search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தென்மாவட்டங்களில் மழை"

    • தூத்துக்குடி-திருச்செந்தூர், நெல்லை-திருச்செந்தூர் சாலைகள் துண்டிக்கப்பட்டு தற்போது வரை சாலை போக்குவரத்து தொடங்கவில்லை.
    • பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள்.

    தூத்துக்குடி:

    வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் கடந்த 17-ந்தேதி முதல் மிக பலத்த மழை கொட்டி தீர்த்தது.

    தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை 16-ந்தேதியே அதிகனமழை பொழிய தொடங்கியது. குறிப்பாக காயல்பட்டினத்தில் 17-ந்தேதி ஒரே நாளில் 95 செ.மீ. மழை கொட்டி தீர்த்தது.

    ஒரு ஆண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்ததால் நகரமே துண்டிக்கப்பட்டது. தொடர்ந்து மாவட்டம் முழுவதும் 17-ந்தேதி தொடங்கி விடிய விடிய மழை கொட்டித்தீர்த்தது.

    இதனால் தூத்துக்குடி மாநகர பகுதி மட்டுமின்றி மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் தண்ணீர் தேங்கி குளம் போல் காட்சி அளித்தது. பெரும்பாலான வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் வெளியே வர முடியாமல் தத்தளிக்கின்றனர்.

    தூத்துக்குடி மாநகர பகுதியை பொறுத்தவரை ராஜகோபால்புரம், புஷ்பா நகர், கதிர்வேல் நகர், மகிழ்ச்சிபுரம், குறிஞ்சி நகர், முத்தம்மாள் காலனி, ராம்நகர், ரஹ்மத் நகர், கே.டி.சி. நகர், பிரையண்ட் நகர், அமுதா நகர், ஸ்டேட் பாங்க் காலனி, மீனாட்சிபுரம் உள்ளிட்ட இடங்களை வெள்ளம் சூழ்ந்தது.

    இதைத்தொடர்ந்து மாநகராட்சி சார்பில் 40 படகுகள் மூலம் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. மேலும் தேசிய பேரிடர் மீட்பு படையினரும் பொது மக்களை மீட்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

    இதே போல் கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றுக்கு சுமார் 1 லட்சம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டதால் நெல்லை மாவட்டம் பாபநாசம் முதல் தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் வரை தாமிரபரணி கரையோர மக்கள் குடியிருப்புகள் வெள்ளத்தில் சூழ்ந்தது.

    செய்துங்கநல்லூர் அருகே உள்ள கொங்கராயக்குறிச்சி, தூத்துக்குழி, சந்தையடியூர், எஸ்.என்.பட்டியூர், அய்யனார்குளம் பட்டி, மணக்கரை, ஆழ்வார்கற்குளம், பத்மநாப மங்கலம் உள்ளிட்ட கிராமங்கள் துண்டிக்கப்பட்டன.

    குறிப்பாக ஆழிக்குடி கிராமம் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியது. இதையறிந்த அனவரநல்லூர் கிராம மக்கள், தேசிய பேரிடர் மீட்பு படையினர், துணை ராணுவத்தினர், மீனவர்கள் உள்ளிட்டோர் அக்கிராமத்தில் இருந்த 800 பேரை படகுகள் மூலம் பத்திரமாக மீட்டு பாளையங்கோட்டை கிருஷ்ணாபுரம் அருகே உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.

    இதே போல் முத்தாலங்குறிச்சி, நாணல்காடு உள்ளிட்ட கிராமங்களில் உள்ள 1,500 கிராம மக்கள் மீட்கப்பட்டனர். ஸ்ரீவைகுண்டம் பகுதி முழுவதும் தாமிரபரணி வெள்ளம் சூழ்ந்து தனித்தீவாக மாறி உள்ளது.

    தூத்துக்குடியில் நேற்று காலை முதல் மழை ஓய்ந்துள்ளது. எனினும் சாலையில் தேங்கிய தண்ணீர், குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம் ஆகியவற்றால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

    குறிப்பாக தூத்துக்குடி-திருச்செந்தூர், நெல்லை-திருச்செந்தூர் சாலைகள் துண்டிக்கப்பட்டு தற்போது வரை சாலை போக்குவரத்து தொடங்கவில்லை.

