search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தஞ்சாவூர் தொகுதி"

    • இந்தியாவில் உள்ள இந்துத்துவ சனாதன சக்திகள் ஒன்றிணைந்து மாநாடு நடத்தியது.
    • வணிகர்கள் ஜி.எஸ்.டி. கொடுமையிலிருந்து மீட்கவும் இத்தேர்தல் அவசியமாக இருக்கிறது.

    தஞ்சாவூா்:

    தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் முரசொலியை ஆதரித்து நேற்று மாலை தஞ்சை ஆப்ரஹாம் பண்டிதர் சாலையில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    பிற மாநிலங்கள் எல்லாம் தமிழ்நாட்டை பின்பற்றுகிற வகையிலான ஆட்சியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அமைத்துள்ளார். பள்ளி குழந்தைகள் பசியுடன் இருக்கக்கூடாது என்பதற்காக காலை உணவு திட்டத்தை கொண்டு வந்தார். இதை கனடா பிரதமரும் தன்னுடைய நாட்டில் கொண்டு வந்து பாராட்டுகிறார். உலக நாடுகளும் நம் மாநிலத்தை எடுத்துக்காட்டாக சொல்கிற அளவுக்கு காலை உணவு திட்டத்தை முதலமைச்சர் கொண்டு வந்துள்ளார்.

    இதேபோல, பெண்களுக்கான இலவச பஸ் பயண திட்டத்தையும் கொண்டு வந்துள்ளார். மேலும், 2.50 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு திட்டத்தை கொண்டு வந்து விவசாயிகளின் கண்ணீரை துடைத்துள்ளார். ஜனநாயகமா, சர்வாதி காரமா, பாசிசமா, குடியரசு ஆட்சியா என்பதை தீர்மானிக்கிற ஒரு போர்க்களத்திலே நாம் நின்று கொண்டிருக்கிறோம். அவர்கள் வெற்றி பெற்று விடலாம் என்கிற ஆணவத்தில் இருக்கின்றனர்.

    நம் நாட்டில் எத்தனையோ பிரதமர்கள் ஆட்சி செய்தனர். ஆனால், சமூகத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்திய திராவிட இயக்கத்தை அழித்து, ஒழித்துவிட்டுதான் மறுவேலை பார்ப்பேன் என பிரதமர் மோடி ஊருக்கு ஊர் பேசி வருகிறார். இது அவரது ஆணவத்தை காட்டுகிறது. இது பற்றி அவரை நேரில் சந்திக்கும்போது கேட்பேன்.

    இத்தேர்தல் இந்தியாவின் ஜனநாயகம், எதிர்காலத்தை சார்ந்ததாக உள்ளது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்கவும், வணிகர்கள் ஜி.எஸ்.டி. கொடுமையிலிருந்து மீட்கவும் இத்தேர்தல் அவசியமாக இருக்கிறது.

    இந்தியாவில் உள்ள இந்துத்துவ சனாதன சக்திகள் ஒன்றிணைந்து மாநாடு நடத்தியது. இதில், அரசியல் சட்டத்தை தீயிட்டு கொளுத்திவிட்டு, மனு நீதியை சட்டமாகக் கொண்டு வருவோம் என்றும், நம் நாட்டின் தலைநகராக வாரணாசியை அறிவிப்போம் எனவும், முஸ்லீம்களுக்கு வாக்குரிமை கிடையாது எனவும் தீர்மானித்தனர்.

    இவ்வளவு பேரபாயம் இருப்பதை அனைவரும் உணர்ந்து மக்கள் விழிப்புணர்வுடன் இருந்து ஜனநாயகத்தை காக்கும் கடமையை மேற்கொள்ள வேண்டும்.இத்தேர்தல் என்பது 2-வது சுதந்திர போரை போன்றது.

    எனவே, ஒவ்வொருவரும் 10 வாக்காளர்களை சந்தித்து உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க செய்யுமாறு கேட்டு கொள்ள வேண்டும். தஞ்சை தொகுதி வெற்றி வேட்பாளர் முரசொலியை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×