search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இணையதள சூதாட்டங்கள்"

    • தேர்தல் முடிவை உலக நாடுகளே எதிர்பார்த்து காத்துள்ளன.
    • சூதாட்ட பண பரிமாற்றம் நடந்து வருகிறது.

    புதுடெல்லி:

    ஐ.பி.எல்.கிரிக்கெட் சூதாட்டம் ஒரு புறம் களை கட்டி இருந்தாலும் மறுபுறம் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி வாய்ப்பு யாருக்கு? என்பது தொடர்பான சூதாட்டமும் தற்போது இணையதளத்தை கலக்கி வருகின்றன.

    இந்த பாராளுமன்ற தேர்தலில் மத்தியில் 3- வது முறையாக பாரதீயஜனதா கட்சி ஆட்சி அமைக்குமா? அல்லது எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ள இந்தியா கூட்டணி வெற்றி பெறுமா? என்ற பரபரப்பு எகிறி உள்ளது. பாராளுமன்ற தேர்தல் முடிவை இந்தியா மட்டுமல்லாது உலக நாடுகளே எதிர்பார்த்து காத்துள்ளன.

    பாராளுமன்ற தேர்தலுக்கான 7 கட்ட வாக்குப்பதிவுகள் தொடர்ச்சியாக நடந்து வரும் சூழ்நிலையில் இணையதளத்தில் சூதாட்டமும் களை கட்டி உள்ளது. இதற்காக தனி செயலிகள் மற்றும் இணையதளங்கள் முளைத்து உள்ளது. பெரும்பாலானவை இந்தியாவை தாண்டி மற்ற நாடுகளில் இருந்து இந்த இணையதளங்கள் இயங்கி வருகின்றன.

    இதில் 2024 பாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சி வெற்றி பெறும், ஒவ்வொரு கட்சிக்கும் எத்தனை இடங்கள் கிடைக்கும், வேட்பாளர்கள் எத்தனை ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்கள் என்பது போன்ற சூதாட்டம் நடந்து வருகிறது.

    இதைத்தவிர தொகுதி வாரியாகவும் சூதாட்டம் நடத்தப்படுகிறது. குறிப்பிட்ட தொகுதிகளில் எந்த கட்சி வெற்றி பெறும், எந்த வேட்பாளர்கள் வெல்வார்கள் என இப்படி பல்வேறு வகைகளில் சூதாட்டம் நடக்கிறது. இந்த சூதாட்டம் பயனாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

    குறைந்தது 100 ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரை போட்டி போட்டுக்கொண்டு பலர் பணத்தை கட்டி வருகின்றனர். யு.பி.ஐ மூலமாகவும், வங்கி கணக்குகள் மூலமாகவும் இந்த சூதாட்ட பண பரிமாற்றம் நடந்து வருகிறது. வரும் நாட்களில் இந்த சூதாட்டம் மேலும் சூடு பிடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கடந்த 2019-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலின் போதும் இது போன்ற இணையதள சூதாட்டங்கள் நடந்தது. ஆனால் அதை விட தற்போது அதிகளவில் இந்த சூதாட்டம் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

    ×