    தூத்துக்குடி மாவட்டத்தில் கருங்குளம், ஸ்ரீவைகுண்டம், வசவப்ப புரம், திருச்செந்தூர், ஆழ்வார்திருநகரி, வல்லநாடு, புதுக்கோட்டை, கோரம்பள்ளம், ஒட்டப்பிடாரம், விளாத்திகுளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. அவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

    பாதுகாப்பு கருதி அங்கு மின்சாரம் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் செல்லும் சாலைகளும் துண்டிக்கப்பட்டுள்ளது.

    தொலை தொடர்பு சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களை தொடர்பு கொள்ள முடியாமல் அவர்களது உறவினர்கள் கடந்த 4 நாட்களாக தவித்து வருகிறார்கள்.

    தொடர்பு கொள்ள முடியும் நிலையில் உள்ளவர்களின் செல்போன்கள் மின்வசதி இல்லாததால் சார்ஜ் செய்ய முடியாததால் அவர்களையும் தொடர்பு கொள்ள முடியவில்லை.

    தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஏற்கனவே தேசிய பேரிடர் மீட்பு படையினரும், துணை ராணுவத்தினரும் ஈடுபட்டிருந்தனர்.

    இதற்கிடையே கூடுதலாக ஆந்திரா மாநிலத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் பாதிப்பு பகுதிகளுக்கு விரைந்து உள்ளனர். தேவைப்பட்டால் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்தும் மீட்பு குழுவினர் அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. திருவனந்தபுரத்தில் இருந்து 25-க்கும் மேற்பட்ட ராணுவ குழுவினரும் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    ஆறாம் பண்ணையில் இருந்து மணக்கரை செல்லும் ரோடு மூழ்கி உள்ளது. மாவட்டத்தில் மழை வெள்ளம் புகுந்ததால் ஆயிரக்கணக்கான ஹெக்டேர் விளை நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.

    இதே போல் தூத்துக்குடி மாநகர் பகுதியில் சில இடங்களிலும், மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் இன்று 4-வது நாளாகவும் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.

    திருச்செந்தூர் சுற்று வட்டார பகுதியில் பெய்த கனமழையால் தோப்பூர் பகுதியில் உள்ள கால்வாயில் வரும் மழைநீர் நிரம்பி அப்பகுதி சாலை வழியாக தெப்பகுளம் முன்புள்ள சாலையில் வெள்ளமாக மழைநீர் ஓடியது.

    அப்பகுதியில் மழைநீர் முட்டளவு முதல் இடுப்பளவு வரை மழை நீர் வெள்ளமாக ஓடியதால் அப்பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு மற்றும் சாலையை கடக்கும் அப்பகுதி பொதுமக்கள் படகு மூலம் மழைநீரை கடந்து சென்றனர்.

    மேலும் இந்த மழைநீர் காமராஜர் சாலை வழியாக டிபி ரோடு மற்றும் பகத்சிங் பஸ் நிலையம், மார்க்கெட் வழியாக அப்பகுதியில் உள்ள கால்வாய்க்கு சென்றது. அதேபோல், திருச்செந்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள தாழ்வான பகுதிகளில் மழைநீரானது குளம் போல தேங்கியுள்ளது. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமபட்டனர்.

    தூத்துக்குடி மாநகர் பகுதியில் திருச்செந்தூர், காயல்பட்டிணம், ஆறுமுகநேரி, தென்திருப்பேரை, ஏரல் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் பல இடங்களில் தற்போது வரை மின் இணைப்பு வழங்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள்.

    மாவட்டத்தின் புறநகர் பகுதிகள் மற்றும் தூத்துக்குடி மாநகர பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கியவர்களை படகுகள் மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    மேலும் துண்டிக்கப்பட்ட சாலைகளை சீரமைக்கும் பணிகளும் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. படகுகள் மூலம் மீட்கப்படும் பொதுமக்கள் அருகே உள்ள திருமண மண்டபங்களுக்கு அழைத்து செல்லப்பட்டு அங்குள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர்.

    அவர்களுக்கு தேவையான உணவு, தண்ணீர் வசதிகளும் வழங்கப்பட்டு வருகிறது. இதே போல் தூத்துக்குடி மாவட்டத்தில் போலீஸ் நிலையங்கள், அரசு மருத்துவமனை, தொழிற்சாலைகள், வணிக வளாகம் உள்ளிட்ட இடங்களிலும் மழை ஓய்ந்தும் வெள்ளநீர் வடியாமல் உள்ளது. அதனை அகற்றி இயல்பு நிலை திரும்ப தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தென்மாவட்டங்களில் நடைபெறும் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தொடர்பாக ஆய்வு.
    • 4 மாவட்டங்களுக்கான சிறப்பு அதிகாரிகள் காணொலி வாயிலாக பங்கேற்றுள்ளனர்.

