என் மலர்
நீங்கள் தேடியது "ஜெயக்குமார் தனசிங்"
- சி.பி.சி.ஐ.டி. உயர் அதிகாரிகள் நெல்லையில் முகாமிட்டு விசாரணையை தீவிரப்படுத்தினர்.
- ஜெயக்குமார் கடிதத்தில் எழுதியிருந்த அனைவரையும் போலீசார் தனித்தனியாக அழைத்து விசாரணை நடத்தினர்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள கரைச்சுத்துபுதூரை சேர்ந்தவர் கே.பி.கே.ஜெயக்குமார் தனசிங்(வயது 60).
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த இவர் கடந்த ஆண்டு மே மாதம் 2-ந்தேதி இரவு வீட்டில் இருந்து வெளியே சென்ற நிலையில் 4-ந்தேதி வீட்டின் பின்புறம் உடலில் இரும்பு கம்பிகளால் கட்டப்பட்டு எரிக்கப்பட்ட நிலையில் பிணமாக மீட்கப்பட்டார்.
தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய காங்கிரஸ் தலைவர் கொலை வழக்கில் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் தலைமையில் 11 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
இந்த கொலையில் அவர் எழுதியதாக போலீஸ் நிலையத்தில் அவரது மகன் ஒப்படைத்த கடிதத்தில் வள்ளியூர், திசையன்விளை பகுதிகளை சேர்ந்த தொழிலதிபர்கள், நண்பர்கள், முக்கிய அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள், தனக்கு பணம் தரவேண்டியவர்கள், பணம் கொடுக்க வேண்டியவர்கள் என ஏராளமான நபர்களின் பெயர்களை எழுதியிருந்தார்.
அந்த கடிதத்தில் எழுதியிருந்த அனைவரையும் போலீசார் தனித்தனியாக அழைத்து விசாரணை நடத்தினர். சம்பவ இடத்திலும் அங்குலம் அங்குலமாக சோதனை செய்தும் தடயம் ஏதும் கிடைக்கவில்லை. இதனால் அறிவியல் பூர்வ விசாரணையும் மேற்கொண்டனர். ஆனால் எவ்வித துப்பும் கிடைக்கவில்லை. இதனிடையே அவரது பிரேத பரிசோதனை அறிக்கையின் முடிவிலும் அவர் கொலை செய்யப்பட்டுள்ளாரா? தற்கொலை செய்து கொண்டாரா? என்பதை கூட தீர்மானிக்க முடியவில்லை.
இதனால் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றினர். தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. உயர் அதிகாரிகள் நெல்லையில் முகாமிட்டு விசாரணையை தீவிரப்படுத்தினர். தென் மாவட்டங்களை சேர்ந்த அனைத்து அதிகாரிகளும் வந்து விசாரணை மேற்கொண்டனர். ஆனாலும் நாளையோடு ஓராண்டு முடிவடையும் நிலையில் இன்னும் ஜெயக்குமார் கொலை வழக்கு ஆரம்ப நிலையிலேயே இருந்து வருகிறது. எவ்வித துப்பும் துலங்கவில்லை. அவரது மரணம் குறித்து விசாரிப்பதில் போலீசார் காட்டும் ஆர்வத்தை கூட அவரது குடும்பத்தினரோ, அரசியல் கட்சியினரோ காட்டவில்லை. இதனால் கொலைவழக்கின் மர்ம முடிச்சுகள் அவிழாமல் நீர்த்து போய் இருக்கிறது.
- வெளிப்படையாக காவல்துறை விசாரணை மேற்கொள்ள வேண்டும்.
- காவல்துறை பாரபட்சம் காட்டாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நெல்லை:
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் மாயமான நிலையில் நேற்று இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
அவரது உடல் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு இன்று குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. கே.பி.கே. ஜெயக்குமாரின் பூத உடலை அவரது மகன் கருத்தையா ஜெப்ரின் பெற்றுக்கொண்டார்.
