search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பட்டாசு உற்பத்தியாளர்கள்"

    • உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சுற்றுச்சூழலை பாதுகாப்பவர்கள் பசுமை பட்டாசுகளை தயாரிக்கலாம் என பட்டாசு ஆலை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
    • பேரியம் நைட்ரேட் மற்றும் சரவெடிக்கு விதிக்கப்பட்ட தடை காரணமாக 50 சதவீதம் வரை பட்டாசுகள் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

    சிவகாசி:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை, தாயில்பட்டி, ஏழாயிரம் பண்ணை, துலுக்கன்குறிச்சி, செவல்பட்டி, பனையடிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1,100-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் உரிய அனுமதி பெற்று இயங்கி வருகின்றன. இதில் வெம்பக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் செயல்பட்டு வரும் பெரும்பாலான பட்டாசு ஆலைகள் மாவட்ட வருவாய் அலுவலரின் அனுமதி பெற்று சரவெடிகள் மட்டுமே தயாரிக்கப்படுகிறது.

    இங்கு சரவெடிகளை தவிர வேறு வகை பட்டாசுகள் தயாரிக்க அனுமதி கிடையாது. மேலும் சரவெடிகளுக்கு மாற்றாக வேறு பட்டாசுகள் தயாரிக்கவும், அதில் பயன்படுத்தப்படும் மூலப்பொருளான பேரியம் நைட்ரேட்டுக்கு பதிலாக மாற்று வழியை இதுவரை சுப்ரீம் கோர்ட்டோ, மத்திய அரசோ பட்டாசு ஆலைகளுக்கு தெரிவிக்காததால் பட்டாசு ஆலை உரிமையாளர்களிடம் இது குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    கடந்த 2018-ல் உச்சநீதிமன்றத்தில் பட்டாசு வெடிப்பதால் ஒலி மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதாக கூறி பட்டாசு உற்பத்திக்கு தடை விதிக்க வேண்டும் என வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் பேரியம் நைட்ரேட்டை பயன்படுத்தவும், அதன் மூலம் சரவெடி தயாரிக்கவும் உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

    உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சுற்றுச்சூழலை பாதுகாப்பவர்கள் பசுமை பட்டாசுகளை தயாரிக்கலாம் என பட்டாசு ஆலை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இது தொடர்பாக பட்டாசு ஆலை உரிமையாளர்களுக்கு உரிய பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. மத்திய சுற்றுச்சுழல் வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம், தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் கழகம், மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை ஆகியவற்றுக்கும் கோர்ட்டு உத்தரவிட்டது.

    இதன் தொடர்ச்சியாக சிவகாசி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பசுமை பட்டாசு மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. பேரியம் நைட்ரேட் மற்றும் சரவெடிக்கு விதிக்கப்பட்ட தடை காரணமாக 50 சதவீதம் வரை பட்டாசுகள் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

    இதனால் ஏராளமான பட்டாசு தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். மேலும் பட்டாசு ஆலைகள் உற்பத்தியை தொடங்காமல் உள்ளதால் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் காப்பாற்றப்பட வேண்டும் என வலியுறுத்தி வெம்பக்கோட்டை பகுதியில் உள்ள தமிழன் பட்டாசு மற்றும் கேப்வெடி உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் ஆலோசனை நடத்தப்பட்டது.

    கூட்டத்தில் தலைவர் கணேசன், செயலாளர் மணிகண்டன் ஆகியோர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட பட்டாசு ஆலை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மத்திய, மாநில, அரசுகள் பேரியம் நைட்ரேட் பயன்படுத்தி சரவெடி பட்டாசு தயாரிக்க அனுமதி வழங்க வலியுறுத்தி இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது என அறிவித்துள்ளனர்.

    அதன்படி இன்று முதல் பட்டாசு உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலையிழந்து உள்ளனர். எனவே தாமதிக்காமல் அரசு பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

    ×