    சென்னை:

    டெல்லி சென்றிருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 10.30 மணியளவில் சென்னை திரும்பினார்.

    அதன் பிறகு வீட்டுக்கு சென்று விட்டு காலை 11.30 மணியளவில் மெரினா கடற்கரை ரோட்டில் எழிலகத்தில் உள்ள மாநில அவசர கால பேரிடர் கட்டுப்பாட்டு மையத்திற்கு சென்றார்.

    அங்கு தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகள் குறித்தும் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள நிவாரணப் பணிகள் குறித்தும் கேட்டறிந்தார்.

    தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா இதுவரை மேற்கொண்ட வெள்ள மீட்பு நடவடிக்கைகள் குறித்து விவரித்து கூறினார்.

    நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட சிறப்பு அதிகாரிகளும், மாவட்ட கலெக்டர்களும் காணொலி வாயிலாக இணைந்திருந்தனர். அவர்களிடம் வெள்ள பாதிப்பு குறித்தும், இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.

    இன்னும் எந்தெந்த பகுதிகளில் வெள்ளம் வடியவில்லை? அந்த பகுதியில் இப்போதைய நிலவரம் என்ன? என்றும் கேட்டார்.

    அதற்கு மாவட்ட கலெக்டர்கள் விரிவாக பதில் அளித்தனர். பின்னர் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.

    அதன் பிறகு தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் இன்று பேசி விவரங்கள் கேட்டறிந்தார்.

    அப்போது தூத்துக்குடி மாநகர எட்டயபுரம் சாலையில் உள்ள ஒரு நிவாரண முகாமில் மீட்கப்பட்ட மக்கள் 2 பேருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நேரடியாக பேசினார்.

    அவர்கள் எப்படி இருக்கிறார்கள்? அவர்கள் பகுதியில் தண்ணீர் வடிந்து விட்டதா? முகாமில் போதுமான வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதா? என்றும் விசாரித்தார்.

    துண்டிக்கப்பட்ட ஸ்ரீவைகுண்டம் பகுதிக்கும் அதிகாரிகள் சென்று உதவி செய்து வருகின்றனர். சாப்பாடு வசதி செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுத்து வருகின்றனர். மின்சார சப்ளை வழங்கவும் போர்க்கால அடிப்படையில் பணி நடக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • படகுகள் மூலம் செல்லக்கூடிய இடங்களுக்கு சென்று மக்களை பாதுகாப்பாக மீட்டு வந்தார்.
    • வெள்ள மீட்பு பணிகளில் இயக்குனர் மாரி செல்வராஜ் ஈடுபட்டதை சமூக வலைதளங்களில் சிலர் விமர்சித்தனர்.

    தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சுற்றுவட்டார பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேற்று முன்தினம் இரவு முதல் விடிய விடிய இயக்குனர் மாரிசெல்வராஜ் உதவி செய்தார். படகுகள் மூலம் செல்லக்கூடிய இடங்களுக்கு சென்று மக்களை பாதுகாப்பாக மீட்டு வந்தார். இதுதொடர்பான புகைப்படங்கள் நேற்று சமூக வலைத்தளங்களில் வைரலானது.

    இந்நிலையில், தனது சொந்த ஊர் மற்றும் பக்கத்து கிராமங்களில் வெள்ள மீட்பு பணிகளில் இயக்குனர் மாரி செல்வராஜ் ஈடுபட்டதை சமூக வலைதளங்களில் சிலர் விமர்சித்தனர்.

    அவர்களுக்கு பதிலளிக்கும் விதமாக இயக்குனர் மாரி செல்வராஜ் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "என் கலையும் கடமையும் நான் யார் என்று நிரூபிப்பது அல்ல… நீங்கள் யாரென்று உங்களுக்கு நிரூபிப்பது" என்று மழையால் வெள்ளம் சூழ்ந்த பகுதியின் புகைப்படத்துடன் கூறியுள்ளார்.