இதைத்தொடர்ந்து அவரது உடலுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை எம்.எல்.ஏ., மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
கே.பி.கே. ஜெயக்குமார் ஒரு நல்ல மனிதர். காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர். அவர் தற்போது உயிரிழந்துள்ளார் என்பது எங்களுக்கு மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது வெளிப்படையாக காவல்துறை விசாரணை மேற்கொள்ள வேண்டும். இதில் பல்வேறு சந்தேகங்கள் இருந்து வருகிறது. இதில் தொடர்புடையவர்கள் எந்த கட்சியின் பின்புலத்தில் இருந்தாலும், எவ்வளவு பெரிய தொழிலதிபராக இருந்தாலும் அவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
இன்று மாலைக்குள் ஒரு நல்ல தகவல் வெளியே வரும் என்று மாவட்ட எஸ்.பி என்னிடம் தெரிவித்துள்ளார். மேலும் அவரது மரண வாக்குமூலம் தற்போது வெளியாகியுள்ளது. அதில் யாருடைய பெயர்கள் இருந்தாலும் கூட அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
எங்கள் கட்சியை சேர்ந்த வர்களாக இருந்தாலும் கூட காவல்துறை வெளிப்படையான விசாரணையை மேற்கொள்ளப்பட வேண்டும். அப்படி வெளிப்படையாக விசாரணை மேற்கொண்டால் தான் இவர் உயிர் இழப்புக்கு யார் காரணம் என்பது வெளியே வரும்.
மேலும் நாங்கள் கட்சி ரீதியாகவும் இதை விசாரித்து மேலிடத்திற்கு இந்த அறிக்கையை அனுப்புவோம். காவல்துறை விசாரணை என்பது தற்போது நடைபெற்று கொண்டிருப்பதன் காரணமாக மற்ற தகவல்கள் எங்களால் வெளியே தெரிவிக்க முடியாது.
இதில் பணம் படைத்தவராக இருக்கலாம். மிகப்பெரிய அரசியல்வாதியாக கூட இருக்கலாம். அப்படி இருந்தாலும்கூட அவர்கள் மீதும் காவல்துறை பாரபட்சம் காட்டாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் அவரது உடல் உள்ள தாக எங்கள் கட்சிக்காரர்கள் என்னிடம் தெரிவித்துள்ளா ர்கள். அதேபோன்ற புகைப்பட ங்களும் வெளியாகி உள்ளது. ஆகவே இதில் பெருத்த சந்தேகம் இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறை தீவிரமாக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.
இந்த விசாரணை என்பது வெளிப்படையாக இருக்க வேண்டும் என்பதுதான் எங்கள் எண்ணம். மேலும் உயிரிழந்த ஜெயக்குமாரின் கை கால்கள் இரண்டும் கட்டப்பட்டுள்ளது. இதிலிருந்து ஏதோ ஒரு சம்பவம் நடை பெற்றுள்ளதாக எங்களுக்கு தெரிகிறது.
ஆகவே தான் நாங்கள் திரும்பத் திரும்பச் சொல்கி றோம் வெளிப்படையான விசாரணை மேற்கொண்டால்தான் இவருடைய உயிர் இழப்புக்கு காரணம் என்ன என்பது வெளியே தெரியவரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் கிள்ளியூர் ராஜேஷ் குமார், விஜய் வசந்த் எம்.பி., நெல்லை பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ், ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ., நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கர பண்டியன் மற்றும் திரளான நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
- சம்பவ இடத்துக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
- நாங்குநேரி, திசையன்விளை பஜார், கரைசுத்துபுதூர், உவரி உள்ளிட்ட இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
திசையன்விளை:
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே.ஜெயக்குமார் தனசிங் கடந்த 2-ந்தேதி மாயமான நிலையில் நேற்று வீட்டருகே உள்ள தோட்டத்தில் எரிந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்டது தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திசையன்விளை அருகே உள்ள கரைசுத்துபுதூரில் பாரம்பரிய காங்கிரஸ் குடும்பத்தை சேர்ந்த கே.பி.கே. ஜெயக்குமார் காண்டிராக்ட் தொழிலும் செய்து வந்தார். அவர் கடந்த 2-ந்தேதி மாயமான நிலையில் குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடினர். அப்போது அவரது கட்சி அலுவலகத்தில் எழுதி இருந்த கடிதம் சிக்கியது.
30-ந்தேதியே காங்கிரஸ் கட்சியின் லெட்டர் பேடில் மரண வாக்குமூலம் என்று அவர் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு எழுதிய கடிதத்தில் தனக்கு தொழிலதிபர்கள், அரசியல் பிரமுகர்கள் என பல தரப்பில் இருந்து கொலை மிரட்டல் வருகிறது. எனது உயிருக்கு ஆபத்து நேர்ந்தால் இவர்கள் தான் காரணம் என சிலரது பெயரை குறிப்பிட்டிருந்தார்.
அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், அவர் நேற்று எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அவரது கை, கால்கள் பலகையில் மின் ஒயரால் கட்டப்பட்டிருந்ததால், அவர் எரித்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவ இடத்துக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர் ஆனந்தி, தடயங்களை சேகரித்தார். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டும் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனைக்காக பாளை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பிரேத பரிசோதனை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட்டது.
இதற்கிடையே கே.பி.கே. ஜெயக்குமார் தனது மருமகன் மற்றும் மொத்த குடும்பத்தினருக்கு என்று எழுதிய 2 கடிதங்களையும் போலீசார் கைப்பற்றி உள்ளனர். அதில், அவர் தொழில் ரீதியாகவும், கட்சி ரீதியாகவும் பலருக்கு பணம் கொடுத்த விபரங்கள் மற்றும் தான், யார் யாருக்கு பணம் கொடுக்க வேண்டும் என்பது குறித்த விபரங்களை குறிப்பிட்டுள்ளார்.
அதோடு குடும்பத்தினருக்கு எழுதிய கடிதத்தில், குடும்பத்தினர் யாரும் இதில் சம்பந்தப்பட்ட நபர்களை பழிவாங்க நினைக்க வேண்டாம். சட்டம் தனது கடமையை செய்யும் என கூறி உள்ளார்.
தற்போது வரை போலீசார் சந்தேக மரணம் என்ற அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் கூறுகையில், ஜெயக்குமார் தனசிங் சாவு தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஏ.டி.எஸ்.பி. கார்த்திகேயன், வள்ளியூர் டி.எஸ்.பி. யோகேஷ் குமார் தலைமையில் 7 தனிப்படைகள் விசாரணை நடத்தி வருகின்றனர் என்றார்.
சடலமாக மீட்கப்பட்ட ஜெயக்குமாரின் கை, கால்கள் ஒயரால் கட்டப்பட்டிருப்பது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சி பதிவுகளை சேகரித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பவ இடத்தில் சந்தேகத்திற்கிடமாக யாராவது நடமாடினார்களா? என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர் கொலை செய்யப்பட்டதற்கான உறுதியான ஆதாரங்கள் இதுவரை கிடைக்கவில்லை என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இதனால் அவரது சாவிற்கான காரணத்தில் மர்மம் நீடித்து வருகிறது. பிரேத பரிசோதனை அறிக்கை விபரத்தின் அடிப்படையில் அடுத்தகட்ட விசாரணையை தொடர போலீஸ் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

இதற்கிடையே பிரேத பரிசோதனை செய்யப்பட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் குளிரூட்டப்பட்ட அறையில் வைக்கப்பட்டிருந்த ஜெயக்குமார் உடலுக்கு இன்று காலை காங்கிரஸ் மாநில தலைவர் செல்வபெருந்தகை தலைமையில் 100-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.
அதனை தொடர்ந்து அவரது உடல் அவரது மகன் கருத்தையா ஜெப்ரினிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் உடல் அவரது சொந்த ஊரான திசையன்விளை அருகே உள்ள கரைசுத்துபுதூருக்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.
இதனையொட்டி உடல் கொண்டு செல்லப்படும் வழியில் முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதன்படி நாங்குநேரி, திசையன்விளை பஜார், கரைசுத்துபுதூர், உவரி உள்ளிட்ட இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டும், மோப்பநாய் கொண்டும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.
- போலீசார் மற்றும் தடயவியல் நிபுணர்களுடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் எரிந்த நிலையில் பிணமாக கிடந்த சம்பவ இடத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் மற்றும் போலீசார் நேற்று தீவிர விசாரணை நடத்தினர்.
மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டும், மோப்பநாய் கொண்டும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் ஜெயக்குமார் எரிந்த நிலையில் கிடந்த சம்பவ இடத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் இன்று 2-வது நாளாக ஆய்வு செய்தார்.
மேலும் சம்பவ இடத்தில் தடயவியல் நிபுணர் ஆனந்தி தலைமையிலான குழுவினரும் இன்று 2-வது நாளாக சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்தனர்.
