search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காட்டுயானை தாக்குதல்"

    • சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்த விவசாயிகள் மாக்கையா தோட்டத்திற்கு வந்தனர்.
    • மாக்கையா குடும்பத்தினருக்கு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த திகினாரை ஆதிதிராவிடர் வீதியை சேர்ந்தவர் மாக்கையா (65). விவசாயி. இவருக்கு திகினாரை கிராமத்தில் 4 ஏக்கரில் விவசாய நிலம் உள்ளது. தோட்டத்தில் 2 ஏக்கரில் வாழை, 2 ஏக்கரில் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளனர்.

    இவரது தோட்டம் திகினாரை வனப்பகுதியையொட்டி உள்ளதால் இரவு நேரங்களில் காட்டு யானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து விடக்கூடாது என்பதற்காக விவசாய தோட்டத்தில் இரவு நேரங்களில் காவலில் இருப்பது வழக்கம். அதைபோல் மாக்கையா மக்காசோள தோட்டத்தில் நேற்று இரவு நேரத்தில் காவலில் இருந்து உள்ளார்.

    இந்த நிலையில் இன்று அதிகாலையில் வனப்பகுதியை விட்டு வெளியேறி காட்டுயானை ஒன்று மாக்கையா தோட்டத்திற்குள் புகுந்துள்ளது. சத்தம் கேட்டு வெளியே வந்த மாக்கையா யானை மிதித்துள்ளது. இதில் மாக்கையா சம்பவ இடத்தில் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.

    இந்நிலையில் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்த விவசாயிகள் மாக்கையா தோட்டத்திற்கு வந்தனர். அப்போது யானை தோட்டத்தில் இருந்து வனப்பகுதிக்கு சென்றதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மாக்கையாவை சென்று பார்த்தபோது அவர் யானை மிதித்து ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை கண்டு மேலும் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்த தகவல் காட்டு தீ போல் பரவியதால் மாக்கையா தோட்டத்திற்கு 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் திரண்டு வந்தனர்.

    மேலும் இதுகுறித்து தாளவாடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் செல்வம், சப்-இன்ஸ்பெக்டர் மார்ட்டின் லூதர் மற்றும் போலீசார் வந்தனர்.

    அடிக்கடி யானைகள் ஊருக்குள் புகுந்து உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. இதனால் வனப்பகுதியையொட்டி உள்ள அகலிகளை ஆழப்படுத்த வேண்டும். வனத்துறையினர் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும்.

    மாக்கையா குடும்பத்தினருக்கு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். மேலும் விவசாயிகள் மாக்கையா உடலை எடுக்க விடாமல் அங்கு திரண்டு உள்ளனர்.

    இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

    ×