    • மற்ற வாகனத்தின் உதவியுடன் பாதிக்கப்பட்ட வாகனத்தை சேவை மையத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும்.
    • காப்பீட்டு நிறுவனங்கள் தனியாக சிறப்பு முகாம்கள் அமைக்க வேண்டும்.

    சென்னை:

    தமிழ்நாடு போக்குவரத்து ஆணையர் சண்முக சுந்தரம் விடுத்துள்ள அறிக்கையில்..,

    * நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் தண்ணீரில் மூழ்கிய வாகனங்களை இயக்க வேண்டாம்.

    * மற்ற வாகனத்தின் உதவியுடன் பாதிக்கப்பட்ட வாகனத்தை சேவை மையத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

    * மாவட்டங்களில் உள்ள அனைத்து வாகன விற்பனையாளர்களும் சிறப்பு முகாம் அமைத்து வாகனங்களை சரி செய்யவும், மையங்களுக்கு கொண்டு செல்லவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    *பொதுமக்கள் விண்ணப்பிக்க காப்பீட்டு நிறுவனங்கள் தனியாக சிறப்பு முகாம்கள் அமைக்க வேண்டும் என கூறியுள்ளார்.

    • உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ததற்கு பின்பாக பள்ளிகள் திறக்கப்படும்.
    • மாணவர்களுக்கான பாதிப்புகள் குறித்து கணக்கீடு செய்த பின்பு மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்படும்.

    தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு வினா வங்கி புத்தகங்களை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:-

    * 10,12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையில் எவ்வித மாற்றமும் இல்லை.

    * உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ததற்கு பின்பாக பள்ளிகள் திறக்கப்படும்.

    * தென் மாவட்டங்களில் எந்த அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பள்ளிகள் மற்றும் மாணவர்களுக்கான பாதிப்புகள் குறித்து கணக்கீடு செய்த பின்பு மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்படும். தேவையான பாட புத்தகங்கள் கையிருப்பில் உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பாலக்காடு-திருச்செந்தூர் இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் நெல்லை வரை இயக்கப்பட்டது.
    • 16 முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    சென்னை:

    தூத்துக்குடி, திருநெல்வேலியில் பெய்த பேய் மழையால் வெள்ளம் கரை புரண்டு ஓடியதில் தண்டவாளங்கள் சேதம் அடைந்தன. ரெயில் பாதை அடித்து செல்லப்பட்டன. பல இடங்களில் தண்டவாளங்கள் தொங்கி கொண்டு இருக்கின்றன.

    இதனால் தென் மாவட்டங்களுக்கு ரெயில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மாற்றுப்பாதையில் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. தூத்துக்குடி, நெல்லை, ரெயில் நிலையங்களை மையமாக கொண்டு இயக்கப்படும் பெரும்பாலான ரெயில்கள் கடந்த 3 நாட்களாக ரத்து செய்யப்பட்டுள்ளன. மழை நின்றதால் வெள்ள நீர் வடிந்து வருகிறது.

    ரெயில் பாதையில் தேங்கிய வெள்ளம் வடிந்து வருவதால் தண்டவாளங்கள் மற்றும் பாதையை சீரமைத்து ரெயில்களை இயக்க போர்கால நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    இதற்கிடையில் ரெயில் சேவை இன்றும் அந்த மார்க்கத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளன. 21 ரெயில்களை தெற்கு ரெயில்வே ரத்து செய்துள்ளது.

    திருச்செந்தூர்-திருநெல்வேலி முன்பதிவில்லாத பயணிகள் சேவை இருமார்க்கமும் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. மணியாட்சி-திருச்செந்தூர், திருநெல்வேலி-செங்கோட்டை, திருநெல்வேலி-நாகர்கோவில், திருநெல்வேலி-தூத்துக்குடி, செங்கோட்டை-திருநெல்வேலி.

    தூத்துக்குடி-திருநெல்வேலி உள்ளிட்ட 16 முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. எழும்பூரில் இருந்து நேற்று திருநெல்வேலிக்கு புறப்பட்டு சென்ற நெல்லை எக்ஸ்பிரஸ் இன்று வழக்கம் போல நெல்லை ஜங்ஷன் வரை இயக்கப்பட்டது.

