search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மு.க ஸ்டாலின்"

    • 2026 சட்டமன்ற தேர்தலை முன் வைத்து இந்த மாற்றங்கள் இருக்கும் என கூறப்படுகிறது.
    • அடுத்த மாதம் ஆட்சியிலும், கட்சியிலும் அதிரடி மாற்றங்கள் நிகழும் என்று அறிவாலய வட்டாரத்தில் பரவலாக பேசப்படுகிறது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ந்தேதியே முடிந்து விட்டாலும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக வாக்குப் பதிவுகள் நடைபெற்று வருகிறது.

    இதில் தமிழ்நாட்டில் தி.மு.க., காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியே அதிக தொகுதிகளை கைப்பற்றும் என தெரிகிறது. ஆனால் பிரமாண்ட் வெற்றிக்கான வாய்ப்புகள் இருந்தும் சில தொகுதிகளில் முக்கிய தி.மு.க. நிர்வாகிகளே சரியாக வேலை செய்யாமல் உள்ளடி வேலை செய்ததாக கட்சி மேலிடத்துக்கு புகார்கள் சென்றுள்ளது.

    இதனால் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் சம்பந்தப்பட்ட தொகுதியில் என்னென்ன பிரச்சனை நடந்தது என்பது பற்றி விசாரித்து வைத்துள்ளார். சம்பந்தப்பட்ட தொகுதிகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள் சிலர் மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

    இதனால் தேர்தல் முடிவு வந்ததும் கட்சிக்குள்ளும், ஆட்சியிலும் குறிப்பிடத்தகுந்த மாற்றங்களை செய்ய அவர் முடிவெடுத்துள்ளார் என்று தி.மு.க. நிர்வாகிகள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. 2026 சட்டமன்ற தேர்தலை முன் வைத்து இந்த மாற்றங்கள் இருக்கும் என கூறப்படுகிறது.

    பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியானதும் மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும் சூழல் உருவானால் மத்தியில் ஆட்சியில் பங்கெடுப்பது குறித்த வேலைகளில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கவனம் செலுத்து வார். இந்த பணிகள் ஜூன் 10-ந்தேதி வரை இருக்க வாய்ப்புள்ளது.

    அப்படி இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும் பட்சத்தில் டி.ஆர்.பாலுவுக்கு ரெயில்வே இலாகாவும், கனிமொழி, ஆ.ராசா போன்றோருக்கு முக்கிய இலாகா கிடைக்கும் என்றும் கட்சி வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

    ஒருவேளை பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்து விட்டால் ஜூன் முதல் வாரமே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக அமைச்சரவையை அதிரடியாக மாற்றி அமைத்து விடுவார் என்றும் கூறப்படுகிறது.

    தற்போதைய அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து ஏற்கனவே உளவுத்துறை அளித்துள்ள ரிப்போர்ட் மற்றும் பல்வேறு தகவல்களின் அடிப்படையில் கிடைத்துள்ள விசயங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையில் உள்ளது. அதன்படி அமைச்சரவையில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட இருக்கிறது. 4 பேர் நீக்கப்பட்டு 4 பேர் புதிதாக சேர்க்கப்பட உள்ளதாக தெரிகிறது.

    2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலை மனதில் வைத்து சில புதுமுகங்களுக்கு வாய்ப்பு கொடுக்க முதலமைச்சர் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.

    அது மட்டுமின்றி உட்கட்சி பிரச்சனைகளை சரி செய்யும் வகையில் தி.மு.க.வில் புதிய மாவட்டச் செயலாளர்கள் நியமனம் ஜூன் 2-வது வாரம் இருக்கும் என்று தி.மு.க.வினர் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.

    கட்சி நிர்வாகிகள் பலர் பொறுப்புகளை எதிர் பார்ப்பதால் கட்சி ரீதியில் மாவட்டங்களை அதிகப்படுத்தி, தி.மு.க.வின் மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது. இதன் மூலம் 2026 சட்டசபை தேர்தலில் அதிக இடங்களில் தி.மு.க. வெற்றி பெற முடியும் என கருதுகின்றனர்.

    எனவே அடுத்த மாதம் ஆட்சியிலும், கட்சியிலும் அதிரடி மாற்றங்கள் நிகழும் என்று அறிவாலய வட்டாரத்தில் பரவலாக பேசப்படுகிறது.

    • திமுக அரசு வெளியிடாமல் இருப்பது கண்டனத்திற்குரியது.
    • இந்த ஆண்டும் ஏதேனும் நொண்டிச்சாக்கு சொல்லப்போகிறீர்களா?

    தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று வரும் மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தும் நோக்கில் அ.தி.மு.க. ஆட்சி காலக்கட்டத்தில் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம் துவங்கப்பட்டது. இந்த திட்டத்தில் ஏழை எளிய மாணவர்கள் பயனுற்று வந்தனர்.

    இந்த நிலையில், தற்போதைய ஆளும் கட்சியான தி.மு.க. மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டத்தை நிறுத்திவிட்டதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

    இது குறித்த எக்ஸ் தள பதிவில், "அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தும் நோக்கில், அம்மாவின் அரசால் தொடர்ந்து சிறப்புற வழங்கப்பட்டு வந்த லேப்டாப்களை இந்த விடியா திமுக அரசு ஆட்சிக்கு வந்தவுடன் நிறுத்தப்பட்டுள்ளது."

    "இன்னும் சில நாட்களில் புதிய கல்வியாண்டு தொடங்கும் நிலையில், இந்த ஆண்டிற்கான லேப்டாப்களை வழங்குவது குறித்து எவ்வித அறிவிப்பும் விடியா திமுக அரசு வெளியிடாமல் இருப்பது கண்டனத்திற்குரியது."