அப்போது போலீசார் மற்றும் தடயவியல் நிபுணர்களுடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் ஆலோசனையில் ஈடுபட்டார். தொடர்ந்து அவர்கள் அங்கேயே விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
- கே.பி.கே. ஜெயக்குமார் எழுதி வைத்திருந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்த முக்கிய பிரமுகர்களில் ஒருவர் தற்போது தலைமறைவு ஆகிவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
- ஜெயக்குமார் மரண வழக்கில் குற்றவாளிகளை நெருங்கி விட்டதாகவும், இன்று மாலைக்குள் வழக்கின் முழு விவரம் வெளியாகும் எனவும் போலீஸ் மற்றும் காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
நெல்லை:
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே. ஜெயக்குமார் மரண வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள் ஏற்பட்டு வருகிறது.
கொலையா? அல்லது தற்கொலையா? என்பதில் தொடர்ந்து முரண்பாடான கருத்துக்கள் எழுந்து வரும் நிலையில் ஓரிரு நாட்களில் வழக்கின் முழு விவரங்களும் தெரிவிக்கப்படும் என்று நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு வழங்குவதற்காக கே.பி.கே. ஜெயக்குமார் எழுதி வைத்திருந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்த முக்கிய பிரமுகர்களில் ஒருவர் தற்போது தலைமறைவு ஆகிவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அவரை பிடிப்பதற்காக தனிப்படை விரைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதுகுறித்து போலீசாரிடம் கேட்டபோது, சில முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன. அதன் அடிப்படையில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இன்று மாலைக்குள் விவரங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்றனர்.
இதற்கிடையே, ஜெயக்குமார் மரண வழக்கில் குற்றவாளிகளை நெருங்கி விட்டதாகவும், இன்று மாலைக்குள் வழக்கின் முழு விவரம் வெளியாகும் எனவும் போலீஸ் மற்றும் காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
- எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற சம்பவங்கள் நடந்து வருகிறது.
- ஒரு கையெழுத்து போதும் என்று சொன்ன உதயநிதி ஸ்டாலின், ஒரு கோடி கையெழுத்தை பெற்றார். அது சென்ற இடம் ரகசியம், மர்மம் என்ன?
மதுரை:
மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சமயநல்லூரில் நீர்மோர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி. உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகமே கொலைகார நகரமாக மாறிவிட்டது. நெல்லை காங்கிரஸ் மாவட்ட தலைவர் தன் உயிருக்கு ஆபத்து என்று காவல்துறைக்கு மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் அவர் உயிர் காப்பாற்றப்பட்டு இருக்கும்.
புகாரை விசாரிக்காமல் மெத்தனமாக இருந்து விட்டு தற்போது கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பது போல உயிர் பறிபோன பிறகு கொலையாளியை பிடிக்க தனிப்படை என்று அரசு கூறி வருகிறது.
அது மட்டுமல்ல மணல் கடத்தலை தட்டி கேட்ட வி.ஏ.ஓ. படுகொலை செய்யப்பட்டார். மணல் கடத்தல் தொடர்பாக தான் கூறியதால் எனக்கு பாதுப்பு வேண்டும் என்று ஆடு மேய்க்கும் ஒருவர் உயர்நீதிமன்றத்தில் மனு கொடுத்ததால் தற்போது நீதிமன்றத்தின் உத்தரவுப்படி அவருக்கு துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.
எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற சம்பவங்கள் நடந்து வருகிறது. தமிழக மக்களே அச்சத்தில் உறைந்து உள்ளனர். மக்களுக்கு உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை உள்ளது.
இந்த அரசு கும்பகர்ண தூக்கத்தில் உள்ளதாக கூறுகிறார்கள். கும்பகர்ணன் கூட ஆறு மாதம் தூங்குவான், ஆறு மாதம் விழித்து விடுவான். ஆனால் இந்த அரசு விழிக்காமல் காவல்துறையே கோமா நிலையில் உள்ளது.
நாடு முழுவதும் நீட் தேர்வு இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகள், சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி மற்றும் கால்நடைபடிப்பிற்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வுக்காக நீட் தேர்வு நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டு தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் 557 நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்தியா முழுவதும் 24 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகிறார்கள். தமிழகத்தில் ஒன்றரை லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்.
