search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீன் உணவு"

    • வாரம்தோறும் மீன் உணவு சாப்பிடுபவர்களில் அசாம் மற்றும் திரிபுரா ஆகிய 2 மாநிலங்களும் 69 சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளது.
    • பஞ்சாப்பில் கடந்த 15 ஆண்டுகளில் மீன் சாப்பிடுவது 3.9 சதவீதம் குறைந்துள்ளது.

    புதுடெல்லி:

    இந்தியாவில் தற்போது மீன் உணவு சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதையடுத்து மீன் உணவு சாப்பிடுபவர்கள் தொடர்பாக இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கவுன்சில், விவசாயம் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் மற்றும் சர்வதேச மீன்கள் ஆமைப்பு ஆகியவை சமீபத்தில் புதிய ஆய்வு ஒன்றை மேற்கொண்டன. அந்த ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

    இந்த ஆய்வின்படி இந்திய மக்கள்தொகையில் 72.1 சதவீதம் மீன் உணவு சாப்பிடுவது தெரிய வந்துள்ளது. அதாவது இந்தியாவில் 96 கோடி பேர் மீன் உணவு சாப்பிடுகிறார்கள்.

    மேலும், தினமும் மீன் உணவு சாப்பிடுபவர்களில் கேரள மக்கள் 53.5 சதவீதத்துடன் முதல் இடத்தில் உள்ளனர். கோவாவில் 36.2 சதவீதம் பேரும், மேற்கு வங்காளத்தில் 21.90 சதவீதம் பேரும், மணிப்பூரில் 19.70 சதவீதம் பேரும், அசாமில் 13.10 சதவீதம் பேரும், திரிபுராவில் 11.50 சதவீதம் பேரும் தினமும் மீன் உணவு சாப்பிடுகிறார்கள்.

    மேலும் வாரம்தோறும் மீன் உணவு சாப்பிடுபவர்களில் அசாம் மற்றும் திரிபுரா ஆகிய 2 மாநிலங்களும் 69 சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளது. ஒடிசாவில் 66.8 சதவீதம் பேரும், மேற்கு வங்காளத்தில் 65.75 சதவீதம் பேரும், அருணாச்சல பிரதேசத்தில் 65.25 சதவீதம் பேரும், தமிழ்நாட்டில் 58.2 சதவீதம் பேரும் வாரம் ஒருமுறை மீன் உணவு சாப்பிடுகிறார்கள்.

    வடகிழக்கு மற்றும் கிழக்கு மாநிலங்கள், தமிழ்நாடு, கேரளா மற்றும் கோவாவில் 90 சதவீதத்துக்கும் அதிகமான மீன் நுகர்வோர் உள்ளனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மீன் நுகர்வு 20.9 சதவீதம் அதிகரித்துள்ளது, அதே சமயம் பஞ்சாப்பில் கடந்த 15 ஆண்டுகளில் மீன் சாப்பிடுவது 3.9 சதவீதம் குறைந்துள்ளது.

    மொத்த நுகர்வு விகிதம் குறைவாக உள்ள மாநிலங்களில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே மீன் சாப்பிடுவதில் அதிக வித்தியாசம் உள்ளது. ஆண்கள் வெளியில் உள்ள ஓட்டல்களில் அதிகம் மீன் சாப்பிடுகிறார்கள். மேற்கு வங்காளம், கேரளா மற்றும் திரிபுரா போன்ற அதிக மீன் நுகர்வு விகிதங்களை கொண்ட மாநிலங்களில் ஆண்கள் மற்றும் பெண்கள் சம அளவிலேயே மீன் சாப்பிடுகிறார்கள்.

    ஆனாலும் மற்ற நாடுகளை விட இந்தியாவில் குறைந்த அளவிலேயே மீன் சாப்பிடுபவர்கள் உள்ளனர். மீன் சாப்பிடுபவர்களை கொண்ட 183 நாடுகளில், இந்தியா 129-வது இடத்தில் உள்ளது. ஆனாலும் உலகின் 3-வது பெரிய மீன் உற்பத்தி செய்யும் நாடு இந்தியா ஆகும். உலக அளவில் மீன் உற்பத்தியில் இந்தியா சுமார் 8 சதவீதம் பங்கு வகிக்கிறது. மீன் வளர்ப்பில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளது.

    ×