    "மு.க. ஸ்டாலின்அவர்களே- லேப்டாப் வழங்கவேண்டும் என்ற அரசுப்பள்ளி மாணவர்களின் ஒருமித்த எதிர்பார்ப்பை இந்த ஆண்டாவது உங்கள் விடியா திமுக அரசு நிறைவேற்ற முன்வருமா? அல்லது, அம்மா அரசால் கொண்டுவரப்பட்ட திட்டம் என்ற காழ்ப்பில் இந்த ஆண்டும் ஏதேனும் நொண்டிச்சாக்கு சொல்லப்போகிறீர்களா?," என்று குறிப்பிட்டுள்ளார்.

    • படைப்பாற்றல் மிக்க இளந்தலைவராக, எந்நாளும் மக்களுடன் இணைந்திருப்பவராகத் திகழ்ந்தவர் தலைவர் கலைஞர்.
    • ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு சராசரியாக 50 ஆயிரம் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    சென்னை:

    தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு "முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா மடல்" என்ற தலைப்பில் எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

    நம் இதயத்துடிப்பாகவும், குருதி ஓட்டமாகவும் இருந்து ஒவ்வொரு நாளும் நம்மை இயக்கிக் கொண்டிருப்பவர் தலைவர் கலைஞர். அவர் நம்மை இயக்குவதால்தான் திராவிட முன்னேற்றக் கழகம் எனும் அரசியல் பேரியக்கத்தை நம்மால் அவர் வகுத்துத் தந்த பாதையில் வெற்றிகரமாக இயக்க முடிகிறது.

    தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் மட்டுமல்ல, இந்திய அரசியல் வரலாற்றிலேயே முத்தமிழறிஞர் கலைஞரைப் போன்ற பொதுவாழ்வில் சளைக்காமல் உழைத்து, சாதனைகள் பல படைத்த தலைவரைக் காண்பது அரிது. இந்திய வரைபடத்தில் தேட வேண்டிய ஒரு குக்கிராமமான திருக்குவளையில் பிறந்து, திருவாரூர் எனும் சிறிய நகரில் பயின்று, 14 வயதில் மாணவப் பருவத்திலேயே மொழி-இன உணர்வுடனான கொள்கை வழி நடந்து, பெரியார்-அண்ணா எனத் தன் தலைவர்களின் நன்மதிப்பைப் பெறும் வகையில் கடுமையாக உழைத்து, போராட்டக்களத்திற்கு அஞ்சாத வீரனாக, சிறைத் தண்டனையைச் சிரித்த முகத்துடன் ஏற்கும் தீரனாக, படைப்பாற்றல் மிக்க இளந்தலைவராக, எந்நாளும் மக்களுடன் இணைந்திருப்பவராகத் திகழ்ந்தவர் தலைவர் கலைஞர்.

    முதன் முதலில் தேர்தல் களம் கண்ட 1957 முதல், இறுதியாகத் தேர்தல் களம் கண்ட 2016 வரை 13 தேர்தல்களில் தொடர் வெற்றியைப் பெற்ற இந்திய அரசியல் தலைவர் கலைஞர் மட்டுமே. 5 முறை தமிழ் நாட்டின் முதலமைச்சர். அளப்பரிய திட்டங்கள், இந்தியாவுக்கே முன்னோடியான சாதனைகள், இந்திய அரசியலில் முக்கியப் பங்காற்றிப் பல குடியரசுத் தலைவர்களையும் பிரதமர்களையும் தேர்ந்தெடுக்கத் துணைநின்ற அரசியல் ஆளுமை. இத்தனைத் திறமைகளும் இவ்வளவு சாதனைகளும் ஒருங்கே பெற்ற ஒரே தலைவர் நம் முத்தமிழறிஞர் கலைஞர்தான்.

    அவர் நம்மை நாள்தோறும் இயக்கும்போது, நம் உழைப்பும் அவரிடம் பெற்றதாகவே இருக்கும். நம் இயக்கமும் அவர் வழிகாட்டிய திசையில் நடக்கும். நமது கழக ஆட்சியும் அவரது ஆட்சி போலவே சாதனைத் திட்டங்களால் வரலாறு படைக்கும். அதனால்தான் 2023 ஜூன் 3-ம் நாள் தொடங்கிய தலைவர் கலைஞரின் நூற்றாண்டு 2024 ஜூன் 3 அன்று நிறைவடையும் நிலையில் கடந்த ஓராண்டு முழுவதும் சாதனைத் திட்டங்களாலும், மக்களுக்குப் பயன் அளிக்கும் செயல்களாலும் அவரது நூற்றாண்டைக் கொண்டாடியிருக்கிறோம்.

    2023 மார்ச் 22-ம் நாள் நடந்த மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில், தமிழினத் தலைவர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை, இந்தியாவையே திரும்பிப் பார்க்கச் செய்யும் வகையில் கொண்டாடுவோம் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அதற்கேற்ற வகையில் செயல்திட்டங்கள் வகுக்கப்பட்டன.

    எளிய மக்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா, கழகத்தின் இரு வண்ணக் கொடி ஏற்றும் விழாக்கள் ஆகியவை மாவட்ட அளவில் தொடங்கி, கிளைகள்தோறும் நடத்தப்பட வேண்டும். ஒரு நாளோடு முடிந்துவிடுவதில்லை நம் உயிர்நிகர் தலைவர் கலைஞரின் பிறந்தநாள். அவர் நிறைவேற்றிய சிறந்த திட்டங்களையும், அவர் கற்றுத் தந்த ஆட்சிக்கான இலக்கணத்தின்படி தொடர்கின்ற 'திராவிடல் மாடல்' அரசின் கடந்த ஓராண்டு கால சாதனைகளையும் மக்களிடம் ஒவ்வொரு நாளும் எடுத்துச் சென்றிட வேண்டும். கழகத்தின் இளைய தலைமுறையினரின் நெஞ்சில் அவற்றைப் பதியச் செய்திட வேண்டும்.