கல்லூரி படிப்பை முடித்துவிட்டு ஆண்டுக்கு 10 லட்சம் மாணவர்கள் வெளியே செல்கிறார்கள். நீட் தேர்வு எழுத முன் வருகிற மாணவர்கள் இந்த நான்காண்டு காலத்திலே பார்க்கிறபோது ஒரு லட்சம் என்று சொன்னால் பத்தில் ஒரு சதவீதம் தான் உள்ளது.
ஒரு கையெழுத்து போதும் என்று சொன்ன உதயநிதி ஸ்டாலின், ஒரு கோடி கையெழுத்தை பெற்றார். அது சென்ற இடம் ரகசியம், மர்மம் என்ன? நீட் தேர்வு ரத்து ரகசியத்தை வெளியிட உதயநிதி ஸ்டாலின் முன்வருவாரா? அதற்கு முதலமைச்சர் துணை புரிவாரா?
இவ்வாறு அவர் கூறினார்.
- கொல்லப்பட்ட ஜெயக்குமார் மாவட்ட தலைவர் என்பதால் நெல்லை தொகுதி தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டார்.
- தி.மு.க. அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறை விசாரித்தால் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் கொலை வழக்கில் உண்மை வெளிவர வாய்ப்பே இல்லை.
சென்னை:
தமிழக பா.ஜ.க. மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங், அவருக்கு சொந்தமான தோட்டத்திலேயே எரித்து படுகொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. ஆளும் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்டிருப்பதில் இருந்து தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு எந்த அளவுக்கு மோசமடைந்துள்ளது என்பதைக் காட்டுகிறது.
இந்த படுகொலையை சாதாரணமான கொலை சம்பவமாக எடுத்துக் கொள்ள முடியாது. கொல்லப்பட்டவர் அப்பகுதியில் செல்வாக்கானவர். காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர். நெல்லை மாவட்ட காவல் துறையினருக்கு நன்கு தெரிந்தவர். கடந்த ஏப்ரல் 19-ந்தேதி நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் நெல்லை தொகுதியில் காங்கிரஸ் போட்டியிட்டது. அத்தொகுதிக்கு காங்கிரஸ் கட்சிக்குள் பலத்த போட்டி இருந்தது. கடைசி நேரத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ராபர்ட் புரூஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனால், கட்சிக்குள்ளேயே பல்வேறு பிரச்சனைகள் இருந்துள்ளன.
கொல்லப்பட்ட ஜெயக்குமார் மாவட்ட தலைவர் என்பதால் நெல்லை தொகுதி தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டார். ராகுல்காந்தி கலந்து கொண்ட பொதுக்கூட்ட வரவு-செலவு கணக்குகள் மற்றும் தேர்தல் நிதி விவகாரங்களில் அவருக்கு முக்கிய தலைவர்களுடன் முன் விரோதம், கடும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. எந்த வழக்காக இருந்தாலும், குறிப்பாக அரசியல் தொடர்பான வழக்குகளாக இருந்தால் தி.மு.க.வினர் என்ன சொல்கிறார்களோ அதைத்தான் காவல்துறையினர் செயல்படுத்துவார்கள்.
எனவே, தி.மு.க. அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறை விசாரித்தால் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் கொலை வழக்கில் உண்மை வெளிவர வாய்ப்பே இல்லை. எனவே, இந்த கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
- விசாரணை முடியும் வரை தற்கொலையா என்பதை உறுதியாக கூற முடியாது.
- ஜெயக்குமாரின் மகன் கொடுத்த புகாரின் படி, காணாமல் போனதாக வழக்கு பதிவு.
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் 2 நாட்களுக்கு முன் காணாமல் போன நிலையில் நேற்று சடலமாக மீட்கப்பட்டார்.
ஜெயக்குமார் எழுதிய 2வது கடிதங்கள் வெளியான நிலையில், நெல்லை மாவட்ட காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
புகார் அளித்த கடந்த 3ம் தேதி அன்றே உவரி காவல் நிலையத்தில் ஜெயக்குமாரின் மகன், இந்த கடிதத்தையும் கொடுத்திருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
கடிதத்தில் உள்ள நபர்கள் ஒவ்வொரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தி வருவதாக நெல்லை காவல்துறை தெரிவித்துள்ளது.
விசாரணை முடியும் வரை தற்கொலையா என்பதை உறுதியாக கூற முடியாது.
