிய பாதிப்பு இல்லை. ஆனால் சுகாதார நிலையங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.

    * 4 மாவட்டங்களில் 64 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 261 துணை சுகாதார நிலையங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.

    * நெல்லையில் 13 சுகாதார நிலையங்கள், 13 துணை சுகாதார நிலையங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    * சுகாதார நிலையங்களில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இழப்புகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.

    * அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின் சீரமைப்பு பணிகள் விரைவில் தொடங்கும் என்று தெரிவித்தார்.

    • வரலாறு காணாத வகையில் பெய்த மழை காரணமாகவே பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
    • தூத்துக்குடி மாவட்டத்தில் மீட்பு பணிகள் முடிந்துள்ளது. எனினும் மாநகர பகுதிகளில் தண்ணீர் முழுமையாக வடியவில்லை.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 16-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை அதிகனமழை பெய்தது.

    வரலாறு காணாத வகையில் பெய்த இந்த மழையால், வழக்கமாக மழை வெள்ளத்தால் பாதிக்காத வறட்சியான பகுதியில் கூட வெள்ளம் சூழ்ந்தது.

    கோரம்பள்ளம் உள்ளிட்ட குளங்களில் உடைப்பு ஏற்பட்டதால் அந்த தண்ணீர் தூத்துக்குடி மாநகர பகுதிகளில் சூழ்ந்துள்ளது. மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம், ஏரல், காயல்பட்டினம், ஆத்தூர், ஆறுமுகநேரி என பல்வேறு இடங்களிலும் வெள்ளக்காடாக காட்சி அளித்தது.

    வெள்ளம் படிப்படியாக குறைந்ததையடுத்து மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது.

    இதனால் விமானம், ரெயில் போக்குவரத்து சேவை தொடங்கப்பட்டு உள்ளது. வெள்ளம் காரணமாக சாலை துண்டிக்கப்பட்ட திருச்செந்தூர் உள்ளிட்ட சில இடங்களுக்கும் தற்போது போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது.

    புறநகர் பகுதிகளில் இயல்பு நிலை திரும்ப தொடங்கி இருந்தாலும் தூத்துக்குடி மாநகர பகுதிகளில் இன்று 7-வது நாளாகவும் வீடுகளை சூழ்ந்துள்ள வெள்ளம் வடியாமல் உள்ளது. அதனை வெளியேற்றும் பணி இரவு, பகலாக போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள சேத பகுதிகளை பார்வையிட தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா இன்று தூத்துக்குடி வந்தார். தூத்துக்குடி மாநகர பகுதியில் வெள்ளம் பாதித்த மறவன்மடம், குறிஞ்சி நகர், 3-ம் கேட் பகுதி, அந்தோணியார்புரம், முத்தம்மாள் காலனி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று வெள்ள சேதங்களை பார்வையிட்டார்.

    தொடர்ந்து எடுக்கப்பட்டு வரும் மீட்பு பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி, போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், மாநகராட்சி கமிஷனர் தினேஷ் குமார் ஆகியோரிடம் கேட்டறிந்தார்.

    குறிஞ்சி நகரில் வெள்ள சேதங்களை பார்வையிட்ட பின்னர் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா நிருபர்களிடம் கூறியதாவது:-

    தூத்துக்குடி மாநகர பகுதிகளில் தேங்கி உள்ள தண்ணீரை பக்கிள் ஓடை மூலமாக வெளியேற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் தேங்கிய வெள்ள நீர் பம்பிங் செய்யப்பட்டும் வெளியேற்றப்படுகிறது. அதற்கு தேவையான கூடுதல் மோட்டார்கள் வரவழைக்கப்பட்டுள்ளது.


    குரூஸ்பர்னாந்து மணிமண்டபம் அமைந்துள்ள சாலையில் தேங்கிய வெள்ளத்தில் நடந்து சென்று ஆய்வு செய்த தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா.


    ரெயில்வே கேட் பகுதிக்குள் கூடுதல் தண்ணீர் தேங்கி உள்ளது. அதனை வெளியேற்றும் பணிகளும் நடந்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளம், மின்சாரம் தாக்கி, வீடு இடிந்து என 22 பேர் பலியாகி உள்ளனர்.