    நாகர்கோவில்-கன்னியாகுமரி குமரி எக்ஸ்பிரஸ் (06643), நாகர்கோவில்-திருநெல்வேலி எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி, புனலூர் எக்ஸ்பிரஸ் ஆகியவை இன்று முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

    பாலக்காடு-திருச்செந்தூர் இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் நெல்லை வரை இயக்கப்பட்டது. திருநெல்வேலி-திருச்செந்தூர் இடையே ரத்து செய்யப்பட்டது.

    இதேபோல திருச்செந்தூர்-பாலக்காடு எக்ஸ்பிரஸ், திருச்செந்தூர் -திருநெல்வேலி இடையே மட்டும் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

    • கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியத்தில் இருந்து விமான சேவைகள் நிறுத்தப்பட்டு இருந்தது.
    • 64 பயணிகளுடன் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானம் புறப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் 17 மற்றும் 18-ந்தேதிகளில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்தது. இப்போது மழை குறைந்த நிலையில் வெள்ளமும் வடியத் தொடங்கியுள்ளது.

    இந்த நிலையில், சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமான சேவை இன்று காலை மீண்டும் தொடங்கியுள்ளது. காலை 6 மணிக்கு 64 பயணிகளுடன் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானம் புறப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி விமான நிலையத்தில் வெள்ளம் வடிந்த நிலையில் விமான சேவை தொடங்கியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியத்தில் இருந்து விமான சேவைகள் நிறுத்தப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • கவர்னர் மாளிகையில் நாளை கிறிஸ்துமஸ் விழா கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டது.
    • தென்மாவட்டங்களில் நிலவும் தீவிர சூழ்நிலையை கருத்தில் கொண்டு கிறிஸ்துமஸ் விழாவை ரத்து செய்ய முடிவு.

    சென்னை:

    கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள செய்தியில்,

    கனமழை மற்றும் கடும் வெள்ளம் காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் நிலவும் தீவிர சூழ்நிலையை கருத்தில் கொண்டு நாளை நடைபெறவிருந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை ரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பல்வேறு இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டது.
    • பாதுகாப்பு கருதி ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது என தெரிவிக்கப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பெய்த அதிகனமழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும் பல்வேறு இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டது.

    தேவைக்கேற்ப அரசு பேருந்துகள் இயக்கப்பட்டாலும், பாதுகாப்பு கருதி ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது என தெரிவிக்கப்பட்டது.

    மழை ஓய்ந்த பிறகு மீட்பு பணிகளும், நிவாரண உதவிகளும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படுகிறது.

    இந்நிலையில், நெல்லை ரெயில் நிலையத்தில் சூழ்ந்து இருந்த வெள்ள நீர் வடிந்த நிலையில் ரெயில் சேவை இன்று மீண்டும் தொடங்கியுள்ளது.

    நெல்லை - செங்கோட்டை இடையே பயணிகள் ரெயில் சேவை, செங்கோட்டை - தாம்பரம் இடையே இயங்கும் பாலருவி எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில் சேவைகள் வழக்கம் போல செயல்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

    • தூத்துக்குடி மக்கள் வெளியில் கால் வைக்க முடியாத அளவுக்கு தவிப்பில் உள்ளனர்.
    • மக்களைக் கேட்டால்தான் மீட்புப்பணிகள் குறித்து உண்மை நிலை தெரியவரும்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு செய்தார். பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் அதி கனமழை பெய்துள்ளது. அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால் பாதிப்பை குறைத்திருக்கலாம். வானிலை மைய அறிவுரை அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுத்திருந்தால் மக்களை காத்திருக்கலாம்.


    தூத்துக்குடி மக்கள் வெளியில் கால் வைக்க முடியாத அளவுக்கு தவிப்பில் உள்ளனர். மக்களைக் கேட்டால்தான் மீட்புப்பணிகள் குறித்து உண்மை நிலை தெரியவரும் என்றார்.

    • தென்மாவட்ட பெருமழை குறித்து வானிலை ஆய்வு மையம் கடந்த 14-ந்தேதியை எச்சரிக்கை விடுத்தது.
    • சென்னை பெருவெள்ளத்தில் கற்றுக்கொண்ட பாடம் மூலம் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்.

    தூத்துக்குடி:

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்த மிக கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி உள்ளது.

    இதையடுத்து தமிழக அமைச்சர்கள் தென்மாவட்டங்களில் முகாமிட்டு மீட்பு மற்றும் நிவாரண பணிகளை முடுக்கி விட்டுள்ளனர்.