ஜெயக்குமாரின் மகன் கொடுத்த புகாரின் படி, காணாமல் போனதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
சடலமாக மீட்கப்பட்டதால், இயற்கைக்கு மாறான மரணம் என தற்போது வழக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெறுகிறது.
- தற்போது செல்போன் சுவிட்ச் ஆப் ஆகி உள்ளது.
- ஜெயக்குமார் வீட்டின் பின்பகுதியில் தோட்டத்திற்கு செல்லும் வழியில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமரா வேலை செய்யவில்லை.
நெல்லை:
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே. ஜெயக்குமார் தனசிங் கடந்த 2-ந்தேதி மாலை வீட்டில் இருந்து வெளியே புறப்பட்டு சென்றபோது தனது காரை எடுத்துச்சென்றுள்ளார்.
அப்போது அவர் தனது 2 செல்போன்களையும் எடுத்துக்கொண்டு புறப்பட்டுள்ளார். அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதற்கிடையே அவரது தோட்டத்திற்கு சற்று தொலைவில் நின்ற அவரது காரை போலீசார் கண்டுபிடித்த நிலையில் அவரது செல்போன்கள் இதுவரை போலீசாரின் கையில் சிக்கவில்லை.
அந்த செல்போன்கள் எங்கே மாயமானது என்பது தெரியவில்லை. அதனை கண்டுபிடிக்க தனிப்படை தீவிரம் காட்டி வருகின்றனர். தற்போது செல்போன் சுவிட்ச் ஆப் ஆகி உள்ளது. அதனை கைப்பற்றினால் தான் அவரது செல்போனுக்கு கடைசியாக யார் தொடர்பு கொண்டார். அவர் மாயமான 2-ந்தேதி மற்றும் அதற்கு முந்தைய நாட்களில் யாருக்கெல்லாம் அவர் தொடர்பு கொண்டு பேசினார் என்ற விபரம் தெரியவரும் என்பதால் அதனை தேடி வருகின்றனர்.
அதே நேரத்தில் அவரது வீட்டின் பின்பகுதியில் தோட்டத்திற்கு செல்லும் வழியில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமரா வேலை செய்யவில்லை.
இதனால் யாரேனும் கேமராவை திட்டமிட்டு பழுதாக்கினார்களா? அல்லது கேமரா வேலை செய்யவில்லை என்பதை நன்கு தெரிந்த நபர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாமா? என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.
- பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த நிலையில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
- ஜெயக்குமார் மரணம் தொடர்பாக முன்னாள் மாநில காங்கிரஸ் தலைவர் கே.வி. தங்கபாலு இன்று நெல்லை மாவட்ட காவல்துறை முன்பு ஆஜராகிறார்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள கரைசுத்துபுதூரை சேர்ந்தவர் கே.பி.கே. ஜெயக்குமார் தனசிங் (வயது 60). இவர் மாயமான நிலையில் அவரது வீட்டுக்கு பின்னால் உள்ள தோட்டத்தில் தீயில் எரிந்து கரிக்கட்டையான நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில், ஜெயக்குமாரின் பிரேத பரிசோதனை அறிக்கை இன்று வெளியாகியுள்ளது.
பிரேத பரிசோதனையில் ஜெயக்குமாரின் குரல்வளை முற்றிலும் எரிந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜெயக்குமாரின் நுரையீரலில் திரவங்கள் எதுவுமில்லை என தெரியவந்துள்ளது.
ஏற்கனவே உயிரிழந்த நபரை எரியூட்டினால் மட்டுமே குரல்வளை முற்றிலும் எரிந்து போகும்.
இதனால் பிரேத பரிசோதனை அறிக்கை அடிப்படையில் ஜெயக்குமார் தற்கொலை செய்திருக்க வாய்ப்பில்லை என காவல்துறை சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பிரேத பரிசோதனை அறிக்கை சென்னையில் உள்ள உயர் மருத்துவ குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த நிலையில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இதனிடையே ஜெயக்குமார் மரணம் தொடர்பாக முன்னாள் மாநில காங்கிரஸ் தலைவர் கே.வி. தங்கபாலு இன்று நெல்லை மாவட்ட காவல்துறை முன்பு ஆஜராகிறார்.