    என்றென்றும் கலைஞர்-எங்கெங்கும் கலைஞர் என்பதுதான் நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் நூற்றாண்டின் மைய நோக்கமாக அமைந்திருந்தது. தலைமைக் கழகம் தொடங்கி மாவட்டக் கழகம், கழகத்தின் சார்பு அணிகள் என ஒவ்வொருத் தரப்புக்குமான பணிகள் திட்டமிடப்பட்டு, அவற்றை ஆண்டு முழுவதும் நிறைவேற்றிடச் செய்வதே முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டின் செயல்பாடாக அமைந்தது.

    மாவட்டக் கழகத்தின் சார்பில் 'ஊர்தோறும் கலைஞர்' என்ற தலைப்பில் அனைத்து ஊர்களிலும், கிளைகளிலும் கழகத்தின் இருவண்ணக் கொடியை ஏற்றுதல், கலைஞர் செய்த சாதனைகளையும், தற்போதைய திராவிட மாடல் அரசின் சாதனைகளையும் மக்களிடம் கொண்டு சேர்த்தல் ஆகியவற்றுடன் தொகுதிகள்தோறும் தலைவர் கலைஞரின் மார்பளவுச் சிலையினை நிறுவுதல் என்ற திட்டமும் வகுத்தளிக்கப்பட்டு, பல மாவட்டங்களிலும் நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்களின் சிலை கம்பீரமாக உயர்ந்து நிற்பதை அவரது உடன்பிறப்புகளான நீங்கள் அறிவீர்கள்.

    கழகத்தினர் மட்டுமின்றி, பொதுமக்களும் தலைவர் கலைஞரின் சாதனைகளை எடுத்துரைத்து, சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருவதைக் காண முடிகிறது.

    #கலைஞர் 100 என்ற ஹேஷ்டேக்கில் இவற்றைப் பார்வையிட முடியும் என்பதோடு, 2023 ஜூன் 3 முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்தநாளன்று எக்ஸ் (டுவிட்டர்) தளத்தில் அவரை வாழ்த்திப் பதிவிட்ட இந்த ஹேஷ்டேக் ஒரு மில்லியனைக் கடந்து சாதனைப் படைத்தது.

    பேரறிஞர் அண்ணா உருவாக்கிய திராவிட முன்னேற்றக் கழகத்தை ஊர்கள் தோறும் வளர்த்தெடுத்தவர் தலைவர் கலைஞர். அண்ணாவின் மறைவுக்குப் பிறகு கழகத்தை அரை நூற்றாண்டு காலம் கட்டிக்காத்து வலிமைப் படுத்தியவரும் தலைவர் கலைஞர்தான். அவருடைய நூற்றாண்டில் கழகத்தை மேலும் வலிமைப்படுத்தும் வகையில், புதிதாக ஒரு கோடி உறுப்பினர்களைச் சேர்க்கும் செயல்திட்டமும் வகுக்கப்பட்டு, ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு சராசரியாக 50 ஆயிரம் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.


    தன்னால் கழகத்திற்கு என்ன நன்மை என்று நினைப்பவர்கள்தான் கழகத்தின் ரத்தநாளங்கள் என்றவர் கலைஞர். அத்தகைய ரத்த நாளங்களாகக் கழகத்தின் அனைத்து நிர்வாகிகளும் செயலாற்றி, ஒரு கோடி புதிய உறுப்பினர்களைச் சேர்த்து, கழகத்தின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கையை இரண்டு கோடிக்கு மேல் உயர்த்தியிருப்பது உயிர்நிகர் தலைவர் கலைஞரின் நூற்றாண்டில் நாம் மேற் கொண்டுள்ள அரிய பணியாகும்.

    பாராளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டியிருந்ததாலும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்ததாலும் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டினையொட்டி நாம் திட்டமிட்டிருந்த ஒரு சில செயல்பாடுகள் முழுமை பெற இயலவில்லை. எனினும், தேர்தல் பணியும்கூட தலைவர் கலைஞரின் புகழ் போற்றும் பணியாகவே இருந்தது.

    இந்தியாவில் ஜனநாயகத்திற்கு நெருக்கடிகள் ஏற்பட்டபோதெல்லாம் வடஇந்தியத் தலைவர்களின் பார்வை தெற்கை நோக்கித் திரும்பியதும், அவர்களின் எதிர்பார்ப்பிற்குரிய தலைவராக நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் செயலாற்றியதும், அதன் காரணமாக ஜனநாயகம் மீட்கப்பட்டு, ஆட்சியில் நிலைத்தன்மை ஏற்பட்டதையும் எவரும் மறுக்க முடியாது. கூட்டாட்சித் தத்துவத்தை வலியுறுத்தி, மாநில சுயாட்சியின் குரலை இந்திய அளவில் முன்னெடுத்தவர் தலைவர் கலைஞர்.

    திராவிட முன்னேற்றக் கழகம் என்றாலே சமூகநீதி, மத நல்லிணக்கம், எளிய மக்களின் வாழ்வுரிமை, மாநில சுயாட்சி, ஆதிக்க மொழிகளிடமிருந்து தாய் மொழியைப் பாதுகாத்தல், இந்தியாவுக்கே முன்னோடியான திட்டங்கள் என்ற எண்ணத்தைத் தன் செயல்களால் பதிவு செய்திருக்கிறார் கலைஞர். அதனால்தான் சமூகநீதிக்கு எதிராகவும், மாநில உரிமைகளைப் பறிக்கின்ற வகையிலும், ஏழை-எளிய மக்களைப் பற்றி அக்கறையில்லாதவர்களாகவும் இருக்கக்கூடிய மதவெறி அரசியல் நடத்துவோர் இந்தியாவின் எந்த மாநிலத்தில் பேசினாலும் தி.மு.க. மீது தாக்குதலை நடத்துகிறார்கள். வன்மத்தைக்கக்குகிறார்கள். வதந்திகளைப் பரப்புகிறார்கள். தோல்வி பயத்தில் நடுங்குவதை அவர்களின் குரல் வெளிப்படுத்துகிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் தோழமையில் புதிய இந்தியா உருவாகப் போவதை உள்ளூர உணர்ந்து அவர்கள் புலம்புவதைக் காண முடிகிறது.