    இந்நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தென்மாவட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறுவதற்கும், நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்கும் இன்று தூத்துக்குடி வந்தார்.

    முன்னதாக அவர், சென்னையில் இருந்து காலை 7.55 மணிக்கு புறப்பட்ட விமானத்தில் மதுரை வந்தடைந்தார். அவருடன் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. இன்ப துரை ஆகியோர் வந்தனர்.

    மதுரை விமான நிலையத்தில் இருந்து காரில் எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடி வந்தார். அங்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி அண்ணா நகர் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி விவரங்களை கேட்டறிந்தார்.

    அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தூத்துக்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பொது மக்களை மீட்பு குழுவினர் மீட்டு முகாம்களில் தங்க வைத்துள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது என தமிழக அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது.

    ஆனால் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு தேவையான உணவு, தண்ணீர் ஆகியவை வழங்கப்படவில்லை என அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்டுள்ள மக்களை அரசு அதிகாரிகள் நேரில் சந்திக்கவில்லை எனவும் அவர்கள் கூறுகின்றனர்.

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்ட பெருமழை குறித்து வானிலை ஆய்வு மையம் கடந்த 14-ந்தேதியை எச்சரிக்கை விடுத்தது. ஆனால் அரசு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவில்லை.

    சென்னை பெருவெள்ளத்தில் கற்றுக்கொண்ட பாடம் மூலம் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தூத்துக்குடியில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட பின் விளாத்திகுளம், கயத்தாறு பகுதிகளில் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு எடப்பாடி பழனிசாமி நிவாரண உதவிகளை வழங்கினார்.

    பின்னர் அங்கிருந்து எடப்பாடி பழனிசாமி நெல்லை வந்தார். தச்சநல்லூர் மற்றும் பாளையங்கோட்டையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி ஆறுதல் கூறுகிறார்.

    பின்னர் ராதாபுரம் சட்டமன்ற தொகுதி வழியாக குமரி மாவட்டத்துக்கு செல்லும் எடப்பாடி பழனிசாமி அங்கு பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறி நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

    • பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டுள்ள 300 பயணிகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.
    • மீட்கப்படும் பயணிகளை பஸ் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் நெல்லை, மதுரைக்கு கொண்டு செல்லவும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

    தூத்துக்குடி:

    நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் வரலாறு காணாத வகையில் கடந்த 2 நாட்களாக கனமழை கொட்டித்தீர்த்தது.

    இதனால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகள் துண்டிக்கப்பட்டது. சில பகுதிகள் தீவு போல் ஆனது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை காரணமாக ரெயில் பாதைகளில் மண் அரிப்புகள் ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு செந்தூர் எக்ஸ்பிரஸ் புறப்பட்டது.

    இந்நிலையில் மண் அரிப்பு காரணமாக ரெயில் போக்குவரத்து தடை விதிக்கப்பட்டது. ஆனால் அதற்குள் திருச்செந்தூரில் இருந்து கிளம்பிய ரெயில் ஸ்ரீவைகுண்டம் நோக்கி வந்தது.

    அப்போது ரெயில்வே தண்டவாளத்தில் மண் அரிப்பு ஏற்பட்டு தண்டவாளம் அந்தரங்கத்தில் தொங்குவதை பார்த்த என்ஜின் டிரைவர் சாதுர்யமாக செயல்பட்டு ரெயிலை ஸ்ரீவைகுண்டத்தில் நிறுத்தினார். இதனால் அதிர்ஷ்டவசமாக அதில் இருந்த 800 பயணிகள் உயிர் தப்பினர்.

    உடனடியாக மாவட்ட நிர்வாகம் சார்பில் ரெயில் நிலையத்தில் இருந்த பயணிகள் பஸ், வேன்கள் மூலம் சுமார் 300 பேர் மீட்கப்பட்டனர். அவர்கள் அங்கிருந்து பாதுகாப்பாக அருகில் உள்ள பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர்.

    தொடர்ந்து மீதம் உள்ள 500 பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அதற்குள் மிக கனமழை காரணமாக சாலைகளில் உடைப்பு ஏற்பட்டு ரெயில் நிலையம் செல்லும் பாதைகள் துண்டிக்கப்பட்டது.

    இதனால் அவர்களை மீட்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து தூத்துக்குடியில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு குழு, ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையம் செல்ல முயன்றனர்.

