search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மஸ்தானி"

    • தமிழக அரசின் திட்டங்களும் உதவியாக உள்ளன.
    • பட்டம் பெற்ற பிறகு தொடர்ந்து சட்டம் பயில விரும்புகிறேன்.

    மதுரை:

    உயர்கல்வி பயின்று சமூகத்தில் உயர்ந்த இடத்திற்கு வரவேண்டும் என்பது ஒவ்வொருவருக்கும் தணியாத வேட்கை. ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் எல்லோருக்கும் இந்த விருப்பம் நிறைவேறும் என்பதில் உறுதியில்லை.

    குறிப்பாக உயர்கல்வி படிப்பதற்கு ஆண்கள், பெண்களுக்கு போதிய வாய்ப்புகள் இருந்தபோதிலும் மூன்றாம் பாலித்தனவர் என்று கூறப்படும் திருநங்கைகள், திருநம்பிகள் ஆகியோருக்கான வாய்ப்பு என்பது இன்னும் எட்டாக்கனியாகவே இருக்கிறது.

    தற்போது சமூகத்தில் பல்வேறு வேலை வாய்ப்புகளிலும், கல்வி கூடங்களிலும், இதர தனியார் நிறுவனங்களிலும் அவர்களுக்கான வாய்ப்புகளும், உரிமைகளும் மெல்ல மெல்ல கிடைக்க தொடங்கி உள்ளன. இதற்கு தமிழக அரசின் திட்டங்களும் உதவியாக உள்ளன. குறிப்பாக திருநங்கைகள் சமூகத்தில் இதர பாலினத்தவரைபோல இயல்பாக கலந்து செயல்படும் வகையில் அனைவருக்கும் மனமுதிர்ச்சி ஏற்படவில்லை.

    இதனால் அவர்கள் சமூகத்தில் பல்வேறு தடைகளையும், அவமானங்களையும் சந்திக்க வேண்டிய நிலை உள்ளது. இதன் காரணமாக வேலைவாய்ப்பு, கல்வி உள்ளிட்டவற்றில் உரிய இடத்தை அடைய முடியாத நிலையும் நீடிக்கிறது.

    இந்த சூழலில் மதுரை ஆரப்பாளையத்தை சேர்ந்த மஸ்தானி என்ற திருநங்கை ஒருவர் தடைக்கல்லையும் படிக்கல்லாக மாற்றி உயர் கல்வி பயில்வதற்காக மதுரை காமராஜர் பல்கலைக்கழக கல்லூரியில் இணைந்துள்ளார். இந்த அனுபவம் குறித்து மஸ்தானி கூறுகையில், நான் 10-ம் வகுப்பு படித்து கொண்டிருக்கும்போது எனது உடல்நிலையில் மாற்றங்கள் ஏற்பட்டது. இதனால் என்னால் இயல்பாக பிறருடன் பழக இயலாத நிலை ஏற்பட்டது.

    இதை நான் கூறிய போது எனது குடும்பத்தினரும் என்னை தனிமைப்படுத்தினர். ஒரு கட்டத்தில் நான் என்னை திருநங்கையாக உணர தொடங்கினேன். அதே நேரத்தில் 12-ம் வகுப்பு கடந்த 2019-ம் ஆண்டு 348 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி ஆனேன். ஆனால் என்னை திருநங்கையாக மாற்றிக்கொள்வதற்கு குடும்பத்தினர் அனுமதிக்கவில்லை. இதனால் என்னால் மேல்படிப்பு படிக்க இயலாத நிலை ஏற்பட்டது.

    ஒருகட்டத்தில் வீட்டை விட்டு வெளியேறி திருநங்கைகள் சமூகத்தினருடன் இணைந்து வாழவேண்டிய நிலை ஏற்பட்டது என்றார். ஆனால் அதே நேரத்தில் அவருக்கு உயர்கல்வி பயில வேண்டும் என்ற ஆர்வம் தொடர்ந்து இருந்துள்ளது. அவருக்கு கைகொடுக்க மாற்று பாலினத்தவர் ஆதார மையம் முன்வந்தது.

