என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தவறான பழக்கவழக்கங்கள்"
- பெற்றோரின் நடவடிக்கைகளை பின்பற்றியே பிள்ளைகள் வளர்கிறார்கள்.
- குழந்தை வளர்ப்பு விஷயத்தில் பெற்றோர் கவனமுடன் செயல்பட வேண்டும்.
பெற்றோரின் நடவடிக்கைகளை பின்பற்றியே பிள்ளைகள் வளர்கிறார்கள். அதனால் குழந்தை வளர்ப்பு விஷயத்தில் பெற்றோர்தான் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும். தங்களின் நடை, உடை, பாவனைகள் பிள்ளைகளிடத்தில் பிரதிபலிக்கும் என்பதையும் உணர்ந்து அதற்கேற்ப நடந்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் பெற்றோர் பின்பற்றும் கெட்ட பழக்கவழக்கங்களை பார்த்து பிள்ளைகளும் அவற்றை பின்தொடர்வார்கள். அத்தகைய பழக்கவழக்கங்கள் பற்றியும், அவற்றை தவிர்ப்பதற்கான வழிமுறைகள் பற்றியும் பார்ப்போம்.
ஒழுங்கற்ற நடத்தை:
தாய், தந்தையரில் சிலர் தாங்கள் பயன்படுத்தும் பொருட்களை எடுத்த இடத்தில் வைக்கமாட்டார்கள். காபி பருகினால் டம்ளரை பருகிய இடத்திலேயே வைத்துவிடுவார்கள். அவரசமாக புறப்படும்போது குளித்துவிட்டு வந்த டவலை நாற்காலியில் அப்படியே போட்டுவிடுவார்கள். ஆடை மாற்றும்போதும் ஏற்கனவே உடுத்தி இருந்த ஆடையை அறைக்குள் ஏதாவது ஒரு இடத்தில் வீசிவிடுவார்கள். படுக்கையை விட்டு எழும்போது போர்வையை நேர்த்தியாக மடித்து அலமாரியில் வைக்கமாட்டார்கள்.
வெளியே சென்றுவிட்டு வீட்டுக்குள் நுழையும்போது வாசலுக்கு வெளியே காலணிகளை நேர்த்தியாக கழற்றி வைக்காமல் தனித்தனியாக சிதறி கிடக்கும் நிலையில் வைத்திருப்பார்கள். இதுபோன்ற பழக்க வழக்கங்களை பார்த்து வளரும் பிள்ளைகளும் அதனையே பின்பற்ற தொடங்குவார்கள். அது வாழ்நாள் முழுவதும் பின்தொடர வழிவகுத்துவிடும். அதற்கு பெற்றோர் காரணமாகிவிடக்கூடாது. தங்கள் பழக்கவழக்கங்களில் ஒழுங்கற்ற நடத்தைக்கு இடம் கொடுத்துவிடக்கூடாது.
போட்டி மனப்பான்மை
பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மற்ற குழந்தைகளுடன் ஒப்பிட்டு அவர்களின் திறன்களை மதிப்பிடுகிறார்கள். அப்படி செயல்படுவது குழந்தைகள் தங்களுடைய தனித்திறனை கண்டறியவோ, மெருகேற்றவோ வழி இல்லாமல் போய்விடும். மற்றவர்களுடன் கடுமையாக போட்டிப்போடும் மன நிலையே மேலோங்கும். அது அவர்களின் சுய மரியாதையை எதிர்மறையாக பாதிக்கலாம். இத்தகைய போட்டியில் வெற்றிபெற முடியாமல் போகும்போது விரக்தி, ஏமாற்றம், மனச்சோர்வு உண்டாகலாம். குழந்தைகள் சுயமாகவே தங்கள் திறமையை அறிந்து கொள்ள முடியாத நிலைக்கு ஆளாக்கிவிடக்கூடாது.
சுகாதாரம்
தினமும் குளிப்பது, உள்ளாடைகளை மாற்றுவது, சரும பராமரிப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பது, நேர்த்தியாக ஆடை அணிவது போன்ற பழக்கவழக்கங்களை பெற்றோர்களை பார்த்துதான் பிள்ளைகள் கற்றுக்கொள்வார்கள். காலையில் எழுந்ததும் பல் துலக்கிய பின்பே எந்த உணவுப்பொருளையும் சாப்பிட வேண்டும் என்ற பழக்கத்தை பின்பற்ற வைக்க வேண்டும். பெற்றோரில் ஒருவர் பல் துலக்காமல் எப்போதாவது சாப்பிடுவது தவறில்லை என்று கூறி அத்தகைய பழக்கத்தை பின்பற்றுபவராக இருந்தால் குழந்தைகளும் அப்படியே செயல்பட தொடங்கிவிடும். இது வாய்வழி சுகாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும். தினமும் குளிக்கும் வழக்கத்தை பின்பற்ற தவறினால் குழந்தைகளுக்கும் அத்தகைய பழக்கம் தொற்றிக்கொள்ளும்.