    ஆனால் பல்வேறு இடங்களில் ரெயில் நிலையத்தை சுற்றி சாலைகளில் உடைப்பு காரணமாக அவர்களால் செல்ல முடியவில்லை. நேற்று 2-வது நாளாக அவர்களை மீட்கும் பணி தொய்வு ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து ரெயில் நிலையத்தில் சிக்கிய பயணிகளுக்கு உணவு பொருட்கள் வழங்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் சாலை மார்க்கமாக செல்ல முடியவில்லை.

    இதனால் ஹெலிகாப்டர் மூலம் ரெயிலில் சிக்கிய பயணிகளுக்கு உணவுகள் வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி கோவை மாவட்டம் சூலூரில் இருந்து 2 டன் நிவாரண பொருட்கள் கொண்டு வரப்பட்டது.

    எனினும் வானிலை காரணமாக ஹெலிகாப்டர் சம்பவ இடத்திற்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. எனினும் அவர்கள் ரெயில் பெட்டிகளிலும், ரெயில் நிலையத்திலும் பாதுகாப்பாக தங்குவதற்கு ரெயில்வே நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

    இதற்கிடையே பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டுள்ள 300 பயணிகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே இன்று காலை ரெயில் நிலையத்தில் சிக்கியுள்ள 500 பயணிகளுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவு வழங்கும் பணி நடைபெற்றது. ஆனால் ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்ததே தவிர சம்பவ இடத்தில் பயணிகளுக்கு நேரடியாக உணவு வழங்க முடியவில்லை. இதனால் உணவு பொருட்களை ஓர் இடத்தில் கொண்டு சென்று வைத்தனர். அதனை சி.ஆர்.பி.எப்.வீரர்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மூலம் கயிறு கட்டி அதன் மூலம் சம்பவ இடத்திற்கு சென்று பயணிகளுக்கு நேரடியாக உணவு பொருட்களை வழங்கினர். மேலும் அவர்களுக்கு தேவையான மருத்துவ வசதிகள் செய்யப்பட்டது.

    இதற்கிடையே ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்தை சுற்றி தேங்கிய வெள்ளநீர் படிப்படியாக குறைய தொடங்கியது. பயணிகளை மீட்கும் பணிக்காக இன்று 6 ஹெலிகாப்டர்கள் வரவழைக்கப்பட்டது.

    மேலும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் ஹெலிகாப்டர் மூலம் பயணிகள் இருக்கும் இடத்தை இன்று நெருங்கினர். இதற்கிடையே சிக்கிய பயணிகளில் கர்ப்பிணி உள்பட 4 பேர் ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

    அவர்கள் மருத்துவ சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இன்று மாலைக்குள் பயணிகள் அனைவரும் மீட்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    மீட்கப்படும் பயணிகளை பஸ் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் நெல்லை, மதுரைக்கு கொண்டு செல்லவும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

    ரெயில் நிலையத்தில் சிக்கியுள்ள பயணிகள் அடிப்படை வசதிகளுக்காக ரெயில் மற்றும் ரெயில் நிலையத்தில் உள்ள கழிப்பறைகளை மட்டுமே பயன்படுத்துகின்றனர். இதனால் அவர்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே மருத்துவ உதவிகளும், கிருமி நாசினி தெளிக்கும் பணிகளும் தொடங்கப்பட்டது.

    ரெயிலில் சிக்கியுள்ள பயணிகளை மீட்கும் பணிகள் குறித்து 6 அமைச்சர்கள் கண்காணித்து வருகிறார்கள்.

    மீட்பு பணிகள் குறித்து மதுரை கோட்ட ரெயில்வே மேலாளர் சரத்ஸ்ரீ வஸ்தவா கூறியதாவது:-

    திருச்செந்தூர்-சென்னை செல்லும் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று முன்தினம் இரவு ஸ்ரீவைகுண்டத்தில் சிக்கியது. 3 நாட்களாக சுமார் 35 மணி நேரங்களை கடந்து அங்கு தவிக்கும் 500 பயணிகளுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அவர்களுக்கு மருத்துவ வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

    தொடர்ந்து அனைவரையும் மீட்கும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. முதலில் மருத்துவ உதவிகள் தேவைப்படுவோர் முன்னுரிமை கொடுத்து மீட்கப்படுவார்கள். இன்று மாலைக்குள் பயணிகள் அனைவரும் மீட்கப்படுவார்கள்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×