search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராமநவமி ஆஸ்தானம்"

    • வேதப் பண்டிதர்கள் மந்திரங்கள் மற்றும் ராமாயண பாசுரங்களை ஓதினார்கள்.
    • தங்க வாசலில் ராமநவமி ஆஸ்தானம் நடந்தது.

    திருமலை:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று ராமநவமி விழா நடந்தது. அதையொட்டி அதிகாலை மூலவரை சுப்ர பாதத்தில் துயிலெழுப்பி தோமால சேவை, அர்ச்சனை செய்யப்பட்டது. கோவிலில் உள்ள ரெங்கநாயக்கர் மண்டபத்தில் காலை 9 மணியில் இருந்து 11 மணி வரை உற்சவர்களான சீதா, ராமர், லட்சுமணர், அனுமனுக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம், பால், தயிர், தேன், இளநீர் ஆகிய நறுமணப் பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

     அப்போது வேதப் பண்டிதர்கள் நாலாயிர திவ்யப் பிரபந்தம் பாராயணம் செய்தனர். புருஷுக்தம், ஸ்ரீசூக்தம், பூசூக்தம், நீலசூக்தம், பஞ்சசாந்தி மந்திரங்கள் மற்றும் ராமாயண பாசுரங்களை ஓதினார்கள்.

    அதைத்தொடர்ந்து மாலை 6.30 மணியில் இருந்து இரவு 8 மணி வரை ராமர், சிறப்பு அலங்காரத்தில் அனுமன் வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதன்பிறகு இரவு 9 மணியில் இருந்து 10 மணி வரை கோவிலில் உள்ள தங்க வாசலில் ராமநவமி ஆஸ்தானம் நடந்தது.

    மேற்கண்ட நிகழ்ச்சிகளில் திருமலை பெரிய ஜீயர் சுவாமி, திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரி ஏ.வி.தர்மாரெட்டி தம்பதியர் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    அதேபோல் திருப்பதி கோதண்டராமர் கோவிலில் நேற்று ராம நவமி விழா நடந்தது. அதிகாலை சுப்ரபாதம், மூலவர்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. ஊஞ்சல் மண்டபத்தில் காலை 8 மணியில் இருந்து 9 மணி வரை உற்சவர்களான சீதா, ராமர், லட்சுமணர், அனுமனுக்கு திருமஞ்சனம் நடந்தது. மாலை 3 மணியில் இருந்து 4 மணி வரை திருப்பதியில் உள்ள பெரிய ஜீயர் சுவாமி மடத்தில் இருந்து அர்ச்சகர்கள் பட்டு வஸ்திரங்களை எடுத்து வந்து விமான பிரதட்சணம் செய்து மூலவர்களுக்கும், உற்சவர்களுக்கும் சமர்ப்பித்தனர்.

    அதன்பிறகு ராமர் ஜென்ம புராணம், ஆஸ்தான நிகழ்ச்சிகள் நடந்தது. இரவு 7 மணியில் 9 மணி வரை உற்சவர் ராமச்சந்திரமூர்த்தி தனது பிரியமான அனுமன் வாகனத்தில் எழுந்தருளி நான்குமாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

    ×