    ஜூன்-3 அன்று முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்தநாள். தேர்தல் நடத்தை முறைகளைக் கவனத்தில் கொண்டு, மக்கள் நலன் சார்ந்த நிகழ்வுகளை ஒவ்வொரு மாவட்டக் கழகம் சார்பிலும், ஒன்றிய-நகர-பேரூர்-கிளைக் கழகங்கள் சார்பிலும் நடத்தப்பட வேண்டும். கலைஞர் நூற்றாண்டு நிறைவுறும் இந்த ஜூன்-3 அன்று மக்கள் கூடும் இடங்களில் முத்தமிழறிஞர் கலைஞரின் திருவுருவப்படத்திற்கு மாலையிட்டு, அனைத்துக் கொடிக்கம்பங்களிலும் கொடிகளைப் புதுப்பித்துக் கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி, மக்களுக்கான நலத்திட்ட உதவிகளை வழங்கிட வேண்டும்.

    கழகத்தினர் தங்கள் இல்லங்களுக்கு முன்பாக 'கலைஞர் 100' என்ற வரியுடன் கோலமிட்டு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளைக் கொண்டாட வேண்டும். உள்ளூர் மைதானங்களில் இளைஞர்கள், பெண்களுக்கான விளையாட்டுப் போட்டிகளை நடத்திப் பரிசுகளை வழங்கி ஊக்குவிக்க வேண்டும்.

    ஜூன்-4 பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகின்றன. அன்றைய நாளில் வெற்றிக் கொடி ஏற்றுவோம். 'இந்தியா'வின் வெற்றியைத் தலைவர் கலைஞருக்கு காணிக்கையாக்குவோம். தமிழ் உள்ளவரை புகழ் நிலைத்திருக்கும் நம் உயிர்நிகர் தலைவர் கலைஞரின் நூற்றாண்டின் தொடர்ச்சியை இந்திய அளவில் கொண்டாடுவோம்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.

    • நடிகர் அர்ஜுனின் மகளும், நடிகையுமான ஐஸ்வர்யாவுக்கும், நடிகர் தம்பி ராமையாவின் மகன், நடிகர் உமாபதிக்கும் கடந்த நவம்பர் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.
    • ஐஸ்வர்யாவும் விஷாலுடன் 'பட்டத்து யானை' உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார்.

    'ஆக்ஷன் கிங்' என ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் அர்ஜுனின் மகளும், நடிகையுமான ஐஸ்வர்யாவுக்கும், நடிகர் தம்பி ராமையாவின் மகன், நடிகர் உமாபதிக்கும் கடந்த நவம்பர் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. நடிகர் அர்ஜுனுக்கு சொந்தமான ஆஞ்சநேயர் கோவிலில் நண்பர்கள், உறவினர்கள் சூழ எளிமையாக இந்த நிகழ்வு நடந்தது.

    அர்ஜுன் தொகுத்து வழங்கிய 'சர்வைவர்' நிகழ்ச்சி மூலம் ஐஸ்வர்யாவுக்கு அறிமுகமானவர் உமாபதி. நிகழ்ச்சியில் உமாபதியின் நற்குணம் அர்ஜுனுக்குப் பிடித்துப் போக தனது வீட்டு மாப்பிளையாக பச்சைக் கொடி காட்டினார்.

    உமாபதி அதாகப்பட்டது மகாஜனங்களே, மணியார் குடும்பம், தண்ணி வண்டி, சேரன் இயக்கிய திருமணம் ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

    ஐஸ்வர்யாவும் விஷாலுடன் 'பட்டத்து யானை' உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார். திருமணத்திற்குப் பிறகு படங்களில் நடிக்கக் கூடாது என தம்பி ராமையா குடும்பம் கேட்டுக் கொண்டதாக தகவல் பரவியது. ஆனால், இது குறித்து ஐஸ்வர்யா இன்னும் தெளிவுப்படுத்தவில்லை. இவர்களது திருமண நிச்சயதார்த்தம் நடந்து ஆறு மாதங்களான நிலையில் திருமணம் எப்போது என்று ரசிகர்கள் கேட்டு வந்தனர்.

    வரும் ஜூன் 10-ம் தேதி கிருகம்பாக்கத்தில் உள்ள அர்ஜுனின் தோட்டத்தில் தான் ஐஸ்வர்யா அர்ஜுன் மற்றும் உமாபதி திருமணம் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என பலருக்கும் அழைப்பிதழ் வைக்கும் பணியை அர்ஜுன் ஆரம்பித்துள்ளார்.

    தனது மகள் திருமணத்துக்காக அழைப்பிதழ் வைக்கும் பணியை ஆரம்பித்துள்ள நடிகர் அர்ஜுன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு குடும்பத்துடன் சென்று அழைப்பு விடுத்துள்ள புகைப்படம் தற்போது வெளியாகி இருக்கிறது. தம்பி ராமைய்யாவும் தனது குடும்பத்துடன் உடன் சென்று முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பெரியாரின் சிந்தனைகளை 21 இந்திய மற்றும் உலக மொழிகளில் அச்சு மற்றும் மின்னூல் பதிப்புகளாகத் தயாரித்திட தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்திற்கு 5 கோடி ரூபாய் வழங்கிட ஆணையிடப்பட்டுள்ளது.
    • 100 கல்லூரிகளுக்கு ஒவ்வொரு கல்லூரிக்கும் வைப்புத் தொகையாக ரூ. 5 லட்சம் என மொத்தம் ரூபாய் 5 கோடி ரூபாயும் முதலாண்டில் போட்டிகள் நடத்திட கூடுதலாக ரூபாய் 36 லட்சமும் வழங்கும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் ஆணையிடப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ் மொழி வளர்ச்சிக்காகவும்; தமிழை ஆட்சி மொழியாக்கிட அரும்பாடுபட்டு வருவதோடு, தமிழ் வளர்ச்சித்துறையின் வாயிலாக உலகத்தின் முதுமொழியாம் அமுதமெனும் தமிழ்மொழியை உயர்த்துதல், தமிழறிஞர்களுக்கு விருது வழங்குதல், அரிய தமிழ் நூல்களை நாட்டுடைமையாக்குதல் உள்ளிட்ட எண்ணற்ற நன்மை பயக்கும் திட்டங்களைத் திறம்பட செயல்படுத்தப்பட்டு வருகின்றன.


