search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விளையாட்டு செய்தி"

    • பிளே ஆப் சுற்றில் நுழைய கடும் போட்டி நிலவுகிறது.
    • கொல்கத்தா-ராஜஸ்தான் மோதும் போட்டி முக்கியமானதாக இருக்கும்.

    சென்னை:

    ஐ.பி.எல். 20 ஓவர் போட்டியில் விளையாடும் 10 அணிகளும் தலா 14 ஆட்டத்தில் ஆட வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.

    நேற்றுடன் 56 போட்டிகள் முடிந்து விட்டன. இதுவரை எந்த அணியும் அதிகார பூர்வமாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறவில்லை. பிளே ஆப் சுற்றில் நுழைய கடும் போட்டி நிலவுகிறது.

    2 தடவை சாம்பியன் பட்டம் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ், அறிமுக ஐ.பி.எல். லில் கோப்பையை கைப்பற்றிய ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகியவை 8 வெற்றி, 3 தோல்வியுடன் 16 புள்ளிகள் பெற்று முதல் 2 இடங்களில் உள்ளன. இரு அணிகளுக்கும் 3 ஆட்டங்கள் எஞ்சியுள்ளன. இதில் ஒன்றில் வெற்றி பெற்றாலே பிளே ஆப் சுற்றுக்கு நுழைந்து விடும்.

    கொல்கத்தா அணி மும்பை, குஜராத், ராஜஸ்தானுடன் மோத வேண்டும். ராஜஸ்தான் அணி சி.எஸ்.கே., பஞ்சாப், கொல்கத்தாவுடன் விளையாட வேண்டும். கொல்கத்தா-ராஜஸ்தான் மோதும் போட்டி முக்கியமானதாக இருக்கும்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், 2016-ம் ஆண்டு கோப்பையை வென்ற சன்ரைசர்சஸ் ஐதராபாத், டெல்லி கேப்பிட்டல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஆகிய 4 அணிகள் தலா 12 புள்ளிகளுடன் உள்ளன. இதில் டெல்லியை தவிர மற்ற அணிகளுக்கு 3  போட்டிகள் உள்ளன. டெல்லிக்கு 2 ஆட்டமே எஞ்சியுள்ளன.

    சென்னை அணி இனி வரும் போட்டிகளில் குஜராத் டைட்டன்ஸ் (10-ந் தேதி) ராஜஸ்தான் (12-ந்தேதி), ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (18-ந்தேதி) ஆகியவற்றுடன் மோதுகிறது. இந்த 3 ஆட்டத்திலும் வெல்ல வேண்டும்.

    18 புள்ளிகளை பெறும் போது உறுதியாக 'பிளே ஆப்' சுற்றுக்குள் நுழைய லாம். ஒரு ஆட்டத்தில் தோற்றாலும் மற்ற அணிகள் முடிவை பொறுத்து நிலை இருக்கும்.

    ஐதராபாத், லக்னோ அணிகளுக்கு இதே நிலைதான் இருக்கிறது. ஐதராபாத்-லக்னோ அணிகள் இன்று மோதும் ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி 14 புள்ளிகளை பெற்று 3-வது இடத்துக்கு முன்னேறும்.

    இதனால் பிளேஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்க இரு அணிகளும் வெற்றி பெற கடுமையாக போராடும்.

    ஐதராபாத் மற்ற ஆட்டங்களில் குஜராத், பஞ்சாப்புடனும், லக்னோ அணி டெல்லி, மும்பையுடனும் விளையாடு கின்றன.

    டெல்லி அணி எஞ்சிய ஆட்டங்களில் பெங்களூரு, லக்னோவுடன் மோதுகிறது. இதில் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும். அதே நேரத்தில் மற்ற அணிகளின் முடிவுக்காக காத்திருக்க வேண்டும்.

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், குஜராத் ஆகிய 4 அணிகளும் 8 புள்ளிகளுடன் உள்ளன. இந்த அணிகளுக்கு பிளே ஆப் சுற்று வாய்ப்பு கடினமே. இதில் மும்பையை தவிர மற்ற அணிகளுக்கு 3 ஆட்டம் உள்ளது. மும்பைக்கு மட்டும் 2 போட்டியே இருக்கிறது. அந்த அணி கிட்டத்தட்ட வெளியேறி விட்டது.

    இனி வரும் ஒவ்வொரு ஆட்டமும் மிகவும் முக்கியமானது. ஒரு அணியின் வெற்றி-தோல்வி முடிவை பொறுத்து மற்ற அணிகளின் நிலமை இருக்கிறது. இதனால் ஒவ்வொரு போட்டியும் விறுவிறுப்பாக இருக்கும். மேலும் நிகர ரன்ரேட் பிளே ஆப் சுற்று வாய்ப்பை பெற முக்கிய பங்கு வகிக்கும்.

    ×