    ஏற்கனவே திருநங்கையாக மாறி சமூகத்தில் பல்வேறு இடர்பாடுகளையும் சந்தித்து இன்றைக்கு தனித்துவ ஆளுமையாக உயர்ந்துள்ள பிரியா பாபு என்பவர் மாற்று பாலினத்தவர் ஆதார மையத்தை நிறுவி, இதுபோன்று திருநங்கைகளாகவும், மாற்று பாலினத்தவராகவும் மாறி வாழ்க்கையில் போராடி கொண்டிருக்கும் நபர்களுக்கு தேவையான கல்வி, வேலைவாய்ப்பு உரிமைகள், அரசின் சலுகைகள், அடையாள அட்டை, ரேசன் கார்டு போன்ற பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.

    இதைத்தொடர்ந்து மஸ்தானிக்கும் உயர்கல்வி பயில்வதற்கு அந்த ஆதார மையம் முயற்சி மேற்கொண்டது. இதுகுறித்து அதன் நிறுவனர் பிரியா பாபு கூறுகையில், மஸ்தானி தொடக்கத்தில் மாற்று பாலினத்தவரோடு இணைந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்று கொண்டிருந்தார். அவருடைய லட்சியமான உயர் கல்வி பயில்வதற்கு உதவ எங்களது நிறுவனம் முன் வந்தது. நாங்கள் அவர் கல்வி பயில நிதி உதவி செய்ய முயன்றோம்.

    மேலும் அவர் தனது புதிய அடையாளத்துடன் கல்லூரியில் இணைந்து பயில்வதற்கான முயற்சியை செய்தோம். இதற்காக மதுரை காமராஜர் பல்கலைக்கழக கல்லூரி நிர்வாகத்திடம் பேசியபோது அவர்கள் மிகவும் ஆர்வத்தோடு ஆதரவு அளிக்க முன்வந்தனர். மஸ்தானி உயர்கல்வி பயில்வதற்கு நிச்சயம் உதவுவோம் என உறுதி அளித்தனர். இது குறித்து மஸ்தானி மேலும் கூறுகையில், மாற்று பாலினத்தவர் ஆதார மையத்தின் முயற்சியில் காரணமாக மதுரை காமராஜர் பல்கலைக்கழக கல்லூரி நான் பி.ஏ. (பொருளாதாரம்) படிப்பதற்கு அனுமதி அளித்துள்ளது.

    நான் உயர்கல்வி பயில வேண்டும் என்பது தான் எனது தாயாரின் ஆசையாகும். ஆனால் திருநங்கையாக மாறிய பிறகு குடும்பத்தினரின் உதவி இல்லாத நிலையில் மாற்று பாலினத்தவர் ஆதார மையத்தின் மூலமாக மதுரை காமராஜர் பல்கலைக்கழக கல்லூரியில் பயில்வதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. பட்டம் பெற்ற பிறகு தொடர்ந்து சட்டம் பயில விரும்புகிறேன்.

    தற்போது நான் உயர் கல்வி படிப்பது எனது குடும்பத்தினருக்கு மகிழ்ச்சி அடைந்த போதிலும் என்னை அவர்களோடு சேர்த்து கொள்ள விருப்பம் இல்லை. அதே நேரத்தில் கல்லூரியில் பெண்கள் விடுதியில் தங்கி பயில நிர்வாகம் அனுமதி அளித்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

    சமூகத்தில் மாற்று பாலினத்தவர் தற்போது காவல் துறை அதிகாரிகளாகவும், இந்திய ஆட்சிப்பணித்துறை அதிகாரிகளாகவும் உயர்ந்து வருகின்றனர். மஸ்தானி போன்ற மாற்று பாலினத்தவர் உயர்கல்வியும், சட்டமும் பயின்று அனைத்து மாற்று பாலினத்தவர் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட முன்வரும் போது இன்னும் கூடுதலான வாய்ப்புகளும், தன்னம்பிக்கையும் மாற்று பாலினத்தவர்களுக்கு ஏற்படும் என்பது நிதர்சனம். பாலியல் பேத மற்ற வகையில் அதற்கான வழியை உருவாக்கி கொடுக்க வேண்டியது சமூகத்தில் உள்ள அனைவரின் கடமையாகும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

    ×