    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 17.12.2021 அன்று தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை மாநிலப் பாடலாக அறிவித்து, இப்பாடல் பாடப்படும்போது அனைவரும் தவறாமல் எழுந்து நின்று மரியாதை செலுத்திட வேண்டுமென்று ஆணையிட்டுத் தமிழ்மொழிக்கு பெருமை சேர்க்கப்பட்டு உள்ளது.

    தமிழுக்கு அருந்தொண்டாற்றி வரும் தமிழறிஞர்களை அடையாளம் கண்டு அவர்களைப் பெருமைப்படுத்திடும் வகையில், 35 இனங்களில் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கி சிறப்புச் செய்யப்பட்டு வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதுத் தொகையை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தியதோடு, புதியதாக இலக்கிய மாமணி விருது தோற்றுவிக்கப்பட்டு ஆண்டுதோறும் மூன்று அறிஞர்களுக்கு தலா விருது தொகை ரூ.5 லட்சம் வழங்கிட ஆணையிட்டுள்ளார்.

    மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் புதியதாக உருவாக்கப்பட்டு பொதுத்துறையால் இரண்டு ஆண்டுகள் வழங்கப்பட்ட தகைசால் தமிழர் விருதும் இவ்வாண்டு முதல் தமிழ் வளர்ச்சித்துறையின் வாயிலாக வழங்கப்படவுள்ளது.

    தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், கடந்த 3 ஆண்டுகளில் 22 தமிழறிஞர்களின் நூல்களை நாட்டுடைமையாக்கி, அவர்களின் மரபுரிமையர்க்கு 2 கோடியே 85 லட்சம் ரூபாய் நூலுரிமைத்தொகையும் வழங்கி சிறப்பிக்கப்பட்டுள்ளது.

    தமிழறிஞர்களுக்கு தமிழ்நாட்டிற்குள் வீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு, முதற்கட்டமாக 6 அறிஞர்கட்கு தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் உயர் வருவாய்ப் பிரிவு வீடுகளை தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கியுள்ளார்.

    ஆண்டுதோறும் செயல்படுத்தப்பட்டு வரும் "குறள் முற்றோதல்" திட்டத்தின் கீழ் கடந்த மூன்று ஆண்டுகளில் 1,330 குறட்பாக்களையும் முற்றோதல் செய்த 451 மாணவர்களுக்கு தலா ரூ.15,000 வீதம் மொத்தம் 63 லட்சத்து 46 ஆயிரத்து 500 ரூபாய் குறள் பரிசுத் தொகை வழங்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டுள்ளனர்

    "தமிழ்நாட்டில் கல்லூரி மாணவர்களிடையே தமிழ் ஆர்வத்தினை அதிகரிக்க, 100 கல்லூரிகளுக்கு ஒவ்வொரு கல்லூரிக்கும் வைப்புத் தொகையாக ரூ. 5 லட்சம் என மொத்தம் ரூபாய் 5 கோடி ரூபாயும் முதலாண்டில் போட்டிகள் நடத்திட கூடுதலாக ரூபாய் 36 லட்சமும் வழங்கும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் ஆணையிடப்பட்டுள்ளது.

    'தீராக் காதல் திருக்குறள்' என்ற பெயரில் தமிழ் இணையக் கல்விக் கழகம் வாயிலாக தீந்தமிழ் நிகழ்ச்சிகளை நடத்திட 25 லட்சம் ரூபாய் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ள நிதியுதவியில் குறளோவியம் எனும் தலைப்பில் ஓவியப் போட்டி நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகளும் வழங்கப்பட்டன.

    தமிழக வரலாற்றில் முதன்முறையாக தந்தை பெரியாரின் சிந்தனைகளை 21 இந்திய மற்றும் உலக மொழிகளில் அச்சு மற்றும் மின்னூல் பதிப்புகளாகத் தயாரித்திட தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்திற்கு 5 கோடி ரூபாய் வழங்கிட ஆணையிடப்பட்டுள்ளது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சீரிய முயற்சியினால் தமிழ் மொழி வளர்ச்சிக்காக எண்ணற்ற திட்டங்களைக் கடந்த மூன்றாண்டுகளாக நிறைவேற்றி வருவதுடன், பண்டையத் தமிழர் பண்பாட்டையும், பழங்காலத் தமிழர்களின் எழுத்தறிவு, நாகரிக வாழ்வு முறைமைகளையும் நுண்மையோடு பறை சாற்றும் வகையில், கீழடியில் அருங்காட்சியகம் அமைத்துச் சிறப்பித்ததோடு, அதன் தொடர்ச்சியாகப் பொருநையிலும் அருங்காட்சியகம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    தமிழர்களை ஒருங்கிணைக்கும் விதமாகவும், அவர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாகவும் ஜனவரி மாதம் 12-ம் நாளினை அயலகத் தமிழர் தினமாக அறிவிக்கப்பட்டு, தமிழ் வெல்லும் என்னும் கருப்பொருளை மையமாகக் கொண்டு, நடப்பாண்டில் அயலகத் தமிழர் மாநாடும் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

    சிவகங்கை மாவட்டம் மகிபாலன் பட்டியில் "யாதும் ஊரே யாவரும் கேளிர்" எனும் செம்மொழித் தொடர் தந்த கணியன் பூங்குன்றனார் நினைவுத் தூணைக் காணொலிக் காட்சி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தொலைநோக்குத் திட்டத்தின் கீழ் பிறநாட்டு இலக்கியங்களைத் தமிழில் மொழிபெயர்த்து அச்சிட்டு வெளியிடும் பணியில் புகழ்வாய்ந்த கிரேக்கக் காப்பியங்களான ஓமரின் 'இலியட்', 'ஒடிசி' ஆகிய இருபெருநூல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன.