முன்னதாக, 30 பேருக்கு காவல்துறை சம்மன் அனுப்பியிருந்த நிலையில், 15-க்கும் மேற்பட்டோரிடம் காவல்துறையினர் நேரில் விசாரணை நடத்தியுள்ளனர்.
மேலும் மரணத்துக்கு முன் ஜெயக்குமார் எழுதிய கடிதங்களில் தொடர்புடையவர்களிடமும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
- ஜெயக்குமார் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள நிலையில் அவர் எழுதியதாக 2 கடிதங்கள் வெளிவந்தது
- கடித்தில் உள்ள கையெ ழுத்துடன் ஒப்பிட்டு பார்த்து அறிவியல் ரீதியாக ஆய்வு செய்தனர்.
நெல்லை:
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே. ஜெயக்குமார் தனசிங் இறந்து 4 நாட்கள் ஆகிவிட்ட நிலையிலும், அவரது சாவு வழக்கில் இதுவரை உறுதியான ஒரு முடிவை எடுக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
பல்வேறு கோணங்களில் விசாரணையை நகர்த்தி வரும் சூழ்நிலையில் கொலையா? அல்லது தற்கொலையா? என்று உறுதியான முடிவுக்கு வரமுடியாமல் போலீசார் இருந்து வருகின்றனர்.
இதற்கிடையே ஜெயக்குமார் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள நிலையில் அவர் எழுதியதாக 2 கடிதங்கள் வெளிவந்தது. அதில் ஒன்று கடந்த 30-ந்தேதி நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு எனவும், மற்றொரு கடிதம் 27 மற்றும் 30-ந்தேதி என குறிப்பிடப்பட்டு அவரது மருமகனுக்கும், குடும்பத்தாருக்கும் என்றும் எழுதியதாக வெளிவந்தது
இந்த 2 கடிதங்களையும் அவர், தன் கைப்பட எழுதினாரா அவரது கையெழுத்து தானா என்று போலீசார் உறுதி படுத்துவதற்காக அதனை தடய அறிவியல் அலுவலர்களிடம் ஒப்படைத்தனர். அவர்கள் அந்த கடிதத்தை ஆய்வு செய்த நிலையில், அவரது பழைய கடிதங்களில் உள்ள எழுத்துக்களை இந்த கடித்தில் உள்ள கையெ ழுத்துடன் ஒப்பிட்டு பார்த்து அறிவியல் ரீதியாக ஆய்வு செய்தனர்.
அதில் 2 கடிதங்களையும் ஜெயக்குமார் தனது கைப்பட எழுதியுள்ளார் என்று தடய அறிவியல் அலுவலர்கள் உறுதி செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- ஜெயக்குமார் தனசிங் இறப்பதற்கு முன் தனது கைப்பட 2 கடிதங்களை எழுதி இருந்தார்.
- விசாரணைக்கு ஆஜராகுமாறு எம்.எல்.ஏ. உள்பட 30 பேருக்கு போலீசார் நேற்று சம்மன் அனுப்பினர்.
நெல்லை:
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் கடந்த 4-ந்தேதி அவரது வீட்டின் பின்னால் உள்ள தென்னந்தோப்பில் கை, கால்கள் கட்டப்பட்டு எரிந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். ஜெயக்குமார் தனசிங் இறப்பதற்கு முன் தனது கைப்பட 2 கடிதங்களை எழுதி இருந்தார். அந்த கடிதங்களில் முக்கிய பிரமுகர்களின் பெயர்களை எழுதி யாரெல்லாம் தனக்கு பணம் தர வேண்டும், மிரட்டல் விடுத்தவர்கள் யார், யார் என குறிப்பிட்டு இருந்தார்.
அந்த கடிதங்களை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த வழக்கில் தொடர்ந்து மர்மம் நீடித்து வந்த நிலையில், விசாரணைக்காக 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இதையடுத்து தனிப்படையினர் காங்கிரஸ் கட்சியினர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையில் காங்கிரஸ் தலைவர் மரண வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு எம்.எல்.ஏ. உள்பட 30 பேருக்கு போலீசார் நேற்று சம்மன் அனுப்பினர்.
இந்த நிலையில், நெல்லை காங்கிரஸ் தலைவர் மர்ம மரண வழக்கு தொடர்பாக நாங்குநேரி எம்.எல்.ஏ ரூபி மனோகரனிடம் காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையானது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்று வருகிறது.