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் 40 முதல் 55 சென்டி மீட்டர் வரை மழை பெய்துள்ளது. அதன் மூலம் 150 டி.எம்.சி. தண்ணீர் வந்துள்ளது. இது மணிமுத்தாறு, பாபநாசம் அணைகளின் கொள்ளளவை விட 10 மடங்கு அதிகமாகும். தூத்துக்குடி மாவட்டத்தில் வாறுகால்கள் முறையாக தூர்வாரப்பட்டு உள்ளது. தூத்துக்குடியில் ரூ.200 கோடியில் வடிகால் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

    வரலாறு காணாத வகையில் பெய்த மழை காரணமாகவே இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இழப்பீடு வழங்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. பயிர்கள் கணக்கிடும் பணியும் நடந்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் மீட்பு பணிகள் முடிந்துள்ளது. எனினும் மாநகர பகுதிகளில் தண்ணீர் முழுமையாக வடியவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது அவரிடம் அப்பகுதியை சேர்ந்த ஒருவர் மழை வெள்ளத்தால் ஏராளமான பொதுமக்கள் தவித்து வருவதாகவும், உடனடியாக அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

    • ஆற்றுப்படுகையில் உள்ள 300க்கும் மேற்பட்ட உறை கிணறுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன.
    • உறை கிணறுகளின் மின் மோட்டார்கள், நீரேற்றும் நிலையங்களும் வெள்ளத்திற்கு தப்பவில்லை.

    நெல்லை:

    நெல்லையில் கடந்த 17 மற்றும் 18-ந்தேதி பெய்த அதீத கனமழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மழை குறைந்த பிறகு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகிறது. வெள்ளம் வடியத் தொடங்கியதும் பேருந்து, ரெயில் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.

    மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணமாக ரூ.6000 வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். இதையடுத்து சேத விவரங்கள் கணக்கீடப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் குடிநீர் திட்ட குழாய்கள் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் 5 மாவட்டங்களுக்கு குடிநீர் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு தாமிரபரணி ஆற்றில் இருந்து குடிநீர் செல்கிறது. ஆற்றுப்படுகையில் உள்ள 300க்கும் மேற்பட்ட உறை கிணறுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. மேலும், குடிநீர் எடுத்துச் செல்லும் குழாய்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

    உறை கிணறுகளின் மின் மோட்டார்கள், நீரேற்றும் நிலையங்களும் வெள்ளத்திற்கு தப்பவில்லை.

    • நெல்லை, தூத்துக்குடி, குமரி, தென்காசி மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளம் 4 மாவட்ட மக்களையும் பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது.
    • கிராமங்களுக்கு டிராக்டர்களில் சென்று உணவு உள்ளிட்ட பொருட்களை போலீசாரும் மீட்பு படையினரும் வழங்கி வருகிறார்கள்.

    சென்னை:

    நெல்லை, தூத்துக்குடி, குமரி, தென்காசி மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளம் 4 மாவட்ட மக்களையும் பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது. குறிப்பாக தூத்துக்குடி மாவட்ட மக்களை வெள்ள பாதிப்பு பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. ஸ்ரீ வைகுண்டம் சுற்று வட்டார பகுதியில் உள்ள பெரும்பாலான கிராமங்களை சூழ்ந்து உள்ள வெள்ளம் இன்னும் முழுமையாக வடியாத நிலையில் அங்கு வசிக்கும் பொதுமக்கள் 5-வது நாளாக தவித்து வருகிறார்கள்.

    இப்படி வெள்ள பாதிப்பில் சிக்கி தவிக்கும் மக்களை மீட்பதற்கும் நிவாரண உதவிகளை வழங்குவதற்கும் போலீஸ் மற்றும் பேரிடர் மீட்பு படையினர் 3500-க்கும் மேற்பட்டோர் குவிக்கப்பட்டுள்ளனர்.

    தென்மண்டல ஐ.ஜி. நரேந்திரன் நாயர் தலைமையில் வெளி மாவட்டங்களில் இருந்து வந்துள்ள 4 போலீஸ் சூப்பிரண்டு மற்றும் உயர் அதிகாரிகள் மக்களுக்கு தேவையான உதவிகளை இரவு-பகல் பாராமல் செய்து வருகிறார்கள். தூத்துக்குடி மாவட்ட போலீசாருடன் பக்கத்து மாவட்டங்களான நெல்லை, தென்காசி, குமரி மாவட்டங்களை சேர்ந்த போலீசாரும் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். ஸ்ரீவைகுண்டத்தை சுற்றி உள்ள பல கிராமங்களில் வெள்ளம் முழுமையாக வடியாத நிலையில் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு செல்லும் சாலைகளும் துண்டிக்கப்பட்டுள்ளதால் குறிப்பிட்ட நேரத்தில் மக்களை சென்றடைய முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

    அதுபோன்ற கிராமங்களுக்கு டிராக்டர்களில் சென்று உணவு உள்ளிட்ட பொருட்களை போலீசாரும் மீட்பு படையினரும் வழங்கி வருகிறார்கள்.

    ×