    இன்பத் தமிழுக்கு மேலும் சிறப்புகள் சேர்க்கும் வகையில் இரண்டாம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, சென்னையில் வரும் 2025-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஐந்து நாட்கள் சீரோடும் சிறப்போடும் சிந்தனைச் செயல்திறத்தோடும் மாபெரும் அளவில் நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழ்நாடுக்கு வந்தால் தமிழர்களை போற்றுகின்றனர். இது என்னவென்று தெரியவில்லை.
    • இந்தியா கூட்டணி இந்த முறை 300ல் இருந்து 370 இடங்கள் வரை கைப்பற்றி ஆட்சி அமைக்கும். இதில் எந்தவித மாற்று கருத்தும் கிடையாது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கேரளா அரசு சிலந்தியாற்றில் அணை கட்டும் விவகாரத்தில் தமிழ்நாடு முதல்வர், நீர்வளத்துறை அமைச்சர் ஆகியோர் உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். முல்லை பெரியாறு விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. எடுக்கவும் மாட்டார்கள்.

    போதைப்பொருட்கள் புழக்கத்தை எந்தளவுக்கு தடுத்திருக்கிறோம் என்பதை நாங்கள் எவ்வளவு பிடித்திருக்கிறோம் என்பதில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.

    தமிழக முதல்வர் போதைப்பொருள் நடமாட்டத்தை ஒருபோதும் அனுமதிக்கமாட்டார். இதனால் மாணவர்களின் வாழ்வு கெடும் என்று உணர்ந்தவர் நமது முதல்வர். போதைப்பொருள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிப்பது தான் எங்களது லட்சியம். ஒடிசாவில் தமிழர்களை திருடர்கள் என்று தமிழர்களுக்கு விரோதமாக பேசுகின்றனர்.

    தமிழ்நாடுக்கு வந்தால் தமிழர்களை போற்றுகின்றனர். இது என்னவென்று தெரியவில்லை. நாங்கள் இரட்டை நிலைப்பாடு எடுப்பது கிடையாது. என்றைக்கும் ஒரே நிலைப்பாடு தான்.

    குரங்கு கையில் பூ மாலை கிடைத்தால் அது பிச்சுக் கொண்டே தான் இருக்கும், அதுபோல் நமது கெட்ட நேரம் இது போன்ற ஆளுநர் நமக்கு வந்து வாய்த்துள்ளார். ஏற்கனவே திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்து சர்ச்சை கிளம்பியது திரும்பவும் திருவள்ளுவருக்கு காவி உடை என்றால் ஆளுநரை என்னதான் செய்ய முடியும், வாதத்திற்கு மருந்துண்டு பிடிவாதத்திற்கு மருந்தில்லை.

    இந்தியா கூட்டணி இந்த முறை 300ல் இருந்து 370 இடங்கள் வரை கைப்பற்றி ஆட்சி அமைக்கும். இதில் எந்தவித மாற்று கருத்தும் கிடையாது.

    இவ்வாறு அமைச்சர் கூறினார்.

    • கேரள அரசு முன்மொழிந்துள்ள கருத்துருவை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளக்கூடாது.
    • மத்திய அமைச்சர் இதில் உடனடியாக தனிப்பட்ட முறையில் தலையிட வேண்டும்.

    முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவதற்கான ஆய்வை மேற்கொள்ள கேரள அரசு முன்மொழிந்துள்ள கருத்துருவை பரிசீலனைக்கு மத்திய அரசு எடுத்துக் கொள்ளக்கூடாது என்று வலியுறுத்தி மத்திய அரசுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

    இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறி, முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டுவதற்கான ஆய்வினை மேற்கொள்வதற்கு கேரள அரசு விண்ணப்பித்துள்ள கருத்துருவினை மத்திய அரசு பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டமைக்கு தமிழ்நாடு அரசு கடும் ஆட்சேபனையைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் (MOEF) கீழ் உள்ள நிபுணர் மதிப்பீட்டுக் குழு (Expert Appraisal Committee), கேரள அரசின் பாசன வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி வாரியத்தின் மேற்படி கருத்துருவினை வரவிருக்கும் கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் சேர்த்துள்ளேன்.

    தற்போதுள்ள முல்லைப் பெரியாறு அணைக்குப் பதிலாக, புதிய அணையைக் கட்டுவதற்கான கேரள அரசின் மேற்படி முன்மொழிவு, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளுக்கு முற்றிலும் எதிரானது.

    தற்போதுள்ள அணை அனைத்து அம்சங்களிலும் பாதுகாப்பானது என பல்வேறு நிபுணர் குழுக்களால் மீண்டும் மீண்டும் கண்டறியப்பட்டு, உச்ச நீதிமன்றம் 27.02.2006 மற்றும் 07.05.2014 தேதியிட்ட தனது தீர்ப்புகளில் அதனைத் தெளிவுபடுத்தியுள்ளது.

    பின்னர், 2018 ஆம் ஆண்டில், புதிய அணை கட்டுவதற்கான ஆய்வினை மேற்கொள்ள கேரள அரசு முயற்சித்தபோது, உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் இந்தப் பிரச்சினை கொண்டு செல்லப்பட்டதாகவும், புதிய அணை கட்டுவது தொடர்பாக எந்தவொரு நடவடிக்கை மேற்கொண்டாலும், அதற்கு உச்ச நீதிமன்றத்தின் அனுமதி தேவை என்று உச்சநீதிமன்றம் அப்போதே தெளிவாகத் தீர்ப்பு வழங்கியுள்ளது.

    எனவே, கேரள பாசன வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி வாரியத்தின் சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை தயார் செய்யும் தற்போதைய செயல் மற்றும் மத்திய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு இதனை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டுள்ள நடவடிக்கை ஆகியவை நிச்சயமாக உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை அவமதிக்கும் செயலாகும்.

    இந்தப் பிரச்சினையில் தங்களது ஆட்சேபனைகளை ஏற்கெனவே தமிழ்நாடு அரசின் நீர்வளத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர், மத்திய சுற்றுச்சூழல், வனத்துறைக்கும், நிபுணர் மதிப்பீட்டுக் குழுவின் அனைத்து உறுப்பினர்களுக்கும் விரிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தப் பிரச்சினையில் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள முந்தைய உத்தரவுகளை தொடர்புடைய துறைகள் கடைபிடிக்கவில்லை என்றால், நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் உட்பட வலுவான சட்ட நடவடிக்கையை தமிழ்நாடு அரசின் சார்பில் எடுக்கப்படும்.

    எனவே, 28-5-2024 அன்று நடைபெறும் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழுக் கூட்டத்திற்கான நிகழ்ச்சி நிரலில், முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டுவதற்கான சுற்றுச்சூழல் தாக்க அறிக்கையைத் தயார் செய்வதற்கு அனுமதி அளிப்பது தொடர்பான விவாதப் பொருளினை நீக்கிவிட வேண்டும்.

    எதிர்காலத்தில் கேரள அரசின் இதுபோன்ற எந்தவொரு கருத்துருவினையும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளக் கூடாது. மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அதிகாரிகளுக்கும், சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழுவின் உறுப்பினர்-செயலருக்கும் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் உத்தரவிட வேண்டுமென்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

    சூழ்நிலையின் தீவிரத்தை கருத்தில் கொண்டு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் இதில் உடனடியாக தனிப்பட்ட முறையில் தலையிட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

    • அரசு பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்கள் மீது அபராதம் விதித்து வருகின்றனர்.
    • இரு தரப்பு பிரதிநிதிகளை கூட்டி பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும்.

    போக்குவரத்து கழக தொழிலாளர்கள், போக்குவரத்து காவல் துறையினர் இடையே ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு போக்குவரத்து தொழிற்சங்கங்கள் கடிதம் எழுதியுள்ளது.

    அந்த கடிதத்தில், " இருதரப்பு அலுவலர்கள், தொழிலாளர் பிரதிநிதிகளை உடனடியாக கூட்டி பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும்.

    தமிழகம் முழுவதும் காவல் துறையினர் திட்டமிட்டு அரசு பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்கள் மீது அபராதம் விதித்து வருகின்றனர்.

    காவல் துறை முழுவதுமாக ஒன்றிணைந்து அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் விதி மீறல்களை தடுப்பதாக தொடங்கி இருப்பது நல்ல அறிகுறி அல்ல" என குறிப்பிடப்பட்டுள்ளது.

    • கேரளா அரசு முல்லை பெரியாறு அணையை இடித்துவிட்டு நாங்களே புதிய அணையை கட்டிக் கொள்வோம் என்று கூறுகிறார்கள்.
    • முல்லை பெரியாறு அணையிலும், சிலந்தி அணையிலும் நம் தமிழர்களின் உரிமை பறிக்கப்பட்டு கொண்டிருக்கிறது.

    சென்னை:

    டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சாவி இருக்கிறது என்ற உடனேயே தமிழர்களை திருடர்கள் என்று கூறினார்கள் என்று பொய் பிரசாரம் செய்த மு.க.ஸ்டாலின் அவர்களே....

    இன்று கேரளா அரசு முல்லை பெரியாறு அணையை இடித்துவிட்டு நாங்களே புதிய அணையை கட்டிக் கொள்வோம் என்று கூறுகிறார்கள்.... இன்று நம் விவசாயிகளின் நீர் ஆதாரமாக இருக்கும் ஒரு அணையை உங்கள் கூட்டணியைச் சார்ந்த கேரளா அரசு முழுவதுமாக களவாட நினைக்கிறது உங்களிடமிருந்து பதில் என்ன?

    முல்லை பெரியாறு அணையிலும், சிலந்தி அணையிலும் நம் தமிழர்களின் உரிமை பறிக்கப்பட்டு கொண்டிருக்கிறது... இப்போது மவுனமாக இருப்பது ஏன்?

    இதுதான் உங்களின் தமிழ்ப்பற்றா?

    தமிழர்கள் மீதான பற்றா?

    தமிழ்நாட்டு உரிமையை பாதுகாக்கும் நிலைமையா?

    உங்கள் மவுனம் கலையுமா?

    வழக்கம்போல் கடிதம் மட்டும் தான் எழுதுவீர்களா?

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அணை பாதுகாப்பாகவும், உறுதியாகவும் இருப்பதாக வல்லுநர்குழு தெரிவித்தும் கேரள அரசு அணை கட்ட முயற்சிக்கிறது.
    • கேரள அரசு நீதிமன்ற உத்தரவை மீறி அணை கட்ட முடியாது என்றாலும் கேரள அரசு தொடர்ந்து அணை கட்டப் போவதாக அறிவிப்பை வெளியிட்டு வருகிறது.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கள்ளிக்குடியில் அ.தி.மு.க. சார்பில் மருத்துவ முகாமை சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முல்லைப் பெரியாறு அணை நமக்கு ஜீவாதார உரிமை. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட 5 மாவட்டங்களுக்கு முல்லைப் பெரியாறு தான் ஜீவாதார உரிமை. அந்த உரிமையை மறைந்த முதல்வர் ஜெயலலிதாதான் 142 அடியை 152 அடியாக உயர்த்த வேண்டும் என்று மிகப்பெரிய சட்ட போராட்டம் நடத்தி 2016-ல் உரிமையை மீட்டுக் கொடுத்தார். அதற்காக உரிமை மீட்பு மாநாடு கூட மதுரையில் நடைபெற்றது.

    இன்றைக்கு கேரளா அரசு தொடர்ந்து நாங்கள் புதிய அணை கட்டுவோம், பெரியாறு அணையை இடிப்போம் என 2 ஆண்டுகளாக சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். பொதுச்செயலாளர் எடப்பாடி அதனை கண்டித்து இன்றைக்கு அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.

    ஆளுகிற கட்சியில் இருக்கிற முதல்வர் இப்போதுதான் தூங்கி எழுந்து சிலந்தி அணையை கட்டுவதை நிறுத்த வேண்டும் என்று நமது உரிமையை பறிபோகக்கூடிய சூழ்நிலையில் கூட புலியாக பாய வேண்டிய நேரத்தில் பூனையாக பதுங்கிக் கொண்டு கூட்டணி தர்மத்திற்காகவும், தன்னுடைய குடும்பத் தொழிலுக்காகவும் தமிழகத்தின் ஜீவதாரத்தின் உரிமையை விட்டுக் கொடுப்பது நியாயம் தானா?

    அணை பாதுகாப்பாகவும், உறுதியாகவும் இருப்பதாக வல்லுநர்குழு தெரிவித்தும் கேரள அரசு அணை கட்ட முயற்சிக்கிறது. தமிழக முதல்வர் இந்த விசயத்தில் மென்மை போக்கை கடைபிடிக்காமல் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதிமன்ற உத்தரவையும் மீறி கேரள அரசு அணை கட்ட முயற்சிப்பது கண்டனத்திற்குரியதாகும்.

    கேரள அரசு நீதிமன்ற உத்தரவை மீறி அணை கட்ட முடியாது என்றாலும் கேரள அரசு தொடர்ந்து அணை கட்டப் போவதாக அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. மேலும் மக்களை அச்சுறுத்தும் வகையில் வீடியோ பதிவினை சமூக வலைதளங்களில் பரப்பி முல்லைப் பெரியாறு அணையை இடிக்க முயற்சிக்கிறது. தொடர்ந்து முல்லைப் பெரியாறு அணை விசயத்தில் தமிழக அரசு அலட்சியம் காட்டினால் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஐந்து மாவட்ட விவசாயிகளை திரட்டி தேனி அல்லது மதுரையில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் என்பதை தமிழக அரசுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • "தமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்புக் கொள்கை 2021" வெளியிட்டுக் குழந்தைகள் நலனை பாதுகாப்பதில் தனிக்கவனம் செலுத்தி வருகிறார்.
    • பல்வேறு துறைகளின் மூலம் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டில் வாழும் மகளிர், மாற்றுத்திறனாளிகள், திருநங்கையர், குழந்தைகள் ஆகியோரின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் தனிக் கவனம் செலுத்தி சமூகநலத்துறையில் பல சிறப்புத் திட்டங்களை முனைப்போடு செயல்படுத்தி வருகிறார்.

    ஆட்சி பொறுப்பேற்ற சமயத்தில் கொரோனா நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டு பெற்றோர் இருவரையும் இழந்த, தாய் அல்லது தந்தையை இழந்த 382 குழந்தைகளின் பெயரில் தலா ரூ.5 லட்சம் வீதம் ரூ.19.10 கோடி; வங்கிகளில் வைப்பீடு செய்து குழந்தைகள் 18 வயதை நிறைவு செய்யும்போது அவர்களுக்கு வட்டியுடன் வழங்கும் திட்டத்தை உருவாக்கியதால் தாயுமானவராகப் போற்றப்படுகிறார்.

    மேலும், கொரோனா நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டு தாய் அல்லது தந்தையை இழந்த 18 வயதுக்குட்பட்ட 13,682 குழந்தைகளின் பெற்றோர்களுக்கு தலா ரூ.3 லட்சம் வீதம் 410.46 கோடி ரூபாயையும் மற்றும் இலங்கைத் தமிழ் அகதிகளின் 9 குழந்தைகளுக்கு தலா ரூ.3.லட்சம் வீதம் ரூ.27 லட்சம் ரூபாயையும் கூடுதலாக ரூ.437.46 கோடி நிவாரணத் தொகை வழங்கினார்.

    கொரொனா நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டு, பெற்றோர் இருவரையும் இழந்து உறவினர் அல்லது பாதுகாவலரின் அரவணைப்பில் வளர்ந்து வரும் 365 குழந்தைகளுக்கு மாத பராமரிப்புத் தொகையாக ரூ.3 ஆயிரம் வீதம் ரூ.23 கோடியே 149 லட்சம் வழங்கியவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

    குழந்தைகளின் ஒட்டுமொத்த நல்வாழ்வினை மேம்படுத்தும் நோக்கில் "தமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்புக் கொள்கை 2021" வெளியிட்டுக் குழந்தைகள் நலனை பாதுகாப்பதில் தனிக்கவனம் செலுத்தி வருகிறார்.

    விடியல் பேருந்து திட்டம், முதலமைச்சரின் காலை உணவு திட்டம், புதுமைப் பெண் திட்டம், தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கை, சத்துணவுத் திட்ட மகளிர் மேம்பாட்டில் முதல்வர், பணிபுரியும் மகளிர் விடுதிகள், பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம், மூத்த குடிமக்கள் கொள்கை, திருமண நிதி உதவித்திட்டம், திருநங்கைகள் நலன், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டபணிகள்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மூலம் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகளிர் நலனில் தனிக் கவனம் செலுத்தி பல திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருவதால் மகளிர், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் என அனைவரும் பாதுகாப்புடன் வாழ்வதால் முதலமைச்சரை மனமாரப் பாராட்டுகின்றனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சமூக வலைதளத்தில் வாழ்த்து வெளியிட்டுள்ளார்.
    • நல்ல உடல்நலனும் வெற்றியும் கூடிய ஆண்டாகத் திகழட்டும்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

    கேரள முதல்-அமைச்சர் பினராயி விஜயனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.

    வரும் ஆண்டு தங்களுக்கு நல்ல உடல்நலனும் வெற்றியும் கூடிய ஆண்டாகத் திகழட்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    ×