மற்றவர்களை தாக்குதல்
குழந்தைகள் ஏதேனும் தவறு செய்தால் அடித்து கண்டிக்கும் பழக்கத்தை பெற்றோர் பின்பற்றக்கூடாது. தவறு செய்தவர்களை அடிப்பதுதான் சரி என்ற எண்ணம் குழந்தைகள் மனதில் பதிந்துவிடும். தங்களிடம் பிரச்சினை செய்யும் மற்ற குழந்தைகளை அடிக்கும் பழக்கத்தை பின்பற்றிவிடுவார்கள். தவறு செய்யும்போது மென்மையாக கண்டிக்கும் அணுகுமுறையை பின்பற்றினால்தான் குழந்தைகளும் அத்தகைய பழக்கத்தை பின் தொடர்வார்கள்.
வார்த்தைகள்
குழந்தைகள் முன்பு பெற்றோர் உச்சரிக்கும் வார்த்தைகளில் கவனம் தேவை. ஏனெனில் குழந்தைகள் பேச ஆரம்பித்த பிறகு ஒவ்வொரு நாளும் புதிய சொற்களை கற்றுக்கொள்வதற்கு ஆர்வம் காட்டுவார்கள். பெற்றோர் பயன்படுத்தும் சொற்களை கொண்டு தங்களுடைய சொற்களஞ்சியத்தை உருவாக்குவார்கள். பெற்றோர் கெட்ட வார்த்தைகள் பேசினால் அதுவும் அவர்கள் மனதில் பதிந்துவிடும். தம்பதியர் குழந்தைகள் முன்னிலையில் சண்டையிடுவது, மற்றவர்களின் குடும்ப விஷயங்களை பேசுவது, பிறரை விமர்சனம் செய்வது போன்ற பழக்கங்களை தவிர்க்க வேண்டும்.
நகம் கடித்தல்
மன அழுத்தத்தில் இருக்கும் போது சில பெற்றோர் நகம் கடிப்பார்கள். அதை பார்த்து குழந்தைகளும் கற்றுக்கொள்வார்கள். அந்த பழக்கத்தை குறிப்பிட்ட வயதுக்குள் கைவிட வைத்துவிட வேண்டும். இல்லாவிட்டால் வாழ்நாள் முழுவதும் அந்தப்பழக்கம் தொற்றிக்கொள்ளும்.
டிஜிட்டல் சாதனங்களை பார்வையிடுதல்
மடிக்கணினிகள், ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்டுகள், டி.வி. போன்ற எலெக்ட்ரானிக் சாதனங்களை பெற்றோர் அதிகமாக பயன்படுத்தினால் குழந்தைகளும் அந்த நடைமுறையை கையாள தொடங்கிவிடுவார்கள். குழந்தைகள் முன்னிலையில் குறிப்பிட்ட நேரமே பார்க்க வேண்டும். அவர்களுடன் அதிக நேரத்தை செலவிட வேண்டும். அதன் மூலம் எலெக்ட்ரானிக் சாதனங்கள் மீது குழந்தைகள் மோகம் கொள்வதை தவிர்க்க முடியும்.
ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கம்
உணவு, நொறுக்குத்தீனி வகைகளை சாப்பிடும்போது அவை தரையில் விழாமல் சாப்பிட வேண்டும். அப்போதுதான் குழந்தைகளும் அப்படி சாப்பிட பழகுவார்கள். உடலுக்கு ஊட்டச்சத்து வழங்கும் உணவுப்பொருட்களுக்குத்தான் முன்னுரிமை கொடுக்க வேண்டும். துரித உணவுகளை தவிர்க்க வேண்டும். அடிக்கடி கேக், மிட்டாய் போன்ற அதிக சர்க்கரை சேர்க்கப்பட்ட பதார்த்தங்களை உட்கொள்ளக்கூடாது. இத்தகைய கட்டுப்பாடுகளை பெற்றோர் பின்பற்றினால்தான் குழந்தைகளிடத்தில் ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளும் ஆர்வம் அதிகரிக்கும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்