search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேரள பல்கலைக்கழகம்"

    • லஞ்சம் வாங்கியதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து திருவனந்தபுரம் கண்டோன்மென்ட் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
    • 'சதி செய்தவர்களை கடவுள் காப்பாற்றட்டும்’ என்று எழுதியிருந்தார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கண்ணூர் செவ்வாபதியை சேர்ந்தவர் ஷாஜி(வயது51). இவர் சமீபத்தில் கேரள பல்கலைக்கழகத்தில் நடந்த பிரபலமான மார்க்கம்களி கலைவிழாவின் போட்டி நடுவர்களில் ஒருவராக இருந்தார்.

    அந்த போட்டியில் முடிவுகளை அறிவிக்க லஞ்சம் வாங்கியதாக ஷாஜி உள்ளிட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டது. ஷாஜி உள்ளிட்ட 3 பேர் இடைத்தரகர்கள் மூலம் லஞ்சம் பெற்றதாக கூறப்பட்டது. இதையடுத்து கலைவிழா போட்டி முடிவை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மோகனன் குன்னும்மாள் நிறுத்தி வைத்தார்.

    மேலும் லஞ்சம் வாங்கியதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து திருவனந்தபுரம் கண்டோன்மென்ட் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் விசாரணைக்காக ஷாஜி உள்ளிட்ட 3 பேரும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். விசாரணைக்கு பிறகு அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

    இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக திருவனந்தபுரம் கண்டோன்மென்ட் போலீசார் வழக்கு பதிந்தனர். வழக்கில் ஷாஜி முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். அவர் உள்ளிட்ட 3 பேரையும் நாளை விசாரணைக்கு ஆஜராகுமாறு போலீசார் நோட்டீஸ் அனுப்பியிருந்தனர்.

    இந்நிலையில் ஷாஜி தனது வீட்டில் உள்ள ஒரு அறையில் நேற்று இரவு பிணமாக கிடந்தார். இதனைப்பார்த்த அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் அதுபற்றி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, விசாரணை நடத்தினர்.

    அதில் ஷாஜி விஷம் குடித்து தற்கொலை செய்திருப்பது தெரிய வந்தது. காலை உணவு சாப்பிட்டுவிட்டு அறைக்குள் சென்ற ஷாஜி, அதன்பிறகு அறையை விட்டு வெளியே வரவில்லை என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மேலும் ஷாஜி தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றினர்.

    அதில் தனது மீதான குற்றச்சாட்டை அவர் மறுத்திருக்கிறார். அவர் எழுதியிருந்த கடிதத்தில், 'நான் நிரபராதி, யாரிடமும் பணம் வாங்கவில்லை, நான் எந்த தவறும் செய்ய மாட்டேன் என்பது எனது அம்மாவுக்கு தெரியும். இதற்கு சதி செய்தவர்களை கடவுள் காப்பாற்றட்டும்' என்று எழுதியிருந்தார்.

    லஞ்ச புகாரில் சிக்கியவர் போலீசார் விசாரணைக்கு அழைத்திருந்த நிலையில் தற்கொலை செய்